நமசிவாய! நமசிவாய! (சிவராத்திரி)

நமசிவாய! நமசிவாய! (சிவராத்திரி)
Published on

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

'பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாய வே!'
என்கிறார் திருநாவுக்கரசர். சர்வ வல்லமை படைத்த இம்மந்திரத்தை கூறினாலும், தினந்தோறும் உரைத்தாலும், பாடினாலும் வினைகள் அழிக்கப்பட்டு முக்தி தரும்.

இதையே அருணகிரி நாதர், 'எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்' என்கிறார்.

ஏழு கடல்களின் கரைகளிலுள்ள மனலை எண்ணிப் பார்ப்பதால் வரும் அளவைவிட, எனது துன்பம் நிறை பிறவிகள் எனும் அவதாரங்களை மாற்றக் கூடிய சக்தி இப் பஞ்சாட்சர மந்திரமாகிய 'நமசிவாய'த்திற்கு உண்டு என்பதாகும்.

ஐம்புலன்கள்; ஐம்பூதங்கள்; ஐம்பெருங்காப்பியங்கள்; ஐவகை நிலங்கள் என்று ஐந்து என்கிற எண்ணிற்கு பல சிறப்புகள் உண்டு.

'தூக்கிய திருவடி சோகம் தீர்க்கும் சுகமே
சேர்க்கும்' என்கிற ஆன்றோர் வாக்கு போல,
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் போன்ற தொழில்களுக்கும், ஐம்பூதங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறார் ஈசன் நடராஜப் பெருமான்.

இப்படிப்பட்ட சிவபெருமான் உத்தராயண காலத்தில், மாசி மாத சதுர்த்தசி அன்று, அருவுருமாக லிங்க வடிவில், நள்ளிரவில் அவதரித்த நாளே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

சதூர்த்தியன்று அம்பிகை சிவபெருமானை வணங்கி, சிவராத்திரி பூஜை செய்தாள். அந்த இரவினை சிவராத்திரியெனக் கொண்டாடவும், சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை ஈசனை பூஜிப்பவர்க்கு முக்தி தரவும் வேண்டினாள்.

எளிமைப் பிரியனான சிவபெருமானுக்கு, 'ஏக வில்வம் சிவார்ப்பணம்' என அன்புடன் ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே, மகிழ்வடைந்து விடுவார்.

அன்பு செலுத்துவதில் பாரபட்சம் காட்டாத குழந்தையைக்கூட, தனது அன்பினால் வென்றுவிடும் நல்லன் ஈசன் என்பதை
'சேயினும் நல்லன், அணியன் நல்லன்பர்க்கு
தாயினும் நல்லன் தாழ்சடையோனே' என்று திருமூலர் கூறியுள்ளார்.
நித்திய சிவராத்திரி; பிட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி எனப்படும் 5 சிவராத்திரிகளில் முக்கியமானது மகா சிவராத்திரியாகும். பெரும்பாலாக, சதுர்த்தசியில்தான் சிவராத்திரிகள் வரும்.

மகா சிவராத்திரியன்று தூய்மை மற்றும் பக்தியுடன் விரதமிருந்து நான்கு கால சிவபூஜை செய்பவர்களுக்கு, புத்தி – முக்தி மற்றும் நினைத்த காரியங்கள் என எல்லாமே நடைபெறும் என்பது நம்பிக்கை.

த்யான ஸ்லோகம்
'ஓம் நமசிவாய பரமேஸ்வராய
சசிசேகராய நம ஓம்
ஓம் பவாய குண சம்பவாய
சிவ தாண்டவாய நம ஓம்!'
-ஆர். மீனலதா, மும்பை

…………………………………………………..

வரதட்சணைக் கல்வெட்டு

விரிஞ்சிபுரம் என்றழைக்கப்படும் 'திருவிரிஞ்சை' சிவத்தலம் வேலூருக்கு மேற்கே ஒன்பது கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையின் தென்புறம் அமைந்துள்ளது.

வேதாரண்யம் விளக்கழகு: திருவாரூர் தேரழகு எனும் முதுமோழிக்கேற்ப திருவிரிஞ்சைக் கோயிலின் மதில் பேரழகும் பெருஞ்சிறப்பும் வாய்ந்ததாகும்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சின்ன பொம்மு நாயக்கனின் மகனான லிங்கம பூபாலுடு காலத்தில் இக்கோயில் கட்டப் பெற்றுள்ளது.

தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகத் திகழும். இத்தலம் அப்பர் பெருமான், சுந்தரர், அருணகிரிநாதர், அடைய பலம் அப்பைய தீட்சிதர், இரட்டைப் புலவர்கள், சைவ எல்லப்ப நாவலர், வரகவி மார்க்க சாகய தேவர், படிக்காசுப்புலவர், சிவஞான முனிவர் ஆகியோரால் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

ஐந்து பிராகாரங்களைக் கொண்ட இக்கோயிலில் சக்தி மண்டபம் எனும் விடையாற்றி மண்டபம், பதினாறு கால் மண்டபம், சிம்மக்குளம், செந்துறை கணபதி ஆலயம், 1008 சிவலிங்க சன்னிதி, நூற்றுக்கால் மண்டபம், ஆலயத் தீர்த்தம், காலபைரவர் சன்னிதி, அப்பைய தீட்சிதர் சன்னிதி, வள்ளலார் சன்னிதி ஆகியன அழகுறத் திகிழ்கின்றன. மூலவர் இறைவன் வழித்துணை நாதர் அருளாட்சி புரிகிறார்.
கல்வெட்டுகளில் திருவிரிஞ்சை 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துத் திருவிரிஞ்சிபுரம்' எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் 9ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்கு திருப்பணிகள் ஆற்றியமையைக் குறிக்கின்றது. ராஜராஜ சோழனின் பிரதிநிதி இங்கு அரசாண்டமைக்குக் கல்வெட்டு உள்ளது.

