0,00 INR

No products in the cart.

இனிமே இப்படித்தான்…!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி! பரிசுக்கதை – 12

கதை : தனபாக்கியம்
ஓவியம் : சேகர்

‘இவன் இப்படியிருக்க மாட்டானே… ஏதோ மிஸ்ஸாகுதே’ என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டு வந்தாள்.

“நேத்து நீ வரைஞ்சத தப்புன்னு மிஸ் சொல்லிட்டாங்கப்பா.”

“ஏனாம்..‌. சரியாதான இருக்கு.”

“அதான் தப்பு. நான்‌ வரைஞ்ச மாதிரி வரைஞ்சு இருக்கணும். நீ அப்படியே இன்ஜினியர்‌ மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா… மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா? இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு. ஆனா, நான்‌ வரைஞ்ச மாதிரி வரைஞ்சு கொடு. ஓகே” என‌ அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் வொர்க் செய்தார்கள்.

தனபாக்கியம்

“ஏய் மீனா… நீ வர வர ஒழுங்கா ஹோம் வொர்க் செய்யறதே இல்லை. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிற.”

“சும்மா உளறாத… மூன்றாம் வகுப்பு படிக்கிற பிள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம, வீடு வரைஞ்சு எடுத்துட்டு வா… மயில் வரை, குயில் வரைன்னு சொன்னா… வேற யாராச்சும்தான் வரைஞ்சு தருவாங்க. அதுக லெவலுக்கு சொல்லித் தரணும்.”

“போதும்… போதும். ஏற்கெனவே உன் பொண்ணு வாய், திருச்சி வரைக்கும் பேசும். இதுல நீ வேற சொல்லிக்கொடு. போய் காஃபியை குடி” என விரட்டினாள்.

“சம் போட்டுட்டியா? எங்க காட்டு” என அவள் செக் செய்ய, சக்தி அறையை விட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்துப் புரட்டத் தொடங்கினான், காஃபியின் துணையோடு.

“எங்கயாச்சும் போவோம்டா” என சசி அவனை நெருங்கி அமர்ந்தபடி சொன்னாள்.

“சொல்லு. சண்டே போலாம்… எங்க?”

“சண்டே வேணாம். அது யூஷ்வலா போறதுதானே… நாளைக்குப் போலாம்.”

“நாளைக்கா… என்ன விசேஷம்?”

“போடா… விசேஷம்னாதான் கூட்டிட்டுப் போவியா… போ… போ” என எழுந்து உள்ளே சென்றாள். தொடர்ந்து பின் சென்றான் சக்தி.

“சொல்லு… என்ன பிரச்னை?”

“ஒண்ணுமில்லை. மனசு ஒரு மாதிரி இருக்கு.”

“ஓகே… சாரி. நாளைக்கு பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய் சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்தி விட்டுட்டு வந்துடுறேன்… ஓகே.”

“ஒண்ணும் வேணாம்.”

“நோ நோ… இது சக்தி ஆர்டர். பாப்பாவுக்கு மட்டும் மதியம் செய். நாம வெளிய பாத்துக்கலாம்” எனச் சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்குச் சென்றான்.

சசிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

‘நாளைக்குக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கான். முன்னாடி எல்லாம் வேலை வேலைன்னு உயிர விடுவான். இப்ப டானு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடறான். குழந்தை மீனாவோட நேரம் செலவழிக்கிறான். ஹோம் வொர்க் எல்லாம் பண்ணறான். ஞாயிற்றுக்கிழமை விளையாடப் போனாலும், பன்னிரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துடறான். எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூட்டிட்டுப் போறான். ஆனா, வேலை முன்னாடிக்கு இப்ப நிறைய எடுத்திருக்கான். எல்லாம் கேட்கணும். வீட்டுல கேட்டா குதிப்பான்’ என அவள் மனதுக்குள் நாளைக்கான தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.

மறுநாள்…

“இதென்ன… ஹோட்டல் செமையா இருக்கு?” என ஆச்சரியமாகக் கேட்டாள்.
சிரித்தபடி சொன்னான், “இதுக்கு பிளானிங் நாங்க. ஆனா, வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி.”

“ஏன் அப்படி?”

“அவங்க சொன்ன டைம்க்குள்ள எங்களால முடிக்க முடியல. அதனால பிளானிங் மட்டும் நாங்க.”

“செமையா இருக்கு… நீ போட்ட பிளானா!”

“நான்‌ மட்டும் இல்லை; எல்லாரோட உழைப்பும் இருக்கு!”

ஓவியம் : சேகர்

மெனு கார்டில் பார்த்து ஏதோ சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே, மடியில் மூடும் டவலும் வந்தது.

“சரி சொல்லு… என்ன பிரச்னை?” என சசியைப் பார்த்துக் கேட்டான்.

“நீதான் சொல்லணும்.”

“நான் என்ன சொல்ல…”

“ஒரு மாசமா சீக்கிரமா வீட்டுக்கு வர… அடிக்கடி அவுட்டிங்…”

“ஒண்ணுமில்லையே! எப்பவும் போலத்தான் இருக்கேன்.”

“இல்ல… ஏதோ சரியல்ல. என்னன்னு சொல்லு!”

“என்னத்த சொல்ல…”

“ஏதாச்சும் சின்ன வீடு செட் பண்ணிட்டியா… அத மறைக்கத்தான் இப்படிச் கொஞ்சுறியா?”

அவன் சிரித்தான். ஆனால், அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்… “நீயா கேட்ப… அப்ப சொல்லணும்னுதான் இருந்தேன்.”

“என்னடா… ஏதாச்சும் பிரச்னையா?”

