0,00 INR

No products in the cart.

ஆருத்ரா தரிசனம்!

ஆருத்ரா தரிசனம்  – 20.12.2021

 •  ‘திருவாதிரை ஒரு வாய்க்களி தின்னாதவர்க்கு நரகக் குழி’ என்பர் பெரியோர். ஆம்! திருவாதிரைக் களி பிறந்த வரலாறே மகத்துவமானது. சேந்தனார் சிறந்த சிவபக்தர். விறகு வெட்டி விற்றாவது சிவனடியார்க்கு அமுதளித்து மகிழும் உன்னதர் அவர். ஒரு திருவாதிரை நாளன்று நல்ல மழை பொழிந்து கொண்டிருக்க, எதுவும் செய்ய இயலாது தவித்துக் கொண்டிருந்தார் சேந்தனார். அந்நேரம் அவர் இல்ல வாயிலில் சிவனடியார் ஒருவர் நின்றார். சிவனடியார்க்கு அமுது படைக்க எதுவும் இல்லாத நிலையில் சேந்தனாரின் துணைவியார் அரிசி மாவுடன் சர்க்கரை கலந்து களி செய்து சிவனடியாருக்குப் படைத்தனர். அவரும் அந்தக் களியை உண்டு உவகையால் இருவரையும் ஆசீர்வதித்தார். மழை நின்றது. மறுநாள் காலை விசுவரூப தரிசனம் காண சேந்தனாரும் அவர் மனைவியும் சிவாலயம் சென்றனர். வழக்கம் போல தில்லைவாழ் அந்தணர்கள் கோயில் நடை திறந்து உள்ளே சென்றனர். சன்னிதியில் களி சிதறிக் கிடந்தது கண்டு அதிசயித்தனர். சேந்தனார் தமது இல்லத்தில் முந்தைய தினம் நடந்ததை எல்லோரிடமும் கூறினார். அடியார் உருவில் வந்து களி உண்டவர் தில்லை நடராஜப் பெருமான் என்று கூறி, தில்லை வாழ் அந்தணர்கள் சேந்தனாரின் பக்தியைப் பாராட்டினர். அன்று முதல் திருவாதிரைக்கு களி படைத்து நடராஜப் பெருமானை வழிபடும் வழக்கம் வந்தது.
 • சிறு அம்பலம் – சித்+அம்பலம் சிதம்பரம் என்றாகும். அம்பரம் என்ற சொல் ஆகாயம் என்று பொருள்படும். பஞ்சபூதத் தலங்களில் ஈசன் ஆகாயமாகித் திகழும் தலமாதலால் இது சிதம்பரம் எனப்பட்டது. மற்ற கோயில்களில் மூலவராக சிவலிங்கம் இருக்கும். சிதம்பரத்திலோ தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமான் மூலவராக இருப்பதுடன், அவரே உத்ஸவராகவும் தரிசனம் தந்து அருள்கிறார்.
 • எல்லா கோயில்களிலும் காணப்படும் நடராஜர் திருமேனியானது, ‘ஷட்’ கோண அமைப்பில் அடங்கியது ஆகும். சிதம்பரத்திலுள்ள நடராஜர் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கியது. பல கோயில்களில் நடராஜர் விரிசடையோடோ அல்லது கேச்கிரீடமாகவோ காட்சி தருவார். சிதம்பரத்தில் தொங்கு சடை இவர் மேனியில் திகழ்வதை தரிசிக்கலாம்.
 • தில்லை நடராஜரின் கலைகள் ஒவ்வொன்றும் எல்லாத் தலங்களிலும் உள்ள தெய்வங்களின் உருவங்களிலும் ஒளிர்கிறது. இரவில் அர்த்தஜாம பூஜையின்போது அனைத்துக் கலைகளும் சிதம்பரம் நடராஜரிடம் ஒன்றி, பிறகு அந்தந்தத் தலங்களுக்கு திரும்புவதாக ஐதீகம். எனவே, திருவாதிரையில் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க, அனைத்து தெய்வங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பார்கள்.

