0,00 INR

No products in the cart.

எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்?

அத்தியாயம் – 3

– நிரஞ்சன் பாரதி

சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய இதழ்களில் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதியார். 1906ல், ‘இந்தியா’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

ஒருபுறம் பத்திரிகைத் துறையில் மும்முரமாக இயங்கிய பாரதியார், மறுபுறம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியல் செயற்பாட்டாளராகவும் வளர்ந்து கொண்டிருந்தார். அதே ஆண்டு டிசம்பரில், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சிப் பிரதிநிதியாக பாரதியார் கலந்துகொண்டார்.

நிரஞ்சன் பாரதி

மூத்தத் தலைவர் தாதாபாய் நவுரோஜி தலைமையில் அந்த மாநாடு நடைபெற்றது. சுய ராஜ்ஜியம், சுதேசியம் ஆகிய கொள்கைகள் முதன்மையாக வலியுறுத்தப்பட்டன. இவை, நாடு முழுக்கப் பேரெழுச்சியை ஏற்படுத்தின. மாநாடு வெற்றிகரமாக முடிந்ததில் பாரதியாருக்கு பெரும் உற்சாகம் பற்றிக்கொண்டது.

பிரதிநிதிகள் எல்லோரும் சென்னை திரும்பச் சித்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போது, டம்டம் நகரில் சகோதரி நிவேதிதா தேவி தங்கியிருக்கிறார் என்பதை அறிந்த பாரதியார், அவரைச் சந்திக்கச் சென்றார்.

சாரதா தேவியுடன் சகோதரி நிவேதிதா தேவி

கோதரி நிவேதிதா தேவி சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை. 1867ல் அயர்லாந்தில் பிறந்த அப்பெண்மணியின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபல். விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1898ல் அவர் இந்தியாவுக்கு வந்தார். அதே ஆண்டில் அவருக்குச் சுவாமி விவேகானந்தர் பிரம்மசரிய தீட்சை வழங்கி, நிவேதிதா தேவி என்னும் புதுப்பெயரைச் சூட்டினார். அதன் பின் இந்தியாவிலேயே தங்கி கல்விப்பணி, நிவாரணப்பணி எனப் பல பொதுநலத் தொண்டுகளில் அம்மையார் ஈடுபட்டிருந்தார்.

நிவேதிதா தேவியாரைக் கண்டதும், ‘என்னதான் விவேகானந்தரின் சிஷ்யையாக இருப்பினும், இவர் ஓர் ஆங்கிலேயப் பெண்தானே’ என்ற எண்ணம் பாரதியாரின் மனத்தில் உதித்தது. இதை அம்மையார் உடனே படித்துவிட்டார். படித்ததும், ‘‘மகனே, சாதி, மதம், குலம், கோத்திரம் என்ற அநாகரிகமான வேறுபாடுகளை உன் மனதிலிருந்து விடு. அன்பை மட்டும் அகத்தில் கொள். பிற்காலத்தில் நீ சரித்திரப் பிரசித்தி பெற்ற தேவனாக வருவாய்” என்றார். பாரதியார் அதிர்ந்து போனார். மகான்களால் ஒருவரின் மனத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு இந்நிகழ்வை விடவும் சிறந்த சான்று வேண்டுமா?

பாரதியார் இயல்பு நிலைக்கு மீள்வதற்குள், ‘‘உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று சகோதரியார் கேட்டார். ‘‘எனக்குத் திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றுமிருக்கிறது” என்றார் பாரதியார். ‘‘ஏன் உன் மனைவியை உடனழைத்து வரவில்லை?” – இது அம்மையாரின் அடுத்த கேள்வி. ‘‘எங்கள் தேசத்தில் மனைவியரைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதில்லை. மேலும், மாநாட்டில் அவள் என்ன செய்யப் போகிறாள்” என்று பாரதியார் பதிலளித்தார். இதைக் கேட்டதும் சகோதரி நிவேதிதா தேவிக்குப் பெருஞ்சினம் பொங்கியது.

‘‘மகனே, இந்நாட்டில் ஆண்கள் பலர் சுயநல வெறிகொண்டு, பெண்களை அடிமை போல் நடத்துகிறார்கள். நீ ஓர் அறிவாளி. நீயும் இப்படிச் செய்யலாமா? வீட்டில் இருக்கும் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்காமல் நாட்டிற்கு எப்படிச் சுதந்திரம் வரும் என்று எதிர்பார்க்கிறாய்?” – சகோதரியார் பேசிய மொழிகளைக் கேட்டதும் பாரதியாருக்குப் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.

‘‘சரி… இனிமேலாவது உன் மனைவியை ஒதுக்காமல் அவளை உன் இடது கையென மதி. தெய்வமெனப் போற்று” என்று தன் உபதேசத்தைச் சகோதரி நிவேதிதா தேவி நிறைவு செய்தார். குதூகலமான எண்ண அலைகளோடு அம்மையாரைச் சந்திக்க வந்திருந்தார் பாரதியார்.

