0,00 INR

No products in the cart.

காதல் முகவரி!

அத்தியாயம் – 6

– சுசீலா அரவிந்தன்
ஓவியம் : தமிழ்

சைமணி கடிதத்தைப் படிக்கப் படிக்க, ஆதவனின் கண்களில் அருவியாய் கண்ணீர் கொட்டியது.

‘இனி, நீங்கள் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடக் கூடாது’ என்ற வரிகளின்போது கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் கண்களில் சிறு கலக்கம்கூட இல்லை.

இசைமணியும் மெதுவாய் அந்தக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தான்.

காதலின் நீட்சி
காலை பனித்துளியை கன்னத்தில் தருகிறாய்
முத்தத்தால் இரவெல்லாம் ஈரமானது போதாதா…?
விழிக்கும்போதே விழிகளை குத்தகைக்கு எடுக்கிறாய்
நாள் முழுவதும் கண் பாவையாய் மாறியும் போகிறாய்!

ஈரமான கன்னம் துடைத்து நடக்கலாமா என்கிறாய்
நடக்க எத்தனிக்கும் என் பாதங்களை தாங்குகிறாய்…!
கலைந்திருக்கும் காலை கூந்தல் அழகென்கிறாய்
கவிதை சொல்கிறாய் எனை இளவரசி என்கிறாய்!

குளித்து வா என கதவுக்கப்பால் அமர்கிறாய்
வெந்நீர் சுடுகிறதோ மஞ்சள் இருக்கிறதா ஓயாமல் கேட்கிறாய்…!
காதோர சுருள் முடி அழகுக்கு அழகு என்கிறாய்
உன் அழகுக்கு நான் அடிமை சாசனம் தருகிறாய்!

மல்லிகைப்பூ இட்லி என்றால் என்ன என்கிறேன்
என் இதழ் ஒற்றி இந்த மென்மை என்கிறாய்…!
வானமும் பூமியும் எப்படி இருக்கும் என்கிறேன்
நம் அன்பைப் போல விரிந்திருக்கும் என்கிறாய்!

எண்ணங்கள் எத்தனை, எப்படி இருக்கும் என்கிறேன்
எனக்கே உலகம் கருப்பு வெள்ளைதான் என்கிறாய்…!
சூரியன் சந்திரன் எப்படி இருக்கும் என்கிறேன்
முதல் ஈரமுத்தம் சந்திரன், நூறாவது முத்தம் சூரியன் என்கிறாய்!

ஏகாந்தத்தில் தனித்து மகிழ வேண்டும் என்கிறேன்
‘பொன்னியின் செல்வனை’ காதோடு படிக்கிறேன் என்கிறாய்…!
நீ வரும்போது கதவாகி நின்றால் மகிழ்வாயா தலைவா கேட்கிறேன்!
என் இதயத்தில் காதல் கதவாய் இருந்தால் போதும் என்கிறாய்!

பொய் கோபம் கொண்டு அமர்ந்திருக்கிறேன் நான்
பொய் கோபம் என புரிந்தும் புரியாததுபோல் நடிக்கிறாய்…!
சமைத்துவிட்டேன் சாப்பிடுங்கள் என்கிறேன்
முதல் கவளம் என்றும் உனக்குத்தான் என்று ஊட்டுகிறாய்!

இறைமையை எங்கு, எப்படி உணர்வது என்கிறேன்
மார்போடணைத்துக் கொண்டு அகக்கண்ணால் பார் என்கிறாய்…!
வாழ்க்கையின் சூட்சுமம் எது என்கிறேன்
உனக்குள் நான் அடங்குகிறேனே அதுதான் என்கிறாய்!

காதலும் காமமும் வேறு வேறா கேட்கிறேன்
உடலும் உயிரும் வேறா என்னையே திருப்பிக் கேட்கிறாய்…!
சிவன் அல்லா இயேசு காட்டுங்கள் என்கிறேன்
நம் காதலுக்குள் அனைத்தும் அடக்கம் என்கிறாய்!

பெரிய புராண கண்ணப்ப நாயனார் வரலாற்றிலும்
திருக்குர் -ஆன் சூரா யூசுப் அத்தியாயத்திலும்
பைபிளின் மத்தேயு அதிகாரம் ஒன்பதிலும் வரையப்பட்டோரின்
வழி வந்தவள் நீ – முக்தி பெறுபவள் நீ என்கிறாய்!

என் உயிர் கணவனே –
அழகு என்கிறாய், ஆனந்தம் என்கிறாய்,
ஒளி என்கிறாய், குளிர் என்கிறாய்
இறை என்கிறாய், இன்பம் என்கிறாய்!

இவையனைத்தும் உன் அருகாமை ஒன்றே எனக்கு உணர்த்தி விடுகிறது!
அவர் இதயத்தை என் ஆன்மாவுக்குள் பதித்துக் கொள்வேன்…
அவர் கால் தடங்களில் உயிர் வாழ்வேன்…
அவர் தலைமுறை தலைமுறைக்கும் காவல் தெய்வமாவேன்!

