தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
யோகிதாவின் சமயோசிதம்
அண்மையில் மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் யோகிதா சதாவ் என்ற 42 வயதுப் பெண்மணி சமயோசிதமாக ஒரு வேலை செய்திருக்கிறார்.
ஷிரூர் பகுதியில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்றது ஒரு மினி பஸ்ஸில். டிரைவரும் உற்சாகமாக ஓட்டி வந்திருக்கிறார். சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பி வரும்போது போது டிரைவருக்கு திடீரென வலிப்பு வந்துவிட்டது. சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டார்.
அந்த பஸ்சில் பயணித்த யோகிதா சதாவ், உடனே சிறிதும் தயங்காமல் டிரைவர் இருக்கையில் சென்று அமர்ந்தார். பஸ்சை சாதுர்யமாக இயக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நிறுத்தினார். டிரைவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வண்டியை பத்து கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று, மற்ற பயணிகளை இறக்கினார். வண்டியை தகுந்த இடத்தில் ஒப்படைத்தார்.
எட்டு வயதில் ஒரு தாய்
மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை, அவரது எட்டு வயது மகள் தாயைப் போன்று கவனித்து வருகிறார். விருதுநகர் அருகே சேத்தூரை சேர்ந்தவர் குருபாக்கியம். தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கனகராஜ் என்பவரை 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில்,
குரு பாக்கியத்துக்கு ஏற்பட்ட வலிப்பு நோயால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றவருக்கு, நோய் பாதிப்பால் தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடியவில்லை.
2021ல் ஒரு நாள் சமையல் செய்த போது வலிப்பு வர, கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் இவர் பெரும் பாதிப்புக்குள்ளானார். இதனால் கையை நீட்டவும், மடக்கவும் முடியாமல் போக, மனநல பாதிப்புக்கும் ஆளானார். படிக்கும் வயதில் உள்ள மகன் கட்டட பணிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார் எட்டு வயது மகள் மகாலட்சுமி, சமையல்,
துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதோடு, ஒரு தாயை போன்று தனது அம்மாவுக்கு உணவு ஊட்டி விடுதல், குளிப்பாட்டி விடுதல் என அனைத்து பணிகளையும் செய்து வருகிறாள்.
இக்குடும்பத்தாரின் நிலையை அறிந்த விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, இவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
7000 கோடி ரூபாய் கடனை மீட்ட பெண்மணி
காபி டே என்னும் கடையை நிறுவி, சுமார், 3000 ஏக்கர் காப்பி தோட்டங்கள், நாடெங்கும் 1600 காபி டே கடைகள் என இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனராக வலம் வந்தவர் காபிடே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா.
இந்த நிறுவனத்தின் முதல் கடை 1996-ம் ஆண்டு பெங்களூருவில் திறக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு வாக்கில், நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் ஒரு பெரிய வணிகக் குழுவாக வளர்ந்தது. காபிடேவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தியாவின் மூலை முடுக்களில் காபிடே கடைகள் திறக்கப்பட்டன அதே சமயம் கடனும் அதிகரித்தது. கடன் பாக்கியை சமாளிக்க முடியாமல் 2019ம் ஆண்டு சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார். காபி டே நிறுவனம், சித்தார்த்தின் மரணத்துக்குப் பின் திண்டாடிப்போனது.
அந்நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே. இவர், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள். கணவரின் இறப்பு. 7000 கோடி ரூபாய் கடன், நிறுவனத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை, தவிர, தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு என சவால்கள் காத்திருந்தன அவருக்கு.
தேவையற்ற, லாபம் தராத இடங்களில் இருந்த காபி டே கிளைகளை மூடி, மால்கள்,ஐடி பார்க்குகள், உள்ளிட்ட இடங்களில் புதிய கிளைகளை திறந்தார்.
புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் நிறுவனத்திற்கு மூலதனத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார். கொரோனா லாக்டவுன் நாட்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன்படி, காபி தூள்கள், காபி உபகரணங்கள் என பல புதிய தயாரிப்புகளை தனது நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தி, லாக்டவுனை சமாளித்தார்.
தற்போது நாடு முழுதும் 572க்கும் மேற்பட்ட காபிடே கடைகள் இயங்கி வருகின்றன. தவிர, பல்வேறு நிறுவனங்களில் சுமார் 36,000 காபி விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இவரது 20,000 ஏக்கர் காபி தோட்டத்தில் விளையும் காபி கொட்டைகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
சம யாே சித அறிவுத்திறன், பாச உணர்வு,விழிப்புணர்வுடன் கூடிய நம்பிக்கை யுடன் வெ ற்றி ஆகிய முத்தான
மூன்றைத் தந்தது பத்மினியின் கட்டுரை.
நன்றி.
து.சேரன்
ஆலங்குளம்
மிக்க நன்றி சேரன் அவர்களே
பத்மினி பட்டாபிராமன்
மங்கையர் மலரின் “”யாது மாகி நிற்பாள் “என்ற வாரத்தையை நினைவு படுத்தியது “”மாளவிகா ஹெக்டே””யின் செயல் பாடு .
மிக்க நன்றி ஜானு
பத்மினி பட்டாபிராமன்
முத்துக்கள் மூன்றும் படிக்க சுவையாக
இருந்தது. அறிவு ,அன்பு,உழைப்புடன் கூடிய
நம்பிக்கை சூப்பர்.
Thank you kalaimathy