
அழகுக்கலை துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துவரும் வசுந்தரா அவர்களின் அழகுநிலையம் சென்னை தியாகராய நகரிலுள்ள
பாலாஜி அவென்யூவில் புதியதாய் பூத்த பூவாய் மிளிர்க்கிறது.
வசுந்தரா அவர்களின் VISIBLE DIFFERENCE SALON மறு நவீனமயமாக்கம் செய்யப்பட்டு மார்ச் 14 அன்று திறக்கப்பட்டுள்ளது. வசுந்தரா அழுகுக்கலை துறையில் கடந்த 33 ஆண்டுகளாக சிறப்பான முறையில் தடம்பதித்து வருபவர். பல்வேறு பிரபல தொலைக்காட்சி சேனல்களிலும், யூடியூபிலும் அழுகுக்கலை சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த அழகுநிலைய 'RE – LAUNCH' விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும் , ரேடியோ ஜாக்கி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், கிரிக்கெட்டர், மேடை பேச்சாளர், நகைச்சுவையாளர் என பன்முக திறமைகளை கொண்ட பாஸ்கி அவர்கள் கலந்துக்கொண்டு அழகுநிலையத்தை திறந்து வைத்தார்.
பரந்த ஹாலில் கண்ணையும், கருத்தையும் கவரும் அழகான பிரம்மாண்டமான புத்தர் ஓவியம் அனைவரையும் வரவேற்று மகிழ்ச்சிப்படுத்தியது. பாஸ்கி, வசுந்தரா மற்றும் வந்திருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து குத்துவிளக்கேற்றி விழாவை இனிதே தொடங்கி வைத்தனர்.
பின்னர் தன் நிலையத்தின் 33வது ஆண்டை குறிக்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட அழகிய கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினார் திருமதி வசுந்தரா . அப்படியே சிறப்பு விருந்தினர்களுக்கு ஃபளவர் பொக்கேவும் வழங்கி மகிழ்வித்தார். சவுண்ட் வேவ் நிறுவனத்தின் உரிமையாளர் விவேக் அவர்கள் செய்திருந்த இன்டீரியர் டெக்கரேஷன், விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் கவர்ந்த மிக சிறப்பான அம்சங்களுள் ஒன்று. ஒவ்வொரு அறையும் தனிப்பொலிவுடன் உயர்ரக அலங்காரங்களுடன் பளிச்சிடுகிறது. உள் அறைகள் அனைத்துமே அழகான இன்டீரியர் வேலைப்பாடுகள் மூலம் தகதகவென தங்கமாய் மின்னுகிறது.
அழகு நிலையத்தின் ஒரு பகுதியில் அவர்கள் நடத்தும் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் அறை உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை வசுந்தரா தன் மகளுடன் சேர்ந்து நேரலை வகுப்புகளாக நடத்துகிறார். இவருக்கு வெளிநாடுகளிலும் மாணவிகள் உண்டு. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி தருகிறார். சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு பறந்து சென்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.
பாஸ்கி அவர்கள் தனது நகைச்சுவை உரையுடன் சில மணித்துளிகள் அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தினார்.
இந்த விழாவிற்கு வருகைத் தந்த விருந்தினர்கள் அனைவருக்கும் இனிய உபசரிப்பும், சிறிய விருந்தும் அளித்து அசத்தினார் வசுந்தரா. அந்த பிஸியான நேரத்திலும் அவர் நமது மங்கையர் மலருக்காக சில நிமிடங்களை ஒதுக்கி உரையாடினார். அவர் பேசியதிலிருந்து சில வரிகள்…
அவரது லட்சியம், தனது வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான சேவையை வழங்குவதே என்கிறார். மேலும் தனது அழகுநிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நேர்மறையான சூழலில் அமைதியாக நிம்மதியாக இருக்கும் வகையில் தங்களது சேவையை அமைத்துத் தருவதே தனது நோக்கம் என்கிறார். இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ரிலாக்ஸான மனநிலையும் புத்துணர்ச்சியும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
மிக அழகாக நவீன வேலைப்பாடுகளுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்ட VISIBLE DIFFERENCE SALON அழகுநிலையத்தின் அமைதியான சூழல் வசுந்தரா அவர்களின் உயரிய எண்ணத்தை நிச்சயம் நிறைவு செய்யும் என வாழ்த்தி விடைபெற்றோம்.