இப்பிறவி அன்புக்கடனை அடுத்தடுத்த பிறவிகளில் தீர்ப்பேன்…
பின் நின் திருவடி வந்து சேர்வேன் – பின்
நின் திருவடி வந்து சேர்வேன்… சேர்வேன்!

இப்படிக்கு
வெண்ணிலா

விதையின் முடிவில் இசைமணி தேம்பித் தேம்பி அழ, ஆதவன் அவனைக் கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தினான்.

இரண்டாம் நாள் காலை தன் ஊருக்குச் சென்றான் ஆதவன். தன் அம்மாவிடம் சாதத்தை உருட்டி கைகளில் போடச் சொல்லி சாப்பிட்டான். அன்று முழுவதும் அவர்களுடனேயே இருந்தான்.

மூன்றாம் நாள் தன் அலுவலக நண்பர்கள் மற்றும் இசைமணியுடன் இருந்தான். நிறைய பேசினார்கள். அனைவரும் அவனுக்கு ஆறுதலாய் இருந்தார்கள். ‘ஆதவ்… ஆதவ்’ என அவனைச் சுற்றியே இயங்கினார்கள். தன் துக்கத்தை யாரிடமும் வெளிக்காட்டவில்லை ஆதவன்.

ஓவியம் : தமிழ்

அன்று மதியம் மீண்டும் தன் ஊருக்குச் செல்வதாய் புறப்பட்டான். நேரே காவிரிக் கரையை அடைந்தான். தன் தலைக்கு மொட்டை போட்டுக்கொண்டான்.

மனைவியை இழந்துவிட்ட கணவன் செய்ய வேண்டிய அத்தனை காரியங்களையும் அக்கரையிலேயே செய்து திருப்தியானான். காவிரியில் முங்கி முங்கிக் குளித்தான்.

‘பொன்னியின் செல்வனை கோமதி படிக்கப் படிக்க, எனக்கு அந்த இடத்துக்கே போயிட்டாப்ல இருக்குங்க. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னை அந்தக் காவிரி ஆத்துக்குக் கூட்டிட்டுப் போவீங்களா?’

வெண்ணிலா அன்று கேட்டது காதில் ஒலித்தது.

‘இப்ப எல்லாம் கூட ஆடி பதினெட்டு அன்னைக்கு காவிரிக் கரைல அவ்ளோ கூட்டம் கூடுமாங்க?’

ஆர்வத்துடன் கேட்டவளின் அருகாமையை அந்தத் தண்ணீருக்குள் உணர்ந்தான். நெடுநேரம் தண்ணீருக்குள்ளேயே அமர்ந்திருந்தவன், எதையோ நினைத்து புன்னகைத்துக் கொண்டான். மீண்டுமாய் தன் ஊர் திரும்பினான்.

விடிந்து விட்டது. எப்போதும் ஊரார் விழிப்பதற்கு முன்பே எழுந்துவிடுவது மாடசாமி மனைவி கண்ணம்மாவின் வழக்கம். அன்றும் வழக்கம் போல கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

“அட, ஆதவா… எப்ப சாமி வந்த? திண்ணைல படுத்திருக்க…” என்றவாறே மகனைத் தட்டி எழுப்பிய கண்ணம்மா திடுக்கிட்டாள்.

‘‘எந்தக் கோயிலுக்குப் போனான்…? மொட்டை வேற போட்டிருக்கான்!” யோசனையுடன் அவனைத் திருப்பினாள்.

சில்லிட்டுப் போன அவனது உடம்பு, கண்ணம்மாவின் அடிவயிற்றைச் சுட்டது.

‘‘ஐயோ ஆதவா… எங்கள தவிக்க விட்டுட்டுப் போயிட்டயா… ஏ ஐயா…” அந்தத் தாயின் கதறல் மீண்டுமாய் அந்த கிராமத்தையே உலுக்கியது.
(நிறைந்தது)

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் கண்டிப்பாகத் தீர்வு அல்ல என்பதை ஆணித்தரமாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறோம். ‘காதல் முகவரி’யில் காதலின் பரிமாணத்தை, காதலின் அழகை, காதலின் ஆழத்தை, காதலின் உணர்வை மட்டுமல்ல; இரு மனங்களுக்கிடையேயான காதல் உயிரோட்டத்தைப் படம் பிடித்துக் காட்டினோம். நிறைவு சுபமாக இருந்திருக்கலாம். அப்படி நிறைவுற்றிருந்தால் ஆதவன் – வெண்ணிலாவை விட, அதிக மகிழ்ச்சி அடைந்திருப்போம். சமுதாயத்தின் மற்றுமோர் அவல நிலையின் வெளிப்பாடு இந்தக் காதல். வேறன்ன சொல்ல…?!

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...