0,00 INR

No products in the cart.

சோம்பேறி சாம்பியன் சோமு!

சங்கடம் தரும் சந்திப்புகள்; சமாளிக்க சில யோசனைகள்! – 3

– ஜி.எஸ்.எஸ்.
படங்கள்: சுதர்ஸன்

லாரம் வைத்துக்கொண்டு விடியற்காலை அது ஒலி எழுப்பும்போது கடிகாரத்தின் தலையில் தட்டிவிட்டு (அல்லது மொபைலில் அதை மெளனமாக்கிவிட்டு) மறுபடியும் தூங்குபவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது நீங்களே அப்படிப்பட்டவராக இருக்கலாம்.

ஆனால், சோமு ரொம்பவே வித்தியாசமானவன். காதுகளில் நாராசமாக அலாரம் ஒலி விழுந்தால்கூட அதை மெளனமாக்க எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளாமலே தொடர்ந்து படுத்துக் கொண்டிருப்பான். கைகளை உயர்த்தி, விரலை இயக்கி அலார ஒலியை நிறுத்த வேண்டுமே! அவ்வளவு அதிகப்படி இயக்கங்களை சோமுவிடம் எதிர்பார்க்க முடியாது. அப்படியொரு முழுச் சோம்பேறி.

பூமியில் பிறப்பதற்கு முன்பாகவே தன்னுடைய தனித்தன்மையை நிலைநாட்டியவன் சோமு. பத்து மாதம் தாண்டியும் அம்மாவின் வயிற்றிலிருந்து சோமு வெளியேறவில்லை. பிரசவ வலியே அந்த அம்மாவுக்கு ஏற்படாததால் டாக்டரும் கவலையடைந்தார். ‘‘உதைக்கவே மாட்டேங்கிறான்’’ என்று பலமுறை ஏற்கெனவே அந்த அம்மா கூறும்போதெல்லாம் டாக்டர் பரிசோதித்து, ‘‘குழந்தை ஆரோக்கியமா இருக்கு’’ என்று சான்றிதழ் கொடுத்திருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால் சோமுவின் சோம்பேறித்தனம் கருவிலேயே ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. சிஸேரியன் முறையில்தான் குழந்தை வெளி வந்தது.

பிறந்த குழந்தை அழாமல் இருந்து இரண்டு தட்டு தட்டிய பிறகுதான் அழத் தொடங்கியது. கொஞ்சமாக அழுதுவிட்டு நிறுத்திக் கொண்டது.

சோமுவின் திருமண நாளன்று காலை எல்லோருமே பதறிவிட்டார்கள். முகூர்த்த நேரம் காலை எட்டரையிலிருந்து பத்து மணிக்குள் என்று குறிக்கப்பட்டிருந்தது. எட்டரை மணி ஆனபோது, அவன் எந்த அலங்காரமும் செய்துகொள்ளத் தொடங்கியிருக்க வில்லை. ‘‘பத்து மணிக்கு ஒரு ஐந்து நிமிஷம் முன்னே ரெடியானா போதாதா?’’ என்று கூறி, அதிர வைத்தான்.

அலுவலகத்தில் சேர்ந்தபோது அவனுக்கு அளிக்கப்பட்ட ப்ராஜக்டை எந்தத் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்து கொண்டான். ‘அடடா, எந்த அளவு தொழில் பக்தி’ என்று அகமகிழ்ந்தார் மேல் அதிகாரி. அவருக்குத் தெரியாது, ‘அந்த வேலையை அதிகபட்சம் எந்த அளவுக்குத் தள்ளிப்போடலாம்’ என்பதற்காகத்தான் சோமு அந்தக் கேள்வியை பலமுறை கேட்கிறான் என்று.

அவன் ரயில் பயணத்துக்காகக் கிளம்புகிறான் என்றால், வீட்டிலுள்ள எல்லோருக்குமே டென்ஷன் எல்லை தாண்டி விடும். ‘அதனால் என்னகை சொடுக்கும் நேரத்தில் ஸ்டேஷனுக்குப் போய்விடலாம்’ என்று கூறுவான். ‘எட்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் அளவுக்கு அவ்வளவு மெதுவாக ஒருவர் கை சொடுக்க முடியுமா?’ என்ற தர்க்கம் எல்லாம் சோமுவின் சோம்பேறித்தனத்துக்கு அப்பாற்பட்டது. கிளம்பத் தொடங்கிவிட்ட ரயிலின் கடைசிப் பெட்டியில் ஏறி உள்ளுக்குள்ளாகவே பல பெட்டிகளைக் கடந்து தன் இருக்கையை அடைவது என்பதுதான் அவன் வாடிக்கை.

