0,00 INR

No products in the cart.

எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்?

அத்தியாயம் – 2

– நிரஞ்சன் பாரதி

ரு மனித இதயத்துக்கு ஏற்றம் தருவது, அது கொண்டிருக்கும் இலட்சியமே ஆகும். தான் கொண்ட கனவை நனவாக்குவதற்காகவே அந்த இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செலவிடப்பட வேண்டும். அத்தகைய வாழ்வே ஒரு சிறந்த வாழ்வு!

நிரஞ்சன் பாரதி

பாரதியைப் பொறுத்தவரை, நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதே அவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை அரண்மனைப் பணியிலிருந்து வெளியேறுமாறு உந்தித் தள்ளியது. நாட்டை அவர் தனது நீட்சியாகத்தான் பார்த்தார். நாட்டுக்கு ஒரு கேடு என்றால், அது தனக்கும் கேடு என்றுணர்ந்து துடிதுடித்துப் போனார். நாட்டுச் சிந்தனை என்னும் எரிபொருளே அவரது உயிர்ப்பொருள் இயங்கக் காரணமாக அமைந்தது.

இந்தக் கனல், ஒவ்வொரு கணமும் மனதில் சுடர்ந்தபடி இருக்க, அரண்மனைப் பணியிலிருந்து விலகிய பாரதியார், 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சிறந்த தேசபக்தரான ஜி.சுப்பிரமணிய ஐயர் இதன் ஆசிரியராக இருந்தார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர்

பாரதியாருக்கு அரண்மனை, ஓர் அலுவலகமாகத் தெரியவில்லை. ஆனால், சுதேசமித்திரன் அலுவலகம் அரண்மனையாகக் காட்சியளித்தது. இங்கேதான் அவரால் சுதந்திரக் காற்றைச் சிறிதளவேனும் சுவாசிக்க முடிந்தது. சின்னஞ்சிறிய சிறகே முளைத்திருந்தாலும் அதில் பறத்தல் சுகம்தானே?!

ராய்ட்டர்ஸ் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. ஜி.சுப்பிரமணிய ஐயர் மிதவாதத்தின் பக்கம் சற்று சாய்ந்திருந்தது, பாரதியாருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. ஆனாலும், மிகுந்த ஊக்கத்தோடுதான் அவர் பணியாற்றினார்.

ராண்டு கழிந்தது. பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பி.வைத்தியநாத ஐயர் என்பவர், ‘சக்கரவர்த்தினி’ என்னும் மாத இதழைத் தொடங்க முன் வந்தார். ஆனால், யாரை ஆசிரியாகப் பணியமர்த்துவது என அவருக்குத் தெரியவில்லை. தன் நண்பரான ஜி.சுப்பிரமணிய ஐயரிடம் ஆலோசனை கேட்டார்.

பாரதியாரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஜி.சுப்பிரமணிய ஐயர், ஆசிரியப் பொறுப்பேற்க பாரதியே முழுத்தகுதி படைத்தவர் என்று சான்றளித்தார். இதன் விளைவாக, 1905ஆம் ஆண்டு ஆகஸ்டில், ‘சக்கரவர்த்தினி’யின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. அதேசமயம், அவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சில் தீரத்தோடு மட்டும் போர்க்களத்துக்கு வந்த ஒருவனுக்குக் கையில் ஓர் ஆயுதம் கிடைத்தால் எப்பேர்ப்பட்ட பலம் வரும்?! சக்கரவர்த்தினி ஆசிரியரான பிறகு பாரதியாருக்கும் அப்படித்தான் இருந்தது.

தமிழகத்தில் அப்போது ஏற்கெனவே மாதர் மனோ ரஞ்சனி, தமிழ் மாது உள்ளிட்ட மகளிர் முன்னேற்ற இதழ்கள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆனாலும், சக்கரவர்த்தினியை அவர் தேவையற்றதாகக் கருதவில்லை. பெண் விடுதலை என்னும் பெருந்தேரைத் தமிழென்னும் வடம்பிடித்து இழுக்கும் மற்றுமொரு வலிமையான கரமாகவே அதை அவர் கருதினார்.

ண்களும் பெண்களும் ஒன்றிணைந்து போராடினால் ஒழிய, சுதந்திரம் சாத்தியமாகாது என்பதில் அவர் அசையாத உறுதி கொண்டிருந்தார். ஆனால், இதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பெண்களுக்குப் போதிய கல்வி உரிமை வழங்கப்படாததுதான் என்பதைக் கண்டறிந்து, மிகவும் கலங்கிப் போனார். அதிலும், பழங்காலத்தில் படிப்பறிவில் சிறந்த பெண்களைக் கொண்டிருந்த பாரத தேசத்தில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது, அவரது கலக்கத்தை இன்னும் கனக்க வைத்தது.

