0,00 INR

No products in the cart.

அப்பா வைத்த வேப்பமரம்!

சிறுகதை: அன்னக்கிளி வேலு
ஓவியம் : சேகர்

ல்ல இடி மின்னல். காலையிலிருந்தே லேசாய் தூறிக்கொண்டிருந்த மழை, மத்தியானத்திற்கு மேல் பிடிபிடியென்று பிடித்துக் கொண்டது. வெங்கடாசலம் போர்டிகோவில் சாய்வு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டு மழையை ரசித்துக் கொண்டிருந்தார்.
மரகதம் ஏற்கெனவே இரண்டு மூன்று முறை கண்டித்து விட்டாள், ‘ஈரக்காத்து உடம்புக்கு ஆகாது, உள்ளே வந்து உட்காருங்க’ என்று. ஆனாலும், அவர் கேட்டபாடாய் இல்லை. ‘ஒண்ணும் ஆகாது மரகதம், இது வைரம் பாய்ஞ்ச கட்டை. நீ கவலைபடாம போய் சூடா எதுனாச்சும் பலகாரம் செஞ்சு கொண்டு வா’ என்றார். ரொம்ப நாளைக்கப்புறம் சோவென்று பெய்யும் மழையை அனுபவிக்க ஆசை அவருக்கு.

வீட்டுக்கு முன்புறம் உள்ள மரங்கள், செடி கொடிகள் எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டார். பெரிய காம்பவுண்டுக்குள் இடதுபுறமாய் தரையைத் தொட்டுக்கொண்டு பழங்களுடன் ஆடும் கொய்யா மரம், காகிதப் பூச்செடி, ஒரு தென்னை மரம், ஒரு அசோக மரம், வலதுபுறம் ஒரு வேப்பமரம், ஒரு தென்னை மரம், ஒரு அசோக மரம், சீத்தாப்பழ மரம், முருங்கை மரம் இவற்றோடு நிறைய காய்கறிச் செடிகள், பூச்செடிகள்.

வேப்பமரம் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக அவரது அப்பா வைத்தது. மற்ற மரங்கள், காய்கறி செடிகளெல்லாம் பிற்காலத்தில் இவர் வைத்தது. வீட்டுக்குத் தேவையான அளவுக்கு தேங்காயும் காய்கறிகளும் பூக்களும் கிடைத்து விடுகின்றன.

அப்போது இது வெறும் சீமை ஓட்டு வீடாகத்தான் இருந்தது. காம்பவுண்டெல்லாம் இல்லை. வீட்டைச் சுற்றிலும் உயர வளர்ந்த காட்டுக்கொட்டைச் செடிகள்தான் வேலியாய் நின்றன. அப்பா அவற்றை சீராக வெட்டிவிட்டுக் கொண்டே இருப்பார். அவற்றை மூங்கில் பட்டைகளைக் கொண்டு இணைத்துக் கட்டி வைத்திருந்தார். அதனால் ஆடு, மாடுகள் எதுவும் உள்ளே வர முடியாது.

வெங்கடாசலம் தலையெடுத்த பிறகு, ஓட்டு வீட்டை இடித்து விட்டு, பில்லர்கள் வைத்து தாரிசு கட்டடமாக மாற்றி விட்டார். கனத்த பவுண்டேஷனும், பில்லர் பிடிமானமும் கொண்ட கட்டடம் அது. அப்போதெல்லாம் வீட்டுக்குப் பின்புறம் வெளியில்தான் குளிப்பார்கள். இப்போது, அட்டாச்சுடு பாத்ரூமெல்லாம் போட்டாகி விட்டது. வீட்டுக்குள்ளேயே எல்லாமும்.