சோமுவுக்கு ஒரு மகன் பிறந்தான். (அவனும் பத்து மாதம் கழித்துதான் பிறந்தான் என்பது வேறு விஷயம்.) வளர்ந்து பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஒரு நாள் சோமுவை பள்ளிக்கு அழைத்தார் தலைமை ஆசிரியை. “உங்க மகன் தினமுமே ஸ்கூலுக்கு பத்து நிமிஷம் லேட்டா வரான்” என்றார். சோமுவின் முகம் ஏன் மலர்கிறது என்று தலைமை ஆசிரியைக்குத் தெரியவில்லை. “சின்ன வயசிலே நான் ஸ்கூலுக்கு தினமும் இருபது நிமிடம் லேட்டா போவேன். டீச்சர்களும், மனுஷங்கதானே. காலையில் வந்தவுடனே செட்டில் ஆவதற்கு அவங்களுக்கு நேரம் கொடுக்க வேணாமா?” என்றான்.

திரைப்படத்திற்கு முன்பதிவு செய்யும்போது நீங்கள் எதில் கவனம் செலுத்துவீர்கள்? முடிந்தவரை பின்பக்க வரிசை வேண்டும், நடுப்பகுதி இருக்கை வேண்டும் என்பது போன்றவற்றில்தானே? சோமுவின் முன்னுரிமை என்பது அரங்கிற்குள் நுழைந்தவுடன் மிக அருகில் உள்ள இருக்கைக்குதான்.

சோமுவுக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும். இயக்குனர்களில் மணிரத்னம் பிடிக்கும். ஏனென்று கேட்க மாட்டீர்கள்தானே?

ம் எல்லோருக்குமே அவ்வப்போது கொஞ்சம் சோம்பல் எட்டிப் பார்ப்பது இயல்புதான். ஆனால், இது மிகவும் அதிகமாக இருந்தால் வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும்.

எதையும் தள்ளிப்போடும் தன்மையை எப்படி வெற்றிகொள்வது? நாமும் அறிந்து கொண்டு, சோமுவை போன்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்போமே.

தள்ளிப்போடுவதால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை தெளிவாக மனதில் கொண்டு வாருங்கள். (ஹெல்மெட் வாங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தால்? மார்பு வலி தொடங்கும்போது அதை அலட்சியம் செய்தால்?) தள்ளிப்போடுவதை நிறுத்த வாய்ப்பு உண்டு.

சில சமயம் மிகப்பெரிய செயல் என்பதாலேயே ஒன்றைச் செய்யாமல் இருப்போம். அதன் ஒரு பகுதியை நீங்கள் செய்யத் தொடங்கிவிட்டால் பிறகு அடுத்தடுத்து என்று தானாக செயல்கள் நடைபெறும். (வீடு கட்டுவதைத் தள்ளிப்போடுகிறீர்களா?
நில பூஜை செய்துவிட்டு, ஒரு கான்ட்ராக்டரை அணுகுங்கள். பிறகு, தானாக வேலை நடக்கும்.)

உங்களை வெறுப்பேற்றக்கூடிய ஒருவரிடம், ‘இந்த வேலையை எப்படியும் இன்னும் இரண்டு நாளிலே செஞ்சிடுவேன்’ என்று சவால் விடுங்கள். இரண்டாம் நாள் அவர் கேலி செய்வாரே என்பதற்காகவாவது அந்த வேலையை செய்து விடுவீர்கள்.

ஒரு வேலையை செய்யப் பிடிக்காமல்கூட நீங்கள் அதைத் தள்ளிப்போடலாம். வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டிய, ஆனால் செய்யப் பிடிக்காத வேலையை முதலில் செய்து விடுவது நல்லது. அப்போது வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். இல்லையென்றால், மனதில் ஒரு எரிச்சலுட்டும் பாரம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

(தொடரும்)

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...