சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!

சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!
Published on
உரையாடல் : பத்மினி பட்டாபிராமன்
ஸ்வப்னோபூரண் – பூர்த்தியாகும் கனவுகள்

மேற்கு வங்காள  எல்லையை ஒட்டிய, கல்வி வசதி அவ்வளவாக இல்லாத, சுந்தர்பன்ஸ் தீவு கிராமங்களில் ஆங்கில மீடியம் பள்ளிகளை அமைத்து, அந்த ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி எனும் தீபம் ஏற்றியிருக்கும் சதரூபா மஜும்தார் அவர்களை சந்திப்போம், வாருங்கள்…

ஹிங்கல்கஞ்ச்

மேற்கு வங்காள எல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில், கங்கை பிரம்மபுத்திரா நதிகள் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் (Delta) சதுப்புநிலக் காடுகள் அடர்ந்த சுந்தர்பன்ஸ் (Sundarbans) என்னும் இந்தியப் பகுதியில் இருக்கும்  சுமார் 102 சிறு தீவுகளில் ஒன்றுதான் ஹிங்கல்கஞ்ச் (Hingalganj).

முதல் பயணம்

து 2012 ம் ஆண்டு. கொல்கத்தாவிலிருந்து சுமார் 86 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஹிங்கல்கஞ்ச் தீவில் இருக்கும் கதஹலி கிராமத்துக்கு நீண்ட மூன்றரை மணி நேரம் கடினமான பயணம் செய்து இரண்டு பெண்மணிகள் வருகிறார்கள். அதில் ஒருவர் கொல்கத்தாவில் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக வேலை பார்க்கும் சதரூபா மஜும்தார்.

மற்றொருவர் கனடாவிலிருந்து வந்திருக்கும் அவரது உறவினர். தன்னிடமிருந்த தையல் மிஷினைசுந்தர்பன்ஸ் கிராமப் பெண்களுக்கு நன்கொடை கொடுக்க வேண்டி சதரூபாவுடன் வருகிறார். அங்கிருந்த குடும்பங்கள் ஏழ்மையானவை. பீடித் தொழிலாளர்கள், மீனவர்கள், சிறு விவசாயிகள், மற்றும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள்.

அடிக்கடி புயல் விளையாடும் பூமி அது. தினசரி  வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் போது அங்கிருந்த குழந்தைகளுக்கு கல்வி பயில வாய்ப்பு ஏது?

வர்கள் சதுப்பு நிலச் சேற்றில் விளையாடிக் கொண்டோ, அல்லது பீடி சுற்றிக் கொண்டோ இருந்தார்கள். இத்தனைக்கும் சில அரசாங்க பள்ளிக்கூடங்கள் சுற்று வட்டாரங்களில் இருந்தன. ஆனால், போதிய வசதிகள் இல்லாத, சரியான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் அவை. மதிய உணவுக்காக மட்டுமே சில குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்கள்.  கொல்கத்தாவில் தன் ஏழு வயது மகளின் பள்ளி, அங்கு கிடைக்கும் தரமான கல்வி, உடற்பயிற்சி, கணினி முதலான வசதிகள்… இவற்றை எண்ணிய சதரூபாவுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது 'இவர்களுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?' என்ற எண்ணம் தோன்றியது.

எண்ணத்தை எப்படி செயல்படுத்தினார் சதரூபா?

ங்கிருந்த சில பெண்கள், சதரூபா ஒரு ஆசிரியை என்று அறிந்ததும், தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுத் தர வேண்டும் என்றும், தங்களைப் போல பிள்ளைகளும் கல்வியறிவு இல்லாமல் போய் விடக்கூடாது என்றும், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுங்கள் என்றும் முறையிட்டார்கள்.

நல்ல வருமானம் உள்ள வேலை, சிறிய வயது மகள், பிஸினஸில் இருக்கும் கணவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எப்படி?

னால் ஓரிரண்டு மாதங்களில் மீண்டும் அவர் ஹிங்கல்கஞ்ச் சென்றார்.  பிரபஞ்சம் வாழ்க்கையின் அர்த்தத்தை தனக்கு கட்டளையிட்டது போல் உணர்ந்தார். அந்தப் பயணம் எங்கோ சதுப்பு நிலத்தில் வறுமையில் வாடிய குழந்தைகளின் வாழ்வில் கல்வி என்ற ஒளியை ஏற்றி  வைப்பதற்கான பயணம். வாரத்தில் ஐந்து நாட்கள் தன் கொல்கத்தா பள்ளியில் பணி செய்து விட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் கிளம்பி ஹிங்கல்கஞ்ச் வந்து விடுவார். அது அசாதாரணமான பயணம்.

