-ஜி.எஸ்.எஸ்.
2017ல் நியூசிலாந்தின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெசின்தா ஆர்டென். (பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு அது என்பதும் நினைவுக்கு வருகிறது). முப்பத்தி ஏழு வயதிலேயே ஒரு நாட்டின் பிரதமர்!
அவர் குறித்த கூடுதல் சுவாரசியங்கள் இதோ.
- 1980 இல் பிறந்த ஜெசிந்தா ஆர்டென் 2008ல் நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். 28 வயதிலேயே எம்.பி. அடுத்த ஒன்பது வருடங்களிலேயே அந்த நாட்டின் பிரதமர்.
- நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
- அப்பா ரோஸ் ஆர்டென் காவல் துறை அதிகாரி. அம்மா லாரென் ஆர்டென் பள்ளியில் சமையல் வேலை செய்பவர். மகள் நியூசிலாந்தின் பிரதமர்!
- பிரதமராக பதவியேற்ற ஒன்றரை வருடத்தில் அந்தப் பதவியிலிருந்து ஆறு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் ஜெசின்தா ஆர்டென். அந்தக் காலகட்டத்துக்கு ஒரு தற்காலிகப் பிரதமரை நியமித்தார். காரணம், மகப்பேறு! ஜூன் 21, 2018 அன்று ஒரு மகளுக்குத் தாயானார். ஆக, ஒரு நாட்டின் தலைவராக இருக்கும்போதே பிரசவத்துக்கு உட்பட்ட பெண்மணி என்ற சாதனையை பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோவுக்கு அடுத்து நிகழ்த்தியவர் ஜெசின்டா ஆர்டென்.
- தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான கிளார்க் கேஃபோர்ட் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறார் இவர். குழம்ப வேண்டாம். அந்த நாட்டில் நிச்சயதார்த்தம், திருமணம், முதல் இரவு, பிரசவம் என்பதெல்லாம் இதே வரிசையில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சுய பாலின திருமணத்தைக் கூட சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு நியூசிலாந்து.
- தான் பிரதமர் பணியைப் பார்க்க, தன் கணவர் தங்களது மகளை வீட்டிலிருந்து கவனித்துக் கொள்வார் என்கிறார் ஜெசின்தா.
- அன்னையான பிறகு மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றவுடன் சவால்கள் காத்திருந்தன. டீன்ஸ் அவென்யு, லின்வுட் அவென்யு ஆகிய பகுதிகளில் இருந்த மசூதிகளின்மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீச, அதில் சுமார் 40 பேர் இறந்தனர்.
- உடனடியாக ஜெசின்தா அரசு நாலு பேரைக் கைது செய்தது. இவர்களுக்கு நியூசிலாந்தில் மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலும் இடமில்லை என்று முழங்கினார் ஜெசின்தா ஆர்டென். நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப் படுத்தப்பட்டன.
- இதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் துப்பாக்கிகள் வைத்திருப்பது தொடர்பான சட்டத்தை கடுமையாக்கினார். செமி ஆட்டோமேட்டிக் குண்டுகள் விற்பனையை ஒட்டுமொத்தமாகத் தடை செய்தார்.
- ஹாமில்டனில் பிறந்த ஜெசின்தா அரசுப்பள்ளியில் படித்து, பின்னர் வைகடோ பல்கலைக்ழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.
- அப்போதைய நியூசிலாந்துப் பிரதமர் ஹெலன் கிளார்க் அலுவலகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். பிறகு லண்டனுக்குச் சென்று அங்கே சர்வதேச சோஷலிஸ்ட் இளைஞர்கள் சங்கத்தின் தலைவரானார்.
- பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேருடன் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு.
- கொரோனா தாக்கத்தின்போது இவர் தனது நாட்டை வழி நடத்திய விதம் மிகவும் பாராட்டப்பட்டது.
- தனது மதம் குறித்த கேள்விக்கு ‘நான் ஒரு அக்னோஸ்டிக்’ என்று பதிலளித்திருக்கிறார். இதற்கு ‘தெய்வ நம்பிக்கை உண்டு என்பதுமில்லை. இல்லை என்பதுமில்லை’ என்று பொருள்.
- தனது தோற்றத்தைக் கவர்ச்சிகரமாக காட்டிக் கொள்ளவும் இவர் தயங்குவதில்லை.
- ஃபோர்ப்ஸ் இதழில் தொடர்ந்து ‘சக்தி மிகுந்த உலகின் 100 பெண்மணிகள்’ என்ற பட்டியலில் இடம் பிடித்து வருகிறார்.
- சென்ற ஆண்டு மீண்டும் இவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் நியூசிலாந்து மக்கள்.