0,00 INR

No products in the cart.

தமிழனின் வீர விளையாட்டுகள்!

-சுசீலா மாணிக்கம்

தமிழர்கள் தங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைத்து வைத்திருப்பது தங்கள் தமிழ் மொழியுடன் பாரம்பரியக் கலைகளையும்தான். தங்கள் கலைகளில் கிராமத்து மண் வாசனையையும் தங்களின் வாழ்வாதாரங்கள், மதம் சார்ந்த பக்தி போன்றவற்றுடன் தங்களின் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தவும், களைப்பை போக்கும் ஒரு பொழுதுபோக்காகவும் கொண்டனர். சமூக வளர்ச்சிக்கும் மன எழுச்சிக்கும் கலைகளை ஒரு கருவியாய் கருதினர்.

பாட்டும் இசையும் கலைகளும் மட்டுமா தமிழனின் பாரம்பரியத்தை பேசுகின்றன? தமிழன் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிலும் பண்பாட்டு கலாச்சார பிரதிபலிப்பும் ,சிறந்த உடற்பயிற்சியும் அமைந்து இருந்தது. மேலும் ஆடவருக்கான பல விளையாட்டுகளில் மண்மணம் கலந்த வீரமும் இழையோடி இருந்ததே…

ஜல்லிக்கட்டு…

வீரம் சார்ந்த விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு சொல்லும் பொழுதே தமிழனின் குருதியில் வீரம் கொப்பளிக்கும். வசந்த காலத்தின் வசந்த விழாவாக மறத்தமிழனின் வீர விழாவாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு. களத்தினூடே இரு காளைகள் மோதிக்கொள்ள எழும்பும் புழுதிப்புயல் புகையில் வீரத்தின் கதை காணலாம்.

கருப்பனோ, காரியோ மயிலையோ, மச்சக்காளையோ திமிலை அணையத் துடிக்கும் கண்களில் தெரிகிறது தமிழனின் திமிர். நெஞ்சு நிமிர்ந்து நிற்கும் கால்களில் தெரிகிறது அவன் நெஞ்சுரம். வாடிவாசலிலை தேடிச்செல்லும் தமிழன் சிந்தும் குருதி சொல்லும் அவனின் வீர வரலாறு. திமிலுடன் திமிரும் கொம்புடன் கோபமும் கொப்பளிக்க தன்னை அணையத் துடிக்கும் வீரர்களை எதிர்த்து நிற்கும் காளைகள் ஒவ்வொன்றையும் பிடரியை சிலிர்த்து நிற்கும் சிங்கம் எனலாம்.

‘ஏறுதழுவுதல்’ இதன் தொன்மையை சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் சங்ககால இலக்கியங்களின் பதிவுகளில் இருந்தே உணர முடியும். மாடுகளின் பின்னிருந்து அவற்றை பிடிப்பது தமிழனின் அறமும் இல்லை. மறமும் இல்லை. நெஞ்சுக்கு நேர் எதிர் சென்று வீரத்துடன் அதன் திமிலை பிடித்து நிலை நிறுத்துவதுதான் வீரனின் அடையாளமாக கற்றுத் தரப்பட்டுள்ளது. தங்கள் உடம்பில் காயங்கள் பட்டாலும் குருதிப் பெருகினாலும் பரவாயில்லை. ஆனால், தங்கள் காளைகளின் உடலில் ஒரு சிறு கீறல் கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்.

இன்று வரை அந்தப் பண்பாட்டு தடத்தை கலாசார கண்ணாடியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அத்தனை மறத்தமிழனுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியைச்சார்ந்த திரு. வீரபாண்டி ஐயா கடந்த ஐந்து தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் பதினாறு காளைகள். இவரின் இல்லத்தில் தவழும் தென்றலையும் வீரம் நிறைந்ததாக மாற்றியபடி நின்று கொண்டிருக்கிறார்கள்.

