இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் ரஜனி பண்டிட்!

இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் ரஜனி பண்டிட்!
Published on
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் தனியார் புலனாய்வாளர் ரஜனி பண்டிட். இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று புகழப்படுகிறார். இவர் தன் 22 ஆண்டு துப்பறியும் அனுபவத்தில் எண்பதாயிரம் வழக்குகளை துப்புத் துலக்கி தீர்த்துள்ளார்.

1962 ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் பால்காரில் பிறந்த ரஜனி பண்டிட் மர்ம நூல்களையும் துப்பறியும் கதைகளையும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவருடைய தந்தை சாந்தாராம் பண்டிட் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

ரஜினி மும்பை ரூபரேல் கல்லூரியில் மராத்தி இலக்கியத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி மாணவப் பருவத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பதில் ரஜினிக்கு ஆர்வம் வளர்ந்தது. தன் கல்லூரித் தோழி மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டபோது, கழுகுக் கண் கொண்ட ரஜினிக்கு அவள் யாராலோ சாதகமாகப் பயன்படுத்தப்படுகிறாள் என்று சந்தேகம் வந்தது. ரஜினி, தோழியின் பெற்றோரை அணுகினார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. ரஜனி புகைப்பட ஆதாரங்களை வழங்கிய பின் தோழியின் அப்பா நடவடிக்கை எடுத்து தன் பெண் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க முன்வந்தார். இந்த வழக்கு ரஜினிக்கு தன்னம்பிக்கை அளித்தது.

ரஜினியின் விசாரணைத் திறன் குறித்து அவரது தந்தைக்கு நம்பிக்கை இருந்தபோதிலும் புலனாய்வாளர் பணி பெண்களுக்கானது அல்ல என்று எண்ணினார். ஆனால் ரஜினிக்கு அவர் தாயிடமிருந்து முழுமையான ஆதரவும் ஊக்கவும் கிடைத்தது. தானும் துப்பறிவாளராக வேண்டும் என்று துடிதுடித்தார் ரஜினி. பெண் டிடெக்டிவ்களுக்கு இது மிகவும் ஆபத்தான தொழில் என்றார் தந்தை. ஆனால் பிடிவாதமாக ரஜினி அதில் ஈடுபட்டார். தந்தையின் உதவியோடு கிரிமினல் வழக்குகளை ஆராயத் தொடங்கினார். தன் தந்தைக்குப் பிடிபடாத வழக்குகளைக் கூட எளிதாக கண்டறிந்தார் ரஜினி. தந்தைக்கு மகள் மேல் நம்பிக்கை பிறந்தது.

பட்டப்படிப்பை முடித்த பிறகு ரஜினி ஒரு அலுவலகத்தில் எழுத்தராக பணியைத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் நேர்ந்தது. ரஜினியின் அலுவலகத் தோழி தன் குடும்பக் கணக்குகளில் இருந்து பணம் காணாமல் போவதை ரஜினியிடம் தெரிவித்தாள். ரஜனி தோழியின் குடும்ப உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கி திருட்டுக்குப் பின்னால் தோழியின் இளைய மகன் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

கல்லூரித் தோழியின் குடும்பத்தினர் ரஜினியை ஒரு தொழில்முறை துப்பறியும் நிபுணர் ஆகும்படி அறிவுறுத்தினர். ரஜனி பண்டிட் தனது சொந்த துப்பறியும் நிறுவனத்தை தொடங்க எண்ணி அதற்கான

ஆராய்ச்சியில் இறங்கினார். அதற்குப் பட்டம் எதுவும் தேவையில்லை என்று அறிந்து கொண்டார். கடின உழைப்பு, பொறுமை, ஆழ்ந்த அறிவு, பேரார்வம் ஒரு வழக்கின் சூழ்நிலைகளைக் காணும் திறன் ஆகியவை இந்த தொழிலுக்குத் தேவைப்பட்டது.

1991 ல் 'ரஜனி பண்டிட் டிடெக்டிவ் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தை மும்பையின் மாஹிமில் தொடங்கினர். இது 'ரஜனி பண்டிட் இன்வெஸ்டிகேஷன் பீரோ' என்று அறியப்படுகிறது. இருபது வருட உழைப்புக்குப் பிறகு இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இருபது வழக்குகளைத் தீர்த்து வைக்கிறது. முப்பது துப்பறிவாளர்களைக் கொண்டு இயங்குகிறது.

ஆனால் எதுவும் எளிதில் கிடைத்து விடவில்லை. புலனாய்வுத் தொழிலில் அவர் ஒரு பெண்ணாக இருப்பதால் நிராகரிப்புகளையும் தடைகளையும் சமாளிக்க வேண்டி வந்தது. ஒரு செய்தித்தாள் நிறுவனம் ஒரு பெண் துப்பறியும் ஏஜென்சி நடத்துவதை விரும்பாமல் ரஜினியின் ஏஜென்சியை விளம்பரப்படுத்தாமல் நிராகரித்தது. ஆனால் இந்த நிராகரிப்புகள் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பயம் என்பது அவருக்குத் தெரியாத வார்த்தை.

