சுஜாதாவின் ‘எப்போதும் பெண்’

சுஜாதாவின் ‘எப்போதும் பெண்’
Published on
-மஞ்சுளா சுவாமிநாதன்
ஓவியம்: கல்பனா

சுஜாதா அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புனைவு கதைகள் எழுதுவதில் வித்தகர் என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால், அவர் எழுதிய 'எப்போதும் பெண்' என்ற புத்தகத்தை நூலகத்தில் பார்த்தபோது எனக்குள் ஒரு ஆசை, 'அப்படி என்னதான் எழுதியிருப்பார்?' படித்துப் பார்க்கவேண்டுமென்று.

 இந்நூல், 1982 -83 இல் நமது 'மங்கையர் மலர்' பத்திரிகையில் தொடராக வந்தது. சுஜாதாவின் முன்னுரையிலிருந்து சில வரிகள் – இந்தத் தொடரை நீங்கள் எளிதில் வகைப்படுத்த முடியாது. இதை
ஒரு விதத்தில் பார்த்தால் கட்டுரை போல் இருக்கும். அதே சமயம் ஒரு கதையும் தென்படும். கொஞ்சம் பிலாஸபி தெரியும். கொஞ்சம் கவிதைகூட தப்பித்தவறி வரும்.

மேல் கூறியவை அனைத்துமே உண்மைதான். ஒருசமயம், எனக்கு தெரிந்த ஒரு எழுத்தாளரிடம், " ஒரு பெண்ணால் பெண் கதாபாத்திரத்தை அழகாக வர்ணிக்க முடியும். ஆனால் ஒரு ஆணின் எண்ண ஓட்டங்களை எப்படி எழுதுவது? " என்று கேட்டேன். அதற்கு அவர் " நம்மைச் சுற்றி இருப்பவர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களின் நடை, உடை, பாவனை அனைத்தும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் . அதையே நம் கதையின் கதாபாத்திரத்தினுள் எடுத்து வர வேண்டும்,"  என்று கூறினார்.

அப்போது அவர் கூறியதை சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை, ஆனால், இந்த 'எப்போதும் பெண்' புத்தகத்தின் மூலம் சுஜாதா அதை உணர்த்திவிட்டார். ஒரு பிராக்டிகள் டெமோ என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், பெண்களை, அவர்களது சுற்றத்தாரை, அவர்களது
மனப் போராட்டங்களை அவ்வளவு அழகாக இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

பொதுவாக புத்தகங்கள் மற்றும் சினிமாக்களில், பெண்களை
ஒரு போகப்பொருளாக, ஆணிற்கு அடிபணிபவளாய், பொறுமையின் இலக்கணமாய் சித்தரித்திருப்பார்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் நிறைந்தவளே பெண் என சிறுவயதிலிருந்து நாங்கள் கற்பிக்கப்படுகிறோம்.

" ஆம்பளைங்கன்னா சும்மா நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு, கைய ஆட்டிக்கிட்டு, கம்பீரமா நடக்கணும்., பொண்ணுங்க தலையை குனிஞ்சுதான் நடக்கணும்" " நான் வெயில்ல சட்டையை அவுத்துட்டு நடப்பேன், உன்னால முடியுமா?" போன்ற சினிமா வசனங்கள் தமிழ்நாட்டில் பிரபலம். இதை பேசியவர்கள் நாம் கொண்டாடும் கதாநாயகர்களான ரஜினிகாந்தும் ,
கமல்ஹாசனும்தான்.

ஒரு பெண்ணாக என்னை நானே கேட்டுக் கொண்ட பல கேள்விகள், மற்றும் நான் வெட்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல தருணங்களை சுஜாதா அவர்கள் இக்கதையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறார்.

இப்புத்தகத்தை படித்ததால் நான் புதிதாக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால், 'நீ தனியாக இல்லை, இந்தப் பாகுபாடு
பெண் சமுதாயத்திற்கே நடக்கிறது. காலம்காலமாக நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள். பல கருத்துகள் சமுதாயத்தால் உங்கள் மேல் திணிக்கப்படுகிறது.' என்ற ஆறுதலை சுஜாதா தருகிறார்.

ஓரிடத்தில், ஆணும், பெண்ணும் சமம் என்று கூறும் கணவன் 'பனியன் சரியாக தோய்க்கவில்லை' என்று மனைவியிடம் சண்டைப் போடும் நிகழ்ச்சியை அவர் எழுதியிருந்தபோது வேதனையாக இருந்தது.

நான் பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்பு வெளியான கதையை, கருத்துகளை இன்றும் ஒரு குடும்பத் தலைவியாக என்னால் ஒப்பீடு செய்து உண்மை நிலையை, நிதர்சனத்தை உணர முடிகிறது என்றால் காலம் இன்னும் பெரிதாக மாறவில்லையோ? என்ற ஐயம் எழுகிறது.

'எப்போதும் பெண்' ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணமும் அல்ல, ஓர் ஆண் (அ) சமூகம் ஒரு பெண்ணை எப்படி நடத்தவேண்டும் (அ) நடத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் அல்ல. இருப்பினும், இருபாலரும் படிக்கக்கூடிய மற்றும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஏனெனில், அவர் எழுதிய கருத்துகள் அனைத்தும் உண்மை. இதை படித்து ஒரு ஆண்-பெண் பாகுபாடற்ற சமுதாயத்தை நோக்கி சிறிதளவேனும் நாம் சென்றால் அது இப்புத்தகத்தின் மூலம் சுஜாதா அவர்கள் கண்ட வெற்றி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com