சிங்கப்பெண் காவலர்கள்!

சிங்கப்பெண் காவலர்கள்!
Published on

குற்றம் – வழக்கு – விசாரணை – 1

– பெ. மாடசாமி
ஓவியம் : தமிழ்

விசாரணை என்பது ஒரு கலை!

பெ. மாடசாமி (முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர்)
பெ. மாடசாமி (முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர்)

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்…
ண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வகிதா பேகம் வழக்குக் கோப்பு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தன்னோடு வந்த பதினைந்து வயதுள்ள பெண்ணைக் காட்டி, "இவள் என்னுடைய மகள் சுபிக்‌ஷா. பள்ளியில் படிக்கிறாள். கர்ப்பமாக இருக்கிறாள். இதுவரை என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

இன்றுதான் சொல்கிறாள். அவள் கர்ப்பத்திற்குக் காரணமானவர் மீது உடனே நடவடிக்கை எடுங்க மேடம்" என்று சற்று கோபமாகவே சொன்னார்.

சுபிக்‌ஷாவின் தோற்றத்தில் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரிந்தது. சுபிக்‌ஷாவை விசாரித்தபோது, அவளை பெரும்பாலும் பேசவே விடாது அவளது அம்மாவே பேசினார். சுபிக்‌ஷாவின் பேச்சு அவளுடைய அம்மா சொல்லிக் கொடுத்துப் பேசுவது என்பது விசாரணையில் தெரிந்தது.

சுபிக்‌ஷாவின் புகாரிலிருந்து, குற்றவாளி அவள் படிக்கும் பள்ளியில் பதினாறு வயதான சக மாணவன் என்பது தெரிந்தது. கர்ப்பமாக இருப்பது உண்மை. ஆனால், பெண்ணின் தாயார் நடவடிக்கையில் உண்மை சற்று ஒளிந்திருப்பது போன்று தோன்றியது.

புகார் கொடுத்தவர் பதினெட்டு வயதிற்குட்பட்டவர் என்பதால் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரில் கண்ட எதிரியுமே சிறுவன்தான். சுபிக்‌ஷாவின் அப்பா அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டு பெறுகிறவரின் மகன்தான் சிறுவன். சிறுவனோ, தனக்கும் சுபிக்‌ஷாவிற்கும் சம்பந்தமே இல்லை என்று உறுதியாகக் கூறுகிறான்.

அவர்களுக்கிடையே உள்ள தொடர்பு பற்றிய சாட்சிகளோ, சாட்சித் தடயங்களோ புகார்தாரர் தரப்பில் இல்லை. கர்ப்பத்திற்குக் காரணம் என்பது சுபிக்‌ஷாவிற்கு பிறக்கப்போகிற குழந்தையின் மரபணு சோதனை மூலம் மட்டுமே நிரூபிக்க முடியும்.

பையனை கைது செய்வதில் சில நடைமுறைச் சிரமங்கள் இருந்தாலும், சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறுவர் விடுதியில் மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டான். மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி அவன் ஆண்மைத் தன்மை கொண்டவனா என்பதற்கான விடையும் பெறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் சுபிக்‌ஷா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee) சம்பந்தப்பட்ட விடுதியில் வைக்கப்பட்டாள். நடைமுறை தாமதத்தால் அவளுடைய மருத்துவப் பரிசோதனை முடிய ஒரு வார காலமாகிவிட்டது. பொதுவாக, இதுபோன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பெண் மற்றும் பெண்ணின் பெற்றோர் ஆகியோரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு, பெண்ணை எங்கே வைப்பது என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும்.

இதற்கிடையில் சிறுவன் மூன்று நாள் காவல் முடிந்து வெளியில் வர, பாதிக்கப்பட்ட தன் மகளோ விடுதியில் இருக்கிறாள்; பாதிப்பை ஏற்படுத்தியவன் எப்படி வெளியே வரலாம் என்கிற ஆதங்கத்தில் போலீசார், குற்றவாளிக்கு சாதகமாகச் செயல்படுகிறார்கள் என்று சுபிக்‌ஷாவின் தாயார் நினைத்துவிட்டார். அதனால், அவருக்கு வேண்டிய சிலரின் தலையீட்டால் ஆய்வாளர், எதிரிக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் என்று ஊடகங்களில் Flash News ஆக வெளிவந்தது.

ய்வாளரைப் பொறுத்தமட்டில் Police Duty Meet என்று சொல்லப்படுகிற விஞ்ஞானபூர்வமான விசாரணை போட்டியில் கலந்துகொண்டு, அகில இந்திய அளவில் இரண்டு முறை தங்கப்பதக்கம் பெற்று, தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். ஆகவே, இந்த வழக்கில் எப்படி விசாரணை செய்ய வேண்டும் என்பதில் நடைமுறை தடைகளையும் எதிர்ப்புகளையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 'போற்றுவார் போற்றட்டும்; புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்; நாம் தொடர்ந்து செய்வோம்' என விசாரனையைத் தொடர்ந்தார்.

