
எச்சரிக்கை!
பூவுடன் சேர்ந்த
நாருக்கும் விலை…
அதுவும் மணக்கும்
என்கிறாள் பூக்காரி!
……………………….
புலம்பல்!
பளிச்சென்று
ஜொலிக்கும் நான்
இருட்டறையில் இருக்கிறேன்…
புலம்புகிறது
பல மாதங்களாய்
பீரோவில்
முடங்கிக் கிடக்கும்
பட்டுப் புடைவை!
……………………….
கவிதை
கண்களில்
விரிந்த காட்சிகளுக்கு
தையல் போட்டேன்…
கவிதை வந்தது!
……………………….
கோழி கூவுது!
கூவுவது நான்
பெயர் வாங்குவது
நீயா?
கோழியை
கோபமாய் பார்க்கிறது
சேவல்!
……………………….
ஆஸ்தி
அப்பாவின் அஸ்தி
ஆற்றில் கரைக்கப்பட்டதும்
ஆஸ்திக்காக
ஆரம்பமாகிறது
அண்ணன், தம்பி
குஸ்தி!
……………………….
நேர்மை
பணிபுரியும் அலுவலகத்தில்
கையூட்டு விரும்பாத
நேர்மையான அதிகாரி,
கோயிலில்
சிறப்பு தரிசனத்திற்காக
காவலாளிக்குப் பணம் கொடுத்துவிட்டு
முன் வரிசையில் நிற்கிறார்!