ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு 'சொய்ங்… சொய்ங்'னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க… அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத் திருப்பி அவங்க மேல எறிஞ்சாலே… புருவம் உயர்த்திப் பார்ப்பாங்க; கலாட்டா பண்ணுவாங்க!

அப்படிப்பட்ட யுகத்துல, ஒரு பொண்ணு, பத்து தனியார் ஜெட் விமானங்களுக்குச் சொந்தக்காரியா இருக்காங்கன்னா, "வாரே…வாவ்"ன்னு கை தட்டத் தோணுது கண்மணீஸ்!

கனிகா டெக்ரிவால்! வயது என்னவோ 32தான்!

'Jet set go' என்ற இந்தியாவின் முதல் தனியார் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவையைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார், என்பது பெருமைக்குரிய விஷயம்தான்!

"சின்ன வயசுல இருந்தே, எனக்கு பைலட் ஆகணும்னு ஆசை. ஆனா வீட்டுல பலத்த எதிர்ப்பு: "பொட்டப்புள்ள, பைலட் ஆவதா?"ன்னு படிக்க விடலை. வேற வழி இல்லாம, எம்.பி.ஏ. முடிச்சேன்! ஆனாலும் விமானங்களின் மீதான காதல் குறையவே இல்ல…" என்று ஆரம்பிக்கிறார் கனிகா.

பிளேன்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனம் நடத்தினால் என்ன என்ற யோசனை உருவானபோது கனிகாவுக்கு வயது 21. அந்த ஐடியாவை கனிகா, உருவேற்றி, அதற்கு திட்டமிட்டபோது, "உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கிறார்… பரிசோதித்ததில் புற்றுநோய் என்பது தெரியவரவே, அதற்கான சிகிச்சையில், கனிகாவின் முயற்சியும் ஒரு வருடம் பின்னுக்குத் போய்விட்டதாம்.

"நல்லவேளை! எனக்கு சிகிச்சை முடிந்து, குணமாகி வரும் வரை, வேறு யாருக்கும் பிரைவேட் ஏர்-டாக்ஸி யோசனை தோன்றவில்லை. அதனால் ஸ்கை யூபர் எனப்படும் இந்த ஸ்டார்ட் – அப்பைத் தொடங்கிய முதல் பெண்ணும் நான் ஆனேன்!" என்கிறார் குஷியாக.

முன்பெல்லாம் பிரைவேட் – ஜெட்டை யாரேனும் பயன்படுத்த விரும்பினால், அவர்கள்  புரோக்கர்களையோ, தனியார் ஆபரேட்டர்களையோதான் அணுக வேண்டியிருக்குமாம். இவர்கள், தங்களுக்கு அதிகபட்ச கமிஷன் தரும் ஜெட் அல்லது ஹெலிகாப்டரை சிபாரிசு செய்வார்கள். மேலும், கட்டணம் ஓவராக இருக்கும் என்பதோடு, வாடிக்கையாளரின் தேவைக்கும் இருக்காது என்பதை கனிகா பிராக்டிகலாக அறியவே, இருபது மாதங்கள் ஆயினவாம்.

"ஒளிவு மறைவு இல்லாத, பாதுகாப்பான பயணம் என்பதோடு, நியாயமான கட்டணம் என்பதையும் மனத்தில் கொண்டு இந்த வான்வெளிப் பயணங்களை வடிவமைத்தேன். அதற்கு நான் பராமரிப்பு, நிர்வாகம் போன்றவற்றோடு ஏவியேஷன் கோட் மற்றும் தொழில் நுட்பத்தையும் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது… அதுதான் பெரிய சவாலே!"

சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவாகுமே? விமானம் என்றால் எவ்வளவு முதலீடோ?

இல்லையாம்! இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது கனிகாவின் கையிருப்பில் வெறும் 5,600 ரூபாய் மட்டுமே இருந்ததாம்!

"முதல் ஆறு மாசம் யாருமே வரலை… சும்மா கடையைத் திறந்து வெச்சுக் காத்திருப்பேன்… ஆனா… இப்ப… 150 கோடி டர்ன் ஓவர். 6,000 பிளைட்களை ஆபரேட் செய்கிறோம். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பறந்திருக்கறார்கள். டெல்லி – மும்பை, ஹைதராபாத் – டெல்லி, மும்பை – பெங்களூரு போன்ற தடங்களில் பயணிக்கும் நாங்கள், மருத்துவ நெருக்கடிகளின்போது, ஹெலிகாப்டர்களை மற்ற இடங்களுக்கும் அனுப்புகிறோம்!"

'ஆண்கள் மட்டுமே' என்று அறியப்பட்ட ஏவியேஷன் க்ளப்பில் நான் ஆர்வத்துடன் புழங்கியபோது, தான் ஏளனமாகப் பார்க்கப்பட்ட நிமிடங்களை மறக்கவில்லை. அதனால் எங்களுடைய 'ஜெட், ஸெட், கோ" நிறுவனத்தில் 30% பெண்களை, அதுவும் முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தியிருக்கிறேன்" என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் கனிகா, தரும் சின்ன அட்வைஸ் இது!

"உலகம் பெண்களுக்குத் தரும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை: நாமும் நமக்குத் தேவையான வற்றை 'டிமான்ட்' செய்து பெறலாம்!"

சூப்பர் அறிவுரை!

சாதனை வானத்தின் அழகிய நீலம் நாமே!
அதை அளக்கும் நமது கரங்களும் நீளம்தானே?
பறப்போம் – சிறப்போம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com