மரகதம் தட்டில் சுடச்சுட பலகாரத்தைக் கொண்டு வந்து வைத்தாள். மொறுமொறுவென்று இருந்தது. ருசித்து சாப்பிட்டுக்கொண்டே கொட்டும் மழையை ரசித்துக் கொண்டிருந்தார் வெங்கடாசலம். அவருக்கு ஞாபகம் இருக்கிறது, சிறு குழந்தைகளாய் இருக்கும்போது மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கூடம் விட்டு வருவார்கள். வரும்போதே இந்த மழைக்கு அம்மா பனியாரம் சுட்டுக் கொடுத்தால் எவ்வளவு இதமாக இருக்கும் என்று நினைத்தபடியே வருவார்கள். சொல்லி வைத்தாற்போல அம்மா குழிப்பனியாரம் செய்து தட்டில் அடுக்கி வைத்திருப்பாள்.

இன்னொரு ஞாபகமும் இருக்கிறது, சிறு குழந்தைகளாய் இருக்கும்போது தூறல் லேசாய் ஆரம்பிக்கும்போதே அவரும் தங்கை சுமித்ராவும் கல் உப்பை அள்ளிக்கொண்டு வந்து வாசலில் இறைப்பார்கள். அப்படிப் போட்டால் மழை நான்றாகப் பிடித்துக்கொள்ளும் என்று ஒரு நம்பிக்கை.

அப்போதெல்லாம் வெறும் மண் வாசல்தான் இருக்கும். அவரது அம்மா சாணத்தைத் தெளித்து தெளித்து வாசலை பளபளவென்று வைத்திருப்பார்கள். நல்ல நாள் பெருநாளுக்கு வாசலை அடைத்துக்கொண்டு கோலம் போட்டு அமர்க்களப்படுத்துவார்கள். கம்பு, சோளம், நெல் எல்லாம் இங்கேதான் அடித்து உதிர்த்து காய வைப்பார்கள்.

இப்போதோ கான்க்ரீட் வாசல் வந்துவிட்டது.
அப்பா வேப்பமரத்துக்கடியில்தான் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பார். கட்டிலைக் கூட கட்டைகள், கயிறுகளைக்கொண்டு தானே தயார் செய்து விடுவார். அப்பாவுக்கு ஒன்று அம்மாவுக்கு ஒன்று, எக்ஸ்ட்ராவாக இன்னொன்று, யாராவது விருந்தாளிகள் வந்து விட்டால் அவர்களுக்காக அது. ஏழு எட்டு பேர் உட்கார்ந்தால் கூட ஒன்றும் ஆகாது. பக்கத்து வீடுகளில் ஏதாவது விசேஷம் என்றால் கட்டில்கள் இங்கிருந்துதான் போகும்.

பகலில் வேப்பமரத்துக்கடியில்தான் மல்லாந்து படுத்துத் தூங்குவார் அவரது அப்பா. தலையணை எல்லாம் கிடையாது, துண்டை விரித்துப் போட்டுக்கொண்டால், நித்ரா தேவி தானாக வந்து விடுவாள்.

முன்பு வேப்பமரத்துக்கடியில் ஒரு திண்ணை இருக்கும். மண் திண்ணைதான். யாராவது வெளியாட்கள் வந்தால் அந்தத் திண்ணையில்தான் உட்காருவார்கள். அம்மா நீராகாரம், மோர் எல்லாம் கொடுப்பார்கள். ஜில்லென்ற காற்று, வெயிலுக்கு இதமாய் நிழல். கால்களை தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார தாராளமான இடம். கூடவே பேச்சுத் துணைக்கு பக்கத்தில் கட்டிலில் அப்பா. வேறென்ன வேண்டும்?!

ஒரு தடவை பாம்பு வந்து திண்ணை சந்துக்குள் புகுந்து விட்டது. அப்போது இடித்துத் தள்ளிய திண்ணைதான். திருப்பி கட்டவேயில்லை.
கொஞ்ச நேரத்தில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அத்திக்கட்டி ஆலங்கட்டிகளாகவும் விழத் தொடங்கியது. போர்டிகோவிற்கு உள்ளேயும் கட்டிகள் வந்து விழுந்தன. மரங்கள் பேயாட்டம் ஆடின.
நன்கு இருள் சூழ்ந்து விட்டது. நான்கு தேங்காய்கள் வாசலில் விழுந்து தெறித்து ஓடின. காகிதப் பூக்கள் கொட்டின. முருங்கை மரத்திலிருந்து சடசடவென்று சத்தம் கேட்டது. ஏதோ ஒரு கிளை முறிந்திருக்க வேண்டும்.

