0,00 INR

No products in the cart.

குழந்தை  வளர்ப்பு 20 டிப்ஸ்! 

-உஷா ராம்கி

ம்மா அப்பாவாக ஆவதைவிட கடினமானது அம்மா அப்பாவாக இருப்பது.  குழந்தை வளர்ப்பு – மகிழ்ச்சியும் அதுவே, சவாலும் அதுவே. சுமையென்று கலங்கினால் சுமை; சுகமென்று புன்னகைத்தால் சுகம். கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள், நேப்பி மாற்றவும், இரவில் ஆகாரம் கொடுக்கவும் அலுத்துக் கொண்டால் நான் நினைத்துக் கொள்வது இதுதான், “குழந்தை வளர்ப்பிலேயே சுலபமான காலக்கட்டம் இது. போகப்போக அவர்கள் வளர்ந்து சொந்தக்காலில் நிற்கும் வரை, ஒவ்வொரு பிராயத்திலும் இது முந்தைய கட்டத்தைவிட சவால் நிறைந்தது என்று நினைக்க வைக்கும்”.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை, அதை அனுபவித்து ரசிக்க வேண்டும். ஒரு புத்தகத்தையோ கட்டுரையையோ படித்து அப்படியே காப்பி அடிப்பது சாத்தியமில்லை (இருங்க… அதுக்குன்னு இதை படிப்பதை நிறுத்திடாதிங்க). எனக்கு ஒத்துவருவது உங்கள் குழந்தைக்கு ஒத்து வராமல் போகலாம்; அவ்வளவு ஏன் முதல் குழந்தைக்கு கடைப்பிடித்த ஃபார்முலா அடுத்த குழந்தைக்கு ஒத்து வராது. ஆக, “கொழந்தைங்க அவங்க பாட்டுக்கு தானா வளர்ந்துடுவாங்க” என்பதெல்லாம் வேகாது, நம் முயற்சி வேண்டும் – அதீத அன்பும் ஆர்வமும் கொண்ட முயற்சி வேண்டும். நாம் இந்த சமுதாயத்துக்கு நல்ல மனிதம் கொண்ட ஒருவரைத் தரவேண்டும் என்ற அக்கறை முக்கியம்.

சரி… பிள்ளைகள் வளர்ப்பில் நான் கற்ற, உணர்ந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்கிறேன்… 

1. ஆண் மற்றும் பெண் பிள்ளைக்கு, சமமான வாய்ப்புகளும், மதிப்பும் தருவது பெண்ணுக்கு தன்னம்பிக்கையையும், ஆணுக்கு பெண்ணை மதிக்க வேண்டும் என்ற உணர்வையும் தரும்.

2. அவரவர்களுடைய தனித்தன்மை, குறை-நிறை, ஆர்வங்கள் எல்லாவற்றையும் கிரகித்து, அவர்களுடைய பலங்களைச் சொல்லி ஊக்கம் தந்து, பலவீனங்களை மிகைப்படுத்தாமல், “குறை இருப்பது ஒரு குறையே கிடையாது, அது யதார்த்தமான விஷயம்.” என்பதான சூழ்நிலை வேண்டும்.

3. நாம் சிறு வயதில் இருந்தது போல் அவர்கள் இருக்க மாட்டார்கள். நம் பெற்றொர் வளர்த்தது போலவே இன்று நாம் வளர்க்க முடியாது. நிச்சயம் அதில் இருந்த நல்ல அம்சங்களைக் கடைப்பிடிக்கலாம், ஆனால், “அன்று போல் இன்று இல்லை” என்று ஒப்பிட்டு நொந்து நூலாய் போவது சரிப்படாது. மாற்றத்தை ஏற்பதன் மூலம் நாம் பக்குவமடைகிறோம்.

4. குழந்தையாய் இருக்கும்போது அன்பும் செல்லமும், பதின்வயது வரும் வரை அன்பும் கண்டிப்பும், அதன் பிறகு தோழமை கலந்த வழிநடத்தலும் பலன் தரும்.

5. அவர்கள், நம் வாழ்க்கையைப் பார்த்து, வாழ்க்கை என்பது இதுதான் என்று புரிந்து கொள்கிறார்கள் என்பதால், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கவனத்துடன் இருப்போம். “சவால்களைத் தாண்டி என் பெற்றொர் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையோடும் சரியான வழியில் சென்றிருக்கிறார்கள்” என்ற நிலை, தங்கள் வருங்காலத்தின் மீது நம்பிக்கையைத் தரும்.

6. கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமைகள், வாக்குவாதங்கள் இவை சகஜம். அதில் ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொள்ளாமல் எப்படி பிரச்சனையைத் தீர்க்கிறோம் என்பது குழந்தைகளுக்கான நேர்முக வகுப்புப் பாடங்கள்.

7.நோ”, “இல்லை” “கூடாது” போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் பிரயோகிப்பதை ரொம்பவே குறைத்து விட்டோம். நாம் சம்பாதிப்பதும், வாழ்வதும் அவர்களுக்காகத்தானே, என்று சொல்கிறோம். அதெல்லாம் ஓகே. ஆனால், எதுவுமே மறுக்கப்படாமல், காயமும் வருத்தமும் இல்லாமலே வளர்த்து விட்டால், நாளை வெளியுலக நிராகரிப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

8. பள்ளிப் படிப்பு முடியும் வரை, கைப்பேசி உபயோகத்தை ஓரளவு கண்காணிப்பதும், சில இணையதளங்களுக்குள் போவதைத் தடை செய்வதும், சதா அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆக்கப்பூர்வமான மற்ற பொழுதுபோக்குகளை அவர்களுக்கு உருவாக்கித் தருவது, கைப்பேசியுடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கும்.