அந்த பயணம் பற்றி சொல்லுங்கள் ரூபா…

கொல்கத்தாவில் அதிகாலை 6.20 க்கு ரயிலில் ஏறி, ஹஸ்னாபாத் ரயில் நிலையத்தில் இறங்குவேன். அங்கிருந்து தஷா நதிக்கரை வரை ஒரு ரிக்க்ஷாவில் சென்று, படகில் நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவில் கிராமத்தை அடைய வேண்டும். மாலை வரை குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தந்த பின் கொல்கத்தா திரும்புவேன்.

முதலில் சில வாரங்களுக்கு, பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோரிடம் பேசுவது, குழந்தைகளைச் சேர்ப்பது, ஆங்கிலம் கற்றுத்தருவது என்று பணிகள் இருந்தன. ஆரம்பத்தில் 25 பிள்ளைகள் சேர்ந்தார்கள்.

ஸ்வப்னோபூரண் உருவான கதை

Swapnopuron Welfare Society (SWS) இதன் பொருள், கனவுகளை பூர்த்தி செய்வது. இந்த அமைப்பின் கீழ் தான் பள்ளி ஆரம்பமானது. பின்னர் எட்டு மாதங்களில், என் சம்பளத்தை உபயோகித்து, ஒரு நிலம் குத்தகைக்கு எடுத்து ஒற்றை அறை இடம் ஒன்றை அமைத்தேன்.

முதலில் அது பள்ளியாக இல்லாமல் கல்வி கற்பிக்கும் மையமாக (Learning centre) மட்டுமே இருந்தது.  பிறகு கிண்டர்கார்டன், நர்சரி வகுப்புக்களுடன் தொடங்கியது. பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைப்பது பெரிய சவாலாக இருந்தது.

அப்போது அங்கிருந்த யாரும் உதவினார்களா?

2014ம் ஆண்டு, அந்த கிராமத்திலிருந்து 30 கிமீ தள்ளியிருந்த பஷிர்ஹட் (Basirhat) என்ற ஊரில் ஆசிரியராக பணி புரிந்த ஆமீர் ஹுசைன், என் வேலைகளைப் பற்றி கேள்விப்பட்டு உதவ முன் வந்தார். அங்கிருந்த மக்களிடம் பேசி , பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தார். அவர் செய்தது மாபெரும் உதவி.

முதலில் என்ன கற்றுக் கொண்டார்கள்?

முதலில் அல்ஃப பட்ஸ், எண்கள், ரைம்சுகள் என்றுதான் கல்வி ஆரம்பமானது. 2013ல் முதல் வகுப்பும், 2014ல் இரண்டாம் வகுப்பும் துவக்கப் பட்டன. ஒரு சில ஆசிரியர்களை பள்ளிக்கு நியமித்த போது, ஆமீரின் மனைவியும் அவர்களுள் ஒருவராக சேர்ந்தார். அதில் சிலருக்கு போதிய ஆசிரியர் பயிற்சி இல்லை. அவர்களை கொல்கத்தாவில் இருக்கும்  ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் (National Institute of Creative Performance) சேர்த்து பயிற்சி பெறவைக்க வேண்டியிருந்தது.

ஒவ்வொரு வாரமும் அவர்களை கூட்டிச் செல்வது கடினமாக இருந்தாலும், ஆமீர் உதவியுடன்  பெரும் முயற்சி செய்து, இதற்காக தன் சம்பளத்தை முழுவதும் செலவு செய்திருக்கிறார் சதரூபா.

2016ல் ஸ்வப்னோ பூரண் 4 வது வரை வகுப்புக்கள் கொண்ட பள்ளியாயிற்று. அந்த ஆண்டு மாரடைப்பால் மறைந்த ஆமீரின் இழப்பு ஒரு சோதனையாயிற்று.  ஆனாலும் அவர் விதைத்த நல்ல சிந்தனைகள் காரணமாக மெல்ல மெல்ல ஸ்வப்னோபூரண்பள்ளி வளர்ச்சி காண ஆரம்பித்தது. ஸ்வப்னோபூரண், ஒரு மேல்நிலைப் பள்ளியாக மாற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார் சதரூபா. 

எப்படி சாதித்தீர்கள் சதரூபா?

