0,00 INR

No products in the cart.

ஆஸ்திரேலியா அனுபவங்கள்!

பகுதி – 3
பயண அனுபவம் : பத்மினி பட்டாபிராமன்

நீண்டு பருத்த பின்னங்கால்களை உயர்த்திக்கொண்டு நிமிர்ந்து நின்றால் ஆறடிக்கு மேல் உயரம். தடிமனான வால். வயிற்றிலே ஒர் பை. அதற்குள் எட்டிப் பார்க்கும் குட்டி. ஓங்கி ஒரு உதை விட்டால் ஆஸ்பத்திரி வாசம் ஆறு மாசம்.  இதுவரை ஒரு ஜூவில் கூட கங்காருவைப் பார்த்ததில்லையே.. இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு ஆவலுடன் அந்த வன விலங்குகள் சரணாலயத்துக்குள் நுழைந்தோம்…

ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட கங்காருக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக சொல்லப் படுகிறது. சென்ற 2020ம் வருட புள்ளிக் கணக்குப்படி 4.50 கோடி கங்காருக்கள் என்றும் ஜனத்தொகை 2.57 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

இவை ஏன் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படுகின்றன?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்ட்வாலாலேண்ட் என்ற பெயரில் நிலப்பகுதிகள் ஒன்றாக இருந்து பின்னர் பல்வேறு இயற்கைக் காரணங்களால் பிரிந்தபோது, கங்காருகள் இருந்த தென்அமெரிக்க பகுதி, பிரிந்து ஆஸ்திரேலியா தீவாக ஒதுங்கியதில் அவை அங்கேயே தங்கிவிட்டன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

காட்டு கங்காருக்கள், ஆஸ்திரேலியாவின் வறண்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. விவசாய நிலங்களுக்கு இவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் அரசின் லைசென்ஸ் இருந்தால் மட்டும் இவற்றைச் சுடலாம் என்கிறது ஒரு செய்திக் குறிப்பு.

கங்காரு பாலூட்டி வகையின் ஒரு பிரிவான மார்சுபியல் (Marsupials) இனத்தைச் சேர்ந்தது. கர்ப்பக் காலமான 28 நாட்கள் கழித்து மிகச் சிறிதாக பிறக்கும் கங்காருக் குட்டிகள் உடனேயே தாயின் வயிற்றின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பவுச் எனப்படும் பைக்குள் ஏறிவிடும். சுமார் ஆறு, ஏழு மாதங்கள், முழு வளர்ச்சி அடையும் வரை அங்கேயே இருந்து தாயிடம் பால் அருந்தி வளரும். கங்காருக்களின் ஆயுள் காலம் 15 முதல் 20 வருடங்கள். நீண்ட பின்னங்கால்களால் குதித்துக் குதித்து மணிக்கு 25 முதல் 70 கிலோமீட்டர் வரை ஓடக்கூடியவை.

நம்மைப் பார்த்ததும் ஓடிவிடுமோ, பருமனான வாலைச் சுழட்டி ஒரு அடி போடுமோ என்றெல்லாம் தயங்கித் தயங்கி அருகே போய் தொட்டால், சும்மா கன்றுக் குட்டி மாதிரி சாதுவாக நம்மை பாசத்தோடு ஒரு பார்வை பார்த்ததே… அதற்கு இன்று வரை ஈடு இல்லை. (ஆனால் காட்டுக்குள் தன்னிச்சையாகத் திரியும் கங்காருக்கள் மூர்க்கமானவை என்றார்கள்.) அதற்கு ஊட்டுவதற்காக அங்கேயே பெல்லெட் என்னும் உணவு உருண்டைகள் தருகிறார்கள். மற்றபடி அவை கேரட், ஆப்பிள், வாழைப்பழம் விரும்பிகள். சாப்பிடக் குனியும்போது அந்த நீண்ட முன்னங்கால்களை ‘ட’ வடிவில் மடக்கி முன்கால்களை தரையில் ஊன்றிக்கொள்கின்றன.  பையில் குட்டியுடன் தாய், பையை விட்டு வெளியே வந்து ஓரளவு வளர்ந்தவை, ஓரப் பார்வை பார்க்கும் ஆண் கங்காரு என்று விதவிதமான கங்காருக்களையும் அவற்றின் குதியையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

