0,00 INR

No products in the cart.

உக்ரைன் போரில் ஒரு மனித நேயம்!

-சியாமளா சுவாமிநாதன், திருவனந்தபுரம்.

க்ரைன் நாடு ரஷ்யாவின் அண்டை நாடு. முன்பு யு.எஸ்.எஸ்.ஆர் என்ற மிகப் பெரிய ஒற்றை நாடாக இருந்தபோது அன்றைய ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ரஷ்யாவிலிருந்து பல நாடுகளைப் பிரித்துக் கொடுத்தார். அப்படி பிரித்து சுதந்திரமாக ஜனநாயக குடியரசாக வாழ்ந்து வந்த நாட்டை இன்று தன் சொல்படி கேட்டாக வேண்டும் என்று அதன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா.

உக்ரைனில் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவதுறையிலும் பல நிறுவனங்களிலும் வேலை நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள். போர் நடந்து வருவதால் அங்குள்ள இந்திய மாணவர்கள் மற்றும் குடும்பங்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பி வர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசாங்கம்.

குண்டு வீச்சால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஊரடங்கு என்று உக்ரைனில் உள்ள அத்தனை நகரங்களிலும் கடை அடைப்பு, மின்சாரம் துண்டிப்பு, உணவு இல்லை, குடிக்க தண்ணீர்கூட இல்லாமல் மக்கள் தவித்து வருவதுடன், அங்கிருந்து குழந்தை, முதியோருடன் மறைந்து மறைந்து பயணப்பட்டு மக்கள் வெளியேறி எல்லை பகுதிக்கு வருகிறார்கள். அதில் ஒரு நிகழ்வுதான் இந்தச் சம்பவம்.

பரூன் வர்மா என்ற இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர், தன் மனைவி ஸ்மிதா சின்ஹா மற்றும் தன் இரண்டு சிறிய மகள்களுடன் லிவ் என்ற மேற்கு உக்ரைன் நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.

போர் நிமித்தமாக மார்ச் 1ம் தேதி தன் குடும்பத்துடன் இந்தியா வர ஆயத்தமாகி ஏற்பாடுகள் செய்து வந்தார். பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு ஒரு டிவிட்டர் மெஸேஜ் வந்தது. அதிலிருந்த போன் நம்பரில் கூப்பிட்டபோது மும்பையைச் சேர்ந்த ராகுல் பாஸ்கடா என்ற இந்தியர் தன் மனனவி மற்றும் இரண்டே மாத பிஞ்சு குழந்தையுடன் கீவ் நகரின் புறநகரப் பகுதியில் தவித்து வருவதாகவும் உக்ரைன் பாஷை தெரியாததால் அங்கிருந்து எப்படி தப்பி எல்லை பகுதிக்குப் போவது என்பதால் யாராவது உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

உடனே பரூன் வர்மா அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். இரவு ஊரடங்கு அறிவித்து விட்டதாலும் போரில் அதிமும்மரமாக குண்டுவீச்சு நடப்பதாலும் ஒரு டாக்ஸி சர்வீஸும் உதவிக்கு முன் வரவில்லை. கடைசியில் கெஞ்சி கூத்தாடி ஒரு டிரைவர் வருவதற்கு இசைய, அந்த இரவில் குண்டுகள் சரமாரியாக பொழிந்து கொண்டிருக்க, ஆங்காங்கே நிற்கும் உக்ரைன் ராணுவ வீரர்களையும் தவிர்த்து, பல குறுக்கு வழிகளில் பயணித்து பரூன் வர்மா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் அந்த இளம் தம்பதி. உணவு, தண்ணீர் இல்லாமல் மயங்கும் நிலையில் இருந்த ராகுல் பாஸ்கடா குடும்பத்திற்கு உணவு கொடுத்து அந்த பிஞ்சு குழந்தைக்கு பால் கொடுத்து 30 அடி ஆழத்தில் உள்ள பங்கரில் எல்லோரும் இரவு தங்கி மார்ச் 1ம் தேதி ரயில் நிலையத்தை அடைந்தனர்.

அடுத்த தடங்கல் இது. உக்ரைன் ராணுவம் தன் நாட்டைக் காப்பாற்ற
18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள ஆண்கைள நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. இதில் வெளிநாட்டவருக்கும் இதே விதிதான். குழந்தைகளுடன் பயணப்படும் தம்பதிகளுக்கு மாத்திரம் அனுமதி உண்டு. பரூன் வர்மா தன் ஐந்து வயது மகளைத் தோளில் தூக்கிக் கொண்டார். ராகுல் பாஸ்கடா தன் பிஞ்சுக் குழந்தையை கையிலேந்தி ரயிலில் எப்படியோ ஏறிவிட்டனர். நான்கு மணி நேரத்தில் பயணப்பட வேண்டிய தூரத்தை நின்று நின்று, ஒன்பது மணி நேரம் அதுவும் ரயிலில்  நின்றுகொண்டே குடும்பத்துடன் போலந்து நாட்டு எல்லைக்கு வந்து சேர்ந்தனர். மைனஸ் 5 டிகிரி குளிரில் குழந்தைகளுடன் மூன்று பாதுகாப்பு தடுப்பு வளையங்களையும் தாண்டி வெளியே வந்ததும் குழந்தைகள் மயங்கிய நிலையில் தவித்தனர். உடனே இந்திய எம்பஸியை தொடர்பு கொண்டு அங்குள்ள ஒரு ஹோட்டலில் அவர்களை தங்க வைத்தார்கள்.  அடுத்த நாள் ஒரு வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள்.

ராகுல் பாஸ்கடாவின் சகோதரர் அன்கூர் பாஸ்கடா நெகிழ்வுடன் தங்கள் பிஞ்சு குழந்தையை காப்பாற்றி தந்ததற்கு தங்கள் குடும்பம் வாழ்நாள் முழுவதும்  கடமைபட்டிருப்பதாக கூறினார். இதைப் பற்றி பரூன் வர்மா கூறுகையில், “நாங்கள் அனுபவித்த இந்த பயணம் போல் யாருக்கும் வரக்கூடாது” என்றும், ராகுல் குடும்பத்தைக் காப்பாற்றியது தன் கடமை என்றும் கூறியுள்ளார். உக்ரைன் ராணுவ வீரர்கள் மிகுந்த துணிவுடனும் நெஞ்சுறுதியுடனும் போர் செய்து வரும் போராளிகள் என்று  பாராட்டுகிறார்.

இவருடன் வேலை பார்த்து வரும் சக ஊழிய உக்ரைன் பெண்கள்கூட தன் நாட்டிற்காக போர் செய்ய உக்ரைனில் தங்கியிருந்து ரஷ்யாவிற்கு எதிராக போர் செய்வதை கண்டு வியந்து பாராட்டி பேசுகிறார்.போர் நின்று நாடு சகஜ நிலைக்கு வந்தால் தானும் தன் குடும்பமும் திரும்ப உக்ரைன் நாட்டிற்கு போக விரும்புவதாகவும் கூறுகிறார். உக்ரைன் ஒரு நல்ல அன்புமிகுந்த நாடு என்கிறார் பரூன் வர்மா. இதுவல்லவா மனித நேயம்.

Related Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...