ஜிங்கிலி!

ஜிங்கிலி!
Published on
சிறுகதை: பானு ரவி, சிங்கப்பூர்
ஓவியம் : இளையபாரதி

"நாற்பது வயதில் நாய்க்குணம், நாம்தான் அறிந்து நடக்கணும்"….பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில் அவளது பிறந்தநாள் வரப்போகிறது. அதற்குத்தான் பரமுவின் அந்த அழகான பாடல் கட்டியம் கூறியது!

'ணங்'கென்று காபித் தம்ளரை மேசை மீது வைத்தவளைக் குறுகுறுவென்று பார்த்தான் பரமு. "என்ன யங்க் லேடி? உண்மை கசக்கிறதா? இல்ல, என்னோட  பாட்டு பிடிக்கலையா…?" சீத்தா பதில் பேசவில்லை.

"ஓகே… ஓகே…கூல் கூல்! இந்தத் தடவை என்னோட  மகாராணிக்கு என்ன கி:.ப்ட் வேணும்னு சொல்லு…"

"உஹூம்…எனக்கு எதுவும் வேண்டாம்…" சொல்லும்போதே, எங்கே அதைப் பரமு சீரியஸாக எடுத்துக் கொண்டு, பரிசு எதுவும் வாங்கித் தராமல் போய்விடுவானோ என்றிருந்தது சீத்தாவுக்கு!

"அப்போ ரொம்பச் சரி மேடம்… எனக்கும் பர்ஸ் வீங்காது…" காப்பியைக் குடித்து முடித்தவன் எழுந்து கொண்டபோது, டென்னிஸ் விளையாடிவிட்டு சந்தோஷ் வருவது தெரிந்தது.

"ஹாய் டாட்! மாம்! ரெண்டு பேரும் சீரியஸா என்ன டிஸ்கஸ் பண்ணறீங்க?'  ரஷ்யா – உக்ரைன் போர் பத்தியா? இல்ல நம் மாநில எலக்ஷன் பத்தியா? இல்ல அரபிக் குத்து பத்தியா?"

"ஒ! நோ சந்தோஷ்! அம்மாவுக்கு பர்த்டே வரப்போறது இல்லையா? அதப்பத்தித்தான்…ஆனால், உன் அம்மாவுக்கு பரிசு எதுவும்  வேண்டாமாம்… நம்ப முடியறதா? நாற்பது வயதில் ஞானோதயம் வந்துடுத்து…" பரமு சொல்லி நிறுத்தியதும், கடகடவெனச் சிரித்தான் சந்தோஷ்!

கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கும் சந்தோஷும், பரமுவும் சேர்ந்து கொண்டால், வீடே இரண்டுபடும்! அரசியல், சினிமா, சங்கீதம், தொலைக்காட்சி நிகழ்வுகள் என்று அலசி ஆராய்ந்து கலாய்த்துக் கொண்டே இருப்பார்கள்.

"ஓ…டேக் இட் ஈஸிம்மா! நிச்சயமா இந்தத் தடவை நான் உனக்கு ஒரு பெஸ்ட் கி:.ப்ட் தரலாம்னு ப்ளான் பண்ணி இருக்கேன்….ஆனால் அது என்னங்கிறதை மட்டும் யாராலயும் ஊகிக்கவே முடியாது…" சந்தோஷ்  சொல்லிக்கொண்டே போனபோது,  சீத்தாவுக்குள் பளீர்பளீரென மின்னலடித்துப் பெரும்புயல் வீசத் தொடங்கியது…

இப்படித்தான் தனது சிநேகிதி வனிதாவின் பிறந்த நாளன்று அவளது பிள்ளை குமார், ஒரு பெண் சிநேகிதியைக் கூட்டிக் கொண்டு வந்து "இதோ பார் அம்மா! உன்னுடைய பிறந்த நாளன்று, உனக்குப் பரிசாக ஒரு மருமகளைக் கொண்டு வந்திருக்கேன்" என்று சொல்லப் போய், வனிதா மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி ஆனது. 'சந்தோஷும் அது போல் ஏதாவது செய்து விடுவானோ?' நினைக்கும்போதே சீத்தாவுக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது!

இது வரையில் வாட்ச், வெள்ளிக் கீச்செயின், டெரக்கோட்டா யானைகள், தஞ்சாவூர் பெயிண்டிங்குகள் என்று சந்தோஷ் தந்திருந்த பரிசுகள் எல்லாம், தரத்திலும் சரி, மதிப்பிலும் சரி…உயர்வானதாகவே இருந்திருக்கின்றன… வனிதாவின் பிள்ளை குமார் மாதிரி சந்தோஷ் எதுவும் ஷாக் ட்ரீட்மென்ட் தர மாட்டான் என்றே தோன்றியது, சீத்தாவுக்கு!