சகோதரி நிவேதிதா தேவி

ஆனால், சந்திப்புக்குப் பிறகு அவரது மனம் அடியோடு மாறியிருந்தது. ஒரு குளிர்ச்சியான வெள்ளைச்சூரியன் போல் பாரதியாரின் முன் காட்சியளித்தார் சகோதரியார். அதன் அருட்கிரணங்கள் மேலே பட்டதும், பாரதியின் உள்ளக்கடலில் ஆரவாரம் அடங்கி அமைதி தோன்றியது.
உண்மை தன் உள்ளத்தை அறைந்ததை பாரதி ரசித்தார். தன் அஞ்ஞானம் அகற்றப்படுவதில் அவர் ஆனந்தம் கொண்டார். அவரின் தூய அறிவு கேள்வி கேட்கத் தொடங்கியது.

‘சகோதரியார் சொன்னது எத்துணை பெரிய உண்மை? ஏட்டில் பெரிதாகப் பெண்ணீயம் பேசும் நாம், வீட்டில் அதை உண்மையாகக் கடைப்பிடிக்கிறோமா? மனைவி என்பவளுக்கு நாம் அளிக்கும் மதிப்பென்ன?’ பாரதியாரின் நினைவலைகள் பின்னோக்கி நீண்டன. காசியிலிருந்து எட்டயபுரத்திற்குத் திரும்பி, இல்லற வாழ்க்கையைத் தொடங்கியிருந்த காலகட்டம் அது.

பணி நிமித்தம் சென்னைக்குப் போன மன்னரோடு பாரதியாரும் நண்பர்களுடன் சென்றிருந்தார். மன்னர் கொடுத்திருந்த ஐந்நூறு ரூபாயில் அகநானூறு, புறநானூறு, கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல நூல்களை வாங்கித் தீர்த்தார். ஆனால், செல்லம்மாவுக்கு ஒரே ஒரு புடைவை மட்டுமே வாங்கியிருந்தார்.

ஊருக்குத் திரும்பியதும் ஆசை ததும்பிய கண்களோடு காத்திருந்த செல்லம்மாவை அவர் பொருட்படுத்தவில்லை. அவரிடம் பதினைந்து ரூபாய்தான் மீதமிருந்தது. உடன் வந்த நண்பரின் கையிலோ 300 ரூபாய் மீதமிருந்தது. இதை அறிந்த செல்லம்மாவின் கண்கள் அழுகையில் தளும்பின. அதில் ஏமாற்றமும் வலியும் மிதந்தன. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அப்போது தான் சொன்ன சொற்களை பாரதியார் நினைவு கூர்ந்தார்.

‘‘பணத்திற்கு ஏன் ஆசைப்படுகிறாய் செல்லம்மா? அழியும் பொருளைக் கொண்டு, அழியாத கல்விச்செல்வத்தை வாங்கியிருக்கிறேன். புத்தகங்கள் வாங்கியதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. உனக்கும் திருப்திதானே?”

பாரதியாருக்கு தான் செய்த தவறு உறுத்தலையும் வெட்கத்தையும் கொடுத்தது. ‘ஆணை போல் பெண்ணும் ஓர் உயிர்தானே? அப்படியென்றால், ஆணுக்கு விருப்பு, வெறுப்பு இருப்பதைப் போல் பெண்ணுக்கும் இருக்கும்தானே? இந்த அடிப்படை உண்மை அறிவுக்கு அப்பட்டமாகத் தெரிகின்றதே! பின் ஏன் பெண்ணுக்கு விருப்பு, வெறுப்பு கூடாது என ஓர் ஆணறிவு நினைக்கிறது? இதற்கு ஆணவமன்றி, வேறென்ன காரணம் சொல்ல இயலும்? எனக்குப் புத்தகங்கள் மகிழ்ச்சி கொடுக்கும் என்று சொல்லி அவளை அடக்கி விட்டோமே! அய்யோ! அவள் மனம் என்னவெல்லாம் காயப்பட்டிருக்கும்?!

வீட்டின் சக்கரவர்த்தியாக நம்மைக் கருதிக்கொள்கிறோம். சரி, நாம் சக்கரவர்த்தி என்றால், செல்லம்மாதானே சக்கரவர்த்தினி. ஆனால், நாம் அவளை அப்படி நடத்துகிறோமா? இல்லையே. ஒரு சக உயிராக அவளை மதித்தோம். சம உயிராக மதித்தோமா? இல்லையே…
கண்ணால் பார்த்திராத பல பெண்களுக்குக் கல்வியறிவு தேவை என வலியுறுத்துகிறோம். ஆனால், வீட்டில் நம் கண் முன்னே நிற்கும் மனைவியின் உரிமைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கத் தவறுகிறோம். ஏன் இந்த முரண்பாடு ?

