கல்லாதது கடலளவு!

கல்லாதது கடலளவு!
Published on
மினி தொடர்-2
– நாராயணி சுப்ரமணியன்

ழ்கடலில் மனிதனையே விழுங்கக்கூடிய ஆட்கொல்லிகள் இருக்குமா?'
கடலுக்கடியில் உள்ள இருட்டு, நமக்குள் பல கற்பனைகளை விதைத்துவிடுகிறது. இருட்டைப் பார்த்து பயப்படும் மனிதன்,
தன்னைத் தாக்கும் சக்தி உள்ள பெரிய விலங்குகள் அங்கு ஒளிந்திருப்பதாக நம்புகிறான். அந்த பயமே இந்தக் கேள்வியின் அடிப்படை.

கடலில் பிரம்மாண்டமான விலங்குகள் உண்டு. 30 யானைகளின்
எடை கொண்ட நீலத்திமிங்கிலம், 40 அடி நீளம் வரை வளரக்கூடிய
அம்மிணி உளுவை (திமிங்கிலச்சுறா என்பார்களே, அந்த விலங்குதான்) போன்ற பல பேருயிர்கள் கடலுக்குள் நீந்துகின்றன என்றாலும், இதுபோன்ற பல பெருவிலங்குகள் நுண்பாசி மற்றும் நுண்விலங்குகளை வடிகட்டி
உண்ணும் பழக்கம் கொண்டவை, சாதுவானவை. 38 அடி வளரக்கூடிய
பெரிய கணவாய்களும்கூட மனிதனை ஒன்றும் செய்வதில்லை.

இது ஒரு பக்கம் என்றால், எதிர்பாராத கடல் விலங்குகளால்கூட மனிதனுக்கு ஆபத்து ஏற்படலாம். திருக்கை மீன்களின் முள்ளில் உள்ள விஷம்,
கடல் பாலூட்டி என்று தவறுதலாக நினைத்து சுறா மீன்கள் தாக்குவது,
நச்சு கொண்ட சிறு கடல் விலங்குகள் ஆகியவற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் ஒப்பீட்டளவில் மனிதனால்
கடலுக்கு உண்டாகும் பாதிப்புதான் அதிகம்.

கடலானாலும் நிலமானாலும் அறிவுரை ஒன்றுதான் – "நீங்களாக விலங்குகளைத் துன்புறுத்தாதவரை, அவற்றை அச்சுறுத்தாதவரை,
எந்த விலங்கும் நம்மை தாக்குவதில்லை!"

கடல் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?
மது வெண்ணிற சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள் உண்டு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம். அதில், சிவப்பு மற்றும் அதுசார்ந்த வண்ணங்களைக் கடல்நீர் உறிஞ்சிக்கொள்கிறது. மீதமுள்ள நீல நிறம் வெளியில் பிரதிபலிக்கப்படுவதால் கடல் நமக்கு நீல நிறத்தில் தெரிகிறது.

சில வகைப் பாசிகள் கடல்நீரைப் பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மாற்றுகின்றன. அதிகமான கழிவுநீர் மாசு உள்ள கடலோரப் பகுதியில் கடல் அழுக்கு நிறம் கொண்டதாக இருக்கிறது.

இவையெல்லாம் கடற்பரப்பில் நடக்கும் வர்ணஜாலங்கள் மட்டுமே. கடலுக்குள் போகப் போக சூரிய ஒளி ஊடுருவுவது குறையும். 200 மீட்டர் ஆழம் வரைதான் சூரிய ஒளி பயணிக்கும். ஒருகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து, ஆழ்கடல் முழு கறுப்பு நிறத்தில் இருட்டாகத்தான் இருக்கும்!

மனிதர்களுக்கு விண்வெளியைப் பற்றித் தெரிந்த அளவிற்கு,
நமது பூமியிலேயே உள்ள கடலைப் பற்றித் தெரியாது என்கிறார்களே,
அது உண்மையா?
து உண்மைதான். நிலாவின் மறுபக்கத்தைக்கூட (Far side of the moon) அறிந்த மனிதர்களால் இன்னும் கடலை முழுவதும் அலசி ஆராய முடியவில்லை. 1969ல் நிலவில் மனிதன் கால்பதித்தான். அதன்பிற்கு
12 மனிதர்கள் நிலவுக்கு சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் ஆழ்கடலில் உள்ள மிக ஆழமான பகுதிகளுக்கு சென்று வந்த மனிதர்களின் எண்ணிக்கை அதை விடக் குறைவுதான்.

செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் அறிந்ததை விடவும் கடலைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகவும் குறைவு! நமது பூமியில் முக்கால் பங்கு இருக்கும் கடலைப் பற்றி நாம் அறிந்தது வெறும் 5% மட்டுமே! பரவலான ஆராய்ச்சிகள், நிதி உதவி, ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை வரும்போது இந்த நிலை மாறும்.
(இன்னும் கற்போம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com