‘நன்றாய் காய்த்து கொத்துக் கொத்தாய் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்போதா இப்படி காற்றும் மழையும் அடிக்க வேண்டும்?’ என்று கவலைப்பட்டார் வெங்கடாசலம்.
சந்தேகம் வந்து கொஞ்சம் எட்டிப் பார்த்தார். முருங்கை மரம்தான் முறிந்து வாசலுக்குள் விழுந்து கிடந்தது. பெரிய கிளை வேறு. முன்பெல்லாம் வேப்பமரத்துக்கடியில்தான் காரை நிறுத்தி வைப்பார் வெங்கடாசலம். ஒரு தடவை தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் விழுந்து முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிலிருந்து காரை அங்கே நிறுத்துவதே இல்லை. போர்ட்டிகோவுக்குள் காரை நிறுத்தி விடுகிறார்.

மரகதம் கூப்பிட்டாள், ‘கார்த்திக் தோசை சாப்பிடுகிறான்… நீங்களும் வாங்களேன் சூடா சாப்பிடலாம்’ என்று. சாயங்காலத்திலிருந்தே இருட்டிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. மத்தியானம் சாப்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்தவர்தான். திடீரென்று மரகதம் சாப்பிடக் கூப்பிடவும்தான் மணியைப் பார்த்தார். மணி எட்டு. ‘சரி… இரண்டு தோசை போடு, வந்து விடுகிறேன்’ என்றபடி எழுந்து போனார்.

அவர் எழுந்து சாப்பிட போன சமயம் பார்த்து, சாய்வு நாற்காலியை மடக்கி உள்ளே எடுத்துப் போட்டுவிட்டாள் மரகதம். அப்பொழுதுதான் இனி மேலும் தொடர்ந்து இந்த சிலுசிலுப்பில் உட்கார மாட்டார் என்ற எண்ணம் அவளுக்கு. ஒருவேளை சளி பிடித்து விட்டால் அவளல்லவா ஆவி பிடித்துவிடவும், பச்சிலை ரசம் வைத்துக் கொடுக்கவும் வேண்டும்.

சாப்பிட்டுக்கொண்டே முருங்கை மரம் முறிந்து விழுந்து விட்டதைப் பற்றி மரகதத்திடம் சொன்னார். ‘எனக்கு முன்னமேயே அது முறியுமென்று தெரியும்’ என்றாள். கொஞ்ச நேரத்தில் தூங்கப் போய்விட்டார் அவர்.

மறுநாள் காலை விடிந்தும் விடியாததுமாய் வெளியே ஒரே சத்தம். மணியைப் பார்த்தார் ஆறரை. ‘என்ன மரகதம்… வெளியே ஒரே சத்தமா கெடக்குது?’ என்று குரல் கொடுத்தார். பதில் இல்லை. பக்கத்து வீட்டுக்காரன் குரல் போலவே இருந்தது. ‘ராத்திரி முறிந்து விழுந்த முருங்கை மரம் அவர்கள் வீட்டுப் பக்கமும் விழுந்து விட்டதோ’ என்று யோசித்தபடியே வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. வேப்பமரம் அப்படியே காம்பவுண்டு மேல் சாய்ந்து கிடந்தது.

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்று விட்டார். இன்னும் கொஞ்சம் வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது, வேப்பமரம் சாய்ந்ததோடில்லாமல் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருந்த காரின் மேலும் ஒரு பெரிய கிளை விழுந்து கிடந்தது. ராமலிங்கத்தின் கார்தான். நிறைய பேர் கூடியிருந்தார்கள். ராமலிங்கம், ‘உங்க வீட்டு மரம் விழுந்து, என் காரே போச்சு, இதை யார் சரி பண்ணி குடுப்பா’ என்று எகிறிக் கொண்டிருந்தான்.

