0,00 INR

No products in the cart.

பாரதத்தைத்  தூய்மைப் படுத்த முனையும் முயற்சியில் நாய் வளர்ப்பவர்கள் இதைச் செய்யலாமே?

-ரேவதி பாலு

ரடங்கு தளர்த்தப்பட்ட தற்போதைய சூழ்நிலையில் தினமும் நடைப்பயிற்சிக்குப் போகிறவர்கள் அதிகரித்து விட்டார்கள். திருவான்மியூரில் எங்கள் பகுதியிலிருந்து  பத்து நிமிட நடையில் கடற்கரை.  அங்கே போய் காலாற நடக்கலாம். அல்லது ஒரு இரு சக்கர வாகனத்தில் கணவனும் மனைவியுமாகச் சென்று கடற்கரை சாலையில் அதை நிறுத்தி விட்டு அந்த சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதும் உண்டு.

காலையில் வீட்டிலிருந்து  நடைப்பயிற்சிக்கு நடந்து போகிறவர்கள் கூடவே தங்கள் வளர்ப்புப் பிராணியான ஒரு நாயை அழைத்துப் போவதையும் பார்க்கலாம்.  இந்த கொரோனா காலத்தில் நகரத்தில்  தெரு நாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்தன. ஆனால் அதற்கு சமமாக எங்கள் பகுதியில் வளர்ப்பு நாய்களும் அதிகரித்து விட்டன.  வீட்டைப் பூட்டி விட்டு கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும்போது வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் வைத்துக் கொள்ள தோதுப்படாத சூழ்நிலை இருந்தது.  ஒருவேளை ஜனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் இப்போது வளர்ப்பு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அது மட்டுமல்ல.  ஒரே வீட்டில் ரெண்டு மூன்று நாய்களும் இருக்கின்றன.   ஒரு அரைக்கால் சட்டையும் கலர் பனியனும் போட்டுக் கொண்டு கணவனும் மனைவியும் ஆளுக்கொரு நாயைக் கையில் பிடித்தபடி  நடந்து செல்வது எங்கள் தெருவில் அதிகாலை நேரத்திலேயே ஆரம்பித்து விடும்.

நான் கூற வந்தது எவ்வளவு நாய்கள் ஒரு வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அல்ல.  அத்தனை நாய்களுக்கும் கழிப்பறை தெரு தான் என்பதைப் பற்றி தான்.

தங்கள் எஜமானர்கள் நடைப்பயிற்சிக்குப் போகிற வழியில் அப்படியே இந்த வளர்ப்புப் பிராணிகள்  தங்கள் காலைக் கடனை முடித்துக் கொள்வதை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.   கூச்சமே இல்லாமல் மற்றவர்கள் வீட்டு வாசலில் இந்த நாய்கள் மலம் கழிப்பதை எஜமானர்கள் பூரிப்போடு பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அந்த வேலை முடிந்ததும் நடைப்பயிற்சி தொடர ஆரம்பிக்கும்.

ஒருமுறை எங்கள் எதிர் வீட்டு வாசலில் மலம் கழித்துக் கொண்டிருந்த ஒரு நாயைப் பார்த்ததும், தெருவை விரைவாகக் கடந்து  அதன் எஜமானியிடம் நான் கோபமாக பேசப்போக, அவள் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில், “என் ஜூலி எவ்வளவு புத்திசாலி தெரியுமா?  எங்க வீட்டை ஒருநாளும் அசுத்தப்படுத்தவே படுத்தாது.  வெளியே வந்து தான் போகும்,” என்றதும் “அப்ப நீங்க வசிக்கிற தெருவை அசிங்கப்படுத்தினால் பரவாயில்லையா?” என்று நான் கேட்டது காதில் விழாத தூரத்திற்கு ஜூலி, தன் காரியம் முடிந்ததும்,  அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டது. நான் வாயடைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன்.

பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப் பொங்கல் என்று வீடுகளில் கொண்டாடி காக்கை குருவிகளுக்கு அன்னத்தை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து அழகாக வரிசையாக வைப்பார்கள்.  அதேபோல நடைபாதை முழுவதும் வரிசையாக ஆங்காங்கே உருண்டை, நீள் சதுரம் என்று பல வடிவங்களில் நாயின் மலக்கழிவுகள்.  இது தெரு நாய்களின் உபயம். நடைபாதைகளை அவை பட்டா போட்டு வாங்கியது போல ரொம்ப சுதந்திரமாக ஜாலியாக உபயோகிக்கும். நமக்குக் கால் வைக்க இடமிருக்காது.