இந்த அவலத்தைக் கீழ்க்கண்டவாறு அவர் சக்கரவர்த்தினியில் பகிர்ந்து கொண்டார் :
‘கிருத, திரேதா, துவாபர யுகங்களில் கல்வி கற்று இக பர ஞானத்திற் சிறப்படைந்திருந்த இத்தேச மாதர் கலி புருஷனால் கல்வியின்மை என்னும் இருட்சிறையில் அடைபட்டிருக்கின்றார்கள்.’

1901ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட பெண்கள் கல்வி கணக்கெடுப்பு விவரத்தைச் சக்கரவர்த்தினியில் அவர் பதிப்பித்தார். அதில் 10,000 பெண்களுக்கு 94 பெண்கள்தான் படித்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக்
கோடிட்டுக் காட்டி, மிகவும் வருத்தப்பட்டார். பெண் கல்வியின் பெருஞ்சிறப்பை எந்த அளவுக்கு அவர் உணர்ந்திருந்தால் இத்துணை மெனக்கெட்டு கணக்கெடுப்பு விவரத்தைப் பிரசுரம் செய்திருப்பார்?

மாதர் கல்விக் கணக்கெடுப்பு பற்றிய கட்டுரையை பாரதியார் இப்படி முடித்திருந்தார்:
‘….எனினும், இங்ஙனம் பேரிருள் மீறிக் கிடக்கும் வானத்திலே நம்பிக்கைத்தாரகைகள் சிற்சில திகழ்வது பற்றி ஒருவாறு மன ஆறுதல் அடைகின்றோம்.’

சிக்கல்களை மட்டும் வெளிச்சம் இட்டுக் காட்டி ஓர் இதழாளர் ஓய்ந்து விட முடியாது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். அதுவே, ஓர் இதழாளருக்குரிய இலக்கணம். பாரதியாரும் இதை அறிந்திருந்தார்.

கட்டுரையை எழுதி முடித்ததும் ஒரு புதுமையான எண்ணம் அவருக்கு உதித்தது. ‘ஏன் இந்தத் தாரகைகளையே நாம் நம் தமிழகத்தின் வருங்காலத் தாரகைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது? புதுமைப்பெண் என்பவள் எங்கோ தொலைதூரத்தில், கண்ணுக்கெட்டாத உலகத்தில் வாழும் வெறும் கற்பனைச்சித்திரம் அல்லவே! அவள் நம் பெண்களில் ஒருத்தி. உயிரும் உயிர்ப்பும் கொண்டு நம் முன்னே நடமாடும் ஒரு நங்கை! நம்மில் ஒருத்தியே. ஏன் நமது நம்பிக்கைத் தாரகையாய், உந்தாற்றலாய் இருத்தல் கூடாது என முன்னேறத் துடிக்கும் எல்லாப் பெண்களும் நினைக்க வேண்டும்! அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்?!’

இந்தச் சிந்தனை பாரதியாரை முடுக்கிவிட்டது. பாரதத்தில் எங்கெல்லாம் புதுமைப்பெண்கள் தோன்றுகிறார்களோ அவர்களையெல்லாம் தேடிப் பிடித்து சக்கரவர்த்தினியில் பதிவு செய்தார்.

நாட்டில் சுதேசி இயக்கம் எழுச்சி பெறத் தொடங்கியிருந்த வேளை அது. வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருள்களை வாங்குமாறு மக்களை ஊக்குவிப்பதில் வங்காளம், இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கியது. அங்கே ஆண்களோடு பெண்களும் மும்முரமாக ஈடுபட்டதைப் பாரதியார் பெருமிதத்தோடு எழுதினார். இவர்களுக்கு, ‘சுதேசினிகள்’ என்று அழகான பெயரையும் சூட்டினார்.