இங்குள்ள 'வரதட்சணைக் கல்வெட்டு' நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கின்றது. 27.2.1426ஆம் ஆண்டில் செதுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டில்

'கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் வரதட்சணை வாங்கி திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து, விலக்கி வைக்கப்படுவர் என விஜயநகர பேரரசினால் உத்தரவிடப்பட்டிருந்தது,' என்று எழுதியிருக்கிறது.

இக்கோயிலின் மற்றொரு அதிசயம் "கல்கடிகாரம்" ஆகும். இது முன்னோர்களின் அறிவியல் மதி நுட்பத்திற்கு அரிய சான்றாகும்.
-முத்து. இரத்தினம், சத்தியமங்கலம்.

…………………………………………………..

மாவீரன் அலெக்ஸாண்டர்

கிரேக்க நாட்டுப் பேரரசன் பிலிப்புக்கு அவன் ஆனைக்குட்பட்ட சிற்றரசன் ஒருவன் அழகான குதிரை ஒன்றை அனுப்பியிருந்தான். மன்னனும் முதன்மையானவர்களும் அக்குதிரையைப் பார்வையிட இலாயத்துக்குச் சென்றனர். அவர்களுடன் இளவரசனும் சென்றான்.

குதிரையின் தோற்றம் மன்னனை மிகவும் கவர்ந்துவிட்டது. "இதன் மீது ஏறி யாராவது சவாரி செய்து பாருங்கள்" எனக் கூறினான்.

குதிரை வீரர்களில் ஒருவன் அதன் மீது ஏற முனைந்தான். குதிரை மிரண்டு அவனை நிலத்தில் வீழ்த்திற்று. மேலும் சில வீரர்கள் அதன்மீது அமர முயன்றனர். அத்தனை வீரர்களையும் காலால் உதைத்தும், கடித்தும், முட்டியும் துன்பப்படுத்தியது அந்தக் குதிரை. குதிரையின் பக்கம் நெருங்கவே யாருக்கும் துணிவு ஏற்படவில்லை.

குதிரையின் தோற்றத்தைப் பார்த்து புகழ்ந்த மன்னனுக்கு இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால் குதிரையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டான்.

இவ்வளவு நேரமும் அங்கு நிகழ்ந்த செயல்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இளவரசன் தந்தையைப் பார்த்து, "தந்தையே இக்குதிரையை இவர்கள் நன்கு புரிந்து கொள்ளவில்லை. நான் ஏறிப் பார்க்கிறேன். எனக்கு அனுமதி தாருங்கள்" எனக் கேட்டுக் கொண்டான்.
தன் மைந்தனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படக் கூடாதே என அஞ்சினாலும் மைந்தன் திறமையில் பிலிப் மன்னனுக்கு நம்பிக்கையுண்டு. அதனால் ஒப்புக் கொண்டார்.

இளவரசன் குதிரையை சூரியனுக்கு எதிராக நிறுத்தினான். அப்படிச் செய்ததுமே அதன் குணத்தில் சிறிது மாறுதல் ஏற்பட்டது. பின் அதன் அருகே சென்று அதைத் தட்டிக் கொடுத்தான். அமைதியாக நின்றது. எல்லோரும் வியப்படைந்தனர். பின்னர் இளவரசன் குதிரை மீதேறி சமவெளியில் பக்கமாய் அதைத ஓட்டிச் சென்றான். குதிரையும் அவன் விருப்பம் போல் சவாரி செய்ய ஒத்துழைப்பு கொடுத்தது.

இது எப்படி செய்ய முடிந்தது? என மன்னர் கேட்டார்.

இளவரசன் "தந்தையே முதலில் குதிரை வெகுண்டதற்கு காரணம் தன் முன்னே படிந்திருந்த நிழல்தான். இதைப் புரிந்துகொண்ட நான் குதிரையைச் சூரியனுக்கு எதிராக நிறுத்தியபோது அதன் முன்னே நிழல் விழவில்லை. எனவே அது அமைதியாக நின்றது. பிறகு அதன்மீது ஏறியதும் அது வெகுளாமல் சவாரிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தது" என்றான்.
இதைக் கேட்ட மன்னர் தன் மைந்தனின் அறிவுத் திறனைத் தன்னுள் வியந்துகொண்டார். இந்த இளவரசன்தான் பல நாடுகளை வெற்றி கொண்டு மாபெரும் வீரனாக விளங்கிய அலெக்ஸாண்டர்தான்.
-ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com