0,00 INR

No products in the cart.

டென்மார்க்!

சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா! – பகுதி – 5

பயண அனுபவம் : பத்மினி பட்டாபிராமன்

 

காத்திருக்கும் கடல் கன்னி:
டென்மார்க் செல்கிறோம்’ என்றவுடனே எல்லோரும் சொன்னது, ‘‘கடல் தேவதையைப் பார்க்கத் தவறாதீர்கள் இந்த மாதிரி தேவதைக் கதைகளுக்குப் பஞ்சமில்லாத நகரம்.

டென்மார்க்கின் அடையாளச் சின்னமாகி விட்ட சிறிய கடல் தேவதை டென்மார்க். தலைநகர் கோபன்ஹேகனில் பெரிய டூரிஸ்ட் அட்ராக்க்ஷன். கரையில், அடுக்குப் பாறைகளின் மேல் அமர்ந்து யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் கடற்கன்னி.

Hans Christian Andersen என்னும் டென்மார்க் எழுத்தாளார் எழுதிய கதை இது.
இடுப்பு வரை பெண்ணாகவும், அதன் கீழ் மீனாகவும் இருக்கும் இந்த 14 வயது கடல் கன்னி, மானுடனாக இருக்கும் ஒரு காதல் இளவரசனைத் தேடி வந்து காலம் காலமாக இந்தக் கடற்கரையில் காத்திருக்கிறாள். மானுட உலகை அடையத் துடிக்கிறாள். இளவரசனைக் கண்டும் விடுகிறாள். அவன் மேல் கொண்ட காதலால் கடல் வாழ்க்கையைத் துறக்க முடிவெடுக்கிறாள். ஆனால் அவனோ, இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான். சோகத்தோடு இவள் பாறை மேல் காத்திருக்கிறாள். இவ்வளவுதான் கதை. உட்கார்ந்த நிலையில், ஒன்றேகால் மீட்டர் அதாவது நாலடி ஒரு அங்குல உயரம் கொண்ட வெண்கலச் சிலை இது. அவ்வளவுதான்.

நம் நாட்டின் காவியங்களையும், சிற்பங்களையும் நினைத்துப் பார்த்தபோது, ‘இதெல்லாம் இவ்வளவுதானா? இதற்கா இவ்வளவு உலகப் புகழ்?’ என்ற கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.

கோபன்ஹேகன்:

துவும் அழகிய ஸ்கேண்டினேவியன் நகரங்களில் ஒன்று. ஊரைச் சுற்றிலும் வெனிஸ் மாதிரி அழகிய ஆறு ஓடுகிறது. அதில் சுற்றுலாவாசிகளை ஏற்றிச்செல்லும் போட்கள்.(canal cruise) ஊரைச் சுற்றிப் பார்க்க, சிவப்பு நிற டூரிஸ்ட் பஸ்களும் எங்கே வேண்டுமானலும் ஏறி இறங்க ஒரே கட்டண வசதியுடன் ஆங்காங்கே ஓடுகின்றன.

திடீரென உற்சாகக் கூச்சல்சிறிய திறந்த லாரி போன்ற வாகனங்களில் நிறைய பள்ளி மாணவர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்தோடு கூவிக்கொண்டு சென்றனர். நாங்கள் சென்ற அன்றுதான் அவர்களுக்கு ஆண்டு பரீட்சை முடிந்திருந்ததாம். அதைக் கொண்டாடத்தான் மாணவ, மாணவிகள் நகரைச் சுற்றி வருகிறார்களாம். (கொரோனாவுக்கு முற்பட்ட காலம்) ரெஸ்டாரண்ட் இணைந்த பாரில் ஆண்களும் பெண்களும் ஒயின் அருந்தியபடி பர்கர் சாப்பிடுகிறார்கள். வெண்ணையும் கேரமல் சர்க்கரையும் சேர்த்து பேக் செய்த உருளைக்கிழங்கு கார்டொஃப்லெர் டேனிஷ் ஸ்பெஷல் (Kartofler) சுவையாகவே இருக்கிறது.

கிறிஸ்டியன்போர்க் அரண்மனை:

டென்மார்க்கின் மற்றோர் சுற்றுலாத் தலமாகப் புகழ் பெற்றது அரச பரம்பரையின் பிரம்மாண்டமான கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனை (Christiansborg Palace).

டென்மார்க் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்றம், சில அரசாங்க அலுவலகங்கள் போன்றவை இங்கே இயங்குகின்றன. ஒரே இடத்தில் ஒரு நாட்டின் சட்டம், நீதி, நிதி, நிர்வாகம் ஆகிய துறைகள் இயங்குவது உலகிலேயே இங்குதான் எனலாம்.

இந்த அரண்மனை 1794 ம் ஆண்டு ஒரு முறையும் 1884ம் ஆண்டு ஒரு முறையுமாக தீக்கிரையானது. பின்னர் 1928 ல் மீண்டும் கட்டப்பட்டது! அப்போது அரச குடும்பத்தினர் இடம் பெயர்ந்த இடம் அமேலியன் அரண்மனை (Amalienborg ). ஆனால், இன்னமும் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில், ராயல் வரவேற்பறைகள், ராயல் சேபெல், குதிரை லாயங்கள் போன்றவை அரச குடும்பத்தின் உபயோகத்துக்காக வளாகத்திற்குள் பாதுகாக்கப்படுகின்றன.