‘ஓர் பஞ்சாபி மாது’ என்ற தலைப்பில் கல்வி அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய ஓர் இளம் பஞ்சாப் பாவையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான நிலையிலும் அறிவழகியாக விளங்கிய இந்தப் பெண்மணியை பாரதியார் போற்றினார். இந்தப் பெண்ணின் கணவர் எப்படி அவளுக்குச் சிறந்த துணையாகிக் கல்வி கற்க ஊக்குவிக்கிறார் என்பதையும் பதிவு செய்தார். இப்பெண் பெரும் புகழோ, செல்வாக்கோ படைத்தவர் கிடையாது. ஆனாலும், தன் அறிவாலும் குணத்தாலும் சிறந்து விளங்கிய ஒரே காரணத்துக்காக பாரதியார் அப்பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்தார். பஞ்சாபிய பெண்ணைத் தமிழ்ப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம், பெண்ணீயத்தின் ஊடே தேசியத்தையும் வளர்த்தார். பாரதியாரின் இந்தக் கட்டுரையை, ‘இந்துநேசன்’ பத்திரிகை பாராட்டி எழுதியது.

பண்டிதை அசலாம்பிகை

ல்லாவற்றுக்கும் மேலாக, பல பெண் படைப்பாளர்களின் படைப்புகளை பாரதி, சக்கரவர்த்தினியில் பிரசுரம் செய்தார்.
வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்தபோது,
அவரை வரவேற்று வாசகர்கள் கவிதை எழுதுமாறு, சக்கரவர்த்தினியில் ஓர் அறிவிப்பு
வெளியிட்டார்.

வந்த கவிதைகளில், பண்டிதை அசலாம்பிகை எழுதிய கவிதையைச் சிறந்ததாகத் தெரிவு செய்து, சக்கரவர்த்தினியில் பிரசுரம் செய்தார். பண்டிதை அசலாம்பிகையைப் புகழ்ந்து இப்படி ஒரு துணுக்கையும் வரைந்தார் :

‘இளவரசர் வரவைப் பற்றி அநேகர்களால் இனிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பூவை ஸ்ரீ கலியாண சுந்தர முதலியார், பண்டித வெங்கட்டராமையங்கார், இப்பத்திரிகை ஆசிரியர் முதலிய அநேகர் செய்யுள் எழுதி இருக்கிறார்கள்.
இவையனைத்தினும் பண்டிதை அசலாம்பிகை எழுதி இருக்கும் பாடல் எளிதாயும் சுவையுடைத்தாயும் இருப்பது பற்றியும் பெண்மணி எழுதியிருக்கும் சிறப்புப் பற்றியும் அதனைப் பதிப்பிக்கின்றோம்.’

வேல்ஸ் இளவரசருக்கு, தானெழுதிய நல்வரவுக் கவிதையைச் சுதேசமித்திரனில் வெளியிட்டார். ஓர் உண்மையான ஆண் மகன், திறமை வாய்ந்த பெண்ணை மதித்துப் போற்ற வேண்டும் என்னும் கருத்தை இதன் வழியே உணர்த்தினார்.

சகோதரி சுப்புலட்சுமி

சக்கரவர்த்தினியில் எழுதிய மற்றொரு முக்கியப் பெண் எழுத்தாளர் சகோதரி சுப்புலட்சுமி. 12 வயதில் கைம்பெண்ணான இவர், பின்னர் கடுமையாக உழைத்து கல்வி பயின்று தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி ஆனார். பெண்ணீயப் போராளியான இவர், கைம்பெண் மறுவாழ்வுக்காகப் பெருந்தொண்டாற்றினார். சாரதா இல்லம், சாரதா வித்யாலயா எனப் பல கல்வி நிலையங்களை நிறுவி, பெண் கல்வியைப் பெருகச் செய்தார்.

ருபுறம், சக்கரவர்த்தினி மூலம் பல சக்கரவர்த்தினிகளை உருவாக்கிக் கொண்டிருந்த பாரதியார், மறுபுறம் தீவிர அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்.

1906ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். மாநாடு முடிந்து திரும்புகையில் நடந்த ஒரு நிகழ்வு பாரதியாரை அடியோடு புரட்டிப்போட்டது. அந்த நிகழ்வு…?!
(அறிவோம் … )

7 COMMENTS

 1. மஹாகவி சுப்பிரமணிய பாரதியின்
  கவிதைகள் மட்டுமே படித்த பலரும் மஹாகவி பாரதியாரின் எள்ளுப் பெயரர் கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி யின் இந்த கட்டுரைத் தொடர் படிப்பதன் மூலம் உலகப் பெருங் கவிஞரான
  பாரதியின் சிந்தனை வீச்சின் விஸ்வ ரூபத்தை அறிந்துக் கொள்ளலாம்.
  சக்ரவர்தினி கட்டுரையில் கலியுகத்தில் மட்டுமே பெண்கள் கல்வி கற்க தடை என்று எழுதியுது தான் எவ்வளவு பொருத்தம்..