"ஒரு துப்பறியும் நபர் பிறக்கிறார்! உருவாக்கப்படுவதில்லை" என்று ரஜினி நம்பினார். ஒரு வழக்கை எவ்வாறு தீர்ப்பது என்பதை ஒருபோதும் கற்பிக்க முடியாது. அது தானாகவே இயல்பாக சரியான முடிவெடுப்புடன் நடக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கும் ஒரு புதிய உத்தியையும் புதிய பாத்திரத்தையும் கோருகிறது. அவரது தீர்க்கப்பட்ட வழக்குகளின் பட்டியலில் கொலைகள், காணாமல் போனவர்கள், உள்நாட்டுப் பிரச்சினைகள், பெருநிறுவன உளவு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அரசியல் விசாரணைகள் ஆகியவை அடங்கும்.

அவர் தன் வழக்குகளுக்காக பணிப்பெண், பார்வையற்ற பெண், கர்ப்பிணிப் பெண் மற்றும் பல மாறுவேடங்களில் சென்றுள்ளார். இந்தியாவிலேயே முதல் பெண் துப்பறிவாளரான இவர் வழக்கில் தீர்வு காணத் தானே களத்தில் இறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வழக்கு அனுபவங்கள்…
மும்பையில் பரபரப்பு ஏற்படுத்திய ஒரு வழக்கு, கணவனும் மகனும் கொலையுண்ட வழக்கு. மிகக் குறைந்த நாட்களிலேயே மிக எளிதாக துப்புத் துலக்கி விட்டார் ரஜினி. கிரிடிகல் கேசுகள் வந்தால் போதும். போலீசார் கை விரித்துவிட்ட இடங்களில் கூட ரஜினி ஆர்வத்தோடு தன் திறமையை நிரூபித்துக் காட்டுவார்.

ஒரு வீட்டில் கணவரும் மகனும் கொல்லப்பட்டனர். மனைவி அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. அதனைக் கொலையாக முடிவு செய்த போலீசாருக்கு மனைவி மேல் சந்தேகம் வந்தது. எத்தனை விசாரணை செய்தாலும் ஒரு சிறு க்ளூ கூட கிடைக்கவில்லை. கைகழுவி விட்ட வழக்காகவே போலீசார் அதனைக் கருதினர். ஆனால் இறந்த கணவனின் தம்பி துப்பறியும் ரஜினியிடம் சென்று, "என் அண்ணனையும் அவர் மகனையும் கொன்றவர்களை கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை செலவானாலும் பரவாயில்லை" என்று கேட்டுக்கொண்டார்..

போலீசார் கைவிரித்து விட்ட அந்த வழக்கை சாமர்த்தியமாக கையாண்டு அந்த வீட்டில் ஒரு பணிப்பெண்ணாகச் சேர்ந்தார் ரஜினி. வீட்டில் ஒரு உறவு போல் நடந்து கொண்டார். வீட்டில் இருந்த மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனிருந்து கவனித்துக் கொண்டார். மனைவி இந்தப் பெண்ணை சொந்த தங்கை போல் நம்பினாள்.

ஆனால் ஒரு நாள் திடீரென்று வீட்டில் சவுண்ட் ரெக்கார்டர் ஒலித்ததை மனைவி கேட்டாள். அதற்கு முன் வீட்டில் அந்தப் பொருள் கிடையாது அதனால் பணிப்பெண் மேல் சந்தேகம் வந்தது. அவளோடு இன்னும் நெருக்கமாக நட்பாக இருப்பது போல் நடித்து கண்காணிக்க தொடங்கினாள். வீட்டில் பரண் மேல் வேறொரு பொருள் கிடைத்தது. அது பதிவு செய்யும் கருவி போலிருந்தது. இதுவும் பணிப்பெண்ணின் வேலையாக இருக்கும் என்று சந்தேகம் வந்தது. வந்தவள் போலீசாக இருப்பாள் என்று அஞ்சி இந்த விஷயங்களை வேறொரு ஆணுக்குத் தெரிவித்தாள். "இந்த பணிப் பெண்ணை கொலை செய்து விட்டு ஓடிவிட வேண்டும்" என்று அந்த ஆணோடு சேர்ந்து திட்டமிட்டாள். இதையும் ரஜினி புரிந்து கொண்டார்.

