0,00 INR

No products in the cart.

வலிமையை  உணருங்கள்; வாழ்க்கையை வெல்லுங்கள்! -காஸ்ட்யூம் டிசைனர் ‘சாதனை சிந்து’.

-சேலம் சுபா  

தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று தங்கக் கூண்டுக்குள் அடைபட்ட இல்லத்தரசி கூண்டை விட்டு வெளியே வந்தால்  சாதிக்க முடியுமா?  முடியும் என நிருபித்து,  தனக்கென  சமூகத்தில் ஒரு முத்திரை பதித்தவர்தான் சென்னையை சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர்  சிந்து.

புகழ்பெற்ற  தனியார் தொலைக்காட்சியின் பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து வரும் சிந்து படு பயங்கர பிசியாக இருக்கிறார். இவரின் கணீர் பேச்சும் சுறு சுறுப்பும் பார்த்தால் நமக்கும் அவரின் எனர்ஜி தொற்றிக்கொள்வது உண்மை. அவருக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நம் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் இதோ…

ஊர் – படிப்பு – திருமணம் குறித்து? 

பிறந்தது வளர்ந்தது திருமணம் செய்து தந்தது தற்போது இருப்பது அனைத்தும் சென்னைதான். அப்பா பெருமாள். பி. காம் முடித்ததும் காதலித்தவருடன் திருமணம். பதினாறு வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நெருக்கடியான ஒரு சூழலில் முற்றுப்புள்ளி விழுந்தது. என்னாலும் தனியே வாழமுடியும் என்று முடிவெடுத்து  துணிச்சலாக வெளியே வந்தேன். தனியே வசித்து வந்த  என் மீது அதீதபாசம் கொண்ட, எனக்கு  ரோல் மாடலான தந்தையை என்னுடன் அழைத்துக் கொண்டேன். பள்ளியில் பயிலும் மகள் யமுனா. மகன் தஷின் ப்ரணவ். இருவரும் எனக்கு சிறந்த தோழமை. டிசைன்டு பை  சிந்து எனும் பொட்டிக்கின் உரிமையாளர். இவ்வளவுதான் நான்.

எப்படி வந்தது இந்த ஆடை வடிவமைப்பில் ஆர்வம்?

ங்கள் சமூகத்தில் பெண்ணைப் படிக்க வைப்பது கட்டாயம்  வேலைக்குப் போக அல்ல. பின்னாளில் ஏதெனும் பிரச்னை என்றால் தன்னைக் காப்பாற்ற உதவும் என்பதால் மட்டுமே பெண் பிள்ளைகளுக்கு கல்வியைத் தருகின்றனர். நானும் படித்ததோடு சரி.  திருமணம் குழந்தைகள் கணவர் குடும்பம் என்று அந்தக் கூட்டுக்குள் பறவையாய் சிறைப்பட்டு சந்தோசமாக நாட்களைக் கழித்தவள்தான். வேலைக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு துளியும் இருந்ததில்லை.  ஆனால் திருமணத்திற்கு முன்பே எனக்குப் பிடித்த பேஷன் டிசைனிங் படிப்பை முடித்திருந்தேன். வீட்டில் சும்மா இருந்த நேரங்களில் எங்களுடைய உடைகளைத் தைப்பேன். நெருங்கிய நட்புகளுக்கும் தைத்துத் தருவேன். தனியே வந்தவுடன்  எந்தப் பணியை என் பொழுதுபோக்காக கற்று செய்தேனோ அதுவே என்  முழுநேரப்  பணியாகி  எனக்கு பொருளாதார நிறைவைத் தந்து காப்பாற்றியது.

இந்தப் பணியின் துவக்கம்?

வாழ்வின் இரண்டாம் பயணத்தைத் தனித்துத் துவங்கினேன். புரிந்து கொண்ட குழந்தைகளுடனும் ஆதரவாக இருந்த தந்தையுடனும் கையில் இருந்த திறமையுடனும்.

இந்த இடத்தில் என் தோழி மிதிலாவுக்கு நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். கடவுள் எந்த சமயத்திலும் நம்மை புரிந்து கொண்ட நட்பை நம்முடனே அனுப்பி நாம் வீழும்போது கை தருகிறார். அப்படி எனக்கு பண உதவியுடன் மன தைரியம் தந்தவள் என் தோழிதான். அவளிடம் கடனாக பெற்ற தொகையில் வாங்கிய  இரண்டு தையல் மிசின்களுடன் துவங்கியதுதான் என் தொழில்.