தனது காளையுடன் வீரபாண்டி ஐயா

சின்ன சோலை, பெரிய சோலை, குட்டி, ராமு, சின்ன ராமு, பெரிய ராமு, கருப்பு, பாண்டி, சிவன், பருத்திவீரன் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெயரிட்டு பெரும்பாலான பொழுதுகளை அவர்களுடனேயே கழிப்பதையே மிகவும் விரும்புகிறார். தை மாதம் பிறக்கப்போவது அப்படினால இவனுங்க எல்லாம் சற்று துடிப்பாய் இருப்பானுங்க. என்ன இந்த கொரோனா சமயத்துல தீவனமும் நிறைய கொடுக்க முடியல. இருந்தாலும் பயலுக ரொம்ப துடியாத்தான் இருக்காக என மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவுசெய்கிறார்.

தனது மகனைப் போலதான் இவர்களும் என்றவர் இந்த சின்ன சோல பசியே பொறுக்க மாட்டான். சரியான சாப்பாட்டு ராமன் அவன். வெளியில போயிட்டு வந்தேன்னா வீட்டுக்குள்ள போக விட மாட்டான் . படுத்திருந்தா கூட எழுந்து நின்னு ‘சாப்பிட ஏதாவது வெச்சுட்டு போ’னு கூப்பிடுவான். பேசுவான்.

இந்த மானு இருக்கானே இவன் என்னை கண்டவுடன் எந்திரிச்சு நின்னு கொட்டத்திலிருந்து தலைய வெளியே நீட்டி நிப்பான். நான் எங்க போயிட்டு வந்தாலும் நேரா போயி அவன் தலையை தடவி ரெண்டு நிமிசம் பேசினால்தான் சமாதானமாவான். களத்துலையும் அப்படித்தான். என்னய தவிர யாரையும் நம்ப மாட்டான்.

பெரிய சோலை குழந்தை மாதிரி வருவான். வாடிக்குள்ள போய்ட்டானா அவன் லெவலே வேற. அவன் ஆக்ரோஷமும் வேற மாதிரி இருக்கும். நான்தான் போய் கயிறு போட்டு கூட்டிட்டு வரணும்.

ஜல்லிக்கட்டுக்கு வேன்ல போறப்பவே நாங்க பேசிக்குவோம் “டேய் இப்படி ஓடணும் , அப்படி குதிக்கணும்டா” என்றெல்லாம் பேசிக் கொள்வோம் என்கிறார். இவர் வாழ்க்கையை காளைகள் என்றாகிவிட்டதோ என தோன்றுகிறது. அவரும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இவனுங்களோட வாழ்ற வாழ்க்கைதான் நிறைவா இருக்கு. இது போதும் எனக்கு என மனநிறைவோடு நிறைவு செய்துகொண்டார்.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மட்டுமல்ல சொந்தங்கள் ஒன்றுகூடி தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என கூடும் ஊர் திருவிழா. உறவுமுறைகளின் மேன்மை காணும் உறவு திருவிழா. மகிழ்ச்சியும் மன நிறைவும் ஒருசேர உணரும் உணர்வு திருவிழா.

மனிதனுக்கும் காளைக்குமான அன்பு பிணைப்பையும் புரிதலையும் இங்கு உணர முடிகிறது. அதனால்தான் இது மண் மனம் மாறாத விளையாட்டாய் இன்றும் என்றும் நிலைபெற்று வருங்கால தலைமுறைக்கும் வழிகாட்டியாய் நல்ல செய்தி சொல்லும் நிகழ்வாய் திகழ்கிறது. லாரி ஓட்டுநரான இவர் அந்த வருமானத்துடன் இப்பொழுது கொரோனா கால சிக்கல்களால் பால் மாடுகள் வாங்கி பால் கறந்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில்தான் செலவுகளை சமாளிக்கிறார். அனைவருக்கும் உணவளிப்பது சற்று சிரமம்தான்.

இவருக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் நம் மண்ணின் மணத்தை நம் வருங்கால சந்ததிக்கும் கொண்டு செல்ல நினைக்கும் அன்பு தமிழ் நெஞ்சங்கள் தயவுசெய்து அவரை தொடர்பு கொள்ளுங்கள் ( 9047041350) அல்லது மங்கையர்மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு எண்ணை பெற்றுக் கொள்ளுங்கள்.