சுபிக்‌ஷாவுக்கு இளம் வயது என்பதால், அவளால் பிள்ளையைப் பெற்றெடுக்க இயலுமா? என்பதில் அவளுடைய விருப்பத்தை அறிந்து நீதிமன்றம் முடிவு எடுப்பதுண்டு. ஆனால், இவ்வழக்கில் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான கால அளவை அவள் தாண்டிவிட்டாள்.

சுபிக்‌ஷாவின் அனைத்து மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவள் விடுதியிலேயே தங்க விரும்பினாள். அவருடைய தாயார் தன் மகளை தன்னிடம் அனுப்பக் கோரி, நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயல, நீதிமன்றம் சுபிக்‌ஷாவுக்கு அறிவுரை வழங்கி தாயின் பாதுகாப்பில் அவளை அனுப்பி வைத்தது.

வெளியே வந்த சுபிக்‌ஷா, ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அவள் தன்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறாள். ஆனால், சொல்ல முடியவில்லை என்பது மட்டும் ஆய்வாளருக்குப் புரிந்தது. 'அரவிந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாகிவிட்டது. உனக்குக் குழந்தை பிறந்த பின்பே அவன் குற்றவாளியா இல்லையா என்பதை நிரூபிக்க முடியும். அதுவரை சற்று பொறுமையாக இரு. குழந்தை பிறந்த பின்பு நீ பழையபடி படிப்பைத் தொடரலாம்' என்று அவளுக்கு ஆறுதலும் தைரியமும் சொன்னார்.

வழக்கின் முடிவு, 'பூமிப்பந்தில் புதிதாக வர இருக்கிற சிசு'விற்காகக் காத்திருந்தது. ஒரு நாள் ஆய்வாளர், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது சுபிக்‌ஷா தூக்குப் போட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள் என்ற தகவல் கிடைத்தது.

சுபிக்‌ஷா இறந்த நிலையில், அவளுடைய கர்ப்பத்தில் முழுமையான வளர்ச்சியை எட்டாத சிசுவை (Foetus) மரபணு சோதனை செய்வதற்காக, மிகப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. வெளியில் எடுக்கப்பட்ட சிசுக்கருவை, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக – 4 டிகிரி குளிர்ச்சியில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஓவியம் : தமிழ்
ஓவியம் : தமிழ்

ரபணு பரிசோதனை வசதி தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், முன்பு ஹைதராபாத்துக்கு அனுப்ப வேண்டும். ஏற்கெனவே நடந்த, இதுபோன்ற வழக்கு ஒன்றில் சிசுவை சோதனைக்கு அனுப்புவதற்கு முன்பு அரசு மருத்துவமனை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோது மின்தடை ஏற்பட்டதால் அதிலிருந்து கிளம்பிய துர்நாற்றம் வார்டு முழுவதும் பரவியதில் நோயாளிகளுக்கு பெரிய பிரச்னையாகிவிட்டது. மருத்துவமனையில் இருந்த சில பொறுப்பானவர்கள் உதவியுடன் நிலைமை சமாளிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள அதிகாரி சாட்சியம் அளிக்க வரவேண்டுமானால் அவருக்கு விமான பயணச்சீட்டு, சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனைகள் வேறு. பரிசோதனைக்கான கட்டணம் தனி.

இந்த நிலையெல்லாம் இன்றைக்கு மாறி, தமிழகக் காவல்துறை நவீனமானதில் மகிழ்ச்சிதான். இவ்வழக்கில் சிசு கருவைப் பாதுகாக்க, ஸ்டேன்லி பிரேதப் பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்வாளர் சென்றபோது, பெண் தரப்பில் அவரைப் பிரேத பரிசோதனைக் கூடத்திலிருந்து வெளிவர முடியாத அளவிற்குப் பிரச்னைகள் ஏற்படுத்தினர். பொறுமை, பொறுப்பு, நிதானம், கடமை, கட்டுப்பாடு என விசாரனையில் தங்கம் வென்ற சிங்கமான ஆய்வாளர் அமைதி காத்து, சிசு பரிசோதனைக் கூடத்திற்கு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டார்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுபிக்‌ஷாவின் கர்ப்பத்திற்கு சிறுவன் காரணமில்லை என்கிற மரபணு சோதனையின் அறிக்கை வந்தது. குற்றம் செய்யவில்லை என்பதை தைரியமாக எதிர்கொண்ட சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

சுபிக்‌ஷாவிற்கு மட்டுமே சிசுவிற்கான காரணம் தெரியும் என்கிற நிலையில், குற்றவாளி கூண்டில் நின்றவர் நிரபராதி என்பதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. வழக்கை சரியான முறையில் விசாரனை செய்த ஆய்வாளருக்கு சிறந்த விசாரனைக்காக வழங்கப்படுகிற அரசின் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. நாமும் அவரைப் பாராட்டுவோம்.
(அடுத்தது…)

(உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது.)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com