0,00 INR

No products in the cart.

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

-லதானந்த்

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதில் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி, பலருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொடுத்து அசத்தி வருகிறார். அவர்தான் ஹேமலதா அண்ணாமலை. மின்சாரத்தால் வாகனங்களை உற்பத்தி செய்யும் அவரது நிறுவனத்தின் பெயர்,  Ampere Vehicles’.

தொழில்முறை சேவைகள், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயிற்சியளித்தல் மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகியவற்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் அளிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது கவனம் கிராமப்புற மக்களின் மேம்பாடு நோக்கியதாகவே இருந்துவருகிறது.

தி இண்டஸ் என்டர்ப்ருனர்ஸ்’ (The Indus Entrepreneurs) என்ற தன்னார்வ நிறுவனம் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஓர் அமைப்பு ஆகும். அதன் குளோபல் சேர் (Global Chair) பொறுப்பையும் ஹேமலதா வகிக்கிறார். அந்த அமைப்பின் கோயமுத்தூருக்கான தலைவரும் இவரே. சிங்கப்பூரில் இயங்கிவரும் ‘யூனி கனெக்ட்’ அமைப்பின் நிறுவனரும் ஹேமலதாதான்!

இவர் கோயமுத்தூரில் இருக்கும்  கவர்ன்மென்ட் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில், கணினிப் பொறியியல் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில்’ MBA பட்டமும் பெற்றவர்.

இவருடைய சரியான வயது என்ன என்பதை இவர் வெளியிடவே மாட்டார். யாராவது அவரிடம் இது பற்றிக் கேட்டால் ஐம்பதுக்கு மேல் எனப் புன்முறுவலுடன் மழுப்பிவிடுவார். இவர் ரகசியமாக வைத்திருப்பது எந்தெந்த வழிகளில் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதற்கு இவர் வைத்திருக்கும் திட்டங்களைப் பற்றியும்தான்!

ஏற்கெனவே ஒரு சிங்கப்பூர் நிறுவனம் உட்பட பலவற்றில் பணிபுரிந்திருந்தாலும், மென்பொருள் விற்பனையிலும், சங்கேதக் குறியீடுகள் எழுதுவதிலும் தாம் அயர்ச்சி அடைந்ததாலேயே இப்படி ஒரு மின் வாகனச் சந்தைக்கு வந்ததாக ஹேமலதா அடிக்கடி குறிப்பிடுவார்.

இவரது ஆம்பியர் நிறுவனம் கோவையைத் தளமாகக் கொண்டது;  2008ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.  இதற்கு  ரட்டன் டாடா மற்றும் இன்ஃபோஸிஸ் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.

இவர்களின் தயாரிப்பான எலக்ட்ரிக் சைக்கிளில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இதை பேட்டரி மூலமும் இயக்கலாம்; அல்லது சாதாரண சைக்கிள்களை ஓட்டுவதுபோல பெடலை அழுத்தியும் ஓட்டலாம்.

மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர்கள் மட்டும் அல்லாது மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின் வாகனங்களையும் உருவாக்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான  ஹேமசந்திர ஜாவேரி, “நாங்கள் ஹேமாவை நம்புகிறோம்;  மின்சாரத்தால் இயங்கும் வாகனச் சந்தை வணிகத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அவர் குறைந்த விலையில் மக்கள் வாங்கும்படியாக வாகனங்களை உற்பத்தி செய்யவேண்டும் என்பதைத் தன் உறுதியான லட்சியமாகக் கொண்டிருக்கிறார்” என்கிறார்.

இவரது கணவர் பாலா பச்சையப்பா, ஆம்பியர் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அலுவராகப் பணியாற்றுகிறார்.

ஆண்டொன்றுக்கு ஆம்பியர் நிறுவனம் 60,000 வாகனங்களை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் பெண்களின் பயன் பாட்டுக்கெனவே  மின்சாரத்தால் இயங்கும்   ‘திரிசூல்’ என்ற மூன்று சக்கர வாகனத்தையும் உற்பத்தி செய்கிறது ஆம்பியர் நிறுவனம்.
சரக்குகளைச் சுமந்து செல்லவும், கழிவுகளை அகற்றும் பணிக்கெனவும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இவர்களது குறிக்கோள் கிராமம் மற்றும் சிறு நகரங்களில் வசிப்போரும் – குறிப்பாக நடுத்தர மக்களும் – எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்கள் வாகனங்கள் இருக்கவேண்டும் என்பதே!

இவரது நிறுவனங்களில் தற்போது 30% பெணகள் பணியாற்றுகின்றர். படிப்படியாகப் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 80% ஆக்க வேண்டும் என்பது இவரது இலக்கு. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது, நடுத்தர மக்களும் எளிதாக வாங்கக்கூடிய வகையில் வாகனங்களை உற்பத்தி செய்வது என்ற இரு பெரும் நோக்கங்களையும் ஒன்றாக இணைத்து முன்னேறிவரும் தமிழ்நாட்டுத் தாரகை ஹேமலாதா அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

1 COMMENT

  1. 2012லிருந்து ஆம்பியர் பேட்டரி சைக்கிளை உபயோகித்து வருகிறேன். இன்னமும் மிக அருமையாக இருக்கிறது. ஃபேஸ்புக்கில் கூட புகைப்படம் பதிவிட்டிருக்கிறேன். மூன்று முறை பேட்டரி மாற்றிவிட்டேன். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் புதிய சைக்கிள் வாங்கிக் கொள்ளலாமா? அவர்களுடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா ?

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...

சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!

உரையாடல் : பத்மினி பட்டாபிராமன்   ஸ்வப்னோபூரண் - பூர்த்தியாகும் கனவுகள் மேற்கு வங்காள  எல்லையை ஒட்டிய, கல்வி வசதி அவ்வளவாக இல்லாத, சுந்தர்பன்ஸ் தீவு கிராமங்களில் ஆங்கில மீடியம் பள்ளிகளை அமைத்து, அந்த ஏழைக் குழந்தைகளுக்கு...

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

2
 ஆன்மிகம்! ஆண்கள் மட்டுமே வழிபடும் அம்மன்! கரூரிலிருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோயிலில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். இங்கு விநாயகருக்கு மட்டுமே...