ரேக்ளா (மாட்டு வண்டி பந்தயம்)

சிவகங்கை மாவட்டம் காளாப்பூர் கிராமத்தைச் சார்ந்த திரு.சுடர் தேவன் அவர்களிடம் பேசியபோது பந்தயத்தைவிட அவரது வார்த்தைகளில் ஆர்வமும் வேகமும் அதிகமாக இருந்தது. நாட்டு மாட்டு கன்றுகள்ல துடிப்பா இருக்கிறதா பார்ப்போம். கண்டு கால் கை, குளம்பு நல்லா இருக்கணும். வால் நீளமாக இருக்க கூடாது. கழுத்துக்கு கீழ தொங்குற சதை கொஞ்சமா இருக்கணும். வெயிட்டு அதிகமாயிட்டா ஓடுவது சிரமம். அப்புறம் நிறம் சுழி என்றெல்லாம் பார்த்து தேர்ந்தெடுப்போம். முதல்ல வயலில் உழுது பழக்குவோம். அத உழுது வயக்கறது அப்படீனு சொல்லுவாங்க .மழை இல்லாதப்போ ஆத்து மணல்ல உழுது வயக்குவோம். ரெண்டு பல்லு போடும் பருவத்துல தட்டு வண்டியில பூட்டி முதல்ல உள்ளூர் சாலைகளிலும் அப்புறம் மெயின் ரோட்டிலேயும் ஓட்டி பயிற்சி தருவோம்.

இந்த ரேக்ளா மாடுகளுக்கு முறையான தீவனம் மிக அவசியம். பருத்திவிதை, கோதுமை தவிடு, பேரிச்சம்பழம், நாட்டுக்கோழி முட்டை கானப்பயிறு, கொண்டைக்கடலை, மக்காச் சோளம் போன்றவை தரணும். வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் நீச்சல் பயிற்சி, தினமும் நடைப்பயிற்சி என காளைகளை 24 மணி நேரமும் தயாராக வச்சிருக்கணும். தினமும் பயிற்சி என்பதால் குளியலும் தினம். பயிற்சி தவறிவிட்டால் சுறுசுறுப்பு குறைந்து விடும். கால் வலி, நெஞ்சு வலி போன்றவை வராமல் பார்க்கணும். இந்த ரேக்ளா காளைகளை வளர்ப்பது சற்று சிரமமான
காரியம்தான். பரம்பரையாக வளர்ப்பவர்களுக்கு முன்னோர் சொல்லித்
தந்து விடுவார்கள் அது சுலபமாக அமைந்துவிடும். பத்து நாட்களுக்கு ஒருமுறை நாட்டுமருந்து தரணும். இதுவும் அவர்களுக்கென்று அமைந்த அவரவர் குருக்கள் மருந்து தயாரிப்பு மற்றும் கொடுக்கும் முறை எல்லாம் சொல்லி தந்து விடுவார்கள்.

போட்டி என வரும்பொழுது அந்த காலங்களில் நோட்டீஸ் அடித்து அந்தந்த ஊர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். மிக முக்கியமான களைகளுக்கு நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதும் உண்டு. இப்பொழுதெல்லாம் இணையதளம் வாயிலாகவே முக்காவாசி செய்தி பரவி விடுகிறது.

ரேக்ளா ரேசில் குறிக்கப்பட்ட எல்லைக் கோட்டில் இருந்து புறப்பட்டு போய் மீண்டும் அதே எல்லைக் கோட்டுக்கு திரும்பி வரவேண்டும்.

பெரிய மாட்டு வண்டி பந்தயம் எனில் போக வர 10 மைல் – நடு மாடு எனில் 8 மைல்- கரிசான் மாடு (வயது குறைந்த) 6 மைல்- அப்புறம் பூஞ்சிட்டு 5 மைல் தேன்சிட்டு நாலு என வைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வண்டியில் ஓட்டாளி மற்றும் துணை ஓட்டாளி இருவர் இருப்பர். போட்டி ஆரம்பிக்கும் எல்லையில் தரப்படும் பேட்ஜ் அணிந்து பந்தயம் ஆரம்பித்து வேகம் பிடிக்கும். ஓட்டத்தில் சற்று தொய்வு ஏற்படும் சமயம் துணை ஓட்டாளி இறங்கி காளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டே ஓடுவார்.