2018ல் நல்ல சம்பளம் கிடைத்த வேலையை விட்டு விட்டு முழு நேரமும் இதில் ஈடுபட ஆரம்பித்தேன்.  என் கணவர் தேபாஷிஷ் மஜும்தார் என் நல்ல பணிகளுக்கு தன் ஆதரவைத் தந்ததால்,  வீட்டை விட்டு பல மைல் தூரம் தள்ளி இருந்த இந்தப் பகுதியில் பள்ளியை நிறுவ முடிந்தது. முக்கியமாக பணம் வேண்டுமே… எனக்குக் கிடைத்த ப்ராவிடன்ட் ஃபண்ட் தொகையைக் கொண்டு 2018 ல் இன்னோர் இடம் குத்தகைக்கு எடுத்து, கூரை வேய்ந்து 10 வகுப்பறைகளை அமைத்தேன். 5 ம் வகுப்பிலிருந்து 8 வது வரை நடக்கும் பள்ளியாயிற்று.

2019 ல் சுமார் 200 மாணவர்கள் சேர்ந்தார்கள்.  அவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, பை எல்லாமே இலவசமாக கொடுக்கப்பட்டன. மாதாமாதம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2021 ல் 9 ம் வகுப்பு பின்னர் இன்று 10 ம் வகுப்புவரை உயர்ந்துள்ளது.

இந்த ஒரு பள்ளி மட்டும்தானா?

ந்த மெயின் பள்ளியைத் தவிர சுற்றுப் புறங்களில் மேலும் 4 பள்ளி களையும் ஸ்வப்னோ பூரண் மூலம் கட்ட முடிந்தது. மொத்தம் 1800 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. எல்லாமே ஆங்கில மீடியம் பள்ளிகள்.

ஆசிரியர்கள் தேவைப்படுவார்களே…

ப்போது 27 ஆசிரியர்கள் இந்தப் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள். புயல் தாக்கும் பூமியில் பணி செய்ய அவர்களை கொல்கத்தாவிலிருந்து வரவழைப்பது எளிதாக இல்லை. அவர்களுக்கு அந்தந்த பகுதியில்  இரண்டு படுக்கையறை வசதி கொண்ட வீடுகளுக்கு வாடகை கொடுத்து வசிக்க ஏற்பாடு செய்தேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்தேன்.

இங்கே படித்த யாரும் ஆசிரியர்கள் இல்லையா?

ருக்கிறார் பிகாஷ் பிஸ்வாஸ்.  இவர்  ஹிங்கல்கஞ்ச் அரசுப் பள்ளியில் படித்து, ஹூக்ளி சென்று பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர். அதே அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் இன்று இந்தப் பள்ளி ஆசிரியர்களில் ஒருவர்.

உங்கள் சிலபஸ், பாடத் திட்டம் என்ன?

CBSE  பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. செயல்பாடுடன் கூடிய கல்விக்கு (activity-based learning) பிரைமரி பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. கைவினைக் கலைகள், கலாசாரத்துக்கான முகாம்கள், கதை சொல்லுதல், வெளி இடங்களில் சென்று கற்றல் போன்ற முழுமையான கல்வி அளிக்கப்படுகிறது.

கற்றுத்தருவதற்காக அவ்வப்போது பல துறை வல்லுனர்கள் அழைக்கப் படுகிறார்கள்.  நடனம், ஓவியம் வரைதல், பாட்டு, கராத்தே என்று இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் திறமைகளை ஊக்கப் படுத்தி கற்றுக் கொடுத்து ஆர்வமாக செயல் பட வைக்கிறோம்.

தனியார் பள்ளிதானே?  

நிச்சயமாக. அரசு உதவி பெறும் பள்ளியுமல்ல. தனியார் பள்ளி என்பதால் மாதம் 100 ரூபாய் முதல் 150 வரை ஃபீஸ் வாங்குகிறோம். அதுவும் தர இயலாத பிள்ளைகளிடம் வாங்குவதில்லை.

எங்கள் நல்ல பணியைக் கண்ட, உதவும் மனப்பான்மை கொண்ட சிலர் கொல்கத்தாவிலிருந்து இந்த அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்ட் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

பள்ளியில் உள் கட்டமைப்பு செய்யவும், லேப் போன்ற வசதிகளைச் செய்யவும் இவர்கள்  நன்கொடை அளிக்க முன் வந்ததோடு, corporate social responsibility (CSR) போன்ற நிதிகளைத் திரட்டவும் உதவி வருகிறார்கள்.

கோவிட் சமயத்தில் என்ன செய்தீர்கள்? பள்ளிகள் இயங்கியதா?