சந்தோஷின் இன்னொரு நண்பன் ஸ்ரீதர், அவனது அம்மாவின் திருமண நாளுக்கென்று போன மாதம் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து ஒரு ஸ:.பயர் மோதிரம் பரிசளித்ததாகச் சொன்னான். ஒருவேளை, சந்தோஷும் அது மாதிரி மோதிரம், பென்டன்ட், பிரேஸ்லெட் என்று தரப் போகிறானோ என்னவோ?…சீத்தாவின் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது..

ன்று சீத்தாவின் பிறந்தநாள்…  சின்னப் பெண் மாதிரிப் பிறந்தநாள் கொண்டாடி, இப்படிப் பரிசுப் பொருளுக்காகக் காத்திருப்பது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ஒருவர் கொடுக்கும் பரிசில், கொடுப்பவரின் முழு அன்பும் பிரதிபலிப்பதால், அவளுக்கு அப்பரிசுகள் விலை மதிக்க முடியாதவையாகவே இருந்தன. சீத்தாவைப் பொறுத்தவரை, பரமுவும், சந்தோஷும் கொடுக்கும் எந்தப் பரிசுக்கும் விலையே இல்லைதான்!

சிறு வயதில், சந்தோஷ் தனது பிஞ்சுக் கைகளால் தானே எழுதிய அன்னையர் தின வாழ்த்து அட்டையும், 'உள்ளே திறந்து பார் தாயே!' என்று சிகப்புக் கலர் பென்சிலால் ஒரு இதயம் வரைந்து, கோணலும் மாணலுமாக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து மடலும், இன்னமும் அவளது பீரோவும் பொக்கிஷம் போல்  அல்லவா இருக்கிறது! அதே போல் பரமுவின் பரிசு ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்வது போலத்தான் இருக்கும்.

சீத்தாவுக்கு இந்தத் தடவை ஏனோ விபரீதமான எண்ணங்களும், வித்தியாசமான உணர்வுகளும் தோன்றி அவளை நிம்மதி இல்லாமல் செய்துகொண்டிருந்தன.

"சாயங்காலம் ரெடியா இரு சீத்தா! கோயிலுக்குப் போய்விட்டு அப்படியே
லீலா பாலஸில் டின்னர் போகலாம்…" என்ற பரமு,  காலையிலேயே "மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஹனி!" என்று சொல்லி ஒரு டிஸைனர் புடைவை ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனான்.

மாலை மணி ஐந்து. "ஹாய் மாம்! ஹாப்பி பர்த்டே!" சந்தோஷின் உற்சாகக் குரல்! கையில் பெரிய பெட்டி, ரிப்பனெல்லாம் சுற்றி! கைக்கு அடக்கமாக ஏதேனும் ஒரு பரிசுப் பொருளோடு வரப் போகிறான் என்று எதிர்பார்த்தவளுக்குச் சற்றே ஏமாற்றம் எட்டிப் பார்த்தது. என்னத்துக்கு இத்தனாம் பெரிய கேக் ஆர்டர் பண்ணிருக்கான்?"

"அம்மா… இங்க வா அம்மா… வந்து கிப்டை வாங்கிக்கோ!"

"ஓ! தாங்க்ஸ்டா சந்தோஷ்!"… பெட்டி ஏகத்துக்கும் கனத்தது. கவனமுடன் திறந்துபார்த்தபோது… 'லொள்…லொள்…' என்று சன்னமாய்க் குரைத்தபடியே சின்னப் பனிப்பந்தாக, வாலை ஆட்டியபடியே வெள்ளைவெளேரென்று ஒரு பாமரேனியன் குபீரென்று துள்ளிக் குதித்தது.

ஓவியம் : இளையபாரதி
ஓவியம் : இளையபாரதி

"என்ன சந்தோஷ் இது? அம்மாவுக்கு நாய் என்றால் அலர்ஜின்னு உனக்குத் தெரியாதா, என்ன? என்னடா இது அவளப் போய் இப்படிப் பதறடிச்சுண்டு…" பரமுவும் அங்கலாய்த்தான்.