9.ங்க் ஃபூட் டே’ என்று மாதத்தில் ஒரு நாள் என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க என்று எஞ்சாய் பண்ண வைப்பது மூலம், அடிக்கடி கண்டதை சாப்பிடுவதை தவிர்க்க வைக்கலாம். ‘நோ கேட்ஜட் டே’ என்று ஒரு நாள் முழுதும் தொழில்நுட்பம் சார்ந்த பொழுதுபோக்கு இல்லாமல் அவர்களை மகிழ்விக்கலாம்.  ஆனால் இதில் முக்கியம், பெற்றோர்களும் அந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். இப்படி தினுசு தினுசாக யோசிப்பதன் மூலம், பெற்றோர் தங்களுக்காக எடுக்கும் முயற்சியை  பிள்ளைகள் மெச்சுவார்கள்.

10. வளைந்து கொடுப்பது, விட்டுத் தருவது, குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக நேரம் தருவது, இதெல்லாம் நாம் தருகிறோம், அதே நேரத்தில் அவர்களும் அவ்வப்போது தர நாம் அவர்களைப் பழக்குவதால், பரஸ்பர அன்பும் அன்யோன்யமும் வளர்கிறது.

11. நிறைய விஷயங்களையும், கலைகளையும், துறைகளையும் அவரவர் வசதிக்கேற்ப தெரிந்து கொள்ள இளம் வயதிலேயே நாம் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தால், வருங்காலத்தில் என்ன வேலை செய்வது என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும். பிடிக்காமல் உத்தியோகம் செய்வது வளர்ச்சியைத் தராது. பணம் குறைவானாலும், அவர்கள் பிடித்து செய்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் காக்கப்படும்.

12. அவர்களுடைய நட்பு வட்டத்தையும், அவர்களது பெற்றோர்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஹலோ சொல்வதன் மூலம், நாம் அவர்களது நண்பர்களைத் தெரிந்து கொள்ளலாம்.

13. ழுக்கமில்லாததை செய்தால் பெற்றோருக்குப் பிடிக்காது என்று ஒரு செயல் செய்வதைத் தவிர்க்க வைப்பது, பயத்தின் காரணமாக இல்லாமல் மரியாதை மற்றும் அன்பின் காரணமாக இருந்தால், வெளியுலகம் அவர்களைத் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ளலாம்.

14. பிள்ளைகளுக்காக பணம் முதலீடும் செலவும் செய்வது முக்கியம்; அதுபோல அவர்களுக்காக பிரத்யேக நேரம் மற்றும் எனர்ஜி முதலீடும் முக்கியம்.

15. அதே நேரத்தில் “உனக்கு நான் எவ்வளவு ஃபீஸ் கட்டறேன் தெரியுமா? ,” என்பது போல, நாம் அவர்களுக்காக செலவு செய்வதை சுட்டிக் காட்டுவதை குறைக்க வேண்டும். இது போன்ற பேச்சுகள் அவர்கள் மனதில் பெற்றோர்கள் மீது ஒரு வெறுப்பை உண்டுபடுத்தலாம்.

16. தோல்விகளை சந்திக்கும் போது, அதில் கிடைக்கும் பாடத்தைக் கற்றுக் கொண்டு, தன்னம்பிக்கையோடு மேலே செயல்பட பழக்கினால், முக்கியமாக சவால்களை சந்திக்கும் போது கலங்கிப் போய் நிற்காமல், சுதாரித்துக் கொண்டு, “சவால்களெல்லாம் வாழ்க்கையில் சாதாரணமப்பா” என்று சொல்ல முயல்வார்கள்.

17. பொய் புரட்டு, திருட்டு, ஏமாற்றிப் பிழைப்பது, இவையெல்லாம் இல்லாத நேர்வழி வாழ்க்கை மூலம் தலை நிமிர்ந்து அச்சமின்றி நடக்கலாம்; அப்படி இருந்தால் கடவுள் சோதிப்பாரே தவிர கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் வளர்க்க வேண்டும்.

18. மகிழ்ச்சியான சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள், குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் சுமையாக இல்லாமல் சொத்தாக இருப்பார்கள். இன்று உலகத்துக்கு மிக இன்றியமையாத விஷயம், ஆரோக்கியமான தலைமுறை. கொரோனா போன்ற கிருமிகள் மட்டுமல்லாது, மனதைக் கலைக்கும் மனிதக் கிருமிகள் இணையம் மூலம் தாக்கத்தான் போகிறது. அவற்றை எதிர்க்க உடல் மட்டுமன்றி மன ஆரோக்கியமும் தேவை.

19. பிள்ளைகளுக்காக இவை எல்லாமும் இதற்கு மேலும் செய்தாலும், 100% அற்புதமான குழந்தை வளர்ப்பு என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள முடியாது; அம்மா அப்பா என்னை வளர்த்தவிதம் எனக்கு 100% மகிழ்ச்சி என்று பெருமைபட்டுக் கொள்ளும் பிள்ளைகளும் இருக்க மாட்டார்கள். இது நமக்கென்று நாம் பிரதிபலன் பாராமல் செய்வது.

20.ந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே; அவர் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பதிலே” இந்த ஒரு வரி நமது பொறுப்பை அதிகரிக்கிறது.

Related Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...