0,00 INR

No products in the cart.

என் வீடு – என் கணவன் – என் குழந்தை!

பத்மினி பட்டாபிராமன்

கோமல் சுவாமிநாதன்
மிழ் நாடக மேடையின் மிக முக்கியமான ஆளுமை. எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, திரைப்பட கதை, வசனகர்த்தாவாக, திரைப்பட இயக்குனராக பல்வேறு பரிமாணங்களில், பெரும் புகழ் பெற்றவர். ‘ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ்’ என்ற நாடகக் குழுவை நிறுவி, பல நாடகங்களை நூற்றுக்கணக்கான முறை மேடையேற்றியவர்.

சொர்க்க பூமி, ஓர் இந்தியக் கனவு, தண்ணீர் தண்ணீர், யுத்த காண்டம், நவாப் நாற்காலி உட்பட, பெரும்பாலான இவரது நாடகங்கள் சமூகப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவை திரைப்படமாகவும் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்றவை. சில இவரது இயக்கத்திலும், சில இவரது கதை வசனத்திலும் வெளியாகின.

குறிப்பாக, இவர் எழுதி, இயக்கி 250 முறை மேடையேற்றப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற நாடகம், ‘தண்ணீர் தண்ணீர்.’ இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வந்து, பெரும் வெற்றி கண்டதோடு, சிறந்த கதை, வசனத்துக்கான தேசிய விருது பெற்றது. நாடு முழுவதும் பேசப்பட்ட படமாகவும் அமைந்தது. இவரது பல நாடகங்கள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து பெரும் வரவேற்பு பெற்றன.

கோமல் சுவாமிநாதன் எழுதி, இயக்கிய குடும்ப நாடகம், ‘என் வீடு என் கணவன் என் குழந்தை!’ ஒரு பிராமணக் குடும்பத்து நிகழ்வுகளை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நாடகம். 1982களில் மேடையேறி, இந்தியா முழுவதும் முன்னூறு முறைகளுக்கு மேல் அரங்கேற்றப்பட்ட நாடகம். குடும்பத் தலைவி அன்னபூரணியாக நடித்த, மறைந்த நடிகை மனோரமாவுக்கு பெரும் புகழ் சேர்த்த நாடகம். பின்னர், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடராகவும் வெளியானது.

லாவண்யாவுடன் தாரிணி கோமல்

தே நாடகத்தை சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் இயக்கி, மேடையேற்றியிருக்கிறார். அண்மையில் ரசிக ரஞ்சனி சபாவில் நடத்தப்பட்டது. தந்தையின் திறமைகள் அப்படியே இவரிடமும் இருக்கிறது.

மேடையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அரங்கேறி, முன்னூறு மேடைகள் கண்ட ஒரு நாடகத்தை அதே காலகட்டம், சுவை குன்றாமல், கதை, வசனம் மாறாமல் அப்படியே கச்சிதமாக இரண்டரை மணி நாடக வடிவில் தந்திருக்கிறார்
தாரிணி கோமல்
.

பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்வதிலிருந்து, அனைத்து அம்சங்களையும் மிகத் துல்லியமாகவும், திறம்படவும் படைத்திருக்கும் தாரிணிக்கு ஒரு சபாஷ்.

இதில் மனோரமா நடித்த அன்னபூரணி பாத்திரத்தில் நடித்திருப்பவர் லாவண்யா ராஜகோபால். மனோரமாவின் அனுபவம் நிறைந்த நடிப்பாற்றலோடு, லாவண்யாவின் நடிப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது (அதுவும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு) நியாயமில்லை. ஆனால்,

இந்த நாடகத்தில் அன்னபூரணியாகவே வாழ்ந்திருக்கிறார் லாவண்யா என்று சொன்னால் அது முற்றிலும் நியாயம். உண்மையும் கூட.

நாடகக் கலைஞர்கள் அறிமுகம்

தாரிணி கோமல், மேடையில் எல்லோரையும் அறிமுகப்படுத்தும்போது, லெஜெண்ட்.

மனோரமா நடித்த பாத்திரத்தை ஒரு பெரிய சவாலாக ஏற்று நடிக்க லாவண்யாவும், மகாலிங்கம் அய்யராக நடிக்க சாந்தாராமும்
முன் வந்ததாலேயே தன் தந்தையின் புகழ்பெற்ற இந்த நாடகத்தை
இயக்கத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார் தாரிணி
.