கோலா கரடி (Koala bear)

மார்சுபியல் இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஆஸ்திரேலிய விலங்கு கோலா கரடி. சாதுவாகத் தோன்றினாலும் மூர்க்கமான சிறிய விலங்குகள்.  இவற்றுக்கும் குட்டியை வளர்க்க அடி வயிற்றில் பை உண்டு. பெரும்பாலும் யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே அதிகமாக உண்ணும் இவை, ஒரு நாளில்

18 மணி நேரம் தூங்கிக்கொண்டிருக்கும். சாம்பல் நிறத்தில் இருந்த ஒரு கோலா கரடியை தொட்டுப் பார்க்க அனுமதிக்கிறார்கள். என்ன ஒரு பஞ்சு போன்ற ரோமம். பழக்கமில்லாவிட்டால் சீறிப் பாய்ந்து கடித்து விடுமாம். 18 வருடங்கள் ஆயுள். இரண்டே வருடங்களில் பெண் கோலா தாய்மைக்குத் தயாராகி விடுகிறது. கர்ப்ப காலம் 36 நாட்கள். வெளிவரும் குட்டி உடனே தாயின் வயிற்றுப் பைக்குள் பதுங்கி விடுகிறது. அனேகமாக மரத்தைப் பற்றிக்கொண்டு தூங்கிக் கொண்டே இருப்பதால் பையும் குட்டியுமாக பார்க்க முடியவில்லை.

படு ஆக்ரோஷமான மற்றோர் மார்சுபியல் வகை விலங்கு டாஸ்மானியன் டெவில் (Tasmanian devil) நம்மை முறைக்கிறது. பல கார்ட்டூன்களில் இதன் அக்கிரமங்களைப் பார்த்த நினைவு வந்தது. சாய்ந்து நடக்கும் சிறிய பெங்குவின்கள், உணவு கொடுப்போரைச் சுற்றி, அலை மோதுகின்றன.

சிட்னிக்கு மேற்கில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த, அடர்ந்த கரடு முரடான மலைப்பகுதி ப்ளூ மவுண்டன்ஸ் என்னும் நீல மலையை நோக்கி சுமார் ஒன்றரை மணி நேரம் கோச்சில் பயணம்.

வழியில் வென்ட் அருவி (Wentworth Waterfalls) யின் அழகு, சுற்றுலாப் பயணிகளின் ஃபோட்டோ பாயிண்ட் ஆகிவிட்ட எக்கோ பாய்ண்ட், (குரல் கொடுத்தால் மலைகள் எதிரொலிக்கின்றன.) அங்கிருந்து தூரத்தில் தெரியும் மூன்று சகோதரிகள் பாறை கீழே பள்ளத்தாக்கு இவற்றை ரசிக்கிறோம்.

மூன்று சகோதரிகள் பாறைகளைப் பற்றி ஒரு கர்ண பரம்பரை காதல் கதை. பழங்குடியினத்தைச் சேர்ந்த மூன்று அழகிய சகோதரிகள் வேறோர் பழங்குடியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை திருமணம் செய்ய விரும்பினார்களாம். அதைத் தடுக்க ஒரு மந்திரவாதி, அவர்களைப் பாறைகளாக மாற்றி விட்டானாம். அவர்கள் அங்கேயே தங்கள் காதலர்களுக்காகக் காத்திருக்கிறார்களாம்.

ப்ளூ மவுண்டன்ஸ்

யூகலிப்டஸ் எண்ணெயின் மெல்லிய துளிகள், சூரிய ஒளியில் காற்றின் தூசி, நீர்த்துளி இவற்றால், நீல நிற ஒளியை வெளியிடுவதால் இந்தப் பெயர்.  ஆஸ்திரேலியாவின் நீலகிரி.  இதன் சிகரங்களும், காடுகளும் பார்வைக்கு விருந்து என்றால் நாங்கள் சென்ற ஜெனோலன் கேவ்ஸ். (Jenolan Caves) சுண்ணாம்புக்கல் குகைகள் (Limestone Caves) தந்தது முற்றிலும் வித்தியாசமான அனுபவம்.

உலகின் மிகப் பழமையான இந்தக் குகை, 34 கோடி வருடங்களுக்கு முற்பட்டது என்று  ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன.