அப்பா வைத்த மரமே போச்சு என்று ஓடி வந்தால், என் கார் போச்சே என்று இவன் ஓலமிடுகிறானே என்று திட்டமுடியாமல், ‘நான் என்ன மரத்தை வெட்டி உன் கார் மேலேயா சாய்ச்சேன். இடி மின்னல், புயல் காத்துனு வந்தா மரம் செடி கொடிகள் சாயத்தான் செய்யும். நீ அல்லவா முன்னெச்சரிக்கையா காரை வேற இடம் பாத்து நிறுத்தியிருக்கணும்’ என்று சத்தம் போட்டார் வெங்கடாசலம்.

ராமலிங்கத்தின் மனைவியும் அவனுடன் சேர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். பதிலுக்கு மரகதமும் சத்தம் போட்டாள்.

கார்த்திக் குறுக்கே வந்து, ‘சார்… உங்க காருக்கு இன்ஸூரன்ஸ் இருக்குமில்லே, போய் கிளைம் பண்ணிக்கங்க சார். எங்ககிட்டே சண்டைக்கு வராதீங்க‘ என்று விட்டு அம்மாவையும் அப்பாவையும் இழுத்து வீட்டுக்குள் போகச் சொல்லி விட்டான்.

வெங்ககடாசலத்திற்கு மனதே கேட்கவில்லை. ஒரு கிளை ஒடிந்து விழுந்திருந்தால் கூட பரவாயில்லை, மரமே அல்லவா சாய்ந்திருக்கிறது. ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதால் வேர் பிடிமானம் குறைந்து போனதோ, என்னவோ என்று கவலையுற்றார்.

அப்பா வைத்த மரம் ஆயிற்றே. அதை பார்க்கிறபோதெல்லாம் அப்பாவைப் பார்க்கிற மாதிரித்தானே தெரியும். மனது ஆறவே இல்லை அவருக்கு. இனி, அதை அப்படியே விட்டு வைத்துப் பலன் ஏதுமில்லை. வெட்டிப் போடத்தான் வேண்டும். ஒரு தடவை ஒரு கிளை உடைந்து விழுந்தபோதே, ஏதோ தனது கையே உடைந்தது போல துடித்துப்போன வெங்கடாசலத்திற்கு, இப்போது மரமே விழுந்துபோக, அழுகையே வந்துவிடும் போல இருந்தது. அவர் அப்படியே நொடிந்துப் போய் உட்கார்ந்திருந்த நிலையைப் பார்த்துவிட்டு, “எப்படியும் முப்பது வருஷமாவது ஆகியிருக்கும்ங்க… அது விழத்தான் செய்யும். விடுங்க, அதுக்காக கப்பல் சாய்ஞ்ச மாதிரி இப்படி கலங்கிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறீங்களே. ஆளுங்களை விட்டு மரத்தை வெட்டற வேலையைப் போய்ப் பாருங்க” என்றாள்.

கூடவே கார்த்திக் கூட மரத்தை எடுத்து பலகை போட்டு பத்திரமா எடுத்து வைக்கணும்கிறான். மாடில ரூம் எதுவும் போட்டா கதவு, ஜன்னலுக்கு ஆகுமேங்கறான்” என்றாள்.

யாருக்கோ போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தவர், மரகதத்தை கூப்பிட்டார். ‘‘ஏண்டி, எங்க அப்பா வெச்ச மரம்டி. அதை வெட்டறதை என்னால பக்கத்துல இருந்து பாக்க முடியாது. சுப்பிரமணி ரெண்டு ஆளுகளை கூட்டிக்கிட்டு மத்தியானமா வாரேன்னிருக்கான். நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கங்க. நான் கோயம்புத்தூர் வரை போயிட்டு சாயங்காலமா வந்துடறேன். அதுக்குள்ளே அனேகமா எல்லாத்தையும் அப்புறப்படுத்திடுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியும் விட்டார்.

