0,00 INR

No products in the cart.

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு

ரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான விஷயம்.

சோமாசிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.  பெரிய புராணத்தில் இவரைப்பற்றி சொல்லும்போது இவர் யாக கர்மாவின் மூலமே பரமேஸ்வரனை ப்ரீதி செய்து விடலாம் என்னும் அபிப்ராயத்தை உடையவரென்று சொல்லப்பட்டிருக்கிறது. யாகத்தின் மூலம் நாம் கொடுக்கிற ஆஹுதிகள் அக்னி மூலமாக பரமசிவனை சென்றடைகிறது என்று ஒரு நம்பிக்கை  இருந்தாலும் அந்த ஈஸ்வரனே சாட்சாத் நேரில் பிரத்யட்சமாக வந்து அந்த ஆஹூதியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்னும் தாபம் சோமாசிமாறருக்கு ஏற்பட ஆரம்பித்தது.  ஈஸ்வரனை தான் செய்யும் யாகத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால் அந்த காரியம் யார் மூலம் சாத்தியப்படும் என்று யோசிக்க ஆரம்பித்தார். ஈசனின் பரம பக்தராக மட்டுமல்லாமல் அவரோடு நெருங்கிய நட்போடும் இருக்கும் ஒருவரைத் தேடியபோது அவர் சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவருக்கும் பரமசிவனுக்கும் இருக்கும் நெருங்கிய நட்பைப் பற்றி தெரியவர சோமாசிமாறருக்கு தன் கோரிக்கையை ஈசனிடம் கொண்டு செல்ல சரியான நபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான் என்று புரிந்து விட்டது.

சுந்தரரைத் தேடிச் சென்று எடுத்த எடுப்பில் தன் விருப்பத்தைச் சொல்ல அஞ்சிய சோமாசிமாறர் அவரை எப்படி அணுகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரர் இருமலால் அவதிப்படுவதாக கேள்வியுற்றார்.  உடனே தூதுவளைக் கீரையை பறித்துக் கொண்டு வந்து சுந்தரர் வீட்டருகே இருக்கும் இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும் சமர்ப்பித்தார். சுந்தரரின் மனைவி  பரவை நாச்சியரும் தினமும் அந்தக் கீரையை சமைத்துப் போட சுந்தரரின் இருமல் நன்றாகக் குறைந்தது.  அப்போது திடீரென்று ஒரு நாள் கீரை வரவில்லை.  கீரையை கொடுக்கும் நபரிடம் விசாரித்தபோது அவருக்கு வேறு ஒருவர் தினமும் கீரையைக் கொடுத்து சுந்தரர் வீட்டில் சேர்ப்பிக்க சொல்லியிருந்தார் என்று தெரிந்தது.  தினமும் சுவையான கீரையை சாப்பிட்ட சுந்தரருக்கு கீரை சாப்பாட்டில் இல்லாதது ஒரு குறையாக இருந்தது.  “இந்தக் கீரையை நமக்காக தினமும் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று விசாரி!” என்று பரவை நாச்சியாரிடம் கூறினார். மறுநாள் கீரை வந்தது.  கீரையைக் கொண்டு வந்தவரைக் கையோடு பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சுந்தரர் முன் நிறுத்த்தினார்கள்.

“திருச்சிற்றம்பலம்! இது யார்? ” .

“அடியேன், மாறன்!” என்று அடக்கமாகச் சொல்லி நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து நமஸ்கரித்தார் சோமாசிமாறன்.

“என்னது? தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடும் சோமாசிமாறரா?” சுந்தரர் ஆச்சரியமாகக் கேட்டார்.”

சுந்தரர் மீது மிக்க பாசம் கொண்டதினால் அவர் நட்பைப் பெற விரும்பி அதற்கான நேரத்திற்குத் தான் காத்துக் கொண்டிருந்ததையும்  இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளமல் தூதுவளைக் கீரையை கொடுத்து அனுப்பியதையும் சோமாசி மாறர் தெரிவித்தார்.

