0,00 INR

No products in the cart.

எதிர்பாராதது!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி! பரிசுக்கதை – 11

கதை : கீதா சீனிவாசன்
ஓவியம் : தமிழ்

வாசலில் நண்பர் செல்வநாயகத்துடன் அவருடைய இரண்டு மகன்களும் வந்து நிற்க, சிவராமன் ஆச்சரியமானார். அவர்களை எதிர்பார்க்கவில்லை.

“வாங்க… வாங்க…” வரவேற்று, உள்ளே அமர வைத்தார். அவருடைய மனைவி அனைவருக்கும் மோர் கொடுக்க, எல்லோரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

செல்வநாயகம் முதலில் பேச ஆரம்பித்தார், “சிவராமா… உனக்கு நாங்க ஒண்ணா வந்தது ஆச்சரியமாத்தான் இருக்கும். ஆனாலும், நீ எங்க குடும்ப நண்பன். ஒரு பெரிய விஷயம் நடக்கணும். நீதான் சாட்சியா இருக்கணும்.”

ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல, செல்வநாயகத்தின் மூத்த மகன் பாஸ்கர் இப்போது பேசினான்…

கீதா சீனிவாசன்

“அங்கிள், சில சமயம் சில முடிவுகளை நாம சூழ்நிலை காரணமா எடுக்க வேண்டியிருக்கு. அதுக்கு உடனே அம்பது லட்சம் தேவைப்படுது. கடன் வாங்கலாம்… பட், வட்டி கட்டி முடியாது. ஸோ, இங்க அப்பாவோட… இல்ல தாத்தாவோட நிலத்தை வித்து பாகம் பிரிச்சா எனக்கு அந்த அமௌண்ட் வந்துடும். அதான் கொஞ்சம் கட்டாயப்படுத்தி இடத்தை விக்க சொல்றேன். அப்பாவும் கிட்டத்தட்ட சம்மதிச்சுட்டாரு. நீங்களும் என் நிலைமை புரிஞ்சு சப்போர்ட் பண்ணனும் அங்கிள்! கூட இருந்து முடிச்சுத் தரணும்!”

பாஸ்கர் சொன்னதை கவனமாக உள்வாங்கிக் கொண்டார் சிவராமன். அடுத்த மகன் பிரதாப்பை பார்த்தார்.

‘‘அங்கிள், எனக்கு அண்ணனைப் போல அவசரம்னு சொல்ல முடியாது. பட், என்னோட பொண்ணு அடுத்த வருஷம் பி.ஈ. முடிக்கப்போறா. மேல எம்.எஸ். பண்ணணும்னு பிடிவாதமா இருக்கா. அதுவும் யு.எஸ்.ல! கண்டிப்பா அம்பது லட்சம் வரைக்கும் செலவாகும். ஸோ, சொத்து பிரிச்சு செட்டில் பண்றதுல எனக்கும் விருப்பம்தான்!”

பிரதாப் சொன்னான். செல்வநாயகம் அமைதியாகவே இருந்தார். இதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை என்பது புரிந்தது.

“சரி, பாஸ்கர் இந்த நிலத்த வச்சு ரிடையர் ஆன பிறகு அப்பா ஏதோ விவசாயம் பண்றாரு. கொஞ்சம் வருமானம் வருது. பொழுதும் போகுது. அம்மா இல்லாத நிலையில் நீங்க செட்டில்மெண்ட் வேணும்னு கேக்கறீங்க. அப்புறம் அப்பாவோட நிலைமை? அவருக்கு என்ன பென்ஷனா வருது? திடீர்னு ஒரு நல்லது கெட்டதுன்னு வெச்சுக்குங்க. எங்க போவாரு…?” சிவராமன் கேட்டார்.

சில நொடிகள் மௌனம் காத்த பாஸ்கர், “இல்ல அங்கிள்… இப்ப எங்களுக்கு அவசரம்னு கேக்கறேன். நீங்க பின்னாடி அப்படி நடந்தா… இப்படி நடந்தான்னு கேக்கறீங்க. இப்ப இருக்கிற அவசரத் தேவை முக்கியமா? இல்ல எதிர்காலத்துல ஒரு தேவை வந்தான்னு பேசறது முக்கியமா? மேல் வருமானமா இரண்டு கடைகளிலிருந்து வாடகை வருதே… அத அவரு வெச்சுக்கிட்டும்! இருக்கிற வீட்டுக்கு வாடகை தர வேண்டாம்!”
கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொன்னான் பாஸ்கர்.

“என்ன செல்வா, நீ என்ன சொல்ற?” சிவராமன் நண்பனைக் கேட்டார்.

“சிவா, இதுல என்ன சொல்றது? இது எல்லாம் நான் சம்பாதிச்சது இல்ல. என் அப்பாவோடது. தாத்தா சொத்துல பேரன்க உரிமை கொண்டாடுறது தப்பில்ல. நீ கேட்ட மாதிரி நானும் கேட்டேன். எனக்கும் இன்னும் வயசாகி…”
அப்பா முடிப்பதற்குள் பிரதாப் முந்திக்கொண்டு கேட்டான்.

“அப்பா, அதுக்குத்தான் நாங்க, உங்கள எங்க ஊருக்குக் கூப்பிடறோம். நானும் அண்ணனும் உங்களப் பாத்துக்கறோம். நீங்க காலத்துக்குத் தகுந்த மாதிரி உங்கள மாத்திக்கத்தான் வேணும். சிட்டில ஒரு ரூமுக்குள்ள அடைஞ்சு டி.வி. பார்க்கணுமான்னு யோசிக்கக் கூடாது! எங்ககிட்ட மாத்தி மாத்தி இருக்கத்தான் வேணும்!”

