0,00 INR

No products in the cart.

பெரியாத்தா…

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி
பரிசுக்கதை – 7

கதை      : தி.வள்ளி
ஓவியம் : லலிதா

யர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நான், சட்டென விழித்தேன். மணியைப் பார்க்க… விடியற்காலை 5 மணி. வீட்டு லேண்ட் லைன் போன் அடித்துக் கொண்டிருந்தது. வழக்கமாக, அதிகாலை வரும் தொலைபேசி அழைப்புகள் நல்ல செய்தியைத் தாங்கி வராது. ஒருவித படபடப்போடு தொலைபேசியை எடுத்தேன். லைனில் முறப்பநாடு பெரியப்பா.

“என்ன பெரியப்பா…” என்றேன், அதே படபடப்போடு.

“நம்ம பெரியாத்தா… ராத்திரி பத்து மணிக்கு போய் சேர்ந்துட்டா. இன்னைக்கு சாயங்காலம் எடுக்கிறோம்” என்றார்.

தி.வள்ளி

ஒரு கணம் அதிர்ந்தேன். வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கும். பெரியாத்தா, அப்பாச்சியின் அக்கா. ஆசாபாசமான மனுஷி. நினைவுகள் பின்னோக்கி ஓடின.

1970களின் பிற்பகுதி… பல வருடங்களுக்கு முன் கிராமத்தில் அவள் வீட்டில் நடந்த என் ஒண்ணுவிட்ட அக்காவின் திருமண நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வந்தது. திருநெல்வேலி பக்கத்துல இருக்கிற முறப்ப நாடு கிராமம். ரோஜா படத்தில் வருமே அழகிய சுந்தரபாண்டிபுரம், அதுமாதிரி இதுவும் ஒரு அழகான, பசுமையான கிராமம்.

கல்யாணத்துக்கு சொந்த பந்தமெல்லாம் திருநெல்வேலியிலிருந்து ஒரு மெட்டாடர் வேனில் கிராமத்துக்குப் போய் இறங்கினோம். மொத்தம் எட்டு வீடுகள் கொண்ட வளவு. எதிர் எதிராக நாலு வீடுகள். நடுவே பெரிய கூடம். அந்தக் கூடத்தில்தான் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நடந்துக் கிட்டிருந்துச்சு. பேப்பர் மணவறை போட நாகர்கோயிலிலிருந்து பீ.டி.(P.D) பிள்ளை குழுவினர் வந்து தங்கி இருந்தாங்க.

எதிர்வீட்டு திண்ணைல மூட்டை மூட்டையா பூவைக் கொட்டி, நிலையாரம், கல்யாண பொண்ணுக்கு தாழம்பூ ஜடையாரம், கழுத்தாரம், விளக்காரம் என பூ மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. கல்யாணத்துக்குத் தேவையான இனிப்பு, கார பலகாரங்கள் தயாராகிக்கிட்டிருந்தது. எண்ணெயும், சுத்தமான நெய்யும் சேர்ந்த கலவை நாசியை துளைச்சுது.

ன் அம்மாவிடம் மெதுவாக, “பாத்ரூம் எங்கம்மா?”ன்னு கேட்டேன். (என் கவலை எனக்கு) அது பெரியாத்தாவின் காதில் விழ…

“வேலம்மா மவளா? ஏட்டி வா காண்பிக்கறன்” என்று சொல்லி வீடுகளின் பின்னாலுள்ள வெற்றிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஓலையால் நாலைந்து தடுப்புகள்.

“இது எதுக்கு பெரியாத்தா?” என்று நான் கேட்க,

“என்னட்டி கேள்வி? காலையில எந்திரிச்சு குளிக்க வேணாமாட்டி? இந்தப் பாரு…” என்று காண்பித்தார். நாலைந்து செங்கலை வைத்து அடுக்கிய அடுப்பில் பெரிய பெரிய பித்தளை அண்டாக்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. ராத்திரியே தீமூட்டி தண்ணீரைக் கொதிக்க வைச்சு பக்கத்துல இருக்கிற தகர டிரம்ல ஊத்திடுவாக. பொம்பளைங்க இந்தப் பக்கம்… ஆம்பளைங்க தடுப்புக்கு அந்தப் பக்கமும் நின்னு குளிக்க வேண்டியது தான்’’ என்றாள் பெரியாத்தா கூலாக.

“அய்யோ…” என்று அலறினேன். அம்மா என் கையை அழுத்தினாள்.

