நவக்கயிலாயத் திருத்தலங்கள்!

நவக்கயிலாயத் திருத்தலங்கள்!
Published on

மார்கழி மாதத்தில் நவக்கயிலாயத் திருத்தலங்கள் எனப் போற்றப்படும் ஒன்பது திருத்தலங்களை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
அவை :

பாபநாசம் : நவக்கயிலாயத் தலங்களில் முதலிடத்தைப் பெறுகிறது அருள்மிகு பாபநாசநாதர் உடனுறை உலகம்மை திருக்கோயில். அகஸ்திய முனிவரின் மாணவரான உரோமேச முனிவர் நவக்கிரக தோஷத்தால் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அகஸ்தியர் சிவபெருமானை நோக்கித் தவம் புரியும்படி கூற, உரோமேச முனிவர் கடுந்தவம் புரிந்தார். சிவபெருமான் தாமிரபரணி பாண தீர்த்தத்தில் இருந்து தான் அனுப்பி வைக்கும் ஒன்பது மலர்களைப் பின்தொடர்ந்து செல்லுமாறும், அந்த ஒன்பது மலர்களும் தனித்தனியாக தங்கும் இடத்தில் சிவலிங்கம் நிறுவி தன்னை வழிபடும்படியும், அப்படி வழிபட்டால் முனிவருக்கு ஏற்பட்ட நவக்கிரக தோஷம் நீங்கும். இதேபோல், பக்தர்கள் தம்மை வழிபட்டால் நல்லன எல்லாம் கூடும் என்றும் அருளினார். சிவபெருமான் கூறியதுபோல் ஒன்பது மலர்களும் ஒன்பது இடங்களில் தங்கின. அந்த இடத்தில் உரோமேச முனிவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு நவக்கிரக தோஷம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார். அப்படி பாண தீர்த்தத்தில் முதல் மலர் தங்கிய இடமே முதல் கயிலாயத் தலமான பாபநாசம்.

சேரன்மாதேவி : இரண்டாவது மலர் தங்கிய திருத்தலம் சேரன்மாதேவி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சுவாமி அம்மைநாதர். இறைவி அம்பாள் ஆவுடை நாயகி. இத்தலம் தென்னாட்டு சிவத்தலங்களுள் மிகவும் சிறப்பு பெற்றது.

கோடகநல்லூர் : மூன்றாவது தலமான கோடகநல்லூரில் அருள்பாலிப்பவர் இறைவன் சுவாமி கயிலாயநாதர். அம்பாள் சிவகாமி அம்மை. தரிசிக்க கோடி புண்ணியம் தரும் திருத்தலம் இது. இங்குள்ள இறைமூர்த்தங்களின் அழகு தரிசனம் அற்புதமானவை.

குன்னத்தூர் : நான்காவது திருத்தலமான இங்கு, இறைவன் கோத பரமேஸ்வரரும், அம்பிகை சிவகாமியும் அருள்பாலிக்கிறார்கள். தடைகள் நீங்கி, முன்னேற்றம் அருளும் திருத்தலம் இது.


முறப்பநாடு : ஐந்தாவது கயிலாயமாகப் போற்றப்படும் முறப்ப நாட்டில் இறைவன் கயிலாயநாதரும் அம்பாள் சிவகாமியும் அருள்புரிகிறார்கள். இந்த முறப்பநாடு இறைவனை தரிசித்தால் பிறவித் துன்பங்கள் தீரும்.

ஸ்ரீவைகுண்டம் : ஆறாவது கயிலாயமாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் சிறந்த வைணவத் தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு அருள்பாலிப்பவர் இறைவன் கயிலாயநாதர். இறைவி சிவகாமி.

தென்திருப்பேரை : ஏழாவது தலமான இத்தல இறைவன் கயிலாயநாதர். அம்பாள் அழகிய பொன்னம்மை. அழகு கோலத்துடன் காட்சியருளும் இத்தல இறைவன் மற்றும் இறைவியை வேண்டி வணங்குவோர்க்கு உத்தியோக உயர்வும், வியாபாரப் பெருக்கமும் உண்டாகும்.

ராஜபதி : எட்டாவது கயிலாயம் இது. இங்குள்ள சுவாமி கயிலாயநாதரையும், அம்பாள் சவுந்திரநாயகியையும் தரிசிக்க, துன்பங்கள் தொலையும்.

சேர்ந்தபூமங்கலம் : ஒன்பதாவது திருத்தலமான இங்கு, இறைவன் கயிலாயநாதர், இறைவி சௌந்தர்யநாயகி அருள்பாலிக்கிறார்கள். முக்தி தரும் திவ்ய திருத்தலம் இது. சிவபெருமான் வழிகாட்டிய இந்த ஒன்பது நவக்கயிலாயங்களையும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும். மேலும், கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசித்த பாக்கியமும் கிடைக்கும். மார்கழி மாதம் சிவபெருமானை திருவெம்பாவை பாடி வணங்குகிறோம். ஆருத்ரா தரிசனமும் கிடைக்கிறது. சிவனை வழிபட்டு அருள் பெறுவோம்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com