நாடு முழுவதும் லாக் டவுன் இருந்த போது கூட ஸ்வப்னோபூரண் குழந்தைகள் மட்டும் விடாமல் ஆன்லைனில் பாடம் படித்தார்கள்.  ஆன்லைன் வகுப்புக்களில் பாடம் நடந்த போது, ஸ்மார்ட் ஃபோன் வைத்திருந்த பிள்ளைகளுக்கு அதில் பயிற்சி பெற சில நாட்களாகின. பிள்ளைகளுக்கு உதவ அன்னையருக்கும் பயிற்சி தரப்பட்டது. ஃபோன் இல்லாத மாணவர்களுக்கு ஒர்க் ஷீட் தரப்பட்டு பாடங்கள் நடந்தன.

கோவிட் பாதிப்பு இருந்த பத்து மாதங்களில் ரேஷன் உணவுப் பொருட்கள் அடங்கிய 13,550 பைகள் ஸ்வப்னோபூரண் மூலம் இந்த கிராமத்தாருக்கு வினியோகிக்கப்பட்டன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு புயல் தாக்கியதே…

கோவிட் கொஞ்சம் சரியாகும் நிலையில் 2020ல்  அம்ஃபான் (Cyclonic Storm Amphan) இந்த பகுதியைத் தாக்கியது. ஸ்வப்னோபூரண் மீண்டும் உதவிக்கு வந்தது. இந்தப் பகுதியில் ஆறு சமுதாய சமையல் கூடங்களை (community kitchens) அமைத்து, 21 நாட்களுக்கு, சுற்றிலும் இருந்த 5 தீவுகளில் உள்ள கிராமவாசிகளுக்கு உணவளித்தோம். அப்போது மட்டும் மின்சாரம் இல்லாததால் வகுப்புக்கள் நடக்க வில்லை.

கல்வி தவிர ஸ்வப்னபூரண் செய்து வரும் இதர நற்பணிகள் என்ன?

ணவரால் புறக்கணிக்கப் படும் மனைவியரும் அவர் குழந்தைகளும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் துன்பப் படுவதைக் கண்டு, குழந்தைகளுக்கான உரிமை (West Bengal Commission for Protection of Child Rights)  அமைப்புடன் இணைந்து குழந்தைகள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்கிறோம்.

பெண்கள் சுய வேலை வாய்ப்பு, முன்னேற்றம் என்று பல வகைகளிலும் ஸ்வப்னபூரண் மூலம் உதவுகிறோம். இங்கே இருக்கும் குடும்பங்களோடு இணைந்து சமுதாய முன்னேற்றம் காண பெருமளவில்  பாடுபடுகிறோம்.

எங்களது ஓயாத நற்பணிகளைப் பார்த்து விட்டு தாமாகவே சில சமூக ஆர்வலர்கள் உதவிக்கு முன் வந்தார்கள். அவர்கள் உதவியுடன் பல திட்டங்கள் இந்த கிராமங்களில் செயல்படுத்தப் பட்டு  வருகின்றன. இடிந்த வீடுகளை சரி செய்வது, காய்கறித் தோட்டம் போடுதல், மீன் வளர்ப்பு,குளங்களை தூர் வாருதல் போன்றவை இதில் அடங்கும்.

பொருளாதார ஆசிரியாராக இருந்த நீங்கள், சமூக சேவை ஆர்வத்தை எப்படி வளர்த்துக்  கொண்டீர்கள்? 

மூக சேவை பற்றி எனக்கு முதன் முறையாக ஒரு விழிப்புணர்வைத் தந்தது பெங்களூருவில் நடந்த ஜிஏபி (Global Action on Poverty-GAP)  மீட்டிங். அதற்கு என்னை அழைத்திருந்தார்கள். திட்டங்களை தலைமை ஏற்று நடத்திச் செல்லுதல், பலவித சமூக அமைப்புக்கள், கோட்பாடுகள் உட்பிரிவுகள் எல்லாம் பற்றி தெரிந்து கொண்டேன்.

ஸ்வப்னோபூரண் மேலும் தம் நற்பணிகளைத் தொடரட்டும்…
மங்கையர் மலர் வாழ்த்துகிறது.

ங்கையர் மலருக்கு நன்றி. ஸ்வப்னோபூரண் வளர்ச்சியைக் கண்டு வியந்து போகும் பல கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும்   இந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்றதை செய்ய விரும்பி வருகிறார்கள்.

வாழ்வாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருந்த பலருக்கும் ஸ்வப்னோபூரண் ஒரு தன்னம்பிக்கையையும் உழைக்கும் முயற்சிகளையும் நிச்சயமாக தந்திருக்கிறது.

இந்த பள்ளிகளைப் பற்றி ஒருமணி நேர டாக்குமென்டரி, சர்வதேச சேனலான டிராவல் எக்ஸ்ப்ரஸில் ஒளிபரப்பாகியிருக்கிறது. அதனை முடிந்தால் அனைவரும் காண விழைகிறேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com