தூங்கி எழுந்து வாசல் இரும்புக்கதவைத் திறந்தவுடன் தெருவில் கால் வைத்து விட முடியாது.  சரியாக நாம் தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டிய இடத்தில் ஏதோ ஒரு வளர்ப்புப் பிராணி ஏற்கெனவே மலஜலத்தால்  கோலம் போட்டு விட்டுப் போயிருக்கும்.  எங்கள் வீடு மட்டுமல்ல, தெருவில் எல்லோர் வீட்டு வாசல்கள் முன்பு, நடைபாதையில்,  விளக்குக் கம்பங்களின் அடியில், என்று ‘”எங்கெங்கு பார்க்கினும் வளர்ப்பு நாய்களின் மலஜலங்களடா” என்று பாடத்தான் வேண்டியிருக்கும். அதைச் சுற்றி ஈக்கள், கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். ஒரு அட்டையை வைத்து ஒரு கேரி பேகில் அந்த மலத்தை அள்ளிப் போட்டு அந்த இடத்தை பினாயில் தெளித்து சுத்தம் செய்து விட்டு தான் அடுத்த வேலை செய்ய முடியும்.

பால் போடும் பையனோ, பேப்பர் போடும் பையனோ இந்த கண்றாவியை மிதித்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டிற்குள் வராமல் இருக்க வேண்டுமே? அவர்கள் பல வீடுகளுக்குப் போகிறவர்கள், அவர்கள் செருப்பில் இதை மிதித்துக் கொண்டு சென்றால் வளர்ப்புப் பிராணியின் மலஜலம் இந்த பகுதி முழுவதும் விநியோகம் ஆகிவிடும்.   இந்த அழகில் ஊரில் கொரோனா பயம் வேறு.  எஜமானர்கள் தாங்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு ஜாக்கிரதையாக நாயைப் பிடித்துக் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள். நாமும் முகக்கவசம் அணிந்து கொண்டு தான் நம் வீட்டு வாசலில் இருக்கும் நாயின் மலஜலத்தை அகற்ற வேண்டியிருக்கும், நாற்றம் பொறுக்க முடியாமல்.

இதை விட கஷ்டம் என்னவென்றால் அதிகாலையில் வளர்ப்புப் பிராணிகள் நம் வீட்டு வாசல்களில் கழிவுகளை கழித்து நம்மை ஆசிர்வதித்து விட்டு நகர்ந்ததும் உடனே பெய்யும் பாருங்கள் ஒரு மழை! அதில் கழிவுகள் கரைந்து நம் காம்பவுண்டிற்குள் மழை நீரோடு ஓடி வருவதைப் பார்த்தால் இந்த மோசமான சுகாதாரக் கேட்டை நினைத்து நம் கண்களில் கண்ணீரே வந்துவிடும்.

இதில் எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், இந்த வளர்ப்புப் பிராணிகளின் எஜமானர்கள் யாவரும் படித்தவர்கள்.  நல்ல வேலையில் இருப்பவர்கள்,  நல்ல குடியிருப்புகளில் வசிப்பவர்கள்.  அவர்கள் ஏன் தன் வீட்டு வாசலிலேயே தங்கள் ஜூலியையோ, கறுப்பனையோ மலஜலம் கழிக்க வைத்துப் பழக்கப்படுத்தக் கூடாது? அல்லது தங்களுடன் ஒரு கேரி பேக் அட்டை, போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், வழியில் நாய் அசுத்தம் செய்தால்,  கையோடு அதை சுத்தம் செய்து தெரு சுத்தமாக இருக்க உதவலாமே?  பாரதத்தைத்  தூய்மைப் படுத்த முனையும் முயற்சியில் தங்கள்  சிறு பங்காக நாய் வளர்ப்பவர்கள் இதைச் செய்யலாமே?  இல்லை ஒருவேளை தெருவை வளர்ப்புப் பிராணிகள் அசுத்தம் செய்தால் எஜமானர்களுக்கு அபராதம் என்று அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தால் நிலைமை சரியாகுமா?

சிங்கார சென்னை, சிங்கார சென்னை என்கிறோமே, நம் நகரத்தை மாசு படுத்தும் முக்கியமான ஒரு அம்சம் இந்த வளர்ப்புப் பிராணிகள் தெருவையே கழிப்பறையாக உபயோகப்படுத்துவதுதான். இதற்கு ஒரு வழி வந்தாலே நம் நகரம் தூய்மையடைய ஆரம்பித்து சிங்கார சென்னையாகி விடும்  என்று தோன்றுகிறது.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...