பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?

பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?
Published on

அழகோ அழகு – 8

– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

ம் உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து, அதனால் சரும துவாரங்கள் அடைபடுவதால் ஏற்படுவதே பருக்கள் என்கிற பாக்டீரியா தொற்று. நம் உடலில், முக்கியமாக முகம், தோள்பட்டை மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் பாக்டீரியா வளர்ச்சி அடைந்து அப்பகுதிகளில் பருக்கள் எளிதில் உருவாகி விடும். இதற்கு PROPIONI BACTERIUM ACNES என்று பெயர். பருக்கள் வந்த இடம் சிவந்தும் சிறிது வீக்கத்துடனும் காணப்படும்.

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

முகத்தில் பருக்கள் வந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்வது அவசியம். உடலுக்குப் பயன்படுத்தும் சாதாரண சோப் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஃபேஸ் வாஷ் (Face Wash) பயன்படுத்தினால் சரும துவாரங்கள் அடைபடாது. எண்ணெய் சருமத்திற்கென பிரத்யேகமாக உள்ள ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். இரவில் படுக்கும்முன் மைல்ட் க்ளென்ஸர் (Mild Cleanser) கொண்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தைத் துடைத்தால் இறந்த செல்கள் அல்லது மேக்கப் ஏதேனும் போட்டிருந்தால் எல்லாம் அறவே அழிந்து, முகம் சுத்தமாகி விடும். பருக்கள் வராது.

பொதுவாக, பருக்கள் பதின்ம வயதில் தோன்றும். சிலருக்கு 30 – 40 வயது வரை கூட இருக்கும். இன்னும் சிலருக்கு 40 வயதிற்கு மேல்தான் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். இதை Adult Acne என்று சொல்வதுண்டு. 40 வயதிற்கு மேல் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களினால் எண்ணெய் சுரப்பிகள் அதீத வேலை செய்வதால் இவ்வாறு ஏற்படுகின்றது.

சாதாரணமாக மிதமாகத் தோன்றும் பருக்கள் சிலருக்கு பெரிய கட்டிகள் போல் காணப்படும். சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கடினப்பட்டுத் தங்கி விடுவதால் அந்த இடம் கறுத்து கட்டி போல் ஆகிவிடும். ஒருசிலருக்கு சிவப்பாகவும், பிங்க் நிறத்திலும் கூட பருக்கள் காணப்படும். எப்படி இருந்தாலும், பருக்களை அப்படியே விட்டு விட்டால் தானாகச் சரியாகிவிடும். அவ்வாறில்லாமல் பருக்களை நகங்களால் கீறிவிடுவதோ, கிள்ளிவிடுவதோ கண்டிப்பாகச் செய்யக்கூடாது. பிரச்னை தீவிரமாக இருந்தால் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பருக்கள் வராமல் தடுக்கும் முறைகளைப் பார்ப்போமா?

ஆப்பிள் சாறு வினிகர் (Apple Cider Vinegar) ஒரு பங்கு எடுத்து 3 – 4 பங்கு நீரில் கலந்து அதில் பஞ்சை நனைத்து பரு உள்ள இடத்தில் தடவி அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்து சாதாரண நீரில் சுத்தம் செய்யலாம். இதை அடிக்கடி செய்தால் அதிக எண்ணெய் சுரப்பது குறைந்து பருக்கள் நீங்கும். இக்கலவையை பயன்படுத்தும்போது அரிப்பு அல்லது அலர்ஜி ஏற்பட்டால் தவிர்த்து விட வேண்டும்.

மஞ்சள் – antioxidants நிறைந்த மிகச்சிறந்த கிருமி நாசினி. 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் தேன் கலந்து பரு உள்ள இடத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 2 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் கலந்த கலவையும் பருக்கள் வராமல் தடுக்க நல்லதொரு இயற்கை மருந்து.

அடுத்ததாக, க்ரீன் டீ. கொதிக்கும் நீரில் க்ரீன் டீ கலந்து ஆறிய பின் வடிகட்டி அதில் பஞ்சைத் தொட்டு பருக்கள் மீது தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்தால் மிகுந்த புத்துணர்ச்சி அளிக்கும்.

மன அழுத்தம் அதிகமாகும்போது பருக்கள் தோன்றும்.

தவிர, சுற்றுச்சூழல், காற்று மாசு, சூரியக் கதிர்களின் தாக்கம் இவற்றாலும் கூட எண்ணெய் அதிகம் சுரந்து பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதால் பருக்கள் தோன்றும். வாழ்க்கை முறையை சிறிது மாற்றிக்கொண்டால் இதனைத் தவிர்க்கலாம். வெளி வேலை அதிகம் செய்பவர்கள் வாரம் ஒரு நாள் கண்டிப்பாக முழு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

தூக்கம் மிக மிக அவசியம். தூக்கமின்மையால் சருமம் உலர்ந்த அல்லது எண்ணெய் சருமமாகக் காணப்படும். ஒரு நாளில் குறைந்தது 7 – 8 மணி நேரமாவது தூங்குவது மிகவும் முக்கியம்.

ரோஜாப்பூ போலவே சாமந்திப் பூவும் பருக்களைத் தடுக்கும் ஒரு சிறந்த நிவாரணி. ஒரு கைப்பிடி பூ எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடலாம். தினமும் குளிக்கும்போதோ அல்லது முகம் கழுவும் போதோ இந்த சாமந்தி பூ சாற்றையும் கலந்து பயன்படுத்தினால் பருக்கள் நீங்குவதோடு, அதிக எண்ணெய் சுரப்பது நின்று மேலும் பருக்கள் வராமல் தடுக்கும்.
அழகுக் கலை நிபுணரைக் கலந்தாலோசித்து சருமத்திற்கு ஏற்ற தரமான பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை முறையாகப் பராமரிக்கலாம். தலையிலும் கூட பருக்கள் வருவதுண்டு. தலையில் வந்தால் முகத்திலும் பரவும். எனவே, தலையையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

ருக்கள் வராமல் தடுக்கவும், வந்த இடத்தில் உள்ள தழும்புகளைப் போக்கவும் கிடைக்கும் acne gel வாங்கி இரவில் படுக்கும் முன் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். Acne சோப், Acne ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். உடலுக்குத் தேய்க்கும் சாதாரண சோப் பயன்படுத்தக் கூடாது. பருக்கள் உள்ள இடங்களில் கைகள் படாமல் கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அழகு நிலையம் சென்று பருக்களை நீக்குவதற்கான HIGH FREQUENCY சிகிச்சை (ஓசோன் கதிர்களால் பருக்களை, பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை சுருக்கி விடும் சிகிச்சை முறை) எடுத்துக் கொள்வதாலும் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com