திருத்தாண்டவ திருத்தலங்கள்

 • சிவபெருமான் தாண்டவமாடும் முதன்மைச் சபைகள் ஐந்து. பதஞ்சலி, வியாக்ரபாதருக்காக அனந்தத் தாண்டவம் ஆடிய இடம் சிதம்பரம். இது, ‘பொன்னம்பலம்’ ஆகும்.
 • மதுரைக்கு மீனாட்சி திருக்கல்யாணம் காண வந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் வேண்டியபடி சிவபெருமானே விருந்துக்கு முன் ஆடிக்காட்டிய நடனம் மதுரை ‘வெள்ளியம்பலத்’தில் உள்ளது. ராஜசேகர பாண்டியன் எனும் மன்னனின் வேண்டுதலுக்கிணங்க இங்கே சிவபெருமான் கால் மாறி வலது காலைத் தூக்கி ஆடியுள்ளார்.
 • சிவபெருமான் வலக்காலை உடலோடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி ஆடும் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவமாகும். இது திருவாலங்காட்டில், ‘ரத்தின சபை’யில் இடம் பெற்றுள்ளது.
 • வேணு வனமாகிய நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இறைவன், ‘தாமிர சபை’யில் தாண்டவமாடுகிறார்.
 • திருக்குற்றாலம், ‘சித்திரைச் சபை’யில் சிவபெருமான் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் எழுதப்பட்டுள்ளது. திரிகூட மலைக்கு வந்த திருமாலும் பிரம்மாவும் தேவர்களும் சித்திர நதிக்கரையில் தவம் செய்ய, அவர்களுக்காக சிவபெருமான் திருக்கூத்து தரிசனம் அளித்தார்.
 • திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோயிலில் உள்ள நடன சபை, ‘அதிசித் சபை’ எனப்படும். இங்கே இறைவன் சுவாதேகேது என்ற மன்னன் வேண்டியபடி நவ தாண்டவங்களை ஆடிக் காட்டியதாகக் கூறுவர். இதற்குப் பிறகுதான் எம்பெருமான் சிதம்பரத்தில் ஆடினாராம். எனவே, இத்தலத்தை, ‘ஆதிசிதம்பரம்’ என்பர்.
 • திருவாரூரில் திருமாலின் மூச்சுக் காற்றுக்கு இணையாக ஆடும் ஈசன், ‘அஜபா நடனம்’ ஆடுவதாக ஐதீகம்.
 • தேனடையில் வண்டு ஒலித்துக்கொண்டே முன்னும் பின்னும், மேலும் கீழுமாக ஆடுவதைப் போன்று ஆடும் ஈசனின், ‘பிரமர தாண்டவ’த்தை திருக்குவளையில் காணலாம்.
 • பித்தேறியவனைப் போல மனம் போனபடியெல்லாம் இறைவன் ஆடும், ‘உன்மத்த நடனத்தை’ திருநள்ளாறில் தரிசிக்கலாம்.
 • பாராவாரதரங்க நடனத்தை நாகையிலும், ஹம்ச நடனத்தை திருமறைக்காட்டிலும், கமல நடனத்தை திருவாய்மூரிலும், குக்குட நடனத்தை திருக்காறாயில் தலத்திலும், மயூர நடனத்தை மாயூரம் தலத்திலும் தரிசிக்கலாம்.

தில்லையும் திருவாரூரும்

தில்லை நடராஜருக்கும், திருவாரூர் தியாகேசருக்கும் வருடத்திற்கு ஆறு முறைதான் அபிஷேகம் நடைபெறும். இரண்டு இடங்களிலும், ‘ரகசியங்கள்’ உண்டு. நடராஜருக்கு வலப்பக்கத்தில், ‘சிதம்பர ரகசியம்’ இருக்கிறது. திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம். தில்லை தரிசனத்தை ஆரூத்ரா தரிசனம் என்பர். திருவாரூர் தரிசனத்தை, ‘பக்த தரிசனம்’ என்பர்.

