0,00 INR

No products in the cart.

பாட்டி ‘மட்டன்’ சாப்பிடுவாளா?

கட்டுரை : ரேவதி பாலு
ஓவியம் : பிரபுராம்

ங்கள் பூர்விகம் தஞ்சாவூர். சென்னையிலேயே வளர்ந்து வேலை பார்த்து கல்யாணமும் ஆயிற்று. என் கணவர் பூர்விகம் கேரளாவில் பாலக்காடு. அவர்கள் பேச்சு, சமையல் பழக்க வழக்கங்கள் எல்லாமே எங்கள் வீட்டு பழக்க வழக்கங்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கும்.

கல்யாணமாகி புருஷன் வீடு போயாயிற்று. கேரளாவிலிருந்து கல்யாணத்திற்கு வந்த விருந்தாளிகள் நாலு பேர் இன்னும் இங்கே தான் தங்கியிருந்தார்கள். காலையில் மாமியாரும் ஊரிலிருந்து வந்த சிற்றம்மை (சித்தியை சிற்றம்மை என்பார்கள். அம்மாவை அம்மை என்பார்கள்) ஒருவரும் சேர்ந்து சமைத்து முடித்து முதல் பந்தி இலை போட்டார்கள். தேங்காய் எண்ணெய் சமையல் கமகமத்து பசியைத் தூண்டியது. யார் முதல் பந்தியில் உட்காரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நான் என் மாமியாரின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அவர் என்னைப் பார்த்து சிரித்த முகத்துடன் “நீ இருக்கியா?” என்றார். என்னை இருந்து அடுத்த பந்தியில் சாப்பிடச் சொல்கிறார் போல் இருக்கிறது என்று நான் தலை ஆட்டி விட்டு அடுத்த அறைக்குச் சென்று விட்டேன். அங்கே என்னைத் தேடிக் கொண்டு வந்த என் நாத்தனார், “என்ன நீ? இங்க வந்து நின்னுண்டிருக்கே? அம்மா உன்னை சாப்பிட வரச் சொன்னாளே?” என்றாள். “இல்லையே? என்னை இருக்கச் சொன்னாரே? நான் அடுத்த பந்தியில் சாப்பிட்டுக்கிறேன்” என்றேன் நான். அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.

“அம்மா இருன்னு சொன்னா சாப்பிட உக்காருன்னு அர்த்தம். நீ வா!” என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் உட்கார வைத்தாள். சாப்பிட உட்கார்ந்ததும் அவர்கள் பேசிக்கொண்ட சமையல் மெனுவில் ‘இடித்துப் பிழிந்த பாயசம்’ ‘அரைத்துக் கலக்கி’ பச்சடி என்பதெல்லாம் கலவரமூட்டுவதாக இருந்தது. அதைச் சாப்பிடும்போது ‘அடித்து உதைத்து’ விடுவார்களோ என்று கூட அச்சம் ஏற்பட்டது.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நாத்தனாரின் பத்து வயது பையன் இலையில் கூட்டான் (குழம்பு) ஊற்றியதும் திடீரென்று “கஷ்ணம் ஜாஸ்தி” என்று அலறிக்கொண்டு கைகளால் இலையை மறைத்துக் கொண்டான். (இவன் தாயார், பாலக்காட்டில் பிறந்து பாலக்காட்டுக்காரரையே திருமணம் செய்தவள்.) பாவம் குழந்தைக்கு இந்த வயதில் என்ன கஷ்டமென்று தெரியலியே? என்று முழித்துக் கொண்டிருந்த போது, என் சின்ன நாத்தனார் “கஷ்ணம்” என்றால் சாம்பாரில் உள்ள காய்கள் என்று விளக்கினாள். இவள் பாலக்காட்டில் பிறந்து தஞ்சாவூர்க்காரரை திருமணம் செய்தவள். நாங்கள் “சாம்பாரில் உள்ள காயை ‘தான்’ என்று சொல்வோம். ‘பூசணிக்காய் தான்’, முருங்கைக்காய்தான்’ என்று. இங்கே ஒரே கஷ்டமாகிவிட்டது சாரி … கஷ்ணமாகி விட்டது.

அன்று பாலக்காட்டிலிருந்து வந்திருந்த மற்றொரு சிற்றம்மை ஒரு தூக்கை என்னிடம் கொடுத்து “இதில் வறட்டி இருக்கு. அம்மை கிட்ட கொடு” என்றாள். ‘எவர்சில்வர் தூக்கில வறட்டியைப் போட்டு அதை ஊரிலிருந்து வேர கொண்டு வந்திருக்கேளே’ என்று மனதில் நினைத்தபடியே மாமியாரிடம் தூக்கைக் கொடுத்ததும் மாமியார் ஒரு புன்சிரிப்புடன் அதை வாங்கித் திறந்தார். உள்ளே சாக்லேட் கலரில் அல்வா பதத்தில் ஏதோ பண்டம் இருந்தது. “பார்த்தியா? சக்கை வரட்டி! ஊருல சக்கையை சீஸன்ல வரட்டியா செஞ்சு வச்சுருவா. மாசக் கணக்கில கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். அப்பப்ப சக்கைக் பிரதமன், இலை அடை எல்லாம் செய்யலாம். ” என்றார்.

