
அம்மா நலமா?
எப்படி இருப்பாய் நலமாய்?
என்னையும் சேர்த்து
இரண்டு பிள்ளைகள் பெற்று
எத்தனை துன்பம் பெற்றாய்?
அப்பா இறந்த பின்பு
ஆளாக்க எங்களை
அம்மா நீ பட்ட கஷ்டம்
கவிதையில் சொல்ல முடியாது!
அக்காவைக் கட்டிக்கொடுக்க
அம்மா நீ
அலையாய் அலைந்து
கஷ்டப்பட்டு
கடன்பட்டு
கல்யாணத்தை நடத்தி முடிக்கையிலே
நாடி தளர்ந்து நூலானாய்…
என்னைப் படிக்க வைக்க
அயராது நீ உழைத்து
ஆயுள் தேய்ந்து
அரை உயிராய் நீ ஆனாய்…
குடும்பம் வெளிச்சமாக
மெழுகாய் நீ எரிந்து
உடல் குறைந்து போனாய்…
எத்தனை துன்பம்…
எத்தனை சோகம்
எல்லாம் பெற்று
அம்மா நீ இருக்கையிலே
எப்படி இருப்பாய்
நலமாய்?!
உன்னிடம் பேச வேண்டுமென்று
மனசுக்குள்
ஒத்திகைப் பார்த்து
கண்ணாடி முன் நின்று
வார்த்தைகளை
வரிசைப்படுத்தி
உச்சரித்துப் பழகி
ஓடி வருகிறேன்…
உன்னைச் சந்தித்ததும்
ஒவ்வொரு வார்த்தையும்
தொண்டைக் குழிக்குள்ளேயே
குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றன!
மவுனமாய் திரும்பி விடுகிறேன்…
வீட்டிற்குள் வந்ததும்
வழக்கம்போல் தொடர்கிறது
கண்ணாடி முன் நின்று
ஒத்திகை!