ஆனால் இந்த கணினி யுகத்தில் மேலும் நம்மை புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதை வெளி உலக அனுபவங்கள் கற்றுத்தந்ததால் மேலும் என் துறை குறித்தான கல்வியைப் படித்தேன். இடைவிடாத பயிற்சியினாலும் முயற்சியினாலும் படிப்படியாக பாராட்டுகளுடன் வளர்ந்தேன். டிசைன்டு பை  சிந்து எனும் பொட்டிக்கின் உரிமையாளர் ஆனேன்.

என் ஆடை வடிவமைப்பின் நேர்த்தியை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஸ்டைலிஸ்ட் நான் வடிவமைத்த உடையைக் கேட்டு வாங்கினார். அது பாராட்டுக்களைப் பெற்று கவனத்தைக் கவர்ந்தது. அப்படித் தானாக கிடைத்த வாய்ப்புதான் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு உடைகளை வடிவமைத்துத் தரும் பணி. தற்போது நிறைய ஆர்டர்களுடன் பலருக்கு நான் வேலை வாய்ப்பை அளித்து அவர்களுடன் மகிழ்கிறேன்.

ஆடை வடிவமைப்பில் சந்தித்த சவால்?

பெண்களைப் பொறுத்தவரை எந்தத் துறையில் இருந்தாலும் தினம் தினம் சவாலான வாழ்க்கைதான். என்னைப் பொறுத்தவரை என் வாடிக்கையாளர்கள் என்ன கேட்பார்களோ அதை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று கூடுதல் முயற்சிகளை எடுப்பேன். ஏனெனில் உடுத்தும் உடை நம் உள்ளத்தை உற்சாகமாக்குகிறது அல்லவா? அதிலும் மனம் கவர்ந்த உடை எனில் இன்னும் சிறப்புதானே? அந்த உடையை அவர்கள் அணியும்போது அவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசமே எனக்கு கிடைக்கும் வெற்றி.

நான் அவர்களிடம் பேசும்போதே ஒன்றுக்கு இரண்டு மூன்று ஆப்ஷன்களை தந்து விடுவேன். ஏனெனில் அவர்கள் கேட்கும் பட்ஜெட்டில் அவர்கள் கேட்கும் வண்ணங்கள் இல்லாது போகலாம். அல்லது அவர்களின் நினைத்தது போல் அமையாமல் போகலாம். இதெல்லாம் எங்கள் பணியில் சகஜம் என்பதால் இது கண்டிப்பாக கிடைக்கும் தருகிறேன் எனும் வாக்குறுதியைத் தந்து அது அமையாத பட்சத்தில் அவர்களை ஏமாற்றி என் நன்மதிப்பை கெடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால், சில மணப்பெண்களுக்கு உடை வடிவமைக்கும்போது அவர்களின் நிறத்திற்கு ஏற்ற  நிறங்களில் தேர்ந்தெடுத்து வடிவமைத்துத் தருவது சவாலாக அமைந்து விடுவதும் உண்டு. காரணம் சற்று மாநிறத்தில் உள்ளவர்களுக்கு அவர்களின் அழகை மேம்படுத்தியும் காட்ட வேண்டும் அதே சமயம் உடை வண்ணங்களும் அவர்கள் விரும்பும் விதத்தில் அசத்தலாக இருக்க வேண்டும் என்பதால் அதில் மட்டும் மெனக்கெடுவேன்.

மற்றபடி ஒரு பண்டிகை நாட்களிலோ விழா சமயங்களிலோ அவர்கள் கேட்கும் நேரத்தில் உடைகளைத் தர சில சமயங்களில் தடைகளும் வருவதுண்டு. அப்போது பரபரப்பாக இருப்பதை தவிர்க்க முடியாது. அவற்றைக் கடந்து வருவதுதானே நல்ல தொழில்?

 உங்களை மனந்திறந்து பாராட்டிய ஒருவர்?