கொஞ்ச நேரம் சத்தம் போட்டுப் பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரன் போயே விட்டான். கொஞ்ச நேரத்தில் மரம் அறுத்து அப்புறப்படுத்த ஆட்கள் வந்து விட்டார்கள். பெரிய பெரிய கட்டைகளை எடுத்து ஒதுக்கி வைத்துக் கொண்டான் கார்த்திக். மீதம் எல்லாவற்றையும் லாரியில் போட்டுக்கொண்டு போய் விட்டனர் மரம் வெட்டியவர்கள்.

மாட்டுப் பொங்கல் வைக்கும்போதெல்லாம் கரும்புகளை இரண்டு பக்கமும் நிறுத்தி மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ, கூலைப்பூ தோரணம் தொங்கவிட்டு அந்த வேப்ப மரம் முழுதும் சீரியல் லைட் எரியும். பார்க்கவே ஜகஜோதியாய் இருக்கும்.

வேப்ப மரம் சாய்ந்து போனதைப் பார்த்து மனதொடிந்து போய் மரம் வெட்டுவதை பக்கத்தில் இருந்து பார்க்கக் கூட தைரியமில்லாமல் அப்பா கிளம்பிப் போய் விட்டார் என்று நினைத்தபோது கார்த்திக்கிற்கே ஒரு மாதிரியாய்த்தான் இருந்தது. ‘இனி, எங்கே சீரியல் லைட்டை தொங்கவிடுவாரோ அப்பா’ என்று நினைத்தபோது மனது கொஞ்சம் கனக்கத்தான் செய்தது.

ராத்திரி பத்து மணிக்குத்தான் திரும்பினார் வெங்கடாசலம். மரம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், மரங்களை எல்லாம் அகற்றி, அந்த இடத்தையே சமதளம் ஆக்கியிருந்தார்கள். அந்த இடத்தையே சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர்.

வரும்போதே வழியில் ஒரு நர்சரியில் இருந்து வேப்பங்கன்று ஒன்றை வாங்கி வந்திருந்தார். காலையில் எழுந்ததும் முதல் வேலையாய் காலண்டரில் நல்ல நேரம் பார்த்து, ஆழக் குழி தோண்டி அந்தக் கன்றை நட்டு உயிர் தண்ணீர் ஊற்றினார். இயற்கை உரம் கொஞ்சம் போட்டார். ஆடு, மாடுகள் கடித்து விடாதபடி வேலியும் போட்டார்.

அது மரமாய் வளரும், அடியில் ஒரு திண்ணை கட்டுவார்கள். வருவோர் போவோர் அதன் நிழலில் வந்து இளைப்பாறுவார்கள். மரகதம் எல்லோருக்கும் மோரும் நீராகாரமும் கொடுத்து உபசரிப்பாள். அப்புறம் கார்த்திக் சொல்லிக்கொண்டிருப்பான், ‘இது எங்க அப்பா வைத்த வேப்பமரம்’ என்று.
(முற்றும்)

3 COMMENTS

  1. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப் பாே ம் என்ற சிந்தனையைத் தட்டி விட்டது அன்னக்கிளி வே லுவின் “அப்பா வைத்த வே ப்பமரம் ” கதை.வாழ்த்துகள்.!”
    நன்றியுடன்,
    து.சேரன்,
    ஆலங்குளம்.

  2. அப்பா வைத்த வேப்ப மரம் நன்றாக இருந்தது சிறுகதை .பாராட்டுக்கள் அன்னக்கிளி அவர்களுக்கு.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

  பிரசாதம்!

கதை:  வி.கே.லக்ஷ்மிநாராயணன் ஓவியம்: லலிதா மாமனாரின் திவஸம் முடிந்தது.  அவர் படம் முன்னால் படையலுக்காக வைத்திருந்த பட்சணங்களில் ஒவ்வொன்றாக எடுத்து இரண்டு தட்டுகளில் வைத்து,  தன் கணவன் ஜெகனிடமும்,  மகன் கிரியிடமும்நீட்டினாள் கமலா. தட்டைப் பெற்றுக்கொண்ட கிரி...

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்: பிள்ளை கதை: ச. மணிவண்ணன்  வாடகை ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். "சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...