கல்லாதது கடலளவு!

கல்லாதது கடலளவு!
Published on

மினி தொடர் – 7

-நாராயணி சுப்ரமணியன்

தண்ணீருக்கு வெளியில் மீன்கள் வாழுமா?

தண்ணீரில்லாமல் வாழ்நாள் முழுவதும் மீன்களால் தாக்குப்பிடிக்க முடியாது.

ஆனால் சில மீன்கள், தண்ணீர் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தாங்கும். இதுபோன்ற மீன்களை "நீர்நில வாழ்வி மீன்கள்" (Amphibious fishes) என்று அழைப்பார்கள். சில மீன்கள் 2 வருடம் கூட நீரின்றி வாழும்! பொதுவாக இப்படி நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் நீர்நிலவாழ்வி மீன்கள் நுரையீரல் மூலமாக சுவாசிக்கும் தன்மை கொண்டவை. அவை நன்னீரில் மட்டுமே வாழ்கின்றன.

கடல் மீன்களில் உள்ள நீர்நிலவாழ்விகள் செவுள் மூலம்தான் சுவாசிக்கின்றன என்பதால் அவற்றால் ஓரிரு நாட்கள் மட்டுமே நீரின்றி வாழ முடியும். பெரிய செவுள் பகுதிகளில் நீரை சேமித்து வைத்துக்கொள்வது, வேறு சில சுவாச உறுப்புகளின் துணையோடு தொடர்ந்து சுவாசிப்பது, தோலின்மூலம் கூடுதல் காற்றை உள்ளிழுத்துக்கொள்வது போன்ற பல தகவமைப்புகளோடு இவை நிலத்திலும் கொஞ்சநேரம் இருக்கின்றன. சேற்று உளுவை, சிலவகை சதுப்பு நில விலாங்குகள் (eels ) போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்.

கடலில் உள்ள தாவரங்கள்

கடல்புல், கடல்பாசி, நுண்பாசி, அலையாத்தித் தாவரம் என்று கடலில் பல்வேறு வகையான தாவரங்கள் உண்டு. அலையாத்தித் தாவரங்கள் கடலும் நிலமும் சந்திக்கும் இடத்தில் வளர்கின்றன. இவற்றின் வேர் எப்போதும் கடல்நீரில் இருப்பதால் இவையும் கடல்தாவரங்களாகக் கருதப்படுகின்றன.

கடல்பாசிகள் பூக்கும் தாவரங்கள் அல்ல, அவை பாசி இனத்தைச் சேர்ந்தவை. பல்வேறு வகையான கடற்பகுதிகளில் பல்வேறு விதமான கடற்பாசிகள் காணப்படுகின்றன. இவை பவளப்பாறைகளை ஒட்டிய பகுதிகள், கடலுக்கடியில் உள்ள பாறைகளில், ஆழம் குறைவான பகுதிகளில் வளர்கின்றன.

கடல் புற்கள் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் எல்லா கடல் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்து, கடலின் உணவுச்சங்கிலியைத் தொடங்கிவைத்து, கடல்வாழ் உயிரிகளுக்கெல்லாம் உணவளிப்பவை நுண்பாசிகள்தான் (Phytoplankton). உலகின் மொத்த தாவர எடையில் 1% மட்டுமே கொண்ட இந்த மிகச்சிறிய உயிரிகள்தான் உலகில் பாதி ஒளிச்சேர்க்கைக்குக் காரணமாய் இருக்கின்றன!

அலையாத்திக் காடுகள் நமக்கு என்ன நன்மை செய்கின்றன?

அலையாத்திக் காடுகளின் வேர்கள் மண்ணை இறுக்கிப் பிடித்து அதை நிலைகொள்ளச் செய்கின்றன என்பதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. வெள்ளம், சூறாவளி, புயற்காற்று, ஆழிப்பேரலை போன்ற கடல்சார் பேரிடர்கள் வரும்போது, அலையாத்திக்காடுகள் ஒரு அரணாக இருந்து நிலத்தைக் காப்பாற்றுகின்றன. நாம் உமிழக்கூடிய கார்பனை சேமித்து புவி வெப்பமடைதலைக் குறைப்பதிலும் அலையாத்திக் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com