0,00 INR

No products in the cart.

நம் வீட்டுத் தோட்டத்தில்…

வீட்டுத் தோட்டத்தில் வெற்றிகரமாகக் காய்கறி அறுவடை…
திருமதி ராமசந்திரன் உஷா பேட்டி.
– லதானந்த்

விண்ணைத் தொடும் காய்கறி விலை; செயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லிகளால் ஏற்படும் உபாதைகள்; சரியான உடற்பயிற்சியின்மை; சத்துக் குறைவான ஆகாரங்கள்… இப்படிப் பல பிரச்னைகளுக்கும் தீர்வாக இருப்பது, நாமே நமக்கு வேண்டிய காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்வதுதான். மன மகிழ்ச்சிக்காக பூஞ்செடிகளையும் வளர்க்கலாம்.

இப்படிப் பல நன்மைகள் இருந்தாலும் எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது, இடையில் ஏற்படும் சவால்களை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்காததாலேயே பலரும் வீட்டுத் தோட்ட எண்ணத்தைத் தள்ளிப்போட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமது வீட்டிலேயே வெற்றிகரமாகக் காய்கறிகள் மற்றும் பூஞ்செடிகளைத் தேவையான அளவுக்குத் தரமாக உற்பத்தி செய்துவரும் கோவையைச் சேர்ந்த ராமசந்திரன் உஷா அவர்களை இந்தத் தொடர் வாயிலாக உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தம்மைத் தொடர்பு கொள்பவர்களுக்கு விதைகளையும் ஆலோசனை களையும் இலவசமாகவே அளித்துவருகிறார் இவர். இணைய வட்டாரத்தில், ‘செடி டாக்டர்’ என அன்போடு அழைக்கப்படும் ராமசந்திரன் உஷாவோடு ஓர் இனிய நேர்காணல் இதோ!

உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?

பொள்ளாச்சியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, திருமணம் ஆனதும், பல ஊர்களில், நாடுகளில், குடித்தனம் நடத்திவிட்டு தற்சமயம் கோவையில் வசிக்கிறேன்.

கல்கி, உட்பட பல இலக்கிய இதழ்களில் என் கதைகள் வெளியாகியுள்ளன. கலைமகள் இதழ் நடத்திய கி.வா.ஜகந்நாதன் அவர்களின் நூற்றாண்டு விழா நாவல் போட்டில் நான் எழுதிய ‘கரை தேடும் ஓடங்கள்’ என்ற நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. இவை தவிர பல சிறுகதைகளுக்கு இணையம், அச்சு இதழ்களில் பரிசு பெற்று இருக்கிறேன்.

எனக்கு இரண்டு குழந்தைகள். மகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாய் பணிபுரிகிறாள்; மகன் மருத்துவத்தில் மேல் படிப்பு படித்துள்ளார். பொறியாளரான என் கணவர், வேலையில் இருந்து விருப்ப ஓய்வுப் பெற்ற பின்னர் இரண்டு நாய்க்குட்டிகள், என் தோட்டம் என்று கோவையில் வாழ்ந்து வருகிறோம்.

செடிகொடிகள் மீது உங்களுக்கு ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது?

குழந்தைப் பருவத்தில் நாங்கள் சென்னை, ஷெனாய் நகர் வீட்டில் மாடி போர்ஷனில் குடியிருந்தோம். கீழே தோட்டத்தில் பல செடிகள், மரங்கள் இருந்தன. அந்த வீட்டுக்குக் குடி வந்தபோது எனக்கு ஏழு வயதிருக்கும். அப்போதுதான் முதன் முதலாய் செடி, மரங்களைப் பார்க்கிறேன். கீழே கிடந்த மாங்காய்களை எடுத்துச் சுவைத்தது, பாதாம் கொட்டைகளை பொறுக்கியது, சப்போட்டாப் பழங்களை பறித்தது எல்லாம் அப்படியே நினைவு இருக்கிறது. என் அம்மா அங்கே தொட்டியில் துளசி, மற்றும் கனகாம்பரச் செடிகளை வைத்திருந்தார்.

பிறகு ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுது அண்ணா நகர் வீட்டிற்கு குடிபுகுந்தோம். ஒன்றரை கிரவுண்ட் நிலம். எல்லா வகையான செடிகள் மரங்கள் வைத்திருந்தோம். என் பாட்டியும் அம்மாவும் பல பூஞ்செடிகள், காய்கறிச் செடிகள் வளர்த்தார்கள். வயது ஆக ஆக, மொத்தத் தோட்டமும் என் கைக்கு வந்தது.

அத்தனை பெரிய தோட்டத்தை நானே சுத்தம் செய்வேன். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு மண்வெட்டியைப் பிடித்தால் கீழே வைக்கும்பொழுது, மணி பன்னிரண்டைத் தாண்டியிருக்கும். சாதாரண மத்திய வர்க்கம் என்பதால், தோட்டக்காரர் எல்லாம் வைக்கக் கட்டுப்படியாகாது.