நாடகத்தில் ஒரு காட்சி…

ன்பை அள்ளி வழங்கும் அன்னபூரணி, மகாலிங்கம் அய்யரின் மனைவியாகி வந்த நாளிலிருந்து தாயற்ற தன் மைத்துனர்களையும், நாத்தனாரையும் தன் குழந்தைகளாகவே வளர்க்கிறாள். அவளுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. ஆனால், அவளுக்கென்று ஒரு குழந்தை பிறக்கவில்லை.

குடும்ப வாழ்வில் பற்றே இல்லாத கணவர் மகாலிங்கம், ரிஷிகேசம் செல்லவும், சன்யாசம் வாங்கவும் திட்டமிடுகிறார். அதைத் தடுக்க முயற்சிக்கிறாள் அன்னபூரணி.

மைத்துனர்கள், நாத்தனாரின் திருமணம்காதல், அதில் ஏற்படும் பிரச்னைகள்சிக்கல்கள் எல்லாவற்றையும் தானே சமாளிக்கிறாள். ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, தானும் ரிஷிகேசம் செல்ல தீர்மானிக்கிறாள். முடிந்ததா என்பதே கதையின் முடிச்சு.

ண்பதுகளில் நடக்கும் கதை என்பதால், அப்படியே அதே அழுத்தமான வசனங்கள், பின்னணி மாறாமல் காட்டப்படுகிறது.

லாவண்யா நிறுத்தாமல் ஸ்லோகம் சொல்லியபடியே தன் தம்பியை வரவேற்கும் காட்சிகளில் பலத்த கைதட்டல். காட்சிக்குக் காட்சி மின்னல் வேகத்தில் மடிசார் புடைவை மாற்றுவது, ரிஷிகேசம் செல்லத் துடிக்கும் கணவரோடு சண்டை போடுவது, அவர் வேலையை ரிசைன் பண்ணிவிட்டார் என்று தெரிந்ததும் குடும்பத்தை எப்படி நடத்துவது என்று பொங்குவது என்று ஒவ்வொரு காட்சியிலும் லாவண்யாவுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.

மகாலிங்கமாக நடித்திருக்கும் சாந்தாராம், கதாபாத்திரமாகவே வாழ்ந்து, அமைதியான ஆழமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். முதல் மைத்துனராக ஸ்ரீநி, இரண்டாவது மைத்துனராக சித்தார்த், நாத்தனார் சக்குவாக அத்வைதா ஓர்படியாக சங்கீதா அனைவருமே பொருத்தம். எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மாப்பிள்ளையாக பாலா மகேஷ்வர், மதங்கள் செல்லும் பாதைகள் ஒன்றுதான் என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் நல்ல கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். சம்பந்திகளாக வருபவர்கள், அடுத்த வீட்டுக்காரராக கார்த்திக் பட் என்று எல்லோருமே அவரவர் கதா பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அன்னபூரணியின் வீடாக ஒரே செட் என்றாலும், வசனங்களும் தொய்வில்லாத கதையும் சலிப்பின்றி நாடகத்தை ரசிக்க வைக்கிறது.

இனி, லாவண்யாவுடன் ஓர் உரையாடல் :

லாவண்யா

எப்படி லாவண்யா இப்படி ஒரு, ‘பளிச்’ உங்கக்கிட்ட?
பேசிக்கா நான் முறைப்படி நடனம் பயின்ற பரத நாட்டியக் கலைஞர். ஆறு வயதிலிருந்து நடன தம்பதிகளான தனஞ்செயன்சாந்தா தனஞ்செயன் ஆகியோரிடம் பரதம் பயின்றேன். எட்டு வருடங்கள் கற்றுக் கொண்டேன். படிப்புக்காக கொஞ்சம் ப்ரேக் எடுத்துக் கொண்டு ராதாகுமாரியிடமும், அதன் பின்னர் ஊர்மிளா சத்யநாராயணன் அவர்களிடமும் பரதம் பயின்றேன். பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறேன்.’’

அதான் உங்க நடிப்பில் அற்புதமாக நளினம் வெளிப்படுகிறது!

வெட்கத்தோடு அழகாக சிரிக்கும் லாவண்யா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இரண்டு முறை நடனம் ஆடியிருக்கிறாராம். மேடையில் கணீரென்று ஒலிக்கிறது இவரது குரல்.

