
காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளும் ஒலிம்பிக் போலவே, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இம்முறை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் 2022 ஜூலை 28ல் தொடங்கி, ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்பு ஜோதி ஓட்டம் நடைபெறுவதுபோல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடங்கும்முன்பு, 'குயின்'ஸ் ரிலே (ராணியின் தண்ட ஓட்டம்) நிகழ்வது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பேட்டன் ரிலே நவம்பர் 7, 2021 அன்று தொடங்க உள்ளது. அதன் பயணம், வடிவமைப்பு பேட்டனின் சிறப்பம்சங்கள் குறித்து சற்று பார்ப்போம்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டிஷ் பேரரசில் இருந்து உருவானதால் எப்போதுமே அதன் தொடக்கத்தில் காமன்வெல்த்தின் தலைமைக்கு, அதாவது இங்கிலாந்து ராணிக்கு முக்கியப் பங்கு உண்டு. 'குயின்ஸ் பேட்டன் ரிலே' என்ற பெயரிலேயே அது தெளிவாகத் தெரியும். அந்த வகையில் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து காமன்வெல்த்துக்கான தனது செய்தியை ராணி 2ஆம் எலிசபெத் வழங்கிய பிறகு குயின்ஸ் பேட்டன் ரிலே அங்கிருந்து தொடங்கும்.