அங்கே பல மரங்கள், செடிகள் வைத்திருந்தேன். நான் கல்யாணம் ஆகி, அந்த வீட்டை விட்டு கிளம்பிய சில வருடங்களில் வீட்டை விற்கும் சூழ்நிலை. பல முறை, என் தோட்டம் என் கனவில் வந்திருக்கிறது. நான் ஆசையாய் வளர்த்த மா மரம், என்னை கண்டதும், அதன் கிளைகளால் என்னை அணைத்துக்கொள்வது போன்ற கனவு அவ்வப்பொழுது வரும்.

ஆனால் அந்த வீட்டையோ, மரங்களையோ தேடிப் போகத் தோன்றவில்லை. வீட்டின் அமைப்பும் மாறியிருக்கும், மரங்கள் இருக்குமா என்றே தெரியாதே!

உங்களது முயற்சிக்குக் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்விதம் இருந்தது?

பெரியதாய் யாருக்கும் ஆர்வமில்லை. நான் என் முயற்சிகளையும் வெற்றிகளையும் சொன்னால் மகனும் மகளும் பாராட்டுவார்கள். கணவர், “அப்படியா?” என்பார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் என் கணவர், கிராமத்தில் பிறந்து நிலம், கால்நடை என்றெல்லாம் பார்த்து வளர்ந்தவர். ஆனால் அவருக்கு இதில் எள்ளவும் ஆர்வமில்லை.
ஆனால் அவருக்கு ஒரு தீராத சந்தேகம்: “பத்து ரூபாய் கொடுத்தால் கடையில் கீரை கிடைக்கிறது, அதுக்கு ஏன் இவ்வளவு பாடுபடுகிறாய்?” என்பதுதான் அது!

என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, “என்னமோ செய்” என்று ஒதுங்கிக் கொண்டாலும், உடலை ஏன் வருத்திக் கொள்கிறாய்?” என்பார். ‘இந்த வேலைகளால் என்னால் நன்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடிகிறது. எந்தவிதக் களைப்பும் இல்லாமல், இரண்டு மணி நேரம் மண்ணில் வேலை செய்ய முடிகிறது என்ற நினைப்பு எனக்கு ஓர் உந்துதலை அளிக்கிறது’ என்று பதில் அளிப்பேன்.

தோட்டம் போடுவதின் வேறு பயன்கள் என்ன? எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

முதலில் நமக்கு இயற்கை முறையில் நஞ்சில்லாத, சுவையான காய்கறிகள் கிடைக்கின்றன. ‘சுவையான’ என்பதை மீண்டும் சொல்கிறேன். இயற்கை உரம், பூச்சி விரட்டிகளை மட்டும் உபயோகித்து வளர்க்கும் காய்கறிகளின் சுவையே தனி.

இது மிகச் சிறந்த உடற்பயிற்சி; மனதுக்கும்தான். மன நல மருத்துவர்கள் பலரும், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்குச் செடி வளர்ப்பைப் பரிந்துரைக்கிறார்கள். காலையில் செடிக்குத் தண்ணீர் விடுவது மட்டும்தான் முக்கிய வேலை. மாலை வேளை ஒரு நாள் தோட்ட வேலை, மறு நாள் நடை பயிற்சி என்று நேரம் ஒதுக்கி வைத்திருக்கிறேன். சில பயிரூக்கிகள் காலை வேளையில் இட வேண்டும். அதற்கு ஞாயிறு காலையை ஒதுக்கியிருக்கிறேன்.

செடிகளின் பசுமை, மலர்களின் அழகும் நிறமும் சந்தோஷத்தை தரும் என்றால், கை நிறையக் காய்களைப் பறித்து வரும்பொழுது கிடைக்கும் சந்தோஷத்துக்கும், பெருமிதத்துக்கும் அளவே இல்லை.

இப்படி இயற்கை விவசாயத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் வரக் காரணம் என்ன?

ண்மையில் இயற்கை விவசாயம், ஆர்கானிக் என்ற வார்த்தைகளை நான் கேள்வி பட்டதே இல்லை. எனக்கு தெரிந்த தோட்ட வேலைகளை உற்சாகத்துடன் செய்துவந்தேன். இந்தளவுக்கு என் மாடித் தோட்டம பிரபலமாக காரணம், நடிகை ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படமும்தான். அந்தப் படம் வந்த நேரம், பல பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் என் தோட்டம் பற்றிய செய்திகள் வெளியாகின.

உஷா முகத்திலும், மனதிலும், பேச்சிலும், எண்ணத்திலும் உற்சாகம் பொங்குகிறது. வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தின் நுணுக்கங்களைப் பற்றியும் விளாவரியாகப் பேச ஆரம்பித்தார்…
(பசுமை பேசுவோம்)

 

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...