கடல்வாழ் உயிரினங்களின் பாறைப் படிமங்கள், கால்சியம் டெபாசிட்கள் என்று பிரமிக்க வைக்கும்  இயற்கை உருவாக்கியிருக்கும் பிரம்மாண்டமான சுண்ணாம்புக் கல் வடிவங்கள்.

பல்லாயிரக்கணக்கான வருடங்கள், மழை நீராலும் புயல்களாலும், பாறைகள் பிளக்கப்பட்டும், டனல்கள் தோன்றியும் இந்த குகைகள் உருவாகி உள்ளன. இவை  karst cave எனப்படுகின்றன. மேற்கூரையில் ஒரு ஸ்ட்ரா அளவே வளர ஆரம்பித்து, மில்லியன் வருடங்களில் கால்சியம் தூசு, மாசு, சேரும்போது இறுகிப் போய் தொங்கும் ராட்சதத் தூண்களான ஸ்டேலக்டைட்ஸ் (Stalactites) பாறைகள்.

தரையிலிருந்து எழுந்து பிரம்மாண்டத் தூண்களாக எழும்பி நிற்கும் ஸ்டேலக்மைட்ஸ் (stalagmites) பாறைகள். அவற்றில் இருக்கும் மினரல்கள், தாது உப்புக்கள், அயர்ன் ஆக்ஸைட் காரணமாக அவை வண்ணங்களில் அதிசயம் காட்டுகின்றன. உள்ளே தேவையான இடங்களில் லைட் வெளிச்சம் கொடுத்து, மேலே செல்ல சில இடங்களில் படிகள் வைத்து, பாதுகாப்பிற்காக பக்க வாட்டில் ஸ்டீல் பார் வைக்கப்பட்டிருக்கிறது. இருட்டும், ஆங்காங்கே சொட்டும் நீரும், தரை வழுக்கலும்,சில இடங்களில் தவழ்ந்து, ஊர்ந்து செல்லுதலும், குகைக்குள் செல்வதன் சவால்கள். எப்போதுமே உள்ளே 15 டிகிரி குளிர். ஆனாலும் பாறைகளின் வடிவங்களைப் பார்க்கும்போது மெய்மறந்து போவதென்னமோ நிஜம்.

லை ரயிலில் செல்வதென்றால் தனி உற்சாகம் பிறக்கும். ஆனால் அதுவே 52 டிகிரி சாய்வாக, (128 சதவீதம் சரிவு) வேகமாக கீழ் நோக்கிப் பாயும் ரயில் என்றால்?  டிக்கெட் கட்டணம் செலுத்திய பிறகு, அந்தத் திரில் அனுப வத்தைத் தந்தது கடூம்பா ஸீனிக் ரயில்வே. (Katoomba Scenic Railway). வழவழப்பான ஃபைபர் சீட்களில் உட்கார்ந்து முன்பக்கம் கம்பியை பிடித்துக்கொண்டால் (கத்திக் கொண்டே) கீழே சரியலாம்.

1880களில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்பட்டபோது பாறைகளையும் நிலக்கரியையும் எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்டது. சுற்றிலும் மலை அடுக்குகள். வருகிற பாதையே கடினம்.

அந்தக் காலத்து சுரங்க
வேலைகளைச் சில புகைப்படங்களாகப் பார்க்கும்போது, மின்சாரம் இல்லாத நாட்களில் அவர்களின் கடினமான உழைப்பு மனதை நெருடுகிறது.

குளிர் நாடுகளின் வழக்கமான
ஒரு காட்சி. அவர்களுக்கு அது
சர்வ சாதாரணம்  ஆனால்,
பார்க்கும் நமக்கோ மனம்
கொஞ்சம் பதைக்கிறது.
அதையும் சுற்றுலாப் பயணிகளிடம் காசு வசூலித்து, மர பெஞ்சுகளில் உட்கார வைக்கிறார்கள்.
மேலே அஸ்பெஸ்டாஸ் கூரைதான்.

அதற்கு ஆஸ்திரேலியன்
ஆங்கிலத்தில் நாடக காட்சி
போல சித்தரிப்பு.

அது என்ன காட்சி தெரியுமா?

(பயணிப்போம்)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...