"டாட் இதவிட பெஸ்ட் கிஃப்ட் எதுவும் எனக்குத் தோணல… நீ சும்மா இருப்பா… அம்மாவை நான் சரி பண்ணிடுவேன்… நாட் டு வொர்ரி."

"அம்மா.. எங்க போய்ட்ட? இதுக்குப் பேரு ஜிங்கிலினு வச்சிருக்கேன். ரொம்ப ஸ்வீட் க்ரீச்சர்மா. இப்போல்லாம் நீ ரொம்ப லோன்லியா இருக்கற மாதிரி எனக்குப் பட்டுதுமா. அதுனால உனக்கு ஒரு கம்பானியன் இருந்தா, உனக்கு போரடிக்காம இருக்குமேன்னு நினைச்சேன். ஜிங்கிலி ரொம்பவே சமர்த்து தெரியுமா? ரொம்ப அன்டர்ஸ்டாண்டிங் வேற… உனக்குநான் சொன்னாப் புரியாதுமா… அதோட நீ பழகிப் பார்த்தா அப்புறம் நீ என்னையே மறந்துடுவே!"

சந்தோஷின் அந்த அழகான பேச்சு எதுவும் சீத்தாவைச் சமாதானப் படுத்தவில்லை. யாரோ பிடிக்காத நபரைப் பார்த்தாற்போல, பெரிய அவஸ்தையாக இருந்தது அவளுக்கு. இன்னமும் படபடப்பு போகாமல் உட்கார்ந்திருந்தாள். வியர்த்துக் கொட்டியது… சன்னமாக சந்தோஷ் மீது கோபமும் எட்டிப் பார்த்தது.

சிறுவயதில், அவளது கிராமத்தில், ஒரு சினிமா நோட்டிஸ் வண்டியைத் தொடர்ந்து ஓடியபோது, அவளை ஒரு கறுப்பு நாய் துரத்தியதும் அவள் இன்னமும் வேகமாக ஓடியதில் கீழே விழுந்து அவளது முன்பல் உடைந்ததும், ஏதோ நேற்று நடந்தாற் போல்தான் இருக்கிறது.

அன்றிலிருந்து, பூனையோ, நாயோ, ஏன் ஒரு பல்லியைப் பார்த்தால்கூட, ஒரு புலியைக் கண்டதுபோல் ஓடி விடுவாள். இந்தக் கதை எல்லாம் தெரிந்தும், சந்தோஷ் தன்னை இப்படிப் பயமுறுத்தி இருக்கக்கூடாது! சீத்தாவுக்கு ஆயாசமாக இருந்தது. கோயிலுக்குப் போய்வர வேண்டுமென்ற எண்ணம் வரவில்லை… பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டுவிட்டாள். பரமுவும் அவளை வற்புறுத்தவில்லை.

ள்ளங்காலை யாரோ வருடுவதுபோல் இருந்தது சீத்தாவுக்கு. "சந்தோஷ்… பேசாமல் இரு. கொஞ்சம் எரிச்சலைக் கிளப்பினது போதும்… சும்மா, காலம் நேரம் தெரியாமல் என்னைச் சீண்டாதே…" சொல்லிக் கொண்டேசீத்தா, படுக்கையிலிருந்து எழுந்த போது, அவள் காலைத் தனது ரோஜா இதழ் நாக்கால் தடவிக் கொண்டிருந்தது ஜிங்கிலிதான்!

"சட்… பெட்ரரூம் வரைக்கும் வந்தாச்சா? கெட் லாஸ்ட்" என்று எரிந்து விழுந்தவள், வேகமாக பாத்ரூம் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள். குளித்து முடித்து, சுவாமி விளக்கேற்றிவிட்டு ஹால் பக்கம் சீத்தா வந்தபோது, ஜிங்கிலி சைலண்டாக அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தது.

"ஹாய் ஜிங்கிலிக் கண்ணா… இங்க வா" சந்தோஷின் குரலைக் கேட்டதும், ஏதோ ரொம்ப நாள் பழகினாற்போல் அவனிடம் தாவியது.

இரண்டு பேரும் ஒடிப் பிடித்து விளையாடினார்கள். கழுத்தில் ஜிங்கிலி என்று பெயர் பொறித்த பட்டையைக் கட்டிவிட்டான் சந்தோஷ்! செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்த பரமுவிடமும் ஜிங்கிலி படு சிநேகமாகப் போய்க் காலடியில் அமர்ந்துகொண்டது.

