சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா!

சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா!
Published on

பயண அனுபவம்!

கட்டுரை : பத்மினி பட்டாபிராமன்

ரோப்பா கண்டத்தின் வடக்கே இருக்கும் நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, எஸ்டோனியா உள்ளிட்டவை, 'ஸ்கேண்டினேவிய நாடுகள்' என்றழைக்கப் படுகின்றன. வடகிழக்கு அட்லாண்டிக் சமுத்திரம், பால்டிக் கடல், நார்வேஜியன் கடல் இவையெல்லாம் இந்த நாடுகளின் சில பகுதிகளைச் சூழ்ந்துள்ளன. குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வர ஒன்றாக வழங்கப்படும், 'செங்கன் விசா'வை (Schengen Visa) எடுத்திருந்ததில், ஸ்கேண்டினேவியன் நாடுகளுக்குப் பயணம் செய்ய முடிந்தது. ஃபின்லாந்து, எஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சுற்றிப் பார்த்த பின் நாங்கள் சென்ற நாடு ஸ்வீடன்.


பால்டிக் க்வீன்
சுற்றியிருக்கும் தீவுகளும், ஆழமான, அழகான ஏரிகளும், காடுகளும், பாறைகள் நிறைந்த கடற்கரையும் கொண்ட எழில் கொஞ்சும் எஸ்டோனியா நாட்டின் தலைநகரான டேலினிலிருந்து (Tallinn) 'பால்டிக் க்வீன்' என்னும் (க்ரூயிஸ்) கப்பலில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் வரையிலான பயணம் சுமார் 17 மணி நேரம். முதல் நாள் மாலை கிளம்பினோம். சுற்றிலும் ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகள். அவற்றுள் பல, உலகின் கோடீஸ்வரர்களால் வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பிரபல டென்னிஸ் வீரர் 'ப்யான் போர்க்'கூட ஒரு தீவு வாங்கியிருக்கிறாராம்.

கப்பலின் மேல் தளத்தில் வீசி அடிக்கும் குளிர் காற்று. இருந்தாலும், பால்டிக் ராணி, கடலில் துள்ளும் மீன்களை உரசியபடி செல்லும்போது, அலைகளில் மாலைக் கதிர்கள் ஆடும் அழகு, அருகிலும், தள்ளியும் வரும் தீவுகளின் பசுமை, தீவு மரங்களில் கூடு கட்டிய பறவைகள் கடலுக்கு வந்து மீன் கொத்தி எடுத்துத் திரும்பும் காட்சிகள் என்று இயற்கையின் அரசாட்சியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. மஞ்சள் நிறம் காட்டும் இரவு சூரியனும் உடனே விடிந்து விடும் காலைக் கதிரும், கடலில் இருந்து பார்க்கும்போது புதிய கோணங்கள். கப்பலில் நாங்கள் தங்கிய சிறிய அறை மானிட்டரில் கப்பலின் போக்கு, அது கடந்து செல்லும் இடங்கள் என்று தொடர்ச்சியாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நாங்கள் கப்பலை விட்டு எல்லாவிதமான செக்யூரிடிகளையும் முடித்து வெளியே வந்தபோது காலை மணி பத்து.

நோபல் பரிசுகளின் இடம்
சுற்றிலும் ஆயிரக்கணக்கான தீவுகளையும், நூற்றுக்கணக்கான ஏரிகளையும், அறுபது சதம் காடுகளையும் கொண்ட வட ஐரோப்பிய நாடு ஸ்வீடன். பால்டிக் கடலின் மேற்குக் கரையோரம் அமைந்து, நார்வே, டென்மார்க், ஃபின்லாந்து ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு. உலகின் பாதுகாப்பான சில நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஸ்வீடனில் அனேகமாக 99 சதவிகிதத்தினர் கல்வியறிவு பெற்றவர்கள். நாடாளுமன்றம், பிரதம மந்திரி என்று அரசாங்கம் இயங்கினாலும், அரசர் இருப்பதால், 'கிங்டம் ஆஃப் ஸ்வீடன்' என்றே குறிப்பிடப்படுகிறது. 1995ல் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தது.

இங்கே நாங்கள் தங்கிய ஹோட்டல், 'ஸ்கேண்டிக் விக்டோரியா டவர்' (Scandic Victoria Tower) T வடிவத்தில் வானுயர்ந்த டவர். பெரிய டைனிங் ஹாலில் மதியம் லஞ்ச். ஸ்வீடன் நாட்டின் ஸ்பெஷல் அசைவ ஐட்டங்களான மீட் பால்ஸ், ஷ்ரிம்ப் ஸேண்ட்விச், மீன் வகைகள் பக்கமே போகாமல், பட்டாணி சூப், பேன் கேக், ஸேண்ட்விச், கேக், பழங்கள் என்று லஞ்ச் முடித்து வெளியே கிளம்பினோம்.

