0,00 INR

No products in the cart.

இனியில்லை கடன்!

சிறுகதை– நாமக்கல் எம்.வேலு
ஓவியம்; தமிழ்

ழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான். திரும்பவும் கடன் கேட்டு வந்திருப்பானோ ‘ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டபடி, ‘ வா ராமசாமி, என்ன திடீர்னு இவ்ளோ தூரம். ஒரு போன் கூட பண்ணலை, திடீர்னு வந்து நிக்கிறே ‘ என்று கேட்டுக்கொண்டே உள்ளே திரும்பி மனைவியைக் கூப்பிட்டு, ‘ ஜானகி, ராமசாமி வந்திருக்கான் பார், மோர் கொண்டு வா ’  என்று விட்டு, ராமசாமியை கூட்டிப் பொய் சோபாவில் உட்கார வைத்துவிட்டு உள்ளே போனார்.

கணவனைப் பார்த்து, ‘ என்னங்க இது, என்னிக்கும் இல்லாத திருநாளா, ‘போன் அடிச்சா எடுக்க மாட்டேங்கிறான்,  முடியலைனா நேர்ல வந்தாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கிறான்னு திட்டிட்டே இருப்பீங்க நீங்க, இப்போ திடீர்னு வந்து நிக்கிறார் உங்க அருமை நண்பர் ‘ என்றாள். பேசிக்கொண்டே மோரில் உப்பை போட்டு ஸ்பூனால் கலக்கிக் கொண்டே ஹாலுக்கு வந்த ஜானகி, புன்னகையுடன் ராமசாமியை பார்த்து, ‘ எப்படி இருக்கீங்க, ஆளே கொஞ்சம் இளைச்சுட்ட மாதிரி இருக்கீங்களே ‘ என்றபடி மோர் டம்ளரை அவரிடம் நீட்டினாள்.

டம்ளரை வாங்கிக் கொண்டே, ‘ உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லைம்மா, கொஞ்சம் அலைச்சல் அதான் என்றவர் மோர் ரொம்ப நல்லாருக்கும்மா, இந்த வெயிலுக்கு இதமா இருக்கு ‘ என்றார்.

‘ சரி உட்காந்து பேசிக்கிட்டு இருங்க, அடுப்படியில கொஞ்சம் வேலையா இருக்கேன் ‘ என்று விட்டு நகர்ந்தவள், உடனே திரும்பி, ‘ மணி ஒன்னாவுது, கொஞ்ச நேரத்துல சமைச்சுடுவேன், நீங்க இருந்து சாப்பிட்டுத்தான் போவணும் ‘ என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.  போகும்போதே தன் கணவனுக்கு ஒரு ஜாடை காட்டிவிட்டு உள்ளே போனாள்.  பின்னாடியே போய்,  ‘ என்ன ஜானகி ‘ என்றவரிடம்,  ‘ உஷ்…’ என்பது போல ஜாடை காட்டிவிட்டு, குரலை தாழ்த்தியபடி, ‘ திரும்பவும் ஏதாவது கடன் கேட்கத்தான் வந்திருக்கார்னு தெரிஞ்சா, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி திருப்பி அனுப்பிச்சிடுங்க…’ என்று கிசுகிசுத்தாள்.

குழப்பத்துடன் வந்து சோபாவில் ராமசாமிக்கு அருகில் உட்கார்ந்தார் சோமசுந்தரம். ஆனாலும் அவரது மனது பழைய சம்பவங்களை நோக்கி பறந்து போனது.

xxxxxxxxxxxxx

சோமசுந்தரம்  ராமசாமி இருவரும் திருச்சி திருவரம்பூரில் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். பி.ஹெச்.இ.எல்.லுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தயாரித்து சப்ளை செய்யும் ஒரு சப்ளையர் கம்பெனி அது. ஓய்வு பெற்றவுடன் சோமசுந்தரம் திருச்சியிலேயே செட்டில் ஆகி விட்டார். ராமசாமியோ சொந்த ஊரான நாமக்கல்லுக்கே போய்விட்டார்.

ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் இருவரும் நேர் எதிர். சோமசுந்தரம் குடிக்க மாட்டார், பணத்தை பார்த்து பார்த்து தான் செலவு செய்வார்.  ஐந்து ரூபாய் குறைவாக கிடைக்கிறது என்றால் பத்துகடை தள்ளிக் கூட போய் வருவார்.

ராமசாமியோ நேர் எதிர். நன்கு குடிப்பார்.  கம்பெனியில் எல்லோரிடமும் கடன் வாங்குவார். சிலர் கைமாற்றாக கொடுப்பார்கள், சிலர் வட்டிக்கு கொடுப்பார்கள்.  ஒன்னாம் தேதி சம்பளம் வாங்குபவர் பத்தாம் தேதியே கையேந்த ஆரம்பித்து விடுவார்.

சோமசுந்தரத்திடம் கூட நிறைய தடவை கடன் வாங்கியிருக்கிறார். கடன் கேட்டு வரும்போது அப்படியே பணிந்து பணிந்து வருவார். அப்பாவி போல முகத்தை வைத்துக் கொள்வார். பணம் வாங்கிக் கொண்ட பிறகு நடையில் ஒரு வேகம் பிறந்துவிடும். சொன்ன தேதியில் பணத்தை திருப்பி கொடுக்க மாட்டார். அப்படி கொடுத்தாலும் முழு பணமும் ஒரே தவணையில் வராது. பணத்தை திருப்பிக் கேட்பவர்களுக்கு தொண்டை தண்ணீர்தான் வற்றிப் போகும். போன் போட்டாலும் எடுக்க மாட்டார். எப்போதாவது எடுத்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வார்.

அதனால் சோமசுந்தரத்திற்கு ராமசாமியைக் கண்டாலே அவ்வளவாக பிடிப்பதில்லை. இன்று வரை இரண்டு மாதத்திற்கு முன்பு கொடுத்த ஒரு லட்சத்துடன் சேர்த்து ஒரு லட்சத்து ஐயாயிரம் பாக்கி.. முதலில் வாங்கிய கடனை திருப்பி தருவதற்கு முன்னேயே அடுத்த கடன் கேட்டு வந்துவிடுவார். அப்படி ஒரு குணாதிசயம் ராமசாமிக்கு.

   xxxxxxxxxxxxx

டைசியாக ராமசாமி வந்தது, அழுதது, பேசியது, பணம் கேட்டது எல்லாம் சோமசுந்தரத்தின் மனத்திரையில் மறுபடியும் நிழலாக ஓடியது.

அப்போதும் திடீரென்றுதான் வந்து நின்றார். ‘ சொல்லுப்பா ராமசாமி, எப்படி இருக்கே. ஆளையும் காணோம், போனும் பண்றதே இல்லை, போன் அடிச்சாலும் எடுக்கறதே இல்லை ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் சோமசுந்தரம். அதுவரை அமைதியாக உட்கார்ந்திருந்த ராமசாமியின் கண்களில் திடீரென்று பொல பொலவென கண்ணீர்.

சோமசுந்தரத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புது கடன் வாங்குவதற்காக ஏதும் அச்சாரம் போடுகிறானா. இவனை நம்பவே முடியாதே, சரியான சந்தர்ப்பவாதி, காரியவாதி ஆயிற்றே, என்று ஒரே குழப்பம் அவருக்கு. ஆனாலும் இப்படி இவர் அழுதும் பார்த்ததில்லை.

