பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
'எங்களாலும் பறக்க முடியும்!'
-ஜி.எஸ்.எஸ்.

பகுதி – 6

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அட்லாண்டாவை நோக்கிப் பறந்த ஒரு விமானத்தில் தாய்-மகள்  ஆகிய இருவருமே முக்கிய விமான ஓட்டி மற்றும்  உதவி விமான ஓட்டியாக  இடம்பெற்றிருந்தது மிக வித்தியாசமான ஒரு அனுபவம்.  தாயின் பெயர் வெண்டி ரெக்ஸன்.  மகளின் பெயர் கெல்லி ரெக்ஸன்.

அந்த விமானத்தில் பயணியாக இடம்பெற்றிருந்த டாக்டர் ஜான் வாட்ரெட் என்பவர் இந்தத் தகவலை அறிந்துகொண்டு, அதைத் தனது முகநூலில் பதிவு செய்யாமல் இருந்திருந்தால் இது பரபரப்பான செய்தி ஆகாமலேயே போயிருக்கும்.

இந்தத் தகவல் வெளியான ஒரே நாளில் 42,000 பேர் இதற்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.  அந்த விமான ஓட்டிகள்  பணியாற்றிய டெல்டா ஏர்லைன்ஸ் இதைப் பெருமையுடன் பிரபலமாக்கியது.

தாயும் மகளுமாக இதற்கு முன்னதாகவும் ஒரே விமானத்தை ஓட்டியதுண்டு. நியூயார்க் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானத்தை அவர்கள் கிளப்பியபோது அந்த விமானம் ஒரு சிக்கலைச் சந்தித்தது. விமானம் தரையிலிருந்து மேலே எழும்பியபோது புகை கக்கியது. அந்தப் புகை  விமான ஓட்டிகள் அறைக்குள்ளும் நுழையத் தொடங்கியது.  இந்த நிலையில் சாமர்த்தியமாகச் செயல்பட்ட கெல்லி விமானத்தை பாதுகாப்பாக தாங்கள் கிளம்பிய ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கே திருப்பினார்.  தன் மகள் மிக சாமர்த்தியமாக இந்த நிலையை சமாளித்தது குறித்து தாய் மிகவும் பெருமைப் பட்டார்.

'தாய் – மகள் இருவரைப் பற்றிய தகவலுக்கே வியப்படைந்தால் எப்படி'? என்பது போல் வெளியாயின அவர் குடும்பத்தைப் பற்றிய மீதித் தகவல்கள்.  வெண்டி ரெக்ஸனின் கணவரும் ஒரு விமான ஓட்டிதான். அவர், 'நார்த் வெஸ்ட் ஏர்லைன்ஸ்' என்ற விமான சர்வீஸில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அவரது மூத்த மகளான கெல்லி இப்படிக் கூறுகிறார். 'சிறு வயதிலிருந்தே அம்மாவின் பைலட் தொப்பியை நான் அணிந்து விளையாடுவது வழக்கம். எனக்குப் பதினாறு வயதாகும்போது நான்  விமானப் பயிற்சியை மேற்கொண்டேன். பின்னர் விமானப் பயிற்சியாளராகவும் ஆனேன்'.

பயிற்சியாளரானவுடன் அவர் விமானப் பயிற்சி கொடுத்த முதல் நபர்  அவரது தங்கைதான். தானும் விமான ஓட்டியாகலாமா? கூடாதா? என்பதில் கெல்லிக்கு ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. பின்னர் தன் குடும்பத்தினரைப் போலவே முடிவெடுத்தார்.

தன் மகள்கள் இருவரும் விமான ஓட்டிகள் ஆனதில் தாய்க்கு சிறிதும் மனக் கவலை இல்லை. விமானம் ஓட்டுவது பாதுகாப்பானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கூறும் வெண்டி, 'நள்ளிரவு பார்ட்டிக்கு அவர்கள் செல்வதை விட விமானம் ஓட்டுவது பாதுகாப்பானதுதான்' என்கிறார் புன்னகையுடன். அதனால்தான் சும்மா வீடியோ கேம்களில் விமான ஓட்டியாக விளையாடுவதை விட, தன் மகள்களை நேரடியாகக் களத்தில் இறக்கினார்.

'ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ்' என்ற விமான நிறுவனத்தில் பணிபுரியும் ​சூசி காரெட் மற்றும் அவரது மகள் டோனா காரெட் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஆகாய விமானத்தை ஓட்டியவர்கள். விமானம் ஓட்டுவது என்பது அவர்கள் குடும்ப பணியாகவே ஆகிவிட்டது. சூசியின் கணவர், மகன் ஆகியோரும் விமான ஓட்டிகள்தான்.

'எங்கள் பணியை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இந்த அளவுக்கு மகிழ்ச்சியை வேறு எந்தப் பணியும் எங்களுக்குத் தந்துவிடாது. எங்கள் குழந்தைகளும் விமான ஓட்டிகள் ஆகவேண்டுமென்று நாங்கள் அவர்களை நிர்ப்பந்திக்க வில்லை. மாறாக, தங்கள் பெற்றோர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கவில்லை என்பதையும், அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் தினமும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள். இதன் காரணமாகவே அவர்களும் விமான ஓட்டிகள் ஆக வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற்றார்கள்' என்கிறார் அம்மா பைலட்.

விமான ஓட்டிகளுக்கு ஊதியம் அதிகம். பிற சலுகைகளும் மிக அதிகம்.  விமானத்தை விட்டு இறங்கும்போது அவர்களது அலுவலக நேரம் முடிந்து விடுகிறது.  வீட்டுக்குப் பணிச்சுமையை எடுத்துச் செல்லவேண்டிய அவசியமில்லை.

தவிர, விமான ஓட்டிகளின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்கள் மிக மிக அதிகம்.  பைலட் உடையிலும் சாதாரண உடையிலுமாக ஒரு பெண் விமான ஓட்டி தன் புகைப்படங்களையும் சாகசங்களையும் பதிவிடும்போது அவற்றுக்கு லைக்குகள் குவிகின்றன.

இவற்றை அறிந்த மற்றும் உணர்ந்த பெண்கள் தங்களுக்குத் தெரிந்த பெண்களையும் விமான ஓட்டியாகும்படி பரிந்துரை செய்கிறார்கள்.

(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com