ஆல்ஃப்ரெட் நோபல்
ஸ்வீடன் என்றவுடனே அங்கே பிறந்த ஆல்ஃப்ரெட் நோபல் நினைவுக்கு வருவாரே! ஆல்ஃப்ரெட் நோபல் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். பல வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர். பிஸினஸ் மேன். 1833ல் பிறந்த இவர், தனது 34 ம் வயதில் கண்டுபிடித்த டைனமைட் பெரும் அழிவுக்குக் காரணமானதால், ஒரு ஃப்ரெஞ்சு தினசரி அவரை, 'மெர்சன்ட் ஆஃப் டெத்' (மரண வியாபாரி ) என்று அழைத்தது.

அதில் மனம் மாறி, தன் பெரும் செல்வத்தை பல துறைகளிலும் மனித குலத்துக்குத் தேவையான கண்டுபிடிப்புக்களைத் தந்த சாதனையாளர்களுக்கும், உலக சமாதானத்துக்குப் பாடுபடுவோருக்குமாக, உலகின் உயரிய விருதுகளை வழங்குவதற்காக உயில் எழுதி வைத்தார். 1896ல் டிசம்பர் 10ம் தேதி அவர் காலமானதால், ஒவ்வொரு வருடமும் அன்று, கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், பயாலஜி அல்லது மருத்துவம், இலக்கியம் இவற்றுக்கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், உலக சமாதானத்துக்கான பரிசு நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவிலும் வழங்கப்படுகின்றன.

ப்ளூ ஹால்
நோபல் பரிசுக்கான கமிட்டி, விருது பெறுவோரை தேர்வு செய்த பின் ஸ்டாக்ஹோமில் இருக்கும் கான்சர்ட் ஹாலில், ஸ்வீடன் நாட்டு அரசர், பட்டயத்தையும் மெடலையும் வழங்குகிறார். அரச குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு நிர்வாகிகள், பரிசு பெறுவோரின் குடும்பத்தினர், பல நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் முன்னிலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதை, 'ப்ளூ ஹால்' என்றும் அழைக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, சற்றுத் தொலைவில் சிட்டிஹால் என்ற இடத்தின் உள்ளே இருக்கும் ஒரு பிரம்மாண்டமான ஹாலில் விருந்து பேங்வெட் நடைபெறுகிறது. அங்கே நிற்கும்போது மனம் எங்கும் ஒரு பரவசம்நம் சி.வி.ராமன், ரவீந்த்ரநாத் டாகூர், அமர்த்யா சென் இங்கே வந்திருப்பார்களே! எக்ஸ்ரே கண்டுபிடித்து முதன் முதலில் ஃபிசிக்ஸுக்கான நோபல் பரிசு பெற்ற ரோன்ட்ஜன், நான்கு முறை விருது பெற்ற மேடம் க்யூரி உட்பட எத்தனை அறிஞர்களைப் போற்றிய இடம் இது.

கோல்டன் ஹால்
ரிசளிப்பு முடிந்த பின் விருந்து, தங்கத்தில் ஜொலிக்கும் 144 அடி உயரம் இருக்கும் கோல்டன் ஹாலில் நடக்கிறது. இங்கு ஒரு புற சுவர் முழுவதும் ஒரு அரசியின் ஓவியம். மற்ற சுவர்களில் எல்லாம் வாழ்க்கைத் தத்துவம், போர்கள், ஆண், பெண் குறிக்கும் சித்திரங்கள், தவிர, ஒரு புறம் ஸ்டாக்ஹோம் நகரையே அப்படியே வரைந்திருக்கிறார்கள். வெளியே106 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கும் சிட்டி ஹாலின் உச்சியில், மூன்று அரச பரம்பரைகள் ஆண்டதைக் குறிக்கும் மூன்று தங்க கிரீடங்கள். இதுவே ஸ்வீடன் நாட்டின் சின்னம்.


மலரேன் ஏரி
ங்கி உயர்ந்த சிட்டி ஹால் கட்டடத்துக்கு எதிரே அழகிய
, 'மலரேன்' ஏரி. அதில் மிதந்து செல்லும் படகுகளும், பாய் விரித்த சிறு செய்லிங் போட்களும் ஸ்டாக்ஹோம் நகரின் ஸ்கைலைன் இருக்கும் பின்னணியில் இயற்கையின் அற்புத ஓவியங்கள்.

ஸ்வீடிஷ் மக்கள்
பொதுவாக, ஸ்வீடிஷ் மக்கள் உலகிலேயே கவர்ச்சிகரமானவர்கள் என்கிற கருத்து நிலவுகிறது. உயரமாக இருக்கும் இவர்கள், ஹெரிங் மீன் உணவை விரும்பி உண்பதால், மேனியில் ஒரு பளபளப்பு கொண்டிருக்கிறார்கள் என்றும், முகத்தில் கன்னம் கொஞ்சம் மேடிட்டு இருப்பதால் அதுவே ஒரு அழகைத் தருவதாகவும் சொல்கிறார்கள். இயற்கை விரும்பிகளான அனேகம் மக்கள், தங்கள் ஓய்வு நேரத்தை காடுகளில் செலவிடவே விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

ஸ்வீடன் நாட்டின் கரன்சி ஸ்வீடிஷ் க்ரோனா (Swedish Krona). ஒரு க்ரோனா என்பது இந்திய மதிப்பில் சுமார் 8.62 ரூபாய்கள். நாம் கடையில் பொருள் வாங்கினால் அமெரிக்க டாலர் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், மீதி பணம் தரும்போது உள்ளூர் கரன்சிதான் தருகிறார்கள். சிறிது நாளே தங்குவோருக்கு இது பிரச்னை ஆகிறது.

வாசா மியூசியம்
டுத்து, ஸ்வீடனில் முக்கியமான இடம் வாசா மியூசியம். பொதுவாக ஐரோப்பியர்கள், குறிப்பாக நார்வே, ஸ்வீடன் நாட்டவர்கள், கடல் வழியே சென்று உலகின் மற்ற பகுதிகளை ஆராய்ச்சி செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களை, 'வைகிங்' என்று அழைப்பார்கள். அதனால் கப்பல் கட்டுவதிலும் வல்லவர்கள். ஸ்வீடனில் 1628ம் ஆண்டு துவங்கி, இரண்டாண்டுகள் கட்டப்பட்ட போர்க் கப்பல் வாசா. அரசரின் ஆணைக்காக ஆடம்பரமாகக் கட்டப்பட்டது. ஆயுதங்களை அளவுக்கு அதிகமாக வைத்ததால் தன் முதல் பயணத்திலேயே கிளம்பிய சிறிது நேரத்துக்குள்ளாகவே மூழ்கிப்போனது. சுமார் 350 ஆண்டுகளுக்குப் பின், கடலுக்கடியில் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மாலுமிகளின் உடைகள், கையுறைகள், சமையல் அறை, டின்னர் பாத்திரங்கள், நாணயங்கள் என பலவிதமான கருவிகள், ஏராளமான பொருட்கள் கிடைத்தன.

கப்பலின் பாகங்களையும், அந்தப் பொருட்களையும் கடலுக்கடியிலிருந்து அப்படியே எடுத்து பழைமை மாறாமல் சீராக்கி, 'வாசா மியூசியம்' வைத்திருக்கிறார்கள். எப்படி மீண்டும் உருவாக்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களும் கிடைக்கின்றன. மியூசிக் அறை, எஞ்சின் அறை, சமையல் அறை என்று கப்பலுக்குள் சென்று வந்தால், கடல் பயணத்தில் மனிதர்களின் வரலாறும் உழைப்பும், அவர்கள் அடைந்த துன்பங்களும் பற்றி அறிய முடிகிறது. மாடி போல இரண்டு அடுக்குகளில் கப்பலை மிக அருகே நின்று பார்க்க முடிகிறது.


ஸ்வீடன் அரண்மனை
ங்கிலாந்து போல
, ஸ்வீடனிலும் அரச பரம்பரைக்கான மரியாதை மக்களிடம் உண்டு. (constitutional monarchy) 1430 அறைகளைக் கொண்ட பெரிய அரண்மனையில் அரச குடும்பம் குடியிருக்க, விழாக்களைக் கொண்டாட, விருந்தினர்களை உபசரிக்க என்று தனித்தனியே கட்டடங்கள் இருக்கின்றன. ஒரு மியூசியம், நூலகம், ஒரு சேபல் இவையும் அரண்மனை வளாகத்திற்குள் இருக்கின்றன. ராயல் அபார்ட்மெண்ட்ஸ், ஹால் அஃப் ஸ்டேட் இவை டூரிஸ்ட்களை வியக்க வைக்கின்றன.

மால்மோ
ஸ்வீடனில் நாங்கள் சென்ற மற்றோர் நகரம் மால்மோ. அழகிய கடற்கரைகள் கொண்ட ஸ்வீடனின் மூன்றாவது பெரிய நகரம். இங்கே இருக்கும் முறுக்கிய டவர் (twisted skyscraper) உலகிலேயே இந்த அமைப்பைக் கொண்ட முதலாவது டவர். Twisting Torso எனப்படும் இதில் 54 மாடிகள் உள்ளன. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. இதன் உச்சிலிருந்து பார்க்கும்போது மால்மோ நகரின் அழகு, பால்டிக் கடல், கடற்கரை இவற்றோடு மற்றோர் அதிசயக் காட்சியையும் பார்க்க முடிகிறது. மனிதனின் அபாரமான பொறியியல் அறிவின் சான்றுதான் அது

(தொடர்ந்து பயணிப்போம்…)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com