மனைவி அந்த பெண்ணை வெளியில் செல்லவிடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க செய்தாள். இருவரும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். அதற்குள் அந்த ஆண் வீட்டிற்குள் நுழைந்தான். தன்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறான் என்று ரஜினிக்குத் தெரிந்து போனது. ரஜினி அச்சமற்ற உறுதியோடு கத்தியால் தன் விரலை வெட்டிக் கொண்டார். விரல் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. மருத்துவரிடம் சென்று கட்டுப்போட்டுக் கொண்டு வருவதாக சொல்லி வெளியில் ஓட்டம் எடுத்தார். உண்மையாகவே விரல் துண்டாகித் தொங்கியதால் வேறு வழியின்றி அவளை அனுமதித்து விரைவில் திரும்பும்படி கூறினாள் மனைவி. அந்த ஆண் வீட்டில் ஒளிந்து காத்திருந்தான். வெளியில் சென்ற பணிப்பெண் உள்ளே நுழைந்ததுமே கொன்றுவிட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.

ஆனால் ரஜினி வெளியில் இருந்து வீட்டை பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து மனைவியையும் அந்த ஆணையும் கைது செய்தனர். கணவனுடைய சொத்தை கொள்ளை அடிப்பதற்கு கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி அதனை உண்மை என்று நம்ப வைப்பதற்கு மகனையும் கொல்ல வேண்டி வந்தது. ஊடகங்களுக்கு இந்த விவரம் தெரிந்ததும் ரஜினியின் பெயர் பெரிய பரபரப்பான செய்தியானது.

அடுத்து ரஜினி கண்டுபிடித்த இன்னொரு வழக்கு குறித்து பார்ப்போம்…
ஒரே வீட்டில் அண்ணன் தம்பி இருவரும் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் மனைவிகள் தம் கணவன்மார் இறந்துவிட்டனர் என்று கதறி அழுதனர். அந்த வீட்டிலிருந் இன்னொரு நபர் அந்த அண்ணன் தம்பிகளின் தாய். தன் மருமகள்கள் நல்லவர்கள் என்று தாய் தெரிவித்தார். வெளியில் இருந்து யாரோ வந்து அடித்துக் கொன்று விட்டார்கள் என்றும் அந்த நேரத்தில் தாம் கோவிலுக்குச் சென்றதாகவும் மருமகள்கள் தெரிவித்தனர். வீட்டில் தாய் மட்டுமே இருந்தார். வெளி மனிதர்கள் உள்ளே நுழைந்ததை அவள் கவனிக்கவில்லை. இந்த வழக்கை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திண்டாடினர்.

ஆனால், அந்தத் தாய் தன் மகன்களைக் கொன்றவனை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறி ஒரு பையில் தன்னுடைய நகைகளை எடுத்துக் கொண்டு ரஜினியிடம் வந்தார். ரஜினி அந்த வழக்கை கண்டுபிடிப்பதற்கு முன் வந்தார். சில மாதங்கள் தொடர்ந்து தேடினாலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அதற்குள் மருமகள்கள் இருவரும் தம் பிறந்த வீடுகளுக்குச் சென்று விட்டனர். முதிய தாய் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார்.

பெரிய மருமகள் யாரை சந்தித்துப் பேசுகிறாள் என்றறிய ரஜினி அவளை ஒரு மாத காலம் பின்தொடர்ந்தார். எதுவும் சாட்சி கிடைக்கவில்லை. அதே போல் சிறிய மருமகளையும் ஒரு மாத காலம் கவனித்துப் பார்த்தார். அவள் மகிழ்ச்சியாக வேறொரு ஆணுடன் சினிமாவும் ஷாப்பிங்கும் செல்வதை கவனித்தார் ரஜினி. கணவனுடைய சொத்துக்களையும் அனுபவித்து வந்தாள் அந்த மருமகள். அந்த முதியவளின் சிறிய மகன் நிறைய சம்பாதித்தான்.

திருமணத்திற்கு முன் காதலித்த ஆணுடன் பெற்றோர் திருமணம் நடத்தவில்லை. திருமணத்திற்குப் பின்னும் காதலனை விடாமல் சந்தித்து வந்தாள் சிறிய மருமகள். காதலனை திருமணம் புரிவதற்கு கணவன் தடையாக இருந்தாதால் அவனைக் கொல்லத் துணிந்தாள் சிறிய மருமகள். அண்ணனை யார் கொன்றது? இங்கு இன்னொரு திருப்பம்.

நிறைய நாட்கள் தேடிய பின் ரஜினி தான் ஏற்பாடு செய்திருந்த 'அண்டர் கவர் டீம்' மூலம் சிறிய மருமகள் அடுத்த திருமணத்திற்கு ரெடியானதை அறிய நேர்ந்தது. அவளை அழைத்து முறையாக விசாரித்தால் முழு கதையும் வெளியில் வரும் என்று ரஜினி எண்ணினார். ஆனால் சிறிய மருமகள் எதற்கும் துணிந்தவள். அவளிடமிருந்து எந்த விவரமும் பெற முடியவில்லை. பெரிய மருமகள் கொஞ்சம் அப்பாவியாகத் தெரிந்தாள். அவளிடம் போலீஸ் உடையில் சென்று ரஜினி மிரட்டினர்.