அதிலும் இந்த நாடகத்தில், நீண்ட நேரம் கனகதாரா ஸ்லோகம் சொல்லும் காட்சியில் வெளிப்படும் ராகமும், உச்சரிப்பும், பாவமும் பிரமாதம்…” – பாராட்டுகிறோம்.

மியூசிக் அகாடமியில் மூன்று வருடங்கள் கர்னாடக சங்கீதத்தில் டிப்ளமா கோர்ஸ் செய்திருக்கிறேன்.”

சிறந்த பரதக் கலைஞர், பாடகி லாவண்யா எப்போது நாடக உலகிற்குள் வந்தார்?
திருமணம் ஆனதும் கணவர் நைரோபியில் இருந்ததால் அங்கு சென்று விட்டேன். 2013ல் திரும்பி வந்தேன். என்னுடன் இசை பயின்ற என் தோழி சௌம்யா, நாடக மேடையில் புகழ் பெற்ற குடந்தை மாலி அவர்களது மருமகள். ஒரு முறை அவர்தான் என்னை நாடகத்தில் நடிக்க வைத்தார். 2013ல், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற குடந்தை மாலியின் நாடகம்தான் நான் முதலில் நடித்த நாடகம். அதை மிகவும் பாராட்டி, அமுதசுரபியில் அட்டைப் படமும் போட்டார்கள். பிறகு ஷ்ரத்தா குழுவினர் போட்ட, ‘இப்படிக்கு நந்தினி’ நாடகத்தில் மெயின் ரோல் செய்தேன். அதில் எனக்கு மைலாப்பூர் அகாடமியின் சிறந்த நடிகை விருது கிடைத்தது.

காத்தாடி ராமமூர்த்தி மேடையேற்றிய, ‘தேவனின் துப்பறியும் சாம்பு’ நாடகத்தில் சாம்புவின் மனைவி வேம்புவாக நடித்தேன்.

அவரது, ‘நீயா? நானா?’ நாடகத்தில் நடித்ததற்காக, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் மைலாப்பூர் அகாடமியின் விருதுகள் கிடைத்தன. Professional Excellency விருதும் வாங்கினேன்.

என் வீடு என் கணவன் என் குழந்தை!’ நாடகத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறீர்கள்.

சின்ன வயதில் மனோரமா நடித்த, ‘என் வீடு என் கணவன் என் குழந்தை!’ நாடகத்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கு மனோரமாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். விசிறி என்பதெல்லாம் தாண்டி அவர்கள் மேல் ஒரு பக்தியே உண்டு. அதனால்தான் தாரிணி அவர்கள் கேட்டபோது என் மதிப்பிற்குரிய ஆச்சி அவர்கள் நடித்த கதாபாத்திரத்தை ஒரு சவாலாக ஏற்று, மூன்று மாதம் ப்ராக்டிஸ் செய்தேன்.

என் மகன் என்னை அன்னபூரணி என்றே அழைக்கும் அளவுக்கு மூச்சு பேச்சு எல்லாமும் அதே.

மனோரமாவின் வீடியோ பார்த்து, அவரது பாணியில் என் தனித்துவமும் வெளிப்படும் விதமாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், சில குறிப்பிட்ட வசனங்கள் மனோரமா பாணியிலேயே பேசினால்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டியிருந்தது.”

வேணுகோபால், நைரோபியில் சொந்தமாக நிறுவனம் நடத்துகிறார். ஒரே மகன், சட்டம் பயின்று கொண்டிருக்கிறார். (உங்களுக்கு அவ்வளவு வளர்ந்த மகனா? வியப்பாக இருக்கிறது.)

கேட்காமல் இருக்க முடியவில்லை… “மடிசார் புடைவை கட்டுவதற்கு நேரம் எடுக்கும். என்ன தான் ரெடிமேட் என்றாலும், டயமாகுமே. அதெப்படிசீனுக்கு சீன் பளிச்சென்று விதவிதமா மடிசார் மாற்றிக்கொள்ள முடிந்தது?”

(சிரிக்கிறார்…) “கடிகாரத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கணக்குப் பார்த்து, ப்ராக்டிஸ் செய்தேன்.”

இந்த ஈடுபாடு காரணமாகத்தான் லாவண்யா வேணுகோபால் அவர்களுக்கு பல விருதுகள் தேடி வருகின்றன. மேலும் சிறப்புகள் கிடைக்க, ‘மங்கையர் மலர்’ சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...