பொழுது விடிந்தால் ஒரு தேங்காயை உடைத்துத் துருவி கூட்டான் வைத்து விடுவார்கள். ஆமாம்! அரைத்து விட்ட சாம்பார் தான் அது. ரசம் என்பதே அகராதியில் இல்லை. எங்கள் வீட்டில் எல்லாம் ரசம் தான் பிரதானம். சாம்பார் வைக்கா விட்டாலும் பரவாயில்லை. ரசம் இல்லாமல் இருக்காது.

“எப்படி வியர்க்கிறது பார்! சட்டையை அழி!” என்பார் என் மாமியார் வியர்க்க விறுவிறுக்க விளையாடி விட்டு வரும் பேரனிடம். அவன் “அவ்வளவு பெரிய ரப்பர் இல்லையே பாட்டி!” என்பான் குறும்பாக. அவன் சின்ன நாத்தனாரின் மகன். நான் வழக்கம்போல் ஒன்றும் புரியாமல் முழித்தபோது என் கணவர் விளக்கினார். நாங்கள் ‘சட்டையை அவிழ்த்துப் போடு’ என்று சொல்வதைத் தான் அவர்கள் ‘சட்டையை அழி!’ என்பார்களாம்.

நல்லா அழிச்சாங்க என்று சிரித்துக் கொண்டிருக்கும்போதே மாமியார் கழிப்பறைக்குள் நுழைந்த மற்றொரு பேரனை “விளையாடணும்னு அவசரமா ஓடி வந்துடாதே. நன்னா ஒழிஞ்சு போ!” என்றார். என்ன குழந்தைக்குப் போய் இப்படி ‘ஒழிஞ்சு போ, தொலைஞ்சு போ’ ன்னு ஆசிர்வாதம் என்று நினைத்தபோதே வழக்கம்போல என் கணவர் விளக்கினார். குழந்தைகள் விளையாட வேண்டும் என்ற நினைப்பில் நிறைய நேரம் கழிப்பறையில் உட்கார விருப்பமில்லாமல் அவசரமாக ஓடி வந்து விடுவார்களாம். கழிவுகள் முழுவதும் போக வேண்டும் என்பதைத் தான் “ஒழிந்து போ” என்று சொல்வார்களாம்.

பக்கத்திலுள்ள காய்கறி கடைக்கு மாமியாருடன் சென்றேன். இரண்டு கடைகள் இருந்தன. மாமியார் இரண்டாவது கடைக்குச் சென்று காய் வாங்கினார். முதல் கடையில் ‘தூக்கம் சரியாக இருக்காது’ என்பதால் அடுத்தக் கடையில் வாங்குவதாக நான் கேட்காமலேயே விளக்கம் அளித்தார். கடைக்காரருக்கு தூக்கம் சரியாக இல்லையென்றால் நமக்கென்ன என்று ஒன்றும் புரியாமல் அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் வழக்கம்போல் பாலக்காடு-தமிழ் டிக்ஷனரியில், அதான் என் கணவரிடமிருந்து விளக்கம் கிடைத்தது. ‘தூக்கம் சரியாக இல்லை’ என்றால் காயை நிறுத்தும்போது எடை சரியாக இல்லை என்று பொருளாம்.

யார் வீட்டிலாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றால் ‘ஆண் குட்டியா, பெண் குட்டியா?’ என்று கேட்பார்கள். இதென்ன ‘நாய்க்குட்டி’ ரேஞ்சுக்குக் கேட்கிறார்களே என்று நினைத்தோமானால் அடுத்த வினாடியே பேரனை “ஏ குட்டி! இங்க வா!” என்று கூப்பிடுவதில் பதில் கிடைக்கும். ஏதாவது குழந்தைக்கு ஜூரம் வந்து விட்டால், “குட்டிக்கு பனி” என்று வருத்தப்படுவார்கள். அது எப்படி காய்ச்சலை ‘பனி’ என்று அப்படியே எதிர்மறையாகக் குறிப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.

