கவிதை
– சுசீலா அரவிந்தன்
மண்ணுலகில் மானுடமாய் அவதரித்த பிறப்பு
மன்னவரும் பணிந்திட்ட மாபெரும் பிறப்பு
மனிதரிலே அன்பினையே விதைத்திட்ட பிறப்பு
மன்னிப்பின் மறு தோன்றலான பிறப்பு…
விண்ணுலக வேந்தரின் விசித்திரப் பிறப்பு
வினையெல்லாம் தீர்த்திடவே உதித்திட்ட பிறப்பு
விண்ணவரும் துதித்திடவே வந்திட்ட பிறப்பு
விந்தை தரும் சுகத்தினையே அருள வந்த பிறப்பு…
ஆத்துமாவை தேற்ற வந்த அதிசயப் பிறப்பு
அமைதியை நிலைநாட்டவே ஆகிவந்த பிறப்பு
ஆனந்தம் அள்ளித்தரும் ஆனந்தப் பிறப்பு
ஆமென் என்ற சொல்லின் அர்த்தமான பிறப்பு…
எளியோரும் ஏற்றம் பெற வந்துதித்த பிறப்பு
எவ்வுயிரும் தன்னுயிராய் நினைத்திட்ட பிறப்பு
எங்கும் அருள் மட்டுமே நிறைத்திட்ட பிறப்பு
ஏங்கும் உயிர்களுக்கோர் ஏகாந்த பிறப்பு...
பாரங்களைச் சுமக்க வந்த பார்போற்றும் பிறப்பு
பாவங்களைத் தீர்க்க வந்த பவித்ர பிறப்பு
பாதகரை திருத்த வந்த பாலகன் பிறப்பு
பரிசுத்தம் பெறுவதே மனிதத்தின் சிறப்பு…
இயேசு பிரான் போதனைகள் அனைத்தும் சிறப்பு
இயேசு பிரான் அன்போ சிறப்பிலும் சிறப்பு
பாசத்தைப் பொழிவதே உயிர்களின் சிறப்பு
பார்போற்ற வாழ்வதே மானுடரின் சிறப்பு…