“கழிப்பறை வசதி” என்று நான் இழுக்க… பெரியாத்தா கொஞ்சமும் சளைக்காம, “கக்கூஸ்தானே… இங்க வாட்டி காண்பிக்கேன்” என்று கொல்லையின் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே சின்னச் சின்னக் குழிகள் தோண்டப்பட்டு அதன் பக்கத்தில் செங்கல்கள் அடுக்கப்பட்டு உயரமாக இருந்தது. ‘‘இங்க போக வேண்டியதுதான். ஆம்பளைங்க எல்லாம் வயக்காட்டுக்குப் போயிடுவாங்க. இது, பொம்பளைகளுக்கும், உங்கள மாதிரி சமைஞ்ச குமரிகளுக்கும்தான்’’ என்றாள் பெருந்தன்மையோடு.

“அம்மா! இப்பவே திருநெல்வேலி போயிட்டு காலைல வருவோம்” என்றேன் அழாத குறையாக.

“ஏட்டி வேலம்மா… உம் மவ என்ன வெக்கப்படுதாளா? மெத்த வீட்ல புதுசா பட்டணத்துல பாத்துட்டு ஒரு பாத்ரூம் கட்டி இருக்காக… அங்க போய்க்கிடச் சொல்லு” என்றாள். நன்றியோடு பெரியாத்தாவ பாத்து கைகூப்பினேன்.

பெரிய பிரச்னை ஓய்ந்து விட, அப்புறம் பொழுது சந்தோஷமாகக் கழிந்தது. இரவு சுடச்சுட உப்புமாவும், இட்லியும், கத்திரிக்காய் கொத்சும், கல்யாண வீட்டு பலகாரங்களையும் சேர்த்து ஒரு பிடி பிடித்தோம். அத்தை அரைத்து வைத்திருந்த மருதாணியை எல்லோரும் இட்டுக் கொண்டோம்.

அப்போதுதான் பிரச்னையே ஆரம்பித்தது. இரவு வந்து சேரவேண்டிய சமையல் ஆட்கள் வரவில்லை. நேரம் ஆக ஆக டென்ஷன் கூடியது.

பெரியப்பா, அண்ணனைக் கூப்பிட்டு, “ஏல கணேசா! போஸ்ட் ஆபீஸ் போ. நான் தர்ற நம்பர்ல போன் போட்டு தவசு பிள்ளையும், அவர் ஆட்களும் கிளம்பிட்டாங்களான்னு கேளு…” என்றார்.

கொஞ்ச நேரத்திலேயே அண்ணன் திரும்பி வர, “அப்பா! போஸ்ட் மாஸ்டர் டெலிபோன் வேலை பாக்கலைன்னு சொல்லிட்டாரு. இப்ப என்ன செய்றது?”

“நான் மதுர தவசு பிள்ள வேணாம்… தின்னவேலில அருணாசலம் பிள்ளைய சொல்லிடுவோம்ன்னு சொன்னா, இந்த கிட்டு கேக்க மாட்டேன்னுட்டான்” புலம்பினார் பெரியப்பா. அண்ணன் திருநெல்வேலி கிளம்பினான்.

ரெண்டு மணி நேரத்தில், போனவன் வந்து சேர, “அப்பா! அவங்க கிளம்பிட்டாங்களாம். நடுவழியில டயர் பஞ்சர்… வண்டிய சரி பண்ணிட்டு வந்து சேர எப்படியும் விடிஞ்சிடும்ன்னு சொன்னாங்க.”

“அடப்பாவி இப்படி கவுத்துட்டான். இம்புட்டு பேருக்கும் சமையல் பண்ணணுமே. கால 8 மணி முகூர்த்தம்லா.”

“ஏலே ராசா… மலையாத எல்லாம் செஞ்சுபுடலாம். அதான் இத்தினி பேரு இருக்கோம்ல” பெரியாத்தா தைரியப்படுத்த, பெரியாத்தா தலைமைல வேலை ஆரம்பித்தது.

“இளவட்டப் பசங்கள்லாம் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்க ஏல ராசா! முதல்ல எல்லா வீட்டிலும் போயி, அருவாமணையும், திருவிளகுத்தியும் வாங்கிட்டு வா. ஏலே கணேசா! அப்படியே 25 தேங்காய் உடைச்சு வையி!”

“நீ ஒண்ணும் மலையாத அப்பு… நாங்க பாத்துக்குறோம். காய்கறிய வெட்டி வச்சு, எல்லாத்தையும் தயார் பண்ணி வெச்சுட்டா, அவுக காலையில வந்தா கூட சமையல் செஞ்சிடுவாங்க. காலைல பலகாரம் நாங்க பாத்துக்குறோம்.”