சந்தோஷின் வழக்கமான 'குட்மார்னிங்மா' இன்று மிஸ்ஸிங். தானாகவே ரொட்டியை டோஸ்ட் செய்துகொண்டு, பாலைச் சூடாக்கிக் கொண்டு ப்ரேக் பாஃஸ்ட்டை முடித்துக் கொண்டவன், ஜிங்கிலிக்கும் ஒரு தட்டில் ரொட்டித் துண்டங்களையும், பாலையும் ஊற்றிக் கொடுத்தான். வாலை ஆட்டிக் கொண்டே சமர்த்தாகச் சாப்பிட்டது ஜிங்கிலி. "ச்சோ ஸ்வீட்" என்று அதைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தவன், "உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண்டா செல்லம்" என்றான். என்ன புரிந்ததோ, ஜிங்கிலியும் அவனை ரொம்பவே ஏக்கத்துடன் பார்த்தது!

"டாட்! இந்தப் பாமரேனியன் வகை நாய்க்குட்டிக்குப் பல் கவனிப்பு ரொம்ப முக்கியம். அப்புறம் அதுக்கு நன்றாக பிரஷ் பண்ணாத்தான் உடம்பு புஸுபுஸுனு இருக்கும். கொஞ்சம் பாஸ் மாதிரி பிகு பண்ணிண்டு நடந்துண்டாலும், நாம சரியா சொல்லிக் கொடுத்து ட்ரெயின் பண்ணினா ரொம்பக் கீழ் படிஞ்சு நடந்துக்கும்! எல்லோர் கிட்டயும் அன்போட, விசுவாசமா இருக்கும்… யாரேனும் அந்நிய மனுஷா வந்துட்டா, ரெண்டு தடவை குரைச்சுக் காமிக்கும்… பட், யாரேனும் சந்தேகப் பேர்வழினு அதுக்குப் பட்டுதுனா தன்னோட குரைப்பை நிறுத்தாது… ஸொ, வீ கேன் அன்டர்ஸ்டாண்ட்! வீட்டைப் பிரமாதமாப் பார்த்துக்கும்…"

"ஓகே.. எனக்கு காலேஜுக்கு டயம் ஆயிடுத்து…நான் வர்றேம்பா… பைடா ஜிங்கிலி… பீ குட்" நூறு தடவையாவது, தனக்கு 'பை' சொல்லிவிட்டுக் கிளம்பும் பிள்ளை, இன்று ஒரு வார்த்தை கூடப் பேசாமல் போனது சீத்தாவுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது.

நேற்று அவன் கொண்டு வந்த ஜிங்கிலி, அம்மாவை விட, அவனுக்குப் பெரிசாப் போச்சா? அந்த வாயில்லா ஜீவன் மீது, அவளுக்கு ஆத்திரம் மண்டிக்கொண்டு வந்தது. எப்படியாவது பரமுவிடம் சொல்லி, ஜிங்கிலியைக் கொண்டு போய் யாரிடமாவது கொடுத்துவிடும்படி செய்யணும்!

மணி எட்டு அடித்தது… பரமுவும் ஆபீஸுக்குக் கிளம்பும் நேரம்! ஒரு பீங்கான குவளையில் தண்ணீரும், மற்றொரு தட்டில் தோல் சீவி நறுக்கிய ஆப்பிள் பழத்துண்டங்களும், சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட பிஸ்கோத்துக்களையும் ஜிங்கிலிக்கு அருகே வைத்தான். அந்த ஹாலிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்படியாகச் சற்றே நீளமான கயிற்றால் அதைக் கட்டிப் போட்டான். செக்யூரிட்டியிடம் தினமும் நாலு மணி வாக்கில் வெளியே அழைத்துப் போகும்படி ஏற்பாடு செய்தான். 'டேக் கேர்டா ஜிங்கிலி' என்று சொல்லியபடியே சீத்தாவிடம் ஏதோ சொல்ல வந்தவன்… 'ஓகே சீத்தா… பை' என்று முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

ன்று மதியம் அலுவலகத்தில் ஆடிட்டிங் என்றும், மதிய உணவுக்கு
வர இயலாது என்றும் காலையிலேயே பரமு சொல்லி விட்டதால், இரவு டின்னருக்கு ஏதேனும் செய்து கொள்ளலாமென்று சீத்தாவும் ஹால் சோபாவிலேயே அமர்ந்துகொண்டு, அன்றைய தினசரிகளைப் படிக்கலானாள். முந்தின இரவு, மன உளைச்சலோடு சரியாகத் தூங்காததாலோ என்னவோ, அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அப்படியே கண்ணயர்ந்து போனாள்.

