
கரூரிலிருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோயிலில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். இங்கு விநாயகருக்கு மட்டுமே சன்னதி. பெண்கள் வெளியில் இருந்து அம்மனை வழிபடலாம்.
இக்கோயில் செவ்வாய்கிழமை மட்டும் திறக்கப்படும். நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பூஜை செய்வர். இந்த அம்மனை ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆண்கள் கண்டுபிடித்ததால் இந்த நடைமுறையாம்.
– எஸ். பிரேமாவதி, சென்னை
*********************************
சிவாலயங்களில் அமைந்துள்ள நவக்கிரக சன்னிதியில் சூரியன் நடுநாயகமாக கிழக்கு நோக்கி காட்சி தருவார். ஆனால், பண்ருட்டிக்கு அருகில் திருநாவலூரில் இருக்கும் பக்தஜனேஸ்வரர் கோயிலில், சூரியன் வித்தியாசமாக கிழக்கு நோக்கி இருப்பதற்கு பதில் மேற்கு நோக்கி காட்சி தருவதைக் காணலாம். மாலை வேளையில் இவரை வழிபட, சூரிய தோஷங்கள் இருந்தால் விலகுவதுடன், கண்ணொளி நன்கு பிரகாசிக்கும் என்று கூறப்படுகிறது. இது ஓர் அரிய தரிசனம் என்று கூறப்படுகிறது.
-எஸ். பிரேமாவதி, சென்னை
*********************************
சூரிய உதயத்திற்கு முன் 'அருணோதயம்' எனப்படும் நேரத்தில் நீராடுவது புனிதமானது. அந்தவேளையில் நீராடிய ரிஷிகள் ரிஷத்துவத்தைப் பெற்றார்கள். அப்படி நீராடுபவர்களுக்கு சரீரத்தில் அழகும், பலமும், சுத்தமும், ஆயுள் வளர்ச்சியும், ஆரோக்கியம், தைரியம், அதிக ஆசையின்மை, கெட்ட கனவுகள் வராமலிருப்பது முதலிய குணங்களும் உண்டாகின்றன. 3 வருஷ காலம் அதிகாலை நீராடுபவனுக்கு ஏழு பிறவிகளில் செய்த பாவங்களும் நீங்கும்.
-எஸ். பிரேமாவதி, சென்னை
*********************************
சிலருக்கு நெற்றியில் குங்குமம் வைத்த இடம் புண்ணாகி, நிறமும் மாறிவிடும். கசகசாவை எலுமிச்சம் சாறுவிட்டு மை போல அரைத்து படுக்கும்போது அந்த இடத்தில் தடவிவிட்டு காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் அலம்பிவிட பழையபடி நெற்றி ஆகிவிடும். குப்பைமேனி இலை, கருந்துளசி, திருநீற்று பச்சிலை இவைகளை வைத்து, மை போல அரைத்து போட்டாலும் பலன் கிடைக்கும். பிறகு லாக்டோகேலமின் அல்லது சந்தனம் அரைத்து வைத்து அதன் மேல் குங்குமம் வைக்கவும்.
-எஸ். பிரேமாவதி, சென்னை
*********************************
கேரள மாநிலத்தில் குருவாயூர் கோயிலில் இளநீர், சர்க்கரை, பணம் என்று பல பொருட்களைத் துலாபாரமாக இறைவனுக்கு வழங்குவது வழக்கம். அதேபோல் திருச்சூரில் உள்ள சிவாலயத்தில், மண்டபத்தில் நிறைய தாம்புக் கயிறுகள் இருப்பதைக் காணலாம்.
ஆஸ்துமா, மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆலயம் வந்து பிரார்த்தனை செய்து, கயிறு துலாபாரம் கொடுக்கின்றனர். இவ்வாறு துலாபாரம் கொடுத்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
-எஸ். பிரேமாவதி, சென்னை
*********************************
ஸ்நானம் செய்யும்போது பேசுகிறவனது சக்தியை வருணன் அபகரிக்கிறார்.
ஹோம காலத்தில் பேசுகிறவனது சம்பத்தை (செல்வத்தை) அக்கினி பகவான் அபகரிக்கிறார்.
போஜன காலத்தில் பேசுகிறவனது ஆயுளை எமன் அபகரிக்கிறார்.
குறிப்பாக இந்த 3 வேளைகளிலும் மெளனம் சாதிப்பவன் பல நன்மைகள் பெறுகிறான்.
-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்
*********************************
ஒருமுறை காஞ்சி பரமாச்சாரியரிடம், "சாம்பாருக்கும் ரசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?" என்று ஒருவர் கேட்க, அதற்கு ஆச்சாரியர் "சாம்பாரில் காய்கள் உள்ளன, ரசத்தில் இல்லை," என்று நகைச்சுவையாக ஆரம்பித்து, தொடர்ந்து,
"நம் மனதில் அகம்பாவம் ஏற்பட்டால் சாம்பார் மாதிரி குழம்பி விடும். ஆணவம் இல்லையென்றால் ரசம் போல் மனம் தெளிவாக இருக்கும். நாம் விருந்திற்குச் செல்லும்போது சாம்பார், ரசம், பாயசம், பிறகு மோர் சாதம் சாப்பிடுவோம். ஒரு மனிதன் பிறக்கும்போது 'தான்' என்ற ஆணவம் ஏற்படுகிறது. குழம்பில் போடும் காய்களை தான் என்பர். மனது அமைதியான பிறகு அது ரசம் போல் உள்ளது. இதைத் தொடர்ந்து பாயசம் சேர்ப்பார்கள். நம் மனம் ரசம் போல் தெளிவாகிவிட்டால், சந்தோஷம் (பாயசம்) ஏற்படுகிறது. விருந்தில் கடைசியில் மோர் பரிமாறப்படுகிறது. நம் மனது தெளிவான நிலையில், மகிழ்ச்சி ஏற்படுவதால் நம் மனது பகவானிடத்தில் ஒன்றிவிடுகிறது. தயிர், வெண்ணெய், நெய், பிறகு மோர் கிடைக்கிறது. இதிலிருந்து வேறு ஒன்றும் கிடைக்காது. அதேபோல் பகவானிடம் மனது ஒன்றிவிட்டால் வேறு ஏதுவும் அடையத் தேவையில்லை." என்றார்.
இப்படி நாம் சாப்பிடும் சாப்பாட்டின மூலம் மிகவும் ரஸமாக வாழ்க்கைத் தத்துவத்தை ஆசாரியர் விளக்கிக் கூறியதை எல்லோரும் ரசித்தனர்.
-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்
*********************************
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு ஆண்டவனை அடைய நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்? அங்கு போகாமலேயே ஆண்டவனை அடைய முடியாதா? என்று கேட்டார்.
விவேகானந்தர் அவரிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். அவர் ஓடிப் போய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
சுவாமி அவரிடம் நான் தண்ணீர்தானே கேட்டேன். எதற்கு இந்த சொம்பு? என்றார்.
கேள்வி கேட்டவர் குழம்பிப் போய் சொம்பில்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்? என்றார்.
சுவாமி அவரிடம் ஆம் சகோதரனே! தண்ணீர் கொண்டு வர சொம்பு தேவைப்படுவதுபோல் ஆண்டவனை உணர்ந்து மகிழ ஓர் இடம் வேண்டும். அதுதான் ஆலயம். அதனால்தான் கோயிலுக்கப் போகச் சொல்கிறேன்" என்றார்.
-எம். வசந்தா, சென்னை