பச்சோந்தி பரமேஷ்!

பச்சோந்தி பரமேஷ்!
Published on

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 7

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்

'ன்ன அரசாங்கம் இது? வருஷா வருஷம் மழை பெய்தால் தெருவெல்லாம் நாட்கணக்கில் வெள்ளத்தில் மிதக்குது' என்று ஒருவர் கூற, 'அதைச் சொல்லுங்க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது வாய்கிழியப் பேசுவாங்க. ஆனா, அவங்களே ஆளும் கட்சியா மாறும்போது மக்களுக்கு ஒரு புண்ணாக்கும் செய்ய மாட்டாங்க' என்கிறான் பரமேஷ்.

இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவர், 'தண்ணி வர இடமெல்லாம் நாம கட்டடங்களைக் கட்டி வச்சா, தண்ணி எங்கதான் போகும்? நம்ம பேர்லயும் தப்பு இருக்கு' என்கிறார்.

ஒரு கணம் கூடத் தயங்காமல், 'அதானே, நம்ம பேராசையால்தான் இதெல்லாம் நடக்குது. அரசாங்கத்தால் என்ன பண்ண முடியும்?' கூறுவது பரமேஷ்தான்!

'எல்லாரும் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வராங்க. அப்போ நகரங்களில் அதிகக் கட்டடங்கள் வரத்தானே செய்யும். இதையெல்லாம் எதிர்பார்த்து, நீர் வெளியேற்றம், புதிய கட்டடங்கள் இரண்டுக்கும் வழி செய்வதுதானே திறமையான அரசாங்கத்தின் வேலை?' புதிதாகப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் ஒருவர் இப்படிக் கூறுகிறார்.

'அதைச் சொல்லுங்க. எல்லாத்துக்கும் சரியாகத் திட்டமிடத்தானே அரசு இருக்கு. எக்கச்சக்கமாக இருக்கும் அரசாங்க ஊழியர்கள், அவங்க கடமையைச் சரியாகச் செய்ய வேண்டாமா?' இப்படி ஆமோதிப்பதும் பரமேஷ்தான்.

'ரமேஷ் எண்ணம்தான் என்ன' என்ற குழப்பம் வருகிறதா? குழப்பமே வேண்டாம். அவனது ஒரே நோக்கம் சுற்றியிருப்பவர்களின் கருத்துக்கு ஆமாம் போடுவது. இதன்மூலம் அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற முயற்சிப்பது. அப்படிச் செய்யும்போது ஒருசில சமயங்களில் எதையோ உளறிவிட்டுத் தடுமாறுவதும் உண்டு.

ஒரு முறை அவன் நண்பன் ஒருவன், பரமேஷ் உட்பட இன்னும் சிலரை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தான். அனைவரும் சாப்பிட்ட பிறகு, 'எப்படி இருந்தது சாப்பாடு?' என்று கேட்டான் அந்த நண்பன்.

பரமேஷ் மௌனமாக இருந்தான். மற்றவர்களின் கருத்துக்காகக் காத்திருந்தான். ஒரு நண்பன், 'கறியிலே கொஞ்சம் உப்பு தூக்கல்' என்று கூறியதும் பரமேஷ், 'ஆமாம்… உருளைக்கிழங்கிலே கொஞ்சம் உப்பு அதிகம்தான்' என்றான்.

'அப்படியா? கொத்தவரங்காய் கறியிலேதானே உப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது' என்று முதலில் கருத்து கூறியவர் கூற, பரமேஷின் முகம் வெளிறிப்போனது. 'நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். கொத்தவரங்காயில்தான் உப்பு அதிகம். சொல்லப்போனால் உருளைக்கிழங்கில் கொஞ்சம் உப்பு கம்மி' என்று கூறிவிட்டு பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டான் பரமேஷ்.

பரமேஷ் போன்றவர்கள் இருக்குமிடத்தில் விவாதங்கள் இருக்காது, குழப்பங்கள் இருக்காது. எதிர்க்கருத்து இருந்தால்தானே விவாதமும் குழப்பமும்!

பணியிடத்தில் பரமேஷ் போல நம்மில் கணிசமானவர்கள் இருக்கக்கூடும். மேலதிகாரிகளை எப்படி எதிர்த்துப் பேசுவது என்ற கோணத்திலும், பிறரின் உள்ளத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கோணத்திலும் இப்படி நடந்து கொள்வோம்.

ஓவியம் : சுதர்ஸன்
ஓவியம் : சுதர்ஸன்

ஆனால், இப்படி நடந்து கொள்வதால் மனதில் ஒரு இறுக்கம் தோன்றும். நம் கருத்தை வெளிப்படுத்தாமல் பிறருக்கு ஆமாம் போட வேண்டியிருக்கிறதே என்கிற எண்ணம், மன உளைச்சலை ஏற்படுத்தும்.

இதற்கு முரணான விஷயம் என்னவென்றால் பிறரைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று பரமேஷ் போன்றவர்கள் கூறும் பேச்சுக்களே அவருக்கு ஆத்மார்த்தமான நண்பர்களை அளிக்காமல் போய்விடும்.

முக்கியமாக, காதலிப்பவர்கள் தன்னுடைய ஜோடியின் அத்தனை கருத்துக்களும் தனக்கு உகந்தவைதான் என்பது போல் நடந்து கொள்ளும்போது, திருமணத்துக்குப் பின் அது பல சிக்கல்களில் கொண்டு விடும். பல விஷயங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவர் என்பது எப்படியாவது தெரியவரும்போது, பூகம்பம் வெடிக்கலாம்.

நேரெதிர்க் கருத்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி விவாதம் செய்யும்போது அந்த இடத்தில் பரமேஷ் போன்றவர்கள் மிக மிகச் சங்கடப் படுவார்கள். யாரை ஆதரிப்பது? யாரை எதிர்ப்பது?

தவிர, உண்மையை உணர்ந்தவர்கள், 'நீ இரட்டைவேடம் போடுகிறாய்' என்பதுபோல் கூறும்போது, பரமேஷ் போன்றவர்கள் மிகவும் மனம் உடைந்துவிட வாய்ப்பு உண்டு.

ச்சோந்தி போல் எதிராளிக்குத் தகுந்தாற்போல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிப்பார்கள். அதாவது, புதிய சூழலில் புதியவர்களிடம் இவர்களால் மிக இனிமையாகப் பழக முடியும். மற்றவர்களும் இவர்களோடு ஒத்துப் போவார்கள். ஆனால், நட்பு தொடரும் போது நம்பகத்தன்மை தேவைப்படும். அப்போது பரமேஷ் போன்றவர்களின் போக்கு குறித்து சந்தேகம் ஏற்படும். உண்மை விளங்கும்போது நட்பு முறியும்.

'மற்றவரின் கருத்துக்களை மறுத்துப் பேசுவதில் தவறில்லை. அதை எதிராளியைப் புண்படுத்தாமல் கண்ணியமாக மறுக்க வேண்டும், அவ்வளவுதான்' என்பதைப் பரமேஷ் போன்றவர்கள் உணர வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com