தனக்கு எதுவும் தெரியாதென்றும் தன் ஓரகத்தி திட்டம் தீட்டி இருவரையும் கொன்றாள் என்றும் வெளியே சொன்னால் தன்னையும் கொன்றுவிடுவதாக பயமுறுத்தியதாகவும் ரஜினியிடம் ஒப்புக் கொண்டாள் பெரிய மருமகள். அது மட்டுமல்ல. வாயை மூடிக் கொண்டிருந்தால் பணம் தருவதாகச் சொன்னதாகவும் தனக்கு சொத்தில் பங்கு தந்து ஐந்து லட்சம் ரொக்கமும் கொடுத்ததாகவும் கூறினாள். கணவன் இறந்த போது தான் கர்ப்பிணி என்றும் தன்னை விட்டுவிடும்படியும் ரஜினியின் காலைப் பிடித்து கெஞ்சினாள் பெரிய மருமகள்.

"கணவன் எப்படியோ இறந்து விட்டான். இனி வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது உயிர் வாழ வேண்டும்" என்ற பெரிய மருமகள் நடந்ததை விவரித்தாள்.

சிறிய மருமகள் அன்றைய தினம் பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்து முதலில் தன் கணவனைக் கொன்றாள். எதிர்பாராமல் அங்கு வந்த தன் கணவனின் அண்ணனையும் உலக்கையால் அடித்துக் கொன்றாள். அவனும் அதற்கு முன்பே மயக்கத்தில் இருந்தான். அவர்கள் இருவரையும் பூஜை அறையில் படுக்க வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் பெரிய மருமகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றாள். அங்கு மேலும் சிலரோடு சேர்ந்து பெரிய மருமகளை மிரட்டினாள்.

"யாரிடமாவது சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன்" என்றாள். பின்னர் இருவரும் வீடு திரும்பி தன் கணவர்கள் இறந்து விட்டார்கள் என்று கதறி நடித்தார்கள்.

எப்படிப்பட்ட கிரிமினல் வழக்கையும் உயிரைப் பணயம் வைத்து கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டும் ரஜினி இந்தக் கதை முழுவதையும் போலீசாரிடம் கூறினார். அதன் பின் சிறிய மருமகளை போலிசார் கைது செய்தனர். அவளுக்கு உதவி செய்தவர்களையும் கைது செய்தனர். குற்றத்தை மறைத்ததற்காக பெரிய மருமகளுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கிடைத்தது.

திருமணம்?
ஜனி பண்டிட் தனது வேலையை திருமணம் செய்து கொண்டதாகவும் மணவாழ்க்கையில் விருப்பம் இல்லையென்றும் கூறுகிறார். ஒரு குடும்பத்தைத் தொடங்க வேண்டும் என்று தனக்கு ஒருபோதும் தோன்றவில்லை என்கிறார். சிறந்த இந்தியாவை உருவாக்கும் விதமாக உண்மைகளைக் கண்டறிந்து சமுதாயத்திற்கு உதவுவதே தன் நோக்கம் என்கிறார் இந்த துப்பறியும் வீராங்கனை. துப்பறியும் தொழில் இவருக்கு செல்வத்தை வாரி வழங்கினாலும் இவர் என்றுமே பணத்திற்காக பணி புரியவில்லை. அது அவருக்கு ஒரு Passion.

எந்த வழக்கில் க்ளூ இருக்காதோ அதனை புலனாய்வு செய்வதில் ரஜினிக்கு த்ரில் அதிகம். அதற்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்வார்.

ரஜனி பண்டிட் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது நூல்கள் Face behind Face, மற்றும் Mayajal பல விருதுகளை வென்றுள்ளன. இவர் எழுதிய இரு நூல்களில் உள்ள வழக்குகளின் ஆதாரத்தைக் கொண்டு சோனி டிவியில் க்ரைம் சீரியல்கள் வந்தன. ஆனால் இவர் என்றுமே விளம்பரத்தை விரும்பவில்லை. இவரை அடிப்படையாக வைத்து 'லேடி ஜேம்ஸ்பாண்ட்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இவருடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படமும் வரப் போகிறது.
அண்மையில் ஒரு சேனல் இன்டர்வியுவில் தான் கண்டறிந்த சில டிடெக்டிவ் வழக்குகள் பற்றி விவரித்தார் ரஜினி. காவல்படை அதிகாரிகள் கூட ரஜினியின் தொழில் முறையைப் பார்த்து வியக்கின்றனர்.

இந்தியாவின் முதல் லேடி டிடெக்டிவ் ரஜினிக்கு பாராட்டு தெரிவிப்போமா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com