‘ராமா என்னாப்பா ஆச்சு, ஏன் அழறே ‘ என்று அவரது தோளில் கைவைத்து தேற்றினார் சோமசுந்தரம். முகத்தை துடைத்துக் கொண்டே, ‘ சோமா, நான் எப்படி சொல்றதுன்னே தெரியலைபா, மல்லிகாவுக்கு கர்ப்பப் பையில கட்டி உண்டாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கேன். ஆபரேசன் பண்ணி கட்டிய எடுக்க ரெண்டரை லட்சம் ஆகுங்கறாங்க. காலிமனை பத்திரத்த ஒரு தெரிஞ்சவர்கிட்ட வச்சு ஒரு லட்சம் வாங்கிட்டேன். அப்புறம் அங்க இங்கன்னு கைமாத்து வாங்கி அம்பதினாயிரம் சேர்த்துட்டேன். இன்னும் ஒரு லட்சம் தேவை. எங்கேங்கேயோ கேட்டுப் பார்த்துட்டேன்பா. ஒன்னும் நடக்கலை. அப்புறம்தான்பா உன்கிட்ட வந்திருக்கேன். உன்கிட்டே அவ்ளோ பெரிய தொகையை எப்படி கேக்கறதுனும் தெரியல. ஏற்கனவே வாங்கினதுல ஐயாயிரமோ ஆறாயிரமோ வேற இன்னும் பாக்கி நிக்குது.  ஆனாலும் வேற போக்கும் தெரியல எனக்கு.  நாளை மறுநாள் ஆபரேசனுக்கு டைம் கொடுத்திருக்காங்க, நாளைக்கு சாயங் காலத்துக்குள்ளே பணத்தை கட்டியாகனும். முடியலைனா, என் மல்லிகாவ காப்பாத்த முடியாத படுபாவியாகிடுவேனோன்னு பயமா இருக்கு சோமா ‘ என்றபடி முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார் ராமசாமி.

அவரது தோளை தட்டிக் கொடுத்து, ‘ ராமா உன் நல்ல மனசுக்கு கடவுள் உன்னை கைவிட மாட்டார், உன் மல்லிகாவுக்கு ஒன்னும் ஆகாது. அழாத, அழறத நிறுத்து முதல்ல ‘ என்றவர், மனைவியைக் கூப்பிட்டு, ‘  ஜானகி ஒரு செம்புல தண்ணீர் கொண்டு வா ‘ என்றார்.

முகத்தை கைக்குட்டையால் துடைத்தபடி, ‘ ரெண்டு மூணு மாசமாவே வயித்த வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டிருந்தா, நாங்களும் அந்த மருந்து இந்த மருந்து, கசாயம், பச்சிலைன்னு கொடுத்து பார்த்துட்டு, அப்புறமாத்தான் டாக்டர்கிட்ட போனோம்.  அவங்க நிறைய டெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க, டெஸ்ட் எடுத்து பார்த்தா, கர்பப்பையில கட்டி இருக்குனு சொல்லிட்டாங்க.  கொஞ்சம் பெரிய சைஸ் கட்டியாம்..  ஏற்கனவே ரெண்டு மாசமா வலி இருக்கறதால ஆபரேஷனை தள்ளி போடக்கூடாது, ரொம்ப லேட்டா வேற வந்திருக்கீங்க, உடனே ஆபரேசன் பண்ணி கட்டிய அகற்றியாகனும்ட்டாங்க.. அப்புறம் கட்டியை ஏதோ பயாப்ஸியாம். அதுக்கு அனுப்பிச்சு  அது என்ன மாதிரி கட்டினு பார்க்கனும்னு சொல்லிட்டாங்க ‘ என்றார் ராமசாமி.

அதற்குள் ஜானகி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்து விட்டு செம்பை டீபாயில் வைத்தவர், ‘ என்னோட நிலமைய பார் சோமா, எல்லாத்துக்கும் என்னை பத்தித் தெரியும், கடன் கொடுத்தா ஒழுங்கா திரும்பி வராதுன்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க.  நான் என்ன வேணும்னா ஏமாத்தறேன்.  சான் ஏறினா முழம் சறுக்குது. வட்டி கட்டியே என் பொழப்பு இப்படி ஆச்சு.  ஒரு கடனை அடைக்க புது கடன் வாங்கி அசலுக்கு வட்டி, வட்டிக்கு வட்டின்னு  பெரிய தொகையா போயிடுது. சில சமயம் ஏண்டா இந்த பொழப்பு பொழைக்கனும்னு கூட தோணும். செத்துப் போயிடலாமானு கூட தோணும். என்ன பண்ண, மல்லிகாவை தவிக்க விட்டுட்டு போயடுவோமோனு மனசை
திடப் படுத்திக்குவேன்.

