0,00 INR

No products in the cart.

கோப கோபிகாஸ்ரீ!

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 8

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்

‘மேடம்கிட்ட இப்பப் போக வேண்டாம். அவங்க அமைதியாக, ரொம்ப சாந்தமாக இருக்காங்க’ என்று யாராவது எச்சரித்தால் எப்படி இருக்கும்? ஆனால், எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கும் கோபிகாஸ்ரீ சாந்தமாகத் தென்பட்டால் இப்படித்தான் சொல்வார்கள். அது புயலுக்கு முன் அமைதி என்பதால்!

அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் கோபிகாஸ்ரீ அங்கு மட்டுமல்ல; வீட்டிலும் எப்போதும் யாரிடமாவது கோபப்பட்டு கொண்டுதான் இருப்பாள். கோபிகாஸ்ரீ என்ற அவளது பெயரைப் பலரும், ‘கோபஸ்ரீ’ என்றே குறிப்பிடுவதற்கு அதுதான் காரணம்.

‘அம்மா, எதுக்கும்மா எப்பவுமே கோவமா இருக்கே?’ என்று அவளது மகள் அவ்வப்போது கேட்பதுண்டுதான்.

எப்போதாவது கொஞ்சம் மூடு இருந்தால் அந்த நேரத்தின் கோபத்திற்கான காரணத்தை அவள் கோபத்துடன் கூறுவாள். அப்படி இல்லை என்றால், ‘எதுக்காக கோவமாக இருக்கேன்னு கூட தெரிஞ்சுக்க முடியலையே உனக்கு. அதனால்தான் கோவமா இருக்கேன்’ என்று தன் கோபத்தை அதிகரித்துக் கொள்வாள்.

ஒருமுறை அவளது உறவினர் ஒருவர் அவளைப் பாராட்டுவதாக எண்ணிக்கொண்டு, ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்னு சொல்வாங்க’ என்று கூறித் தொலைக்க, ‘‘அப்போ… கோபம் வராத போதெல்லாம் எனக்கு நல்ல குணம் இருக்காதுன்னு அர்த்தமா?” என்று கோபப்பட்டாள்.

‘சிறந்த பெண் தொழிலதிபர்கள்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் இடம் பெறுவதற்காக ஒரு முறை அவள் அந்தச் சானலுக்குச் சென்றிருந்தாள். அதில், ‘உங்கள் வெற்றிக்கான காரணங்கள் எது?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட, கோபஸ்ரீயின் முகம் ஏன் சிவக்கிறது என்பது பலருக்கும் புரியாமல் போனது. கத்தரிக்கோலால் வெட்டுவதைப் போன்ற ஒரு அபிநயத்தை அவள் புரிந்ததும் இயக்குனர், படப்பிடிப்பை தற்காலிகமாகக், ‘கட்’ செய்தார். ‘காரணங்கள் எது’ என்ற இலக்கணப் பிழை உள்ள கேள்விக்கு பதில் சொன்னால், அது பெண் தொழிலதிபர்களுக்கு அவமானம் என்று கோபத்துடன் விளக்கம் கூறினாள்.

‘நான் ஒரு பெண்தான். ஆனாலும், ஒளவையார் எனக்குப் பிடிக்காது. பாரதிதான் பிடிக்கும்’ என்றும் அந்தப் பேட்டியில் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். ‘ஆறுவது சினம்’ என்று கூறிய ஒளவையாரை அவளுக்குப் பிடித்திருந்தால்தான் ஆச்சரியம். ‘ரௌத்திரம் பழகு’ என்று கூறிய பாரதியாரை அவளுக்குப் பிடிக்காமல் இருந்தால்தான் வியப்பு.
அந்தப் பேட்டியின்போது, ‘உங்களுக்குப் பிடித்த தெய்வங்கள் யார் யார்?’ என்று கேட்டபோது, பெயர்களை மட்டும் குறிப்பிடாமல், அதற்கான காரணங்களையும் கூறினாள்.

‘பழனி முருகனைப் பிடிக்கும். மாம்பழம் கிடைக்கலைன்னவுடனே கோபத்துடன் மலை ஏறியவன் இல்லையா? திருச்செந்தூர் முருகனையும் பிடிக்கும். சூரனை கோபத்தோடு சம்ஹாரம் செய்தான் இல்லையா? மற்றபடி காளி எப்போதுமே எனக்கு இஷ்ட தெய்வம்.’ இப்படிக் கூறும்போது, அவள் முகம் சிவக்க, தன் கையில் திரிசூலம் இருப்பது போல வேறு அபிநயம் பிடித்தாள்!

ஓவியம் : சுதர்ஸன்

என்னதான் நியாயமான காரணங்களுக்காக என்றாலும், அடிக்கடி கோபப்படுபவர் களுக்கு உடல் நலம் கெடும். மன நலமும் கெடும். சுற்றியிருப்பவர்கள் ஆத்மார்த்தமான நட்போடு இருக்க மாட்டார்கள். அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகும். தலைச்சுற்றல் ஏற்படும். களைப்பு மேலிடும். நாளடைவில் இதயம் கூட பாதிப்படையலாம்.

கோபப்படுபவர்களுக்கும் இதெல்லாம் தெரியும் என்றாலும், அவர்கள் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், நமக்குக் கோபம் வருவது நம் கையில் இல்லை. ஆனால், வந்துவிட்ட கோபத்தை எவ்வளவு நேரம் நாம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது முழுக்க முழுக்க நம் கையில்தான் இருக்கிறது.

கோபித்தால்தான் வேலை நடக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போதுகூட கோபித்துக் கொள்வதை விட, கோபம் வந்தது போல் நடிப்பதுதான் புத்திசாலித்தனம். கோப மேலாண்மை வகுப்புகள் (anger management classes) உள்ளன. அவற்றில் சேர்ந்து பலனடையலாம்.

பொதுவாக, சிலர் கோபப்படமாட்டார்கள். ஆனால், விவாதம் என்று வந்துவிட்டால் தரமிழந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவார்கள். அவர்களுக்கு இதுபோன்ற வகுப்புகள் மேலும் பலனளிக்கும். மேலை நாடுகளில் கடும் கோபம் காரணமாக குற்றம் இழைப்பவர்களுக்கு இதுபோன்ற வகுப்புகளை நீதிமன்றங்களே பரிந்துரைப்பது உண்டு.

கோபத்தை நாமே எப்படிக் குறைத்துக்கொள்வது என்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. எது உங்களுக்குப் பொருந்தும் என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முடிந்தால் அந்த இடத்தை விட்டு சற்று நகரலாம். கண்களை மூடிக்கொண்டு மனதை அடக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். ஒன்று, இரண்டு என்று எண்ணலாம். (அதற்காக ரொம்பக் கோபம் என்றால் எண்ணிக்கொண்டே போகக் கூடாது). கோபமூட்டியவர் உங்களுக்குக் கடந்த காலத்தில் என்னென்ன நன்மைகளைச் செய்தார் என்பதை நினைத்துப் பார்த்தால் அவரை மன்னிக்கத் தோன்றும். உங்கள் வாழ்வில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை மனதில் கொண்டு வரலாம். கோபம் குறைந்து புன்னகை மலரும்.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...