சிலசமயங்களில் ஓட்டாளியும் இறங்கி பக்கத்துக்கொருவராய் காளைகளின் இருபக்கமும் ஓட காளைகளும் உற்சாகமாகி வேகமாக ஓடும். சமயம் பார்த்து இருவரும் வண்டியில் ஏறிக் கொள்ள வேண்டும். யாராவது ஒருவர் ஏறத்தவறி விட்டால் மீண்டும் அவர்கள் வண்டியில் ஏற முடியாது. ஒருவருடனேயே மீதி பந்தயம் தொடரும்.

அடுத்த எல்லைக்கு சற்று முன்பு பச்சைக்கொடி காண்பிக்கப்படும். அப்படி என்றால் எல்லை வந்து விட்டது. காளைகளின் வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். டிராக்டர் அல்லது குட்டியானையோ சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். அதைச் சுற்றி ஒரு யூ-டர்ன் அடித்து அங்கு தரப்படும் பேட்ஜ் மற்றும் கொடியை ஓட்டாளி கழுத்தில் அணிந்துகொண்டு மீண்டும் தொடங்கிய எல்லைக்கே வரவேண்டும்.

சுடர் தேவன்

போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்பிருந்தே காளைகளுக்கு இரை கட்றது, சத்தான பழச்சாறுகள் கொடுப்பது என ஒரு ஓட்டப்பந்தய வீரரை தயார் செய்வது போல தயார் செய்ய வேண்டும். தும்பை, ஆவாரை, வேப்பிலை, மஞ்சள் உட்பட சுமார் 20 வகையான மூலிகைகள் போட்டு வேது குளியல் (மூலிகை குளியல்) தரணும்.

திருவிழாக்கள் அதுவும் குறிப்பாய் பொங்கல் சமயங்களில் கிராமத்துக்கே ஒரு தனி அழகு வந்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுக்கள் உழவு சம்பந்தப்பட்டவைகள்தான். ‘அதிர மிதித்தால் முதிர விளையும்’ என்பதற்கேற்ப ஆறு மாதங்கள் உழவு மீதி ஆறு மாதங்களில் மனிதனும் காளைகளும் விவசாயத்தை மறந்து விடக்கூடாது. இடையேயான பிணைப்பு அதிகமாக வேண்டும் என்பதாலும் –
அந்தக் காலங்களில் போர் இல்லாத நாட்களில் ரத்தமும் வீரமும் மறந்து விடக்கூடாது மரத் தமிழனுக்கு என்பதால்தான் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்கள் ஏற்படுத்தி இருந்தார்கள் என முத்தாய்ப்பாய் ஒரு புதிய கருத்தையும் பதிவிட்டார் திரு. சுடர் தேவன் அவர்கள்.

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை காப்பாற்றிய ஓர் மன்னிப்பு!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் அரசனின் ஓர் மன்னிப்பு அவனது சாம்ராஜ்யத்தையே காப்பாற்றியது. அவனது சாம்ராஜ்யம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றிலேயே, அந்த மன்னனின் மன்னிப்பு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. என்ன பீடிகை போடுகிறீர்கள்....

  சிஸேரியனுக்கு ஒரு செக்!

-ஜி.எஸ்.எஸ். ஒரு அறுவை சிகிச்சையைத் தடுக்க முடியும் என்றால் அதைத் தவிர்ப்பதுதானே இயல்பு, புத்திசாலித்தனம்.   ஆனால் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது சிசேரியன் அறுவை சிகிச்சை. 'டாக்டர், என் பெண் பிரசவ வலியை தாங்க மாட்டா. ...

ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும்

0
 பார்வை - ரமணன்   அண்மையில் உச்ச நீதிமன்றம்  ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும்  பேரறிவளானை விடுதலை செய்திருக்கிறது. இதில் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள், சிலர்  வெறுப்படைகிறார்கள். மகிழ்ச்சியடைகிறவர்கள் “தாமதமாகவேனும் நீதி வென்றது”  என்ற கருத்தையும், வெறுப்புற்றவர்கள்  “முன்னாள் பிரதமரை...

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...