அவன் இல்லையென தலையாட்டியபடியே, அலுவலகப் பையைத் திறந்தான். ஒரு டைரியைத் திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

“என்ன இது…?”

“படி” எனச் சொல்லிவிட்டு பின்னால் நோக்கி அமர்ந்தான். அவள் படிக்கத் தொடங்கினாள்.

அன்புள்ள மகனுக்கு,
கண்டிப்பா என்னைக்காச்சும் இந்தக் கடிதம் உன் கையில கிடைக்கும்னு நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா, உனக்கு அம்மாவா இந்தக் கடிதம் எழுதறேன். ரொம்ப பெரிய கடிதம், பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சு மீதிய இன்னொரு நாள் படிக்காத.
உங்கப்பாவ கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாவுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. கன்ஸ்ட்ரக்க்ஷன்ல இன்னும் வளர்ந்தாரு. அப்புறம் உன் தங்கச்சி… வேலைய விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சிட்டு இருந்தேன். உனக்குதான்‌ தெரியுமே… அப்பா எப்படி பிசினு.

கல்யாணம் ஆன ஒரு வருஷம்தான் கனவு வாழ்க்கை. அதுக்கப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக அவர் உழைச்சுட்டு இருந்தார். நீங்க ரெண்டு பேரும்தான் எனக்குத் துணை. நாமதான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்குப் போய்ட்டீங்க. நீங்க வரதுக்கு காத்திட்டு இருப்பேன்.

ஸ்கூல் விட்டு வந்ததும் கதை கதையா சொல்லுவீங்க. அதுல பாதி பொய் இருக்கும். அதெல்லாம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க. அம்மாகிட்ட சொல்ல எதுவும் இல்லாம போச்சு. ஆனா, உங்ககிட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு. இப்போ வெளியே போகணும்… இப்படி வெளியே போகணும்னு… ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்…

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்பிட்டு வரீங்களா, சாப்பிடாமா வரீங்களானு பார்க்கக் காத்திட்டு இருப்பேன். நீங்க எக்ஸ்ட்ரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு பிசி.

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்திட்டாரு. அவருக்கு டைம்க்கு மாத்திரை கொடுக்கணும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணணும்னு காத்திட்டு இருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பார்த்தியா?

அப்புறம் உன் தங்கச்சி கல்யாணம். இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா நினைச்சாதான் பேச முடியும். ஏன்னா, அவ அங்க காத்திட்டு இருக்கா, ஒரு அம்மாவா…

உனக்குச் சொல்லவே வேண்டாம். அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே, நீ ரொம்ப பிசியாகிட்ட… நீ கடைசி ஐந்து வருஷத்துல அம்மாகிட்ட பேசினத கொஞ்சம் யோசியேன். சாப்டீங்களா… மாத்திரை போட்டாச்சா… ஊசி போட்டாச்சா… இவ்வளவுதான்.

ங்கப்பா வாழ்ற காலத்துல பிசியா இருந்தாரு. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் எதுவும் இல்லாம இருந்தாரு. ஆனா, மாத்திரைக்குக் காத்திட்டு இருந்தாரு. என்கிட்ட பேசறதுக்கு அவருக்கு விஷயமே இல்லை. பேப்பர் படிச்சாரு… புக் படிச்சாரு… தூங்கினாரு. ஏன்னா, பேச வேண்டிய காலத்துல பேசல. பேச நேரமிருந்த காலத்துல பேச விஷயமில்லை… அனுபவமில்லை.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேன்னு யோசிக்கிறயா? என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாகிட்ட சொல்லி புரிய வைக்க முடியல. ஆனா, நீ அடுத்த ஜெனரேஷன். நீ கொஞ்சம் யோசிப்ப. அதான் உன்கிட்ட சொல்றேன். நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல. சொன்னாலும் நீ கேட்டிருக்க மாட்ட… அதனாலதான் இப்ப சொல்றேன். வீட்டுல ஒரு பொண்ணும் மனைவியும் உனக்காகக் காத்திட்டு இருக்காங்க.
உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்குத் தெரியாது. ஆனால், அப்பா கூட அங்க போகணும்… இங்க போகணும்கிற எந்த ஆசையும் நிறைவேறல. அப்பா கடைசி காலத்துல சும்மா இருந்தப்ப, அவர் பேசுனத அவளால கேட்க முடியல. ஏன்னா… அவ வேற வீட்டுக்குப் போய்ட்டா… பாத்தியா வாழ்க்கைய?

உன் பொண்ணுக்கு நீ அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத? உன் மனைவிய அவளோட மகனுக்குக் கடிதம் எழுத வச்சிடாத. இன்னிக்கு மூணு வேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்னை இல்லை. கொஞ்சம் குறைச்சுக்கோ. சீக்கிரமா வீட்டுக்கு வா… பொண்டாட்டிகிட்ட, புள்ளைங்ககிட்ட பேசு. அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும்போதே கொஞ்சம் நேரம் கொடு. ஏன்னா, அன்புக்காகக் காத்திட்டு இருக்கிறதும், ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?
செய்வேனு நம்புறேன்.
-அன்பு அம்மா.

டிதத்தைப் படித்து முடித்தபோது, சசியின் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆர்டர் செய்திருந்த இரண்டு பலூடா ஐஸ்கிரீம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் கைகளை அவன் கைகளோடு இணைத்துக் கொண்டாள்.

ஐஸ்கிரீம் கொஞ்சம் கொஞ்சமாய் உறுகத் தொடங்கியது. சக்தி சிரித்தபடி சாப்பிடத் தொடங்கினான். இனிமே அப்படித்தான்… இனி, அங்கே அன்புக்காகக் காத்திருக்க அவசியமில்லை!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...