
கிறிஸ்துமஸ் என்ற பெயர் எப்படி வந்தது?
கிரேக்க மொழியில், 'கிறிஸ்டோஸ்' என்றால் காப்பாற்ற அவதரித்தவர் (MESSIAH) என்று அர்த்தம். இப்போது வழக்கத்தில் இல்லாமல் இருப்பினும், ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் 'மாஸ்' (MAS) என்ற வார்த்தைக்குப் பண்டிகை அல்லது கொண்டாடுதல் என்று பொருளிருந்து வந்தது. 'கிறிஸ்து' என்ற வார்த்தையைச் சுருக்கமாக கிரேக்க மொழியில் 'X' என்ற எழுத்தாலும் குறிப்பிட்டார்கள். ஆகவேதான், கிறிஸ்துமஸ் என்பதை ஆங்கிலத்தில், 'XMAS' என்றும் எழுதுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
கிறிஸ்து எப்படி வந்தது?
கிறிஸ்தவர்களின் கடவுள், 'க்றைஸ்ட்' (கிறிஸ்து). அவருக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? 'க்றைஸிட்' என்பது கிரேக்க மொழிச் சொல். இதற்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். மக்களைப் பாவங்களினின்று கரையேற்றுவதற்காக கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டு இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட கடவுளின் குமாரனானவருக்கு, 'கிறிஸ்து' (Christs) என்று பெயர் வைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் வளையம்
கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் திருவருகைக் காலத்தின் அடையாளமே கிறிஸ்துமஸ் வளையம். இது திருவருகைக் காலத்தில் ஒவ்வொரு ஆலயங்களிலும் வைக்கப்பட்டிருக்கும். இவ்வளையமானது பச்சை நிறத்தில் விருப்பமான டிசைன்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வளையத்தின் நடுவில் நான்கு மெழுகுவர்த்திகள் தனித்தனி வண்ணங்களில் எதிர் எதிர் திசைகளில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு திரியும் ஒவ்வொரு ஞாயிறைக் குறிப்பிடுகின்றன. நான்கு வாரமும் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியின் போதும் ஒவ்வொரு திரியாக ஏற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஞாயிறு திரியும், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. வளையமானது கடவுள் ஒருவரே, தொடக்கமும் முடிவும் அவரே என்பதைக் குறிக்கிறது.
இயேசுவின் தாய்மொழி
இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி எது தெரியுமா? அரேபிக். இம்மொழி தற்போது நலிவடைந்து உள்ளது. சிரியா நாட்டில் தமங்கு பட்டணம் அருகிலுள்ள மல்லோலா என்ற ஒரு சிற்றூரில் ஏறக்குறைய ஆயிரம் மக்களால் பேசப்படுகின்றது. இது, அரேபி எபிரேய மொழி இனத்தைச் சார்ந்தது. இம்மொழிக்கென்று தனி எழுத்துக்கள் கிடையாது. எபிரேய எழுத்துகளால் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது.
முதல் படம்
இயேசுவின் காலத்திலேயே அவரது முதல் படம் வரையப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித லூக்காஸ் ஓர் ஓவியர். அவர் இப்படத்தை வரைந்தார். இயேசுவின் 30வது வயதில் வரையப்பட்ட அந்தப் படம் இன்றும் இத்தாலியில் புனித பாதலோமோ ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் பெருமைகளை கேள்விப்பட்ட எபீசா நாட்டு அரசர் இயேசுவை தனது நாட்டுக்கு வரும்படி அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத இயேசு கிறிஸ்து தனது படம் ஒன்றை லூக்காஸ் மூலம் வரையச் செய்து அரசருக்கு அனுப்பி வைத்தாராம்.