மருக்களா? மருண்டு விடாதீர்கள்…

மருக்களா? மருண்டு விடாதீர்கள்…
Published on

அழகோ அழகு – 4

– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

நம் சருமத்தின் மேல் உருவாகும் Wart எனப்படும் மருக்கள் பற்றிப் பேசப்போகிறோம்.

மருக்கள் எதனால், எவ்வாறு ஏற்படுகின்றன?
ருக்கள் பிரச்னை நம்மிடையே பரவலாகக் காணப்படுகிறது. Human Papilloma Virus (HPV) என்ற வைரஸ் சருமத்தில் ஊடுருவி உடலில் ஆங்காங்கே மருக்களாக மாறும். ஒருவரிடமிருந்து, எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மற்றவருக்கு எளிதில் தொற்றக்கூடிய அபாயம் கொண்டது.

ஒருவர் உபயோகித்த துண்டு, ரேசர், உடைகள் போன்றவற்றை மற்றொருவர் பயன்படுத்துபோது, மருக்கள் ஏற்படும். மேலும், வைரஸ் அதிகப்படியான செல்களின் வளர்ச்சியைத் தூண்டி விடும். அந்த செல்கள் வைரஸை சுற்றி அடர்த்தியாக சருமத்தின் மேல் மருக்களாகப் படிந்து விடுகின்றன.

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

சருமத்தில் காயம் இருந்தாலோ அல்லது சருமம் சேதம் அடைந்திருந்தாலோ மருக்கள் எளிதில் பரவும். குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்க்கும் பரவ வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொருவரின் சருமத் தன்மையையும், எதிர்ப்பு சக்தியையும் பொறுத்து, தொற்று ஏற்படும்.

சிலருக்கு வெளியூர் அல்லது வேறு இடங்களுக்குச் செல்லும்போது தண்ணீர் மாற்றத்தினாலும் கூட மருக்கள் உண்டாகும். அதிலும், உப்பான கடின நீர் பயன்படுத்த நேர்ந்தால் இவை எளிதில் தோன்றும்.
சருமத்தில் மடிப்பு ஏற்படுகின்ற இடங்களில், உதாரணமாக கழுத்துப் பகுதி, கண்களின் கீழ்ப்பகுதி, அக்குள் போன்ற இடங்களில் வியர்வை அதிகமாக ஏற்பட்டு மடிப்புகளிலேயே தங்கி நாளடைவில் மருக்களாக மாறிவிடும். குண்டாக இருப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் இருக்கும்.

இந்த மருக்களை நீக்குவது எப்படி?
சிலர் மருவைச் சுற்றி முடியினால் இறுக்கிக் கட்டி வைப்பார்கள். அது உலர்ந்து தானே விழுந்து விடும். ஆனால், எல்லா மருக்களுக்கும் இந்த முறை சரிவராது. சில பெரிய மருக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். சிலர் ஊதுபத்திச் சூடு மருக்களின் மேல் வைப்பார்கள். இப்படிச் செய்யும்போது இரத்தக் கசிவு அல்லது தழும்பு ஏற்படலாம்.

மருக்களை முறையாக நீக்க இதோ சில வழிகள் :
CAUTERIZATION – அதாவது, தீய்த்தல் முறை. மரு உள்ள இடத்தில் மயக்க மருந்து செலுத்திய 45 நிமிடங்களில் அந்த இடம் மரத்து விடும். பின் மின்சார coterie ஊசி மூலம் மருவைத் தீய்த்து விட்டால், அது சுருங்கி விழுந்து விடும். முழுவதும் தீய்க்க வேண்டியதில்லை. முக்கால்வாசி தீய்த்தாலே போதுமானது. இரண்டு, மூன்று நாட்களில் தானே விழுந்து விடும். லேசான தழும்பு காணப்பட்டாலும், நாளடைவில் புது சருமம் வளரும்போது, தழும்பு மறைந்து விடும். இதேபோல், லேசர் சிகிச்சை முறையிலும் மருக்களை அகற்ற முடியும்.

மேற்சொன்ன இரண்டு சிகிச்சை முறைகளும் மருக்களை உடனடியாக நீக்குவதற்கான வழிகள். இவ்வழிகள் வேண்டாம் என்பவர்கள் வேறு வழிகளைக் கையாளலாம். ஆனால், மருக்கள் முழுவதுமாக நீங்க, பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

SALICYLIC LOTION – இந்த லோஷனை மருவின் மேல் தடவி band-aid போட்டு ஒட்டி வைத்து விட வேண்டும். இதுபோல் தினமும் செய்து வந்தால், நாளடைவில் மரு மறைந்து விடும். எக்காரணத்தைக் கொண்டும் நகங்கள் மருக்களின் மேல் படக்கூடாது. நகங்கள் படும்போது, புண்கள் ஏற்படுவதோடு, மருக்கள் உடலின் மற்ற இடங்களுக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம்.

ஆப்பிள் செடார் வினிகர், Baking பவுடர் தலா ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து கலந்து தடவி வரலாம். அம்மான் பச்சரிசிச் செடியின் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து பஞ்சில் தோய்த்துத் தடவலாம். நான்கைந்து பூண்டு அரைத்து அதனுடன் ஒரு முழு எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் Baking சோடா கலந்து தடவி, காற்றுப்படாமல் band-aid கொண்டு ஒட்டி ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் ஒட்டியதை எடுத்து விடலாம். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் மறையும்.

மருக்கள் சிறியதாக இருக்கும்போதே நீக்கி விடுவது நல்லது. பெரிதான பின் நீக்கினால் தழும்பு உண்டாகும் அல்லது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவி விடும். திரவ நைட்ரஜன் மூலம் உறையச் செய்து நீக்கும் முறையிலும் (தற்போது இம்முறை பின்பற்றப்படுவதில்லை) தழும்புகள் ஏற்பட்டு பெரிதாகத் தெரியும்.

கண்களின் மேல் அல்லது இமைகளின் அருகில் மருக்கள் இருந்தால், மருத்துவர் மூலம் அகற்றுவதே பாதுகாப்பானது. சர்க்கரை நோய் மற்றும் வேறு உடல் நோய் உள்ளவர்கள் மருக்களை அகற்றும்முன், மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நம் உடலை சுத்தமாக வைத்திருப்பது மிக மிக அவசியம். அதிக வியர்வையினால் சருமத்தில் உப்பு படியும்போது, சருமத்தின் எதிர்ப்பு சக்தி குறைந்து வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி மருக்கள் தோன்றும். இதனைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பது நல்லது. லிக்விட் (LIQUID) சோப் பயன்படுத்துவது சிறந்தது. அது உடலின் எல்லா பாகங்களிலும் பரவி, கழுத்து, கண் இமைகள் உட்பட நன்கு சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். எனவே, தனிப்பட்ட சுகாதாரம் மிக முக்கியமான ஒன்று.
– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com