ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல் சிரிக்கிறது குழந்தை! ஆரம்பித்துவிட்டது நீச்சல் பயிற்சி. எட்டு வயசுல ஸ்டேட் சாம்பியன் தங்கப்பதக்கம்!

அப்புறம் பந்து – மட்டையில் ஆர்வம் பிறக்கவே, அதிலும் தீவிரப் பயிற்சி. ப்ரீத்தி ஸ்ரீநிவாஸன், தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் குழுவின் (19 வயசுக்குக் கீழ்) கேப்டனாக ஜொலிக்கிறார். படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்ததால், ப்ரீத்திக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற முன்று பல்கைக் கழகங்களில் எம்.பி.ஏ. படிக்க வாய்ப்பு வருகிறது. அதையெல்லாம் உதறிவிட்டு, கிரிக்கெட்டில் சாதிக்கும் உத்வேகத்துடன் சென்னை வருகிறார் ப்ரீத்தி. விதியும் பின்னாடியே வந்திருக்குமோ?

சக மாணவிகளுடன் பாண்டிச்சேரிக்குச் சுற்றுலா போக நேர்கிறது. அங்கே கடலில் விளையாடும்போது, சறுக்கி விழுகிறார் ப்ரீத்தி. விழுந்தவர் விழுந்தவரே! பின்னர் எழுந்திருக்கவேயில்லை. எசகுபிசகாக என்ன ஆனதோ, கழுத்து எலும்பு உடைந்து, முதுகுத் தண்டுவட நரம்பு செயல் இழந்து போய்விட்டது. சூட்டிகையான, சுறுசுறுப்பான, ஸ்போர்ட்ஸில் ஆர்வம் உள்ள பதினெட்டே வயதுடைய பெண்ணுக்கு, கழுத்துக்குக் கீழே அசைவில்லை. விரிந்த புகழ் வானில் பறக்க வேண்டிய ப்ரீத்திக்கு வீல்சேரே கதி ஆகிவிட்டது. காலக் கொடுமை!

அந்தக் காலக்கட்டத்தில் ப்ரீத்திக்கு தனது வீட்டை விட்டு வெளியே வரக் கூட பிடிக்காதாம். பின்னே, கண்ணில் பட்டவர்கள் எல்லாம் 'அய்யோ பாவம்' பார்வையால் துளைத்தால்?

"ஒரு நிமிஷ விபத்தால் என்னுள் இருந்த சாம்பியன் கனவு சிதைந்து விட்டதே?" என்று ப்ரீத்தி மனம் உடையும் போதெல்லாம், அவளது பெற்றோர்கள் "இட்ஸ் ஒகே செல்லம்!" என்று அவளை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

"வொய் மீ?" என்று நினைக்காமல், "வொய் நாட் மீ?" என்று நினைக்கும்படி தூண்டியிருக்கிறார்கள். வாயால் தூரிகையைக் கவ்வியபடி, ஓவியங்களைத் தீட்டி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் ப்ரீத்தி… அந்த சந்தோஷமும் சில காலம்தான். அவருடைய தந்தை திடீரென மாரடைப்பால் இறந்து போகவே… மீண்டும் கனவுகள், கனவுகளாகவே!

தாயார் லட்சுமி, ஊக்கம் தருகிறார். 'Speech Activated Software! மூலம் எழுத்தாளர் ஆகிறார் ப்ரீத்தி. இடையே அம்மாவும் நோய்வாய்ப்பட, ப்ரீத்தியை அடுத்தக் கட்டத்துக்கு தயாராக்குகிறார் அம்மா.

ப்ரீத்தியைப் போலவே முதுகுத் தண்டுவடப் பிரச்னையால் நடமாட முடியாமல் முடங்கிக் கிடப்பவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை ஆரம்பிக்க யோசனை தருகிறார் ப்ரித்தியின் அம்மா.

"அம்மா… உனக்கென்ன பைத்தியமா? என்னால டீ.வியில ஒரு சேனலைக் கூட மாத்த முடியலை: என்னால உலகத்தை மாத்த முடியுமா?" என்று ஒரே அவநம்பிக்கை.

"நீ விரும்பும் மாற்றத்தை ஏன் வெளியே யாரோ ஏற்படுத்தணும்னு நினைக்கிறே? யூ ஆர் தி சேஞ்ச்! நீயே ஆரம்பி!" என்று அம்மா தந்த ஊக்கத்தால் திருவண்ணாமலையில் 'SOUL FREE' என்ற ஆலோசனை அமைப்பை நடத்தி வருகிறார் ப்ரீத்தி ஸ்ரீநிவாசன்.

"நல்ல மனுஷங்களுக்கும் எத்தனையோ கெட்ட விஷயங்கள் நடக்கின்றன. குறிப்பாக விபத்துகள். எனவே ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்கின் மீது போடாமல், தலையில் மாட்டுங்கள். முதுகுத் தண்டு வடப் பிரச்னைகளால் முடங்கிப் போனவர்கள் அதிலிருந்து மீள வழி தேடுங்கள். நம்மாலும் பிறருக்கு உதவியாக இருக்கவும்; ஓர் இன்ஸ்பிரேஷனாக வாழவும் முடியும்!" என்கிறார். 'கல்பனா சாவ்லா விருது' பெற்ற ப்ரீத்தி நம்பிக்கையுடன்!

உடைந்த மேகம் மழையாகிறது

உடைந்த மண் வயலாகிறது.

உடைந்த பயிர் தானியம் ஆகிறது.

உடைந்த விதை பயிராகிறது.

னவே, நீங்கள் எப்போதாவது, எதற்காகவாவது உடைய நேர்ந்தால் கடவுள் உங்களை வேறு ஒரு நல்ல விஷயத்துக்காகத் தயார் செய்கிறார் என்று உணருங்கள். உற்சாகம் பிறக்கும் ப்ரீத்தி ஸ்ரீநிவாசனைப் போல!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com