“சிவ, சிவ! நண்பரே! என்னால் ஆகக் கூடியது ஏதேனும் இருந்தால் கேளும்.  அவனருளால் கூட்டித் தருகிறேன்”

இந்த கணத்திற்காகத் தானே காத்துக் கொண்டிருந்தார் சோமாசிமாறர், “அடியேன் செய்யும் யாகத்திற்கு அந்த ஈசனே நேரில் வந்து அவிர்ப்பாகம் பெற்றுச் செல்ல அருள வேண்டும்.”

“அப்படியே ஆகட்டும்! கண்டிப்பாக ஈசன் நேரில் வருவார்.  தாங்கள் போய் யாகத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்! ஆனால் ஒன்று.  அவர் எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் சுந்தரர்.

ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறர் நடத்தும் யாகத்திற்கு ஈசனே நேரில் வரப் போகிறாராம்’ என்று. வேத விற்பன்னர்கள், முனிவர்கள் ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று  எல்லோரும் வந்து பங்கேற்க, யாகம் விமரிசையாக நடைபெற்றது.

திடீரென்று யாக சாலை வாசலில் ஒரு பரபரப்பு. பறையொலியும் எக்காள முழக்கமும் கேட்டது. சோமாசிமாறரின் மனைவி சுசீலா அம்மையார் மாறரிடம் ஓடி வந்து கூறினார். “யாகசாலை வாசலில் இறந்த கன்றை சுமந்து கொண்டு நாலு நாய்களுடன் வெட்டியான் ஒருவர் வந்து நிற்கிறார். அவர் மனைவி கள்குடத்தை தலையில் சுமந்து பக்கத்தில் நிற்கிறாள், அவள் அருகிலே இரு பிள்ளைகள்.” வேத பண்டிதர்கள் ‘அந்த இடத்தின் சுத்தம் பறிபோனதாக’ அஞ்சி அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தார்கள்.

மாறருக்கு சுந்தரர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஈசன் எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார்’ என்பது. சட்டென்று வாசலுக்கு ஓடி அங்கே வெட்டியான் உருவில் நின்று கொண்டிருந்தவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தன் கையாலேயே அவிர்ப்பாகமும் அளித்தார். இப்போது அங்கே நின்று கொண்டிருந்தவர் அம்மையப்பராக, பிள்ளையார், முருகன் உடனிருக்க சோமாசிமாறருக்குக் காட்சியளித்தார்.

இவ்வாறு தூதுவளை கீரை மூலம் சுந்தரருக்குத் தூது விட்டு சோமாசிமாறருக்கு சாட்சாத் பரமேஸ்வரன்  நேரிலேயே யாகத்துக்கு வர,  தன் கையாலேயே,  தான் செய்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் கொடுக்க முடிந்தது.

தே போல தூதுவளை கீரையை தூது கொண்டு போன சம்பவம் வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையிலும் நடைபெற்றது.  சோழ நாட்டின் மன்னரான ஆளவந்தார் அரச விவகாரங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு ஆன்மிக முன்னேற்றம் காண முடியாமல் இருந்தார். மன்னரின் பாட்டனாரான நாதமுனி சுவாமிகளின் சிஷ்யரான ஆச்சாரியர் மணக்கால் நம்பிக்கு,  ஆளவந்தார் அவர் முன்னோர்கள் போல் ஆன்மிக வழி செல்லாமல் ராஜபோகத்தில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே என்று மிகவும் மன வருத்தம். அவரை எப்பாடுபட்டாவது மாற்ற விரும்பினார்.  ஆனால் மன்னரை சந்திக்க சாதாரண மனிதரான அவருக்கு நிறைய தடைகள்.

