ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ஓவியம்: பிரபுராம்

வாழ்க்கை ஒரே சலிப்பா இருக்கா?
முன்னேற்றமே இல்லாம முட்டுச்சந்துல நிற்குதா?
ஜாண் ஏறினா முழம் சறுக்குதா?
உங்க லைஃப்ல அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கணும்னு நிஜமாவே ஆசைப்படறீங்களா? அப்ப இதை நீங்க படிச்சே ஆகணும்!

அது ஒரு பெரிய காடு. மரம், செடி, கொடி, ஏரி என அடர்ந்த அந்த வனப்பகுதி, பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சரணாலயமா இருந்ததுல ஆச்சர்யம் ஒண்ணுமில்லதானே?

ஒரு நாள், பயங்கரமான காட்டுத் தீ பிடிச்சு, அந்த வனப் பிரதேசமே பற்றி எரிய ஆரம்பிச்சுடுச்சு. மரண பயத்துல எல்லா விலங்குகளும் திசைக்கொண்ணா ஓட ஆரம்பிச்சுதுங்க.

அதுல ஒரு சிறுத்தைப்புலி, தீ பிடிச்ச பகுதிக்கு எதிர்ப்புறமா ஓடிக்கிட்டிருந்தப்போ, கருங்குருவி ஒண்ணு, தலைக்கு மேல பறந்து பறந்து போவதைக் கவனிச்சுது. அதுவும் நெருப்பு ஜுவாலைக்கு மேலயே போறதும் வர்றதுமா இருந்தது.

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்

"ஏய்… குருவி, நெருப்புப் பிடிச்சு தகதகன்னு எரியுது… நீ எட்டிப் போகாம, என்ன எங்கியோ போறதும் வர்றதுமா இருக்க?"ன்னு சத்தம் போட்டது.

"நானா, ஏரிக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்!"

"எதுக்கு?"

"நான் என்னோட அலகுல ஏரித் தண்ணிய கொண்டு வந்து ஊத்தி, நெருப்பை அணைக்கப் பார்க்கிறேன்."

"முட்டாளா நீ? உனக்கு இருக்குற சின்ன வாய்ல, தண்ணிய மொண்டு வந்து, இவ்ளோ பெரிய காட்டுத் தீயை அணைக்க முடியும்னு நினைக்கிறியா?"ன்னு இளக்காரமும் எரிச்சலுமாய்க் கேட்டது.

"நோ… எனக்குத் தெரியும். அது சாத்தியமில்லதான். ஆனா, இந்தக் காடு இருக்கே அது என்னோட வீடு! அதுதான் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உணவு, கூடு, எல்லாமே தருது. அதுக்கு நான் ரொம்பவே நன்றியா ஃபீல் பண்றேன். அதுக்கு பிரதி உபகாரமா, ஆங்காங்கே கொட்டைகளைத் துப்பி, மரம் வளர உதவியா இருக்கேன்.

"நான் இந்த வனத்தின் ஒரு பகுதி. இந்த வனமும் என் குடும்பத்தின் ஒரு பகுதி. என்னால இந்தக் காட்டுத் தீயை அணைக்க முடியாதுன்னு தெரியும். ஆனா, நான் என்னோட பங்கைச் சிறப்பா செய்ய விரும்பறேன்"ன்னு சொன்னது.

அதைக் கேட்டதும் சிறுத்தைபுலியின் இதயம் சிலிர்த்தது போல, வன தேவதையின் உள்ளமும் கனிந்தது.

'அடடா… என்னவொரு பரிசுத்தமான எண்ணம்!' என்று அதிசயப்பட்ட தேவதை மிகப் பெரிய மழையை உடனே அனுப்பியது. காட்டுத் தீயும் தணிந்தது. உயிரினங்களும் மகிழ்ந்தன.

து அமெரிக்கப் பழங்குடியினர், தங்கள் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லும் பரம்பரைக் கதையாம்!
"உங்கள் வாழ்க்கையிலும் அதிசயமும் ஆனந்தமும் நிகழணும்னா, உங்கக் கடமையை நல்ல எண்ணத்துடன் செய்யுங்க. அதிசயம் அதுபாட்டுக்கு, தானா நடக்கும்!"
நாம்பளும் காட்டுக் குருவி ஆகலாமே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com