அமேலியன்போர்க் அரண்மனை:
ண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை போலவே இங்கும் மதியம் சரியாக 12 மணிக்கு அரசரின் காவல் படையினரின் மாறும் சடங்கு (changing of the guards) தினமும் நடக்கிறது. தங்கள் பேரக்ஸிலிருந்து கிளம்பி பேண்ட், ட்ரம்ஸ் முழங்க அமேலியன்பார்க் அரண்மனைக்குள் வர, ஏற்கெனவே காவல் புரிந்த காவலர்கள் மாறிச் செல்கிறார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இந்தச் சடங்கைக் காண டூரிஸ்ட்கள் குவிகிறார்கள்.

கார்ல்ஸ்பர்க் பியர் தொழிற்சாலை (Carlsberg brewery Denmark):

கார்ல்ஸ்பர்க் பியர் கேள்விப்பட்டிருப்பீங்களேஉலகின் தலைசிறந்த பியர் என்று புகழ் பெற்றது. உலக பியர் பிரியர்களின் முதல் சாய்ஸாக புகழ் பெற்ற கார்ல்ஸ்பர்க் பியர் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை, சுற்றுலாப் பயணிகளின் பெரும் அட்ராக்க்ஷன்.

டென்மார்க் சென்று விட்டு அங்கே போகாமலிருந்தால் எப்படி?

பெரிய கட்டடத்தின் நுழைவாயிலில் இரண்டு பெரிய யானை பொம்மைகள் வரவேற்கின்றன. உள்ளூர்வாசிகளும் பயணிகளும் மொய்க்கிறார்கள். வருபவர்களுக்கு வரவேற்பாக இந்த உலகப் புகழ் பியர் கொடுக்கிறார்கள். (இலவசமாக அல்ல! நுழைவு சீட்டு டிக்கெட்டோடு இணைந்தது.) சைட்டிஷ் ஒரு பாக்கெட் வறுத்த கடலை மட்டும் நாம் வாங்கிக்கொள்ள வேண்டும்! நம் நாட்டு ரூபாயில் ஒரு சாதாரண பாக்கெட் 300 ரூபாய் கணக்கில்!

1847ல் ஜேகப்சென் (Jacobsen) என்பவரால் துவங்கப்பட்டது இந்தத் தொழிற்சாலை. அவர்தான் முதலில் தனிப்பட்ட கலவைகள், ஈஸ்ட் சேர்த்து இந்த பியரை தயாரித்தவர்.

ஐரோப்பியர்கள்தான் எல்லாவற்றையும் மியூஸியத்தில் வைத்துப் பாதுகாப்பார்களே

உள்ளே ஒரு மியூஸியம். அதில் ஆரம்ப காலத்தில் பியர் தயாரிக்க உபயோகப்படுத்திய உபகரணங்கள், சேமித்து வைத்த பேரல்கள், நிறுவியவர்களின் சிலைகள், புகைப் படங்கள், புளிக்க வைத்த செய்முறைகள் என்று என்னென்னவோபியர் தயாரிப்பையும் செய்முறை விளக்கமாகப் பார்க்கிறோம். வெளியே ஒரு திறந்த வெளியில் பிரம்மாண்ட பேரல்கள்! தவிர, வின்டாஜ் கார்களும் நிற்க, அவற்றின் அருகில் நின்று ஃபோட்டோ எடுக்கிறோம்.

படகில் சுற்றுலா:

இத்தாலியின் வெனிஸ் நகரில் படகில் சென்று ஊரை சுற்றிப் பார்ப்பது போலவே, இங்கும் கெனால் சர்வீஸ்கள் கிடைக்கின்றன. அதில் பயணம் செய்யும்போது சாரலாய் தூரல். சுற்றி உள்ள கட்டடங்களையும், மற்ற சிறிய பெரிய படகுகளையும், வானில் பறந்து வந்து அப்படியே நீரில் இறங்கிச் செல்லும் ஸீப்ளேன்களையும் ரசிக்க முடிகிறது.

தென்னிந்திய தோசை, வடை போன்றவை இங்கு கிடைக்கும். சவுத் இண்டியன் ரெஸ்டாரன்ட்ஸ் இருப்பதால் (சைவ) உணவுப் பிரச்னை இல்லை. நாங்கள் தங்கியிருந்த ஸ்கேண்டிக் சிதாவ்னென் (Scandic Sydhavnen) ஹோட்டலில் காலை கான்டினென்டல் உணவை முடித்த பின், மீண்டும் கோபன்ஹேகன் நகருக்குள் கோச்சில் பயணம்.

நைஹன் ஹார்பர் (Nyhavn Harbor) அதை ஒட்டிய கட்டடங்களின் வண்ணமயமான வரிசைஇவை கோபன்ஹேகன் நகரின் அழகியச் சித்திரங்கள்.

இங்கிருக்கும் டவுன்ஹால் ஸ்கொயர், அதிலிருக்கும் கடைகள், ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கம். 36 மீட்டர் உயரம் கொண்ட உருளையான டவர், 1642ல் வானத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரால் கட்டப்பட்டது.

வட ஐரோப்பாவின் ஸ்கேண்டினேவியன் நாடுகளில் சிலவற்றைப் பார்த்தபின், இனி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எங்கள் பயணம்.
(தொடர்ந்து பயணிப்போம்)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...