சரி… மனைவியரை வெளியே அழைத்து வந்தால் எல்லாம் மாறிவிடுமா? இல்லை… இல்லை. இது என்ன சிறுமைத்தனமான சிந்தனை. இப்படி யோசிக்கக் கூடாது. மனையாளைப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போதல் ஒரு வெற்றுச் சடங்கல்ல. ஆணாகிய நாம் ஒரு பெண்ணின் விருப்புக்கு மதிப்பளித்து, சமானமான உரிமை வழங்குவதன் வெளிப்பாடு அது. இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. ஏட்டில் மட்டும் மாற்றத்தை விரும்பினால் போதாது. வீட்டிலும் அது நடந்தாக வேண்டும். அப்போது தான் நாட்டிலும் அது நடந்தேறும்…’

இவ்வாறெல்லாம் நினைக்க நினைக்க பாரதியாருக்குக் கண்ணீர் பெருகியது. அதேசமயம் அவர் சிந்தனையில் முதிர்ச்சியும் தெளிவும் பிறந்திருந்தன. அவரது கரங்கள் தாமாகவே சகோதரி நிவேதிதா தேவியை வணங்கின. பாரதியாருக்கு ஆசி கூறி, சகோதரி நிவேதிதா தேவி ஓர் ஆலிலையைப் பரிசாக அளித்தார். ஞானோபதேசம் அருளிய பிராட்டியை அக்கணம் முதல் பாரதியார் தன் குரு தேவியாக வரித்துக்கொண்டார். இந்த அனுபவத்தை ஒரு அழகான கவிதையாகப் பின்னாளில் பதிவு செய்தார் பாரதியார்.

‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய் இங்குப்
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய
தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’

பின்னர் தான் வெளியிட்ட, ‘ஸ்வதேச கீதங்கள்’ நூல்களை அவர் நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பணம் செய்தார். ‘ஸ்வதேச கீதங்கள்’ முதல் பாகத்தில், ‘ஸ்ரீகிருஷ்ணன், அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்’ என்று தன் பக்தியை உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

செல்லம்மாவுடன் பாரதி

நிவேதிதா தேவியைச் சந்தித்துத் திரும்பிய பிறகு மனைவி செல்லம்மாவை அவர் நடத்திய விதம் மாறத் தொடங்கியது. செல்லம்மாவின் கண்களில் அந்த மகிழ்ச்சியை அவர் கண்டுகொண்டார். தான் கனவு கண்ட, ‘புதுமைப்பெண்’ என்பவளின் சித்திரம் அவருக்கு மெதுவாகத் துலங்கத் தொடங்கியது. கல்வி கேள்விகளில் சிறந்தவளாகவும் சம உரிமை பெறுவதில் சமரசம் அற்றவளாகவும் அவள் உருவாகியிருந்தாள்.
நிவேதிதா தேவி கடத்திய அருளாற்றலால், பாரதியாரின் இதயம் இன்னும் வீறுகொண்டு இயங்கியது. புதுமைப்பெண்ணைப் புடம் போட, அவரது பார்வை உலகநாயகிகளை நோக்கித் திரும்பியது.
(அறிவோம்…)

4 COMMENTS

 1. அற்புதமான கட்டுரை. நமக்கு தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுகள் பல.

 2. பாரதியாரை பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம்.
  பாரதியின் எள்ளுப்பெயரர் கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி எழுதும் இத்தொடரில், பாரதி காங்கிரஸ் பிரதிநிதியாக கலந்து கொண்டது பற்றி, நிவேதிதாவிடம் ஞானம் பெற்றது பற்றியும் விரிவாக அறிந்துக் கொள்ள முடிகிறது.
  செல்லம்மா பாரதிக்கு மனைவி என்ற நிலையில் இருந்து காதல் மனைவியாக பரிமளிக்கத் தொடங்கியக் காலத்தை மிக அழகாக எழுதியுள்ள கவிஞர் நிரஞ்சன் பாரதி க்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள் பாராட்டுகள்.

  செல்லம்மா பாடல்கள் தானே கண்ணம்மா பாடல்களாகின.
  மனைவியை கணவன் புரிந்துக் கொண்டான் எனும் போது பெண் அடையும் மகிழ்ச்சிக்கு தான் எல்லை ஏது..

  பெண் தந்த ஞானத்தாலன்றோ பாரதியார் பெண்ணுக்கு ஞானம் வைத்தான் என்று பாட முடிந்தது..

  வாழ்க பாரதி
  வாழ்க பாரதம்
  தொடரட்டும் கவிஞர் நிரஞ்சன் பாரதி எழுத்துகள்.

 3. ஏட்டில் இருப்பவற்றை நிறைவேற்ற வேண்டுமெனில் வீட்டில் இருந்து தொடங்கினால் மட்டுமே சாத்தியம். அருமை!!

நிரஞ்சன் பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன். கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர். MYTAMILGURU என்ற இணைய வழி தமிழ்ப்பள்ளியை நண்பர்களுடன் இணைந்து நிறுவி உலகெங்கும் உள்ள மாணாக்கர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். இதுமட்டுமல்லாது "பசுமைக் கவிஞன்" என்ற YOUTUBE CHANNEL ஐயும் நடத்திவருகிறார். படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும்தான்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...