அவர் மிகவும் யோசித்து ஒரு யுக்தியை கையாண்டார்.  மன்னருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு, மன்னரின் சமையலறைக்கு தினமும் தூதுவளை கீரையை பறித்துக் கொண்டு போய் கொடுத்தார்.  கீரை மிகவும் சுவையாக இருந்ததால் மன்னர் அதை மிகவும் விரும்பி உண்டார்.  ஆறு மாதங்கள் தொடர்ந்து கீரை கொடுப்பது தொடர்ந்தது.  பிறகு திடீரென்று மணக்கால் நம்பி கீரை கொடுப்பதை நிறுத்தி விட்டார்.  இப்போதெல்லாம் சமையலில் தூதுவளை கீரை இல்லையே என்று மன்னர் கேட்க,  சமையலறையில் பணிபுரிபவர் ஆறு மாதங்களாக ஒரு முதிய வைஷ்ணவர் கீரையைக் கொண்டு வந்து கொடுத்தார்.  ஆனால் கொஞ்ச நாட்களாக அவரைக் காணவில்லை என்று சொன்னார்.

மன்னர் தன் படை வீரர்களை எல்லாம் அனுப்பி அந்த பெரியவர் எங்கேயி ருந்தாலும் கண்டு பிடித்து கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்.  அவ்வாறாக கூட்டிக் கொண்டு வரப்பட்ட மணக்கால் நம்பி அவரிடம் தன்னை அவர் பாட்டனார் நாதமுனிசுவாமிகளின் சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ம்பிகளிடம் உரையாடிய ஆளவந்தார் அவர் மேதாவிலாசத்தால் மிகவும் கவரப்பட்டு அவர் தினந்தோறும் தன்னை சந்தித்து உரையாடலாம் என்று அனுமதி கொடுத்தார்.  நம்பிகள் நாள்தோறும் தூதுவளையைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மன்னரிடம் நல் வார்த்தைகள் கூறி உரையாடு வார்.  இப்படியாக பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் உபதேசித்தார்.  கீதையைக் கேட்கக் கேட்க, ஆளவந்தாரின் மனம் மாற ஆரம்பித்தது. மன்னராக தான் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது என்று உணர்ந்தார். பெருமாளை அடைய உபாயம் தனக்கு சொல்லுமாறு நம்பிகளைக் கேட்டுக் கொண்டார்.  ‘அவனையடைய உபாயம் அவன் மட்டுமே’ என்றார் மணக்கால் நம்பி.

மன மகிழ்ந்து போன ஆளவந்தார் இத்தகைய நல் உபதேசங்கள் செய்த நம்பிக்கு ஏதாவது சன்மானம்  கொடுக்க விரும்பினார்.  ஆனால் மணக்கால் நம்பியோ தமக்கு எதுவும்  வேண்டாமென்று கூறிவிட்டு, ஆனால் ஆளவந் தாரின் பாட்டனார் விட்டுச் சென்ற விலை மதிக்க முடியாக குலதனம் தன்னிடம் இருப்பதாகவும் அதை ஆளவந்தாருக்கு கொடுக்கவே தூதுவளை கொண்டு தூது வந்தாகவும் கூறினார்.

வியந்து போன ஆளவந்தார் உடனே அந்த குலதனத்தைக் காண விருப்பப்பட, மணக்கால் நம்பி அவரை அழைத்துக் கொண்டு  ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு வந்தார்.  நேரே பெருமாள் சன்னதி முன் ஆளவந்தாரை நிறுத்தினார்.  “தங்கள் பாட்டனார் நாதமுனிகள் தேடி வைத்த குலதனம் இதுவே” என்று பெருமாளை சுட்டிக் காட்டினார்.

அரங்கனின் திருமுகத்தில் புன்முறுவல். ‘எம்மைப் பார்க்க இத்தனை காலமாச்சோ உமக்கு’ என்பது போல ஒரு கேலியான பாவம். கண்களில் நீர் மல்க அரங்கனின்  திருமேனி அழகில் லயித்து அரச போகத்தை விட்டார்.  பெருமாளும் அளவற்ற அன்போடு ஆளவந்தாரை ஆட்கொண்டார்.  ஆளவந்தாரே உடையவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜரின் மானசீக குருவும் ஆவார்.

பாட்டனார் வழியில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை கட்டிக் காக்க ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக் கொண்டு வந்த சம்பவம்   தூதுவளை கீரை தூது போனதால் அல்லவா நடைபெற்றது?

1 COMMENT

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...