இப்ப கூட பார், உனக்கே நான் ஆறுமாசத்துக்கு முன்னே வாங்கின கடன் சேர்த்து நிறைய பாக்கி வெச்சிருக்கேன். ஆனாலும் புது கடன் கேட்டுத்தான் வந்திருக்கேன் ‘ என்ற ராமசாமி திடீரென்று எட்டி சோமசுந்தரத்தின் கைகளை பிடித்துக் கொண்டு, ‘ பழசையெல்லாம் மனசில வெச்சுக்கிட்டு இல்லைன்னு மட்டும் சொல்லிடாத சோமா, உன்னைத்தான் கடவுள் மாதிரி நம்பிக்கிட்டு வந்திருக்கேன். வர்ற வழில கோவில்ல வேண்டிக்கிட்டுத்தான் வந்திருக்கேன், நீ எனக்கு பணம் கொடுக்கணும்னு. என் மல்லிகாவை எப்படியாவது காப்பாத்திக் கொடுத்திடு சோமா, காலம் பூராவுக்கும் உன்னை நாங்க ரெண்டு பேரும் மறக்கவே மாட்டோம் ‘ என்று குலுங்கி அழுதார்.

அவரை சமாதானம் செய்து விட்டு சமையல் கட்டுக்குள் போய் நடந்ததை எல்லாம் சுருக்கமாய் விவரித்தார் ஜானகியிடம்.

‘என்ன ஜானகி செய்யலாம். இவன் எப்போவுமே வாங்கின கடனை ஒழுங்கா திருப்பி கொடுத்ததே இல்லை. பிச்சு பிச்சு கொஞ்ச கொஞ்சமாத்தான் குடுப்பான்.  ஆனாலும் ஏமாத்தினதில்லை. இப்போ என்ன பண்ணலாம். அதுவும் ஒரு லட்சம் கேட்கிறானே, அவ்ளோ தொகைக்கு நாம எங்கே போறது ‘ என்று புலம்பினார் சோமசுந்தரம்.

‘பாருங்க, இதுவரை கடன் வாங்கினார், என்னமோ பண்ணினார், ஆனா இப்போ மருத்துவ செலவுன்னு கேட்கிறார். பொய் இருக்காதுன்னு தோணுது. பொண்டாட்டியோட உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் வேற. இரண்டரை லட்சத்தையும் நம்மகிட்டே கேட்கலையேன்னு சந்தோசப் பட்டுக்கோங்க.  உங்க பேங்க் கணக்குல எவ்வளவு இருக்கு, என் பேர்ல எவ்வளவு இருக்குன்னு பாருங்க, பத்தும் பத்தாததுக்கு வேணுமானா என் வளையலை தரேன், கொண்டு போய் அடமானம் வச்சு கொடுத்து உதவுங்க. ஒரு அப்பாவியோட உயிரை காப்பாத்துன சந்தோஷமாவது மிஞ்சட்டும் நமக்கு ‘ என்று பரிவுடன் சொன்னாள்.

ராமசாமிக்கு பணம் கொண்டு வந்து தானே ஆஸ்பத்திரியில் கொடுத்து விடுவதாக சொல்லியனுப்பி விட்டு, மறுநாள் கணக்கில் இருந்த பணம் ஜானகியின் வளையலை அடமானம் வைத்த பணம் எல்லாம் சேர்த்து ஒரு லச்சத்தை எடுத்துக் கொண்டு போய் தானே நேரில் ஆஸ்பத்திரியில் வைத்துக் கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தார் சோமசுந்தரம். அது தனிக் கதை. அதற்கப்புறம்…

(தொடரும்)

4 COMMENTS

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

அரசியலும், பெண்களும்!

0
- ரங்கஸ்ரீ களஞ்சியம்! மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில் ஜனவரி – 1995,...

பகுத்தறிந்து புரிந்து கொள்வோம்!

0
தொகுப்பு: இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் ஓவியம்:  சேகர் அன்று: துரோணரைத் தாக்கிய ஓணான்!  பாண்டவர்களுக்கும்  துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணாச்சாரியார் இருந்தார். பாண்டவர்களோ அறிவில் சிறந்து விளங்க , துரியோதனாதியர்களோ மூடர்களாக விளங்கினார்கள். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து...