  கலியுகத்தின் தொடக்கந் தொட்டு
  கநமது பாரதத்தின் பெண்கள்
  கல்வியறிவு கொண்டிருந்தனர்.

  பிற்காலத்தில் மிலேச்சர் படையெடுப்புகள் காரணமாக தான் பெண்கள் பாதுகாப்பு கருதி வீட்டுப்பாடம் பயிலத் தொடங்கினர் என்று கருத வேண்டியுள்ளது.

  கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரியும் வைரம்.
  ஒவ்வொரு படமும் மாணிக்கம்.
  பாரதியின் நினைவு நூற்றாண்டு மலராக வெளியிடப் பட வேண்டும்.

  பாரதிக்கு செய்யும் அஞ்சலியாக
  பாரதியின் வழித்தோன்றலைக்
  கொண்டு தென்றலெனத் தொடர் எழுதச் செய்யும் கல்கி குழுமத்திற்கு
  பாராட்டுகள்.

  வாழ்க பாரதி
  வாழ்க தமிழ்
  வாழ்க பாரதம்

 2. ஒரு மனித இதயத்துக்கு ஏற்றம் தருவது, அது கொண்டிருக்கும் இலட்சியமே ஆகும். தான் கொண்ட கனவை நனவாக்குவதற்காகவே அந்த இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செலவிடப்பட வேண்டும். அத்தகைய வாழ்வே ஒரு சிறந்த வாழ்வு!
  அருமை
  சிறப்பு
  எப்படி ப்பிறந்தாள் புதுமைப்பெண் இரண்டாம் பாகம்
  மிக சிறப்பு.
  நிறைய செய்திகளை பதிவு செய்துள்ளார்
  நிரஞ்சன்பாரதி
  பண்டிதைஅசலம்பாள்
  சகோதரி சப்பு லட்சுமி
  சுப்பிரமணிய அய்யர்
  வைத்தியநாத அய்யர்
  சுதேசமித்திரன்
  சக்கரவர்த்தினி
  ஒரு பஞ்சாபி மாது
  1901ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட பெண்கள் கல்வி கணக்கெடுப்பு விவரத்தைச் சக்கரவர்த்தினியில் அவர் பதிப்பித்தார். அதில் 10,000 பெண்களுக்கு 94 பெண்கள்தான் படித்தவர்களாய் இருக்கிறார்கள்
  இப்படி ஏராளமான செய்திகளுடன்
  புதுமை பெண் தொடரை
  ஆழமாக சிந்திக்க வைக்கிறார் நிரஞ்சன் பாரதி
  பாரதியின் வழித்தோன்றல்
  வாழ்க வாழ்க வே!

 3. கட்டுரையின் ஆரம்பத்திலேயே இதயத்திற்கு தேவையான ரகசியத்தை கூறி, அதற்கு எடுத்துக்காட்டாக பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கியுள்ளீர் , மிக சிறப்பான ஆரம்பம்

 4. அரிய பல தகவல்களுடன் அமைந்த விறு விருப்பான எழுத்து நடை . பெண்கல்வி குறித்த செய்திகள் சிறப்பாக
  எழுதப்பட்டுள்ளன .இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் கட்டுரை சிறக்க வேண்டும் என்று விரும்பி உழைப்பது கட்டுரையில் மிளிர்கிறது . வாழ்த்துக்கள் நிரஞ்சன் பாரதி .

 5. ஒவ்வொரு அத்தியாயமும் இதுவரை கண்டிராத, கேட்டிராத மகாகவியின் பக்கங்களைப் , பாரதி போற்றிய புதுமைப் பெண்களின் பரிமாணத்தை நோக்கும் வகையில் அமைந்துள்ளது மிகச் சிறப்பு. இறுதியில் தொக்கி நிற்கும் வினாவுக்கான விடையறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த அத்தியாயத்திற்காக!!

நிரஞ்சன் பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன். கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர். MYTAMILGURU என்ற இணைய வழி தமிழ்ப்பள்ளியை நண்பர்களுடன் இணைந்து நிறுவி உலகெங்கும் உள்ள மாணாக்கர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். இதுமட்டுமல்லாது "பசுமைக் கவிஞன்" என்ற YOUTUBE CHANNEL ஐயும் நடத்திவருகிறார். படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும்தான்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...