நான் ஒவ்வொரு வார்த்தையாக அர்த்தம் தெரிந்து கொள்ள ஆரம்பித்த காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் என் சகோதரன் விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். மாமியார் அவனை உபசரித்து தட்டு வைத்து சாதம் போட்டு கூட்டானை (குழம்பை) ஊற்றி, “உனக்கு மத்தன் பிடிக்குமா? போடலாமா?” என்றார்கள். பாலக்காட்டில் பரங்கிக்காயை (மஞ்சள் பூசணிக்காயை) மத்தன் என்றும் வெள்ளைப் பூசணிக்காயை ‘இளவன்’ என்றும் சொல்வார்கள். அவன் சட்டென்று எழுந்து வந்து என் காதருகே கிசுகிசுத்தான், “அக்கா! உன் வீட்ல ‘மட்டன்’ பண்ணுவீங்களா? பாட்டி ‘மட்டன்’ சாப்பிடுவாளா என்ன?”. எனக்கு சிரிப்புத் தாங்கவில்லை.
‘மத்தன்’ என்று பாட்டி சொன்னதை அவன் ‘மட்டன்’ என்று புரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு விளக்கிச் சொன்னேன். நாங்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் முழித்த என் மாமியாருக்கு ‘மட்டன்’ என்றால் அசைவம் என்று விளக்கினேன்.

தே போல் நான் கேள்வியே பட்டிராத, ‘கூர்க்கங்கிழங்கு’, ‘காவத்தங்கிழங்கு’ எல்லாம் புகுந்த வீட்டில் தான் பார்த்தேன். திருவாதிரை களிக்குத் தொட்டுக் கொள்ள தமிழ் நாட்டில் ஒற்றைப்படையில் ஏழு, ஒன்பது என்று காய்கள் போட்டு கூட்டு செய்வார்கள். பாலக்காட்டில் துவரன் தான். நாம் கறி, பொரியல் என்று சொல்வதை அவர்கள் துவரன் என்பார்கள்.

திருவாதிரை அன்று கட்டாயம் ‘காவத்தங்கிழங்கு, கூர்க்கங்கிழங்கு’ சமையலில் சேர்க்க வேண்டும். சமையலுக்கு ‘வெளிச்ச எண்ணெயில் தான் பொறித்துக் கொட்ட வேண்டும்’. அதாவது தேங்காய் எண்ணெயில் தான் தாளிக்க வேண்டும்.

ஒரு நாள் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மாமியார் எதிரே உட்கார்ந்து பரிமாறிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று, “ஒரு ஆப்பை கொண்டு வா!” என்றார்கள். நான் முழிப்பதைப் பார்த்து, “அதான்! ஆப்பத்தூக்கில இருக்குமே?” என்று விளக்கி வேறு சொன்னார். நான் சரியான ‘பல்ப்’ அடிக்க என் கணவர் ஓடி வந்து சமையலறையிலிருந்து ஒரு கரண்டி கொண்டு வந்து தன் அம்மாவிடம் கொடுத்தார். அதைக் தயிரில் போட்டுக் குழந்தைகளுக்கு ஊற்றிய மாமியார், “நா இதைத்தானே கேட்டேன்!” என்றார் என்னை பார்த்து சிரிப்புடன்.

‘அகப்பை’ என்னும் அழகான தமிழ் வார்த்தையை ‘கரண்டி’க்கு பதிலாக் உபயோகப்படுத்தும் அவர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. ‘ஆப்பக்கூடு’ அகப்பைகளை தாங்கி தூக்கி நிற்பதால் அது ‘ஆப்பத்தூக்கி’ ஆயிற்று. அது மட்டுமல்ல. கோயிலுக்குப் போய் ‘தொழுதுட்டு வா!’ என்பார்கள். ‘தொழுவது’ என்னும் சிறப்பான தமிழ் வார்த்தை கேட்கவே இனிமையாக இருக்கும்.

சொல்வதைக் கேட்காமல் குழந்தைகள் அடம் பிடித்தால் என் மாமியார் அலுத்துக் கொள்வதே வித்தியாசமாக இருக்கும். உன்னை மாற்ற முடியவில்லையே என்பதை “உன்னைக் கொண்டு தோத்தாச்சுடா!” என்பார். அந்த “தோத்தாச்சு” என்பதை விஸ்தாரமாக இழுத்து ராகமாகச்சொல்வார். நானும் அவரை பின்பற்றி என் பிள்ளையை “உன்னைக் கொண்டு தோத்தாச்சுடா!” என்றவள், இப்போது பேத்தியை, “உன்னைக் கொண்டு தோத்தாச்சுடீ!” என்கிறேன்.

3 COMMENTS

  1. என் இரண்டாவது சம்பந்தி பாலக்காடு. அவர்கள் பேசும் மத்தன், இளவன்,வெளிச்ச எண்ணை , மிளகூட்டான் எல்லாம் அர்த்தம் புரிய எனக்கு சில நாட்கள் ஆயிற்று. ஆனால் மலையாளம் ரொம்பவும் இனிமையான மொழி. கொஞ்சும் குரலில் அவர்கள் பேசுவதை கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...