'லொள்… லொள்… ஜிங்கிலிதான் தொடர்ச்சியாகக் குறைத்துக் கொண்டே அவளது காலைப் பிராண்டிக் கொண்டிருந்தது. மிரட்சியுடன் தூக்கக் கலக்கத்தில் எழுந்து கொண்டபோது… அங்கே நடக்கவிருந்த விபரீதம் சீத்தாவுக்கு மெள்ளப் புரிந்தது.

புழுக்கமாக இருக்கிறது என்று ஜன்னலைச் மூடாமல் விட்டதால், யாரோ ஜன்னல் வழியாகக் கம்பியை விட்டு அவர்களது வீட்டு பீரோவைத் திறக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டுத்தான் இந்த ஜிங்கிலி பயங்கரமாகக் குரைத்துத் தள்ளி இருக்கிறது! தூங்கியவளின் காலைப் பிராண்டி எழுப்பி இருக்கிறது!

சுதாரித்துக் கொண்ட சீத் மூடாமல்கு நடக்கவிருந்த விபரீதம் புரிந்து ஏகத்துக்கம் வியர்த்துக் கொட்டியது. 'ஓ மை காட்! ஆடி மாதம் பிறந்து வரிசையாக வரலட்சுமி நோன்பு தொடங்கி நவராத்திரி, தீபாவளி என்று பண்டிகைகள் வருகிறதே என்று போன வாரம், லாக்கரிலிருந்து எடுத்து வந்திருந்த நகைகளும், வெள்ளிப் பூஜைப் பாத்திரங்களும், பாஸ் புத்தகமும், கணிசமான ரொக்கப் பணமும் அந்த பீரோவில்தான் இருந்தன.

கடந்த வாரம்கூட 'பீரோ புல்லிங்' முறையில், வீட்டை உடைக்காமல் மிகவும் நூதனமாகத் திருடுவதாகச் செய்தித்தாளிலும் தொலைக்காட்சியிலும் நியூஸ் வந்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

திர்வீட்டுகாரரும், அண்டை வீட்டுக்காரர்களும் உடனே கூடி பட்டப் பகலில் இதுபோல் தங்கள் குடியிருப்பில் திருட்டு நடக்கவிருந்ததைப் பற்றி ஆள் ஆளுக்குப் பதைத்துப் போய் பேச ஆரம்பித்தனர்.

"சீத்தா! எப்போ இந்த நாய்க்குட்டி வந்தது? இது மட்டும் சரியான சமயத்துல குரைக்காம விட்டிருந்தா எல்லாம் திருடு போயிருக்குமே! நல்லவேளை! நம்ப எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கையாப் போச்சு… இந்த செக்யூரிட்டி டீ குடிக்கப் போன சமயமாப் பார்த்து, எவனோ வந்துருக்கான்… இனிமே நாமளும் இந்த ஜிங்கிலி மாதிரி ஒரு நாய்க்குட்டியை வச்சிண்டா பாதுகாப்பா இருப்போம்னு தோண்றது…"

சொல்லியபடியே அத்தனை பேரும் ஜிங்கிலியை மெச்சியபடி நகர்ந்தார்கள்! முதன்முறையாக அந்த வாயில்லா ஜீவன் மீது, சீத்தாவுக்குப் பரிவும், அன்பும், நன்றியும் பொங்கியது. வந்த முதல் நாளே, தங்கள் வீட்டைக் காக்கும்படியாக நடந்த அந்நிகழ்ச்சி அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது!

"ஓ! ஜிங்கிலி… நீ சந்தோஷுக்கு மட்டுமில்ல, எனக்கும் ரொம்பச் செல்லம்டா! ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்டா" என்று அதை அன்போடு கட்டிக்கொண்டபோது, அன்னியோன்னியம் தெரிந்ததே தவிர சுத்தமாக பயம் என்பதே சீதாவுக்கத் தெரியவில்லை!

நெகிழ்ச்சியோடு ஜிங்கிலியைத் தடவிக் கொடுத்தபோது, ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலவே தெரிந்தது. சன்னமாகக் குரைத்துத் தனது அன்பை ஜிங்கிலியும் வெளிப்படுத்தியது.

"ஜிங்கிலி…மை பாய்' என்று அழைத்துக்கொண்டு அன்று மாலை சந்தோஷ் வந்தபோது, ஜிங்கிலியோடு உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த சீத்தா, அவனுக்கு உலகத்தின் எட்டாவது அதிசயமாகத் தெரிந்தாள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com