சிவராமன் சிரித்தார். தம்பி அது அவ்வளவு சுலபமில்லப்பா. அது, உனக்கு வயசானாத்தான் புரியும். இப்ப என்ன… சொத்தப் பிரிக்கணும். அதுல கறாரா இருக்கீங்க… சரிதான?”

“ஆமாம் அங்கிள்…” இரு மகன்களும் கோரஸாகச் சொன்னார்கள்.

” செல்வா… இதுல பெரிசா என்னப்பா யோசிக்கிறது? பசங்கதான விட்டுக் கொடுத்துட்டுப் போ!”

“நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் சிவா… இத புஷ்பாகிட்டயும் சொன்னேன். அங்கதான் எனக்கு ஒரு ஷாக்.” செல்வநாயகம் நிறுத்தினார்.
புஷ்பா அவரது மகள். திருமணமாகி யு.எஸ்.சில் இருப்பவள்.

“ஏன்… அவ என்ன சொன்னா?”

“ம்… சொத்த மூணு பங்கா போடுங்கறா!”

“அட… ஆமாம்ப்பா. பொண்ணுக்கும் சம உரிமை உண்டுதான். ஆனாலும், அவளும் கேக்கறது ஆச்சரியமா இருக்கே? சிவராமன் புருவத்தை உயர்த்தினார். அவர் இதை எதிர்பார்க்கவில்லை!

பிறகு… பாஸ்கர் மற்றும் பிரதாப்பிடம் கேட்டார். “இதுல உங்க முடிவு என்னப்பா?”

“அங்கிள் அவளும் எங்களோட போட்டி போடறா? முடிஞ்சா அப்பா அவளை சமாதானப்படுத்தட்டும். இல்ல… இப்ப இருக்கிற வீடு, ரெண்டு கடையையும் அவளுக்கு கொடுக்கட்டும்! நீங்களே பொது மனுஷனா இருந்து முடிச்சுக் கொடுங்க அங்கிள்” பிரதாப் அசால்டாகச் சொன்னான். அப்படி என்றால் செல்வநாயகத்துக்கு இந்த ஊரில எதுவுமில்லை. பெட்டியைத் தூக்கிக் கொண்டு மகனோடு செல்ல வேண்டியதுதானா?

சிவராமனுக்கு கொஞ்சம் மனசு வலித்தது. செல்வநாயகத்தின் குடும்பத்தில், அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்துக்கு கூட இருந்து எல்லாம் செய்தவர். அவர் குடும்பம் பெரிய குடும்பமாக மாற சாட்சியாக இருந்தவர். இப்போது எல்லாரும் சொத்து விஷயத்தில் பிரிந்து விட சாட்சியாக இருக்க வேண்டுமா? என்று யோசித்தார். அதுகூட பெரிய பிளவு வராமல் நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற செல்வநாயகத்தின் விருப்பத்தையும் புரிந்துகொண்டார்.

பாதி சம்மதம், பாதி வற்புறுத்தல் என்ற நிலையில் அடுத்த மாதம் பாகப்பிரிவினைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புஷ்பா இதற்காக யு.எஸ்.சிலிருந்து வரவும் ஒப்புக் கொண்டாள். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?

செல்வநாயகத்தின் நிலம் விற்கப்பட்டது. மகன்கள் பணத்தைப் பிரித்துக் கொண்டனர். அவர் இருந்த வீடும் இரண்டு கடைகளும் புஷ்பாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.

அதற்கான பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவுகள் நடக்க ஏற்பாடாயின. சாட்சியாக சிவராமன் ஆஜரானார். புஷ்பா உட்பட அனைவரும் வந்தனர். பரஸ்பர விசாரிப்புகள் போலியாக நடந்தன.

உள்ளுக்குள் சோகத்தை அடக்கிக்கொண்டு செல்வநாயகம் எல்லாப் பத்திரங்களிலும் கையெழுத்திட்டார்.

பாஸ்கர், பிரதாப் முகங்களில் திருப்தி தெரிந்தது. புஷ்பா மட்டும் எந்த உணர்வும் காட்டாது இருந்தாள்.

எல்லாம் முடிந்த பிறகு செல்வநாயகம் தன் மகளிடம், ‘‘நான் இந்த வீட்ல ஒரு மாசம் மட்டும் தங்கிக்கறேன். அப்புறமா பாஸ்கர் வீட்டிற்கு முதல்ல போலாம்னு இருக்கேன்.” வேண்டுகோளாகக் கேட்டார்.

புஷ்பா அப்பாவை இப்போது அர்த்தத்தோடு பார்த்தாள்.

“அப்பா, இப்ப இந்த வீட்ட விட்டு உங்கள யாரு போகச் சொன்னா? புரியல… இது உங்களுக்குதாம்பா. நான் இத என் பேருக்கு மாத்தாம இருந்திருந்தா, நாளைக்கு வேறொரு இக்கட்டான சூழ்நிலையில உங்க மகன்கள் இதையும் விக்கச் சொல்லி இதுலயும் பங்கு கேப்பாங்க. அதனாலதான் நான் இத என் பேருக்குக் கேட்டேன். நீங்க எங்கயும் போக வேண்டாம்பா. இந்தக் கடை வருமானமும் வழக்கம்போல் உங்களுக்குத்தான். பின்னாடி உங்க மனசும், உடம்பும் சோர்வானா அப்ப, வேறு வழியத் தேடலாம். இப்போதைக்கு எந்த மாற்றமும் வேண்டாம்பா. வழக்கம் போல் உங்க மனசு விரும்புகிற மாதிரி நீங்க இங்கேயே இருங்க” புஷ்பா சொன்னாள். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. செல்வநாயகத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...