– நிலா, திருச்சி
தொடரும் மரணம்
ஒரு மனித சடலத்தை
தொடர்ந்து
நடக்கின்றன!
ஆயிரக்கணக்கான
பூக்களின் மரணம்!
……………………………………………………..
தாவணி
நவீன நாகரீக
உடைகள் பிடிப்பதில்லை
வானவில் தாவணியையே
விரும்பி உடுத்துகிறாள்
வானப் பெண்!
……………………………………………………..
மனசு
நீக்குவதற்கு
மனமில்லை
இறந்துபோன
அம்மாவின் கைப்பேசி
எண்ணை!
……………………………………………………..
மகிழ்ச்சி
பள்ளிக்கூடம்
திறந்துவிட்டது
மிகழ்கிறாள்
வாசலில் நாவற்பழம்
விற்கும் சிறுமி!
……………………………………………………..
பிரிவு
பிரிந்திருக்கும்
தண்டவாள தம்பதிகளை
ஒன்று சேர்க்க
முயற்சிக்கும் நீதிபதியாய்
ரயில்!
……………………………………………………..
வெறுமை
லாரியில் மணல்
பிளாஸ்டிக் பாட்டிலில்
தண்ணீர்
முகவரி இழந்து
நிற்கிறது நதி!
நிலா எழுதிய கவிதையானது கற்பனை, கருத்து, யதார்த்தம் இம்மூன்றும் கலந்த கலவையாக இருக்கிறது, படிப்பதற்கு சுவையாக இருக்கிறது, பாராட்டுக்கள்.
ஆர்.வித்யா சதீஷ்குமார்,
பள்ளிக்கரணை.
‘மனசு’ கவிதையை மறக்க மனமில்லை.