 • மனிதனின் உருவ அமைப்பிற்கும் சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னிதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில், ‘நமசிவாய’ மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. கோயிலில் உள்ள ஒன்பது வாசல்கள் மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான, ‘சிவாயநம’ என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளின் அடிப்படையில் 64 சாத்து மரங்கள் இருக்கின்றன. 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 • நடராஜரின் துணைவியை சிவகாமி என்பர். ஆனால், திருவாலங்காட்டு அம்பாளுக்கு, சமி சீனாம்பிகை என்று பெயர். நடராஜரின் நடனத்திற்கு ஈடு கொடுத்து காளி ஆடியபோது ஒரு பெண்ணால் இப்படியும் ஆட முடியுமா? என இந்த அம்பாள் ஆச்சரியமடைந்தாள். இதனால் இவளுக்கு சமி சீனாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. ‘சீனம்’ என்றால் ‘ஆச்சரியம்.’ இவள் இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப்போகும் நிலையில் ஆச்சரியப்படும் பாவனையுடன் முகத்தை வைத்திருக்கிறாள். இந்த சிலை அமைப்பு காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்.
 • சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னை சிவகாமி ஞான சக்தியாகவும், நடராஜர் அருகில் கிரியா சக்தியாகவும், அர்த்த ஜாமத்தில் பள்ளியறையில் இச்சா சக்தியாகவும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
 • சிதம்பரத்துக்கு அடித்தபடியாக, திருவாதிரை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது லால்குடியில்தான். இங்குள்ள நடராஜர் உத்ஸவ விக்கிரகத்திற்குத் திருமுழுக்காட்டும்போது இடது கையின் விரல்களிலிருந்து திருமுழுக்குத் திரவம் சரியாக இடது பாதத்தில் விழும்.
 • திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் தியாகேசர் ஆருத்ரா அன்று திரிபுரசுந்தரி அம்மன் எதிரே பதினெட்டு வித நடனமாடுவார்.
 • நெல்லை, நெல்லையப்பர் சுவாமி கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் தாமிர சபை உள்ளது. இதன் விதானம் மரத்தாலும், தாமிரத் தகடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. நடராஜரை தாமிர சபாபதி என்கிறார்கள். அம்மன் கோயில் முன்புறம் வடக்குப் பக்கம் சிவபெருமான் ஆனந்த நடனம் புரியும் இடம், ‘சவுந்தர சபை’ எனப்படுகிறது. அருகில் சிந்து பூந்துறையில் உள்ள சபை, ‘தீர்த்த சபை’யாகும்.
 • தாமிரபரணி கரையில் அமைந்துள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

 • மதுரை, மீனாட்சியம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையன்று கண்ணாடியில் தெரியும் நடராஜருக்கு பூஜை செய்வார்கள். இதை, ‘அருவ வழிபாடு’ என்கின்றனர்.
 • சுசீந்திரத்தில் நிலைக் கண்ணாடியே நடராஜப் பெருமானாக வணங்கப்படுகின்றது.
 • திருமணம் திருத்தலத்தில் திருவாதிரை அன்று நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருமண விழா கொண்டாடப்படுகிறது.
 • உத்திரகோச மங்கை ஆலயத்தில் உள்ள நடராஜர் சிலை மரகதத்தினால் உருவாக்கப்பட்டது. எப்போதும் அவரது மேனி சந்தனக் காப்பிட்டுதான் இருக்கும். மார்கழி திருவாதிரை அன்று குருக்கள் தமது கண்களை நன்றாக துணியால் கட்டிக்கொண்டு சந்தனக் காப்பை நீக்கிவிட்டு, புதிய சந்தனக் காப்பிடுவர். பிறகே மற்றவர்கள் பார்க்க முடியும்.
 • மயிலம் முருகன் கோயிலில் மார்கழி திருவாதிரை நாளில் மட்டுமே கிழக்கு கோபுர வாசல் திறந்திருக்கும்.– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

2 COMMENTS

 1. அமர்க்களமாக அனைவர் கவனத்தையம்
  ஈர்த்து ஆருத்ரா தரிசனம் மூலம் மனதில்
  மகிழ்வினை அருளச் செய்யும் மங்கையர் மலருக்கு பல் லாண்டு காே டி வாழ்த்துகள்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

 2. ஆருத்ரா தரிசனம் தகவல்கள் அனைத்தும் அருமை கட்டுரையாளர் ஜெயலட்சுமிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...