கொரானாவினால் அனைத்து துறைகளும் முடங்கி மீண்டும் துவங்கிய காலம். இதில் சின்னத்திரையும் அடக்கம். அப்போது சின்னத்திரை நட்சத்திரமான மைனாவுக்கு ஆடைகளை வடிவமைத்து தரும் வாய்ப்பு வந்தது. திருமணம் குழந்தை என்று சிறிது காலம் இடைவெளியுடன் மீண்டும் மீடியாவுக்குள் மைனா வந்தார் என்பதால் அதிக சிரத்தையுடன் அவருக்கு ஏற்ற வகையில் ஆடை வடிவமைத்துத் தந்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போய் மேலும் வாய்ப்புகளுடன் என்னை மகிழ்ச்சியுடன் மனந்திறந்து பாராட்டியதை மறக்க முடியாது. வளர்ந்தபின் பின் கிடைக்கும் பாராட்டுகளை விட வளர்ச்சியின் துவக்கத்தில் கிடைக்கும் பாராட்டுக்கு மதிப்பு அதிகம். அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

உங்கள் தன்னம்பிக்கையை எப்படிப் பெறுகிறீர்கள்?

னக்கு அதிகம் பேசுவது பிடிக்கும். மனதில் உள்ளதை ஒளிவுமறைவு இன்றி பேசிவிடுவேன். என்னைச்சுற்றி எப்போதும் நட்புகள் இருப்பதை விரும்புவேன். நல்ல நண்பர்கள் கிடைத்தால் இந்த உலகமே நம் வசம். ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் நட்பில் இல்லை. எண்ணத்தூய்மையுடன் பழகும் போது நட்புகளும் அதே தூய்மையுடன் நம்மை அணுகுவார்கள் என்பது என் நம்பிக்கை. நட்புகள் இல்லாமல் நான் இல்லை.

அதேபோல் இன்றைய விஞ்ஞானம் நமக்குத் தந்துள்ள இணையதள வசதிகள். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அதன்மூலம் நன்மைகளையும் அடையலாம். முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில்  பின் தொடரும் நல்ல உள்ளங்களினால் என் நேரங்களும் தன்னம்பிக்கையும் அதிகரித்து வருவதாக உணர்கிறேன்.

அடுத்து உங்கள் இலக்கு? வெற்றி குறித்து?

ன்னும் என் துறை நுட்பங்களைக் கற்று ஜெயிக்க வேண்டும். அண்ணாநகரில் ஒரு பெரிய ஷோரூமைத் துவங்க வேண்டும் எனும் ஆசை உள்ளது. அது நிறைவேறும் காலத்தை எதிர்பார்த்துள்ளேன். எந்தத் துறையிலும் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் காத்திருக்கும் .அதைத் தேடி கற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயம்.

மனதளவில் துவண்டு போகும் பெண்களுக்கு உங்கள் ஊக்கம்?

ங்குதான் பிரச்னைகள் இல்லை. பயந்து ஓட ஓட பிரச்னைகளும் நம்மைத் துரத்தும். எதிர்த்து ஒரு முறை நின்று பாருங்கள் விலகி ஓட ஆரம்பிக்கும் அவைகள். பெண்களின் பலம் பலவீனம் இரண்டுமே குடும்பம் எனும் கட்டுக்கோப்புதான். பலமாக இருக்கும் வரை பரவாயில்லை. ஆனால் அதுவே நம்மை பலவீனமாக்கும் போது  பலத்துடன் நம்மை நிரூபிக்கும் வலிமை எல்லாப் பெண்களிடமும் உண்டு. யார் கை விட்டாலும் நாம் கற்ற கல்வியும் தனித்திறமையும் கட்டாயம் நம்மைக் கைவிடாது.

விமர்சனங்களைப் புறந்தள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் எதைச் செய்தாலும் அதை விமர்சிக்க ஆயிரம் பேர் வருவார்கள். அந்த விமர்சனங்களையே நம் வெற்றிக்கு அடித்தளமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். என்னையே ’அதிகம் பேசுகிறாய்’ ’வெளியே சுற்றுகிறாய்’ என்றெல்லாம் விமர்சித்தார்கள். இன்று அவைகள்தான் எனக்கென்று ஒரு முகவரியைப் பெற்றுத்தந்துள்ளது. ஆகவே, நம்மையும், நம் திறமை களையும்   நாம் நேசிக்கப் பழகவேண்டும். நம்மால் எதுவும் முடியும் எனும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும்.

உறுதியாக பேசி முடித்து பை சொல்லி விட்டு வண்ணத்துணிகள் மீது கவனம் செலுத்தத் துவங்கிய சிந்துவுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...