அருவாமணையும், திருவிளகுத்தியும் வந்து சேர்ந்தன. ஒரு பாயை விரித்து… வளைவு பெண்கள் எல்லோரும் உட்கார, மளமளவென காய் வெட்டும் வேலை ஆரம்பித்தது.

“ஏல சமஞ்ச கொமரிகளா… கல்யாண பொண்ணு தவிர, மத்தவங்க மருதாணிய கழுவிட்டு வந்து சேருங்க.”

“அய்யோ… அம்மா! எனக்கு ஒண்ணும் தெரியாது” என்றேன்.

“எட்டி வேலம்மா மவளே! கருவப்பிலய உருகு. இதுக்கெல்லாம் தெரியணும்னு அவசியமில்லை…”

காலைல பேசுன பெரியாத்தாளுக்கும் இப்ப உள்ள பெரியாத்தாளுக்கும் நிறைய வித்தியாசம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காய்கறியை எடுத்து நறுக்க ஆரம்பிக்க, இளவட்டங்கள் எல்லோரும் தேங்காயை உடைத்து திருவளகுத்தியில் திருக ஆரம்பித்தனர்.

“காலையில தவுசு பிள்ளைய எதிர்பாத்து நிக்க வேணாம். ஒரு சாம்பார் வைச்சு, பொங்கலப் போட்டு, கேசரியை கிண்டிடுவோம். டவ்வியையும், பெரிய இட்லி பானையையும் பரணில இருந்து இறக்கச் சொல்லியிருக்கேன். ஒரு தட்டுக்கு ஐம்பது இட்லி வரும். நாலு தட்டு வச்சு, மூணு ஈடு அவிச்சா போதும்.”

இரவு விடிய விடிய யாரையும் தூங்க விடல பெரியாத்தா. ஒருபுறம் காலை பலகாரத்திற்கு சாம்பார் வைக்க தேவையானத ரெடி பண்ணிட்டு, நறுக்கிய காய்கறிகளை தவசு பிள்ளை வந்தால் சமைக்க ஏற்பாடு பண்ணிய இடத்தில் கொண்டு போய் வைக்கச் சொன்னாள்.

நான் மெதுவாக நழுவி, மச்சு வீட்டுக்குப் போய் செட்டிலானேன். காலைல ஆறு மணிக்கு அம்மா எழுப்பினாள். ‘‘சீக்கிரம் குளிச்சிட்டு, சேலைய கட்டிட்டு வா’’ என்று பட்டுப் புடைவையும் நகையையும் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.

கீழே இறங்கி வந்த நான், வியப்பின் உச்சிக்கே போனேன். ராத்திரி எங்கே உட்கார்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தார்களோ அந்த இடம் சுத்தமாக்கப்பட்டு ஜமக்காளம் எல்லாம் அழகாக, விரிக்கப்பட்டு, மணமேடை அலங்காரம் முடிஞ்சு, நிலையாரம், மாவிலைத் தோரணம், வாழைமரம் என எல்லாம் அந்த நாலு மணி நேரத்தில் மாயாஜாலம் போல நடந்து முடிந்திருந்தது.

மணக்க மணக்க சாம்பாரும், இட்லியும், பொங்கலும், கேசரியும் தயாராகிக் கொண்டிருந்தது. காலையில ஏழு மணிவாக்கில் தவசு பிள்ளை தனது ஆட்களுடன் வந்துசேர, எல்லோருக்கும் பெரிய நிம்மதி. பிறகென்ன…? கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்து முடிந்தது.

‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதுக்கு முக்கியக் காரணகர்த்தா பெரியாத்தாதானே’ என்ற எண்ணம் மனதில் எழ… அவளுக்கு இறுதி மரியாதை செலுத்த ஊருக்குக் கிளம்பினேன்.

திரும்பி வந்த பிறகு, ‘அடுத்து நடக்கவிருக்கும் என் மகள் கல்யாணத்துக்கு ஒரு நல்ல மேரேஜ் பிளானரை ஏற்பாடு பண்ணவேண்டும்’ என்ற யோசனையும் கூடவே எழுந்தது!

2 COMMENTS

  1. தவிர்க்க முடியாத சூழலில் தவித் து தடுமாறும் வேளையில் கை காெ டுத்து
    உதவிக்கரம் நீட்டுவற்கு “பெ ரியாத்தா”
    போ ல் பெ ரி யோ ர்கள் தேவை என்ற கருத்தை வலியுறுத